Friday, 25 September 2020

`தக்கன பிழைக்கும்’ என்ற வாதத்தை தொழில்நுட்பம் இல்லாமல் செய்துவிடப்போகின்றது


 


நேர்காணல் – கே.எஸ்.சுதாகர்/தி.ஞானசேகரன் இணையவளி

பகுதி (2/2)

9) எழுத்து தவிர்ந்த வேறு என்ன இலக்கியச் செயற்பாடுகளில் இயங்கி வருகிறீர்கள்?

எழுதுவதைக் காட்டிலும் வாசிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. சிறுவயது முதல் இன்றுவரை தொடர்ச்சியாக வாசித்து வருகின்றேன். வாசித்த புத்தகங்களில் சிறந்தவற்றை நண்பர்களுக்கு அறிமுகம் செய்வது, நண்பர்களிடையே புத்தகங்களைப் பரிமாறிக்கொள்வது, கலந்துரையாடுவது மகிழ்ச்சி தரும் செயல்கள். போகும் இடங்களில் இலக்கியநண்பர்களைச் சந்தித்து உரையாடுவது மனதிற்கு இதமானது. கனடா, இந்தியா போன்ற நாடுகளுக்குச் சென்றபோது சில எழுத்தாளர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. அதேபோல பிறநாடுகளில் இருந்து இங்கு வரும் இலக்கியவாதிகளைச் சந்திப்பதும் உண்டு. கனடா சென்றிருந்தபோது குரு.அரவிந்தன், வ.ந.கிரிதரன், எல்லாளன்(ராஜசிஙகம்), கடல்புத்திரன்(பாலமுரளி), தேவகாந்தன், அகில், ஸ்ரீரஞ்சனி என்பவர்களைச் சந்தித்தது இன்னமும் பசுமையாக இருக்கின்றது. அதேபோல் இந்தியாவிற்குச் சென்றபோது நா.முத்துநிலவன், அண்டனூர் சுரா, ஸ்ரீரசா (இரவிக்குமார்) என்பவர்களைச் சந்தித்திருந்தேன்.

இணையங்களில் இல்லாத மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேடிப்பிடித்து தமிழில் தட்டச்சு செய்தும், இணையம் / வலைப்பூ இல்லாத எழுத்தாளர்களின் சில நல்ல படைப்புகளைத் தேடிப் பெற்றும் எனது வலைப்பூவில் பதிவிடுகின்றேன். நல்ல படைப்புகளை இனம் கண்டுகொண்டு, அவற்றை வாசகர்கள் படிப்பதற்காக இணையங்களிலும் முகநூல்களிலும் அறிமுகம் செய்கின்றேன்.

Monday, 21 September 2020

`தக்கன பிழைக்கும்’ என்ற வாதத்தை தொழில்நுட்பம் இல்லாமல் செய்துவிடப்போகின்றது

 

நேர்காணல் – கே.எஸ்.சுதாகர்/தி.ஞானசேகரன் இணையவளி

பகுதி (1/2)

1) தங்களுக்குள் ஓர் இலக்கியவாதி தோன்றுவதற்கான தங்களது குடும்பப் பின்னணி,  இளமைப்பருவம் போன்றவற்றை முதலில் கூறுங்கள்

அம்மாவின் பிறப்பிடம் வீமன்காமம், அப்பா குரும்பசிட்டி. குரும்பசிட்டி கலை இலக்கியத்துடன் பின்னிப்பிணைந்த ஒரு கிராமம். எனக்கு எழு அண்ணன்மார்கள், இரண்டு அக்காமார்கள். நான் கடைசி. என்னுடைய சித்தப்பாவும், அத்தானுமாகச் சேர்ந்து `சக்தி அச்சகம்’ என்றொரு அச்சுக்கூடம் வைத்திருந்தார்கள். அங்கிருந்துதான் `வெற்றிமணி’ சிறுவர் சஞ்சிகை வெளிவந்தது. அதன் ஆசிரியராக மு.க.சுப்பிரமணியம்(சித்தப்பா) இருந்தார். சக்தி அச்சகத்தில் அச்சிடப்பட்ட புத்தகங்களும், என்னுடைய சகோதரர்கள் பாடசாலையில் பெற்ற பரிசுப்புத்தகங்களுமாக ஏராளமான புத்தகங்கள் ஒரு அலுமாரியில் அடங்கிக் கிடந்தன. சக்கரவர்த்தி இராஜபோபாலாச்சாரியார் எழுதிய `வியாசர் விருந்து’, பாரதியார் கவிதைகள், டாக்டர் மு.வரதராசனின் `அகல்விளக்கு’, அகிலனின் `பாவை விளக்கு’, செங்கைஆழியான் க.குணராசாவின் `முற்றத்து ஒற்றைப்பனை’ / `கங்கைக்கரையோரம்’ / `சித்திரா பெளர்ணமி’ / `வாடைக்காற்று’ போன்ற புத்தகங்கள், தங்கம்மா அப்பாக்குட்டி எழுதிய சில கட்டுரைப் புத்தகங்கள், அம்புலிமாமா இன்னும் இவைபோலப் பல இருந்தன. இந்தப் புத்தகங்களை பாடசாலை விடுமுறை நாட்களில் வாசிப்பதற்கு மாத்திரமே வீட்டில் அனுமதித்தார்கள். இல்லாவிடில் படிப்புக் கெட்டுப்போய்விடும் என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. `வெற்றிமணி’ சிறுவர் சஞ்சிகையாக இருந்தபோதிலும் என்னுடைய எந்தவொரு படைப்பும் அதில் வந்ததில்லை. அது ஏன் என்பது பற்றி இப்பொழுது சிந்தித்துப் பார்க்கின்றேன்.

Monday, 14 September 2020

சிக்கனம் முக்கியம் - சம்பவம் (1)

 


“வெளியீட்டுவிழா செலவுகளைக் குறைச்சுக் கொள்ளவேணும். சிக்கனம் முக்கியம்” வளர்மதி பிடிவாதமாக நின்றுகொண்டார். ஹோல், சாப்பாட்டுச் செலவுகளில் ஒன்றும் செய்துகொள்ள முடியாது. அழைப்பிதழ் அடிப்பதில் முயன்று பார்க்கலாம் எனக் களம் இறங்கிவிட்டார் அகமுகிலன்.

ஏதோ இங்கிலிசில் அடிக்க தமிழில் வருமாமே! ஒற்றை விரலால் கீ போர்டை நொருக்கித் தள்ளி கொம்பியூட்டர் திரையில் அழைப்பிதழை அடித்துவிட்டார். அழைப்பிதழ் பகட்டாக இருக்க – புத்தகம், தொட்டெழுதும் பேனா, இறகு  என்னும் ஓவியப்பின்னணி கொண்ட `பக்கிறவுண்ட்’ ஒன்றைத் தேடி எடுத்துக் கொண்டார். வந்ததே வினை. அழைப்பிதழை `பக்கிறவுண்டிற்குள்’ கொண்டு செல்லும்போது எழுத்துக்கள் அங்கும் இங்கும் ஓடின. ஒருவிதமாக ஒரு வசனத்தைச் சரிக்கட்டிக் கொண்டு வந்துவிட்டு, மறு வசனத்தைப் பார்த்தால் அது குதித்துக் கூத்தாடி இருக்கும். அவர் அடித்த சொற்களில் சிலவற்றைக் காணவும் இல்லை. போராடிக் களைத்து, அப்படியே போட்டுவிட்டு உறக்கத்திற்குப் போய்விட்டார்.

 

உறக்கம் வரவில்லை. மூன்று தடவைகள் விழித்து எழுந்து கொம்பியூட்டருக்கு முன்னால் போய் இருந்தார். தமிழில் ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருப்பதைப் புரிந்துகொண்டு, அழைப்பிதழில் சொற் சிலம்பாட்டம் விளையாடினார். `மாலை என்பதைப் `பிற்பகல்’ என்று மாற்றினார். பின்னர் `பிற்பகல்’ என்பதை `பி.ப’ என மாற்றினார். இப்படிச் சதுரங்கம் விளையாடி, விடிய ஐந்து மணிக்குள் எல்லாவற்றையும் சரிப்படுத்திவிட்டு உறக்கத்திற்குப் போனார்.

Saturday, 12 September 2020

மாயா இலக்கிய வட்டம் நடத்திய குறு நாவல் போட்டி முடிவுகள் 2020

 

எனது குறுநாவல் இரண்டாம் பரிசு பெறுகின்றது.

மாயா இலக்கிய வட்டம் நடத்திய குறு நாவல் போட்டி 

பரிசு விபரங்கள்

நடுவர் : சாரு நிவேதிதா

முதல் பரிசு
சாபக்குமிழ் - ஶ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்
ராஜ வனம் - ராம் தங்கம்

இரண்டாம் பரிசு
வளர்காதல் இன்பம் - கே. எஸ் . சுதாகர் 

மூன்றாம் பரிசு
நானும் என் பூனைக்குட்டிகளும் - தரணி ராசேந்திரன்
சில மாற்றங்கள் - வேல் முருகன்

Tuesday, 8 September 2020

யோகம் இருக்கிறது – எனக்குப் பிடித்த சிறுகதை

குந்தவை

 

தன் ஊரைக் கடந்து, யாழ்ப்பாணடவுனுக்கு இட்டுச் செல்லும் அந்த கொழும்புத் துறை வீதியில் ஏறுவதற்குள், அவனுக்கு போதும் போதும் என்றாகி விட்டது.

“சீ என்ன சாதிச் சனங் கள்ளப்பா இதுகள்" என எரிச்சலுடன் நினைத்துக் கொண்டான். ஒவ்வொரு ஒழுங்கை முடக்கிலும் நின்று அவன் எப்பொழுது வீட்டைவிட்டு வெளிக்கிடுவான் நாவைச் சுழற்றிச் சாட்டையாய் வீசலா மெனக் காத்திருந்தது மாதிரி.

“என்ன தம்பி! கன நாள் லீவோ?” - “ஊரிலே தான் நிக்கிறாய் எண்டு கேள்வி. ஆனா, வெளியிலை தலைக்கறுப்பையே காணன்"- "இனி ஊரோடை தான் தங்கிறதோ?” இந்த சொடுக்கல்களிடையே, அவன் அடிபட்ட நாயாய் “விர்" ரென்று, தன் ஊரைக் கடந்து வந்திருக்கின்றான்.

சற்று முன் "என்ன தம்பி! பிழைப்பெல்லாம் எப்பிடி?” என் பிழைப்பில் அழுத்தம் கொடுத்துக் கேட்டுப் போனானே, அந்த சிவராசா! அவனிடம், சைக்கிள் சீற்றின் இரு புறமும் பிதுங்கி வழியும் அந்த சதையைப் பிடித்து உலுக்கி ”இது மட்டும் நேர்மையாகச் சம்பாதித்ததா?” என கேட்டிருக்க வேண்டுமென்று ஒரு கணம் கிளர்ந்து மடிந்த ஆவேசத்தில் நினைத்துக் கொண்டான்.

Friday, 4 September 2020

சதுப்பு நிலம் - எனக்குப் பிடித்த சிறுகதை

 

எம். . நுஃமான்

அவளை இதற்குமுன் வேறு எங்கேயும் கண்டதாக அவனுக்கு நினைவு இல்லை. நிச்சயமாக நான் கண்டிருக்க முடியாது என்றுதான் அவன் நினைத்தான். ஏனென்றால் அவன் அடிக்கடி மட்டக்களப்புக்கு வருவதில்லை. வந்தாலும் வாசிகசாலைக்குள் வர அவனுக்கு நேரம் கிடைப்பதில்லை. எப்போதோ இரண்டொரு முறைதான் அவன் இங்கு வந்திருக்கிறான். இவள் அடிக்கடி பின்னேரங்களில் வருவாளாக்கும் என்று நினைத்தான். அவள், அவனுக்கு இடதுபுறமாகச் சிறிது தள்ளி அமர்ந்திருந்தாள்.

அவனுக்கு அவளை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும்போல் இருந்தது. ஆயினும் புத்தகத்தையே வாசிப்பதுபோல் அவன் பாவனை பண்ணினான். என்றாலும் மனம் அலைபாய்ந்தது. புத்தகத்தில் ஒன்றுமே அவனுக்குப் பிடிபடவில்லை. வெறும் எழுத்துக்களைக் கண்கள் மேய்ந்துகொண்டு சென்றன. இன்னும் அவள் தன்னையே பார்த்துக்முகத்திற்கு அவளுடைய சிறிது தடித்த சிறிய உதடுகள் கவர்ச்சியாக இருந்தன. அவள் அடிக்கடி கீழ் உதட்டைக் கடித்துக்கொண்டு எழுதினாள். அதனால் அவள் இதழ்கள் ஈரமாக இருந்தன. அந்த இதழ்களின் ஈரப் பொழுபொழுப்பு அவனைக் கவர்ந்தது. அவளுடைய இரு காதுகளின் மேற்பகுதிகளும் கூந்தலுள் மறைந்திருந்தன. அவள் பின்னல்களில் ஒன்று தோளில் இருந்து வழுவி முன்புறம் விழுந்து கொப்பியின் மீது பட்டும் படாமலும் ஆடியது. அவள் அதை இடது புறங்கையால் ஒதுக்கிவிட நிமிர்ந்தபோது அவளுடைய கண்கள் அவனைச் சந்தித்தன.

Tuesday, 1 September 2020

கோவில் பூனை - எனக்குப் பிடித்த சிறுகதை

 சிற்பி (சி.சரவணபவன்)

 

சித்திரை மாதத்துச் சூரியன் கொளுத்து கொளுத்தென்று கொளுத்தினான். கண்களைத் திறக்கவே முடியாதபடி அவ்வளவு வெப்பம் அனல் காற்று வீசியது. வீதியிலுள்ள தார் வெப்பத்தைக் கண்டு குமுறுவதைப்போல் உருகிப் பொங்கியது.

 

இந்தப் பதைபதைக்கும் வெய்யிலையும் பொருட்படுத்தாது அந்த இரண்டு உருவங்களும் அங்கே நின்று மோனத் தவம் செய்தன. முதலாவதாக அந்த இடத்தை வந்து சேர்ந்தவன் மயிலன். உடம்பெல்லாம் திருநீற்றுக் குறிகள்; நெற்றியிலிட்ட சந்தனப் பொட்டிற்குள் பளிச்சென்று மின்னிக் கொண்டிருந்தது குங்குமம். இரண்டு காதுகளிலும் செவ்வரத்தைப் பூக்கள். கையிலே ஒரு சிறு சாக்குப் பை, அதற்குள்ளே வைக்கப்பட்ட போத்தலில் நிறையத் தண்ணிர் இருந்தது. ஏற்படக்கூடிய கஷ்டங்கள் எல்லாவற்றையும் எதிர்பார்த்தே தன் ஆயத்தங்களைச் செய்திருந்தான். அந்த அகோர வெய்யிலிலும் அவன் தோற்றம் குளிர்மையை வருவித்தது.