கதிர்.பாலசுந்தரம்
அதிகாரம் 19 - போதும் ஆசாமி சகவாசம்
இந்தியாவுக்கு நதியா சென்ற விமானம்
முப்பத்தையாயிரம் அடி உயரத்தில் இன்னமும்
பறந்து கொண்டிருந்தது. லண்டனில் நள்ளிரவுக்கு இன்னும்
ஒரு மணிநேரமே இருந்தது.
அயர்லாந்து வியாபாரப் பயணத்தை முடித்தபின், சூட்டியின்
கார், லண்டன் மாநகர எல்லைக்குள்
வந்துகொண்டு இருந்தது. அந்தக் காரின் பின்
ஆசனத்தில் கில்லாடி தூக்கத்தில், 'அன்பே
என் சின்ன வடிவு
ஆருயிரே
என் தங்கமே
ஓடிவா என் மனக் குயிலே'
என்று வாய்புசத்தி நதியாவோடு சரசமாடிக் கொண்டிருந்தான்.
வீட்டை அண்மித்ததும் கூட்டாளிகள்
கில்லாடியைத் தட்டி எழுப்பிவிட்டனர். அவன்
காரிலிருந்து இறங்க முன்னரே தனது
சகபாடிகளின் பங்கைக் கணக்கிட்டான்.
கில்லாடி இலாபத்தில் 8,000 ஸ்ரேலிங்
பவுணைத் தனக்கு ஒதுக்கினான். அவனோடு
சேர்ந்து சென்ற கோட்டான் சூட்டி,
ஊத்தைவாளி குகன், சால்வை மூத்தான்
ஆகியோருக்குத் தலைக்கு 400 ஸ்ரேலிங் பவுண் கொடுத்தான்.
அதனைக் கண்டதும் குகனின் சின்னோட்டி
மூக்குச் சினந்து விரிந்து சுருங்கியது.
மூத்தானின் உச்சந்தலைக் குள்ள மயிர் ஆத்திரத்தில்
எழுந்து நின்று காரிலிருந்து இறங்கிய
கில்லாடியை வெறித்துப் பார்த்தது. அவர்கள் மத்தியில் அதுவரை
இருந்து வந்த பாதாள உலக
தர்ம நியதிப்படி, கில்லாடி தங்களுக்குக் குறைந்தது
ஆளுக்கு 1300 ஸ்ரேலிங் பவுணாவது தந்திருக்க
வேண்டும் என்று மூவரும் கில்லாடிக்குக்
கேட்கவேண்டும் என்ற மனக் குமுறலோடு
பேசியது காரில் இருந்து இறங்கி
போய்க்கொண்டிருந்த கில்லாடியின் காதில் விழுந்தது.