விடுமுறையில் ஒருநாள் பிலிப்தீவிற்குச் சென்றோம்.
இருள் கவியத் தொடங்குகின்றது. கோடை காலத்தில் சூரியன் மறைய ஏழு எட்டு மணிவரைக்கும் காத்திருக்க வேண்டும். பத்துப்பன்னிரண்டு நீண்ட படிக்கட்டுகளில் முன்னூறுக்கும்
மேற்பட்டவர்கள் அமர்ந்திருக்கின்றார்கள். பள்ளிக்கூட விடுமுறையாதலால் சிறுவர்கள் குழந்தகள் அதிகம். முன்னே பரந்த கடல், அகன்ற வானம். எல்லாரையும் அமைதியாக இருக்கும்படி ஒலிபெருக்கியில்
அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது. ஆங்காங்கே குழந்தைகளின் அழும் குரல்கள் தேய்கின்றன. எதற்காக இந்த ஆரவாரம்?
பென்குவின்கள் கடலிற்குள்
இருந்து வெளிப்பட்டு, கரையிலுள்ள
தமது உறைவிடங்களிற்கு செல்லும் கண்கொள்ளாக் காட்சியைப் பார்பதற்காகத்தான்
அவ்வளவு பேரும் காத்திருக்கின்றார்கள்.
இவை நீரிலும் நிலத்திலும் வாழும் பறவையினம். இரவில் கடற்கரையை அண்மித்த மறைவிடங்களில்
வாழும். பகலில் இரை தேடிக் கடலிற்குப் புறப்பட்டுவிடும்.
விக்டோரியா மாநிலத்தில் பிலிப் தீவில் (Phillip Island) பென்குவின்கள் செறிந்து வாழ்கின்றன.
இங்கே இருப்பவை குள்ளமான இனத்தைச் சேர்ந்தவை. உலகில் 17
வகை இனங்கள் இருப்பதாகத் தகவல். வெளிநாட்டு உல்லாசப்பிரயாணிகளைக்
கவரும் இடமாக பிலிப்தீவு உள்ளது. பென்குவின்களைப் பார்ப்பதற்காக அமைந்திருக்கும் இந்தப் பிரத்தியேகமான இடத்தில் எந்தவிதமான புகைப்படக்கருவிகளும் அனுமதிக்கப்படுவதில்லை.
"அதோ கடலிற்குள் தெரிகின்றன!" என்றான் மகன். தூரத்தில் கடல் நுரைகளுடன் சிறுசிறு கூட்டங்களாக மிதந்தபடி
வருவதும் போவதுமாக அவை ஊஞ்சலாடுகின்றன. பென்குவின்கள் பறப்பதில்லை.
இறக்கைகளை துடுப்புகள் போல நீந்தப் பாவிக்கின்றன. சற்று நேரத்தில் அவை கரை தட்டின. கூட்டம் கூட்டமாக வெளிப்பட்ட அவை அணிவகுத்து நடக்கத் தொடங்கின.
அழகாகனதொரு அணிவகுப்பு
(Penquin Parade) அது.