Wednesday, 25 June 2014

தக்க வைத்தல் (கங்காருப் பாய்ச்சல்கள் -1)நான் நூல் நிலையம் செல்லும் சமயங்களில் அடிக்கடி ஒரு வயது முதிர்ந்தவரைச் சந்திப்பேன். அவர் தனது மனைவி மகளுடன் வந்து நிறையவே தமிழ்ப் புத்தகங்களை எடுத்துச் செல்வார். ஒரு தடவையில் 25 புத்தகங்கள் மட்டில் இங்கு எடுத்துச் செல்லலாம். ஒரு மாதம் வரையும் வைத்திருந்து படிக்கலாம். அவர் என்னைப் பார்த்துச் சிரிப்பார். ஆனால் கதைக்க மாட்டார்.

ஒருமுறை ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு நூல் நிலையத்தை விட்டு வேகமாகக் கிழம்பிக் கொண்டிருந்தேன். அப்போது என்னை அவர் இடை மறித்தார்.

"என்ன ஒரு புத்தகத்துடன் புறப்பட்டு விட்டீர்கள்! வாசிக்கின்றீர்களோ இல்லையோ நிறையப் புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள். அடுத்த தடவை வரும்போது அவற்றைப் போட்டு விட்டு, மீண்டும் நிறையப் புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள். இல்லாவிட்டால் நமது தமிழ்ப்பிரிவை மூடி விடுவார்கள்" என்று ஆதங்கப்ப்பட்டார் அவர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஆனால் உண்மை அதுதான். இந்த நூல் நிலையத்தில் இருக்கும் தமிழ்ப்புத்தகங்கள் எவ்வளவு தூரத்திற்கு எமது மக்களைப் போய்ச் சேருகின்றதோ, அதைப் பொறுத்தே அங்கு தமிழ்ப் பிரிவும் இருக்கும். அதிக தமிழ் மக்கள் புத்தகங்களை வாசிக்காவிடில் தமிழ்ப் பிரிவை மூடி விடுவார்களாம்.
Saturday, 14 June 2014

புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்


[புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் நாவல்கள் எனும்போது அவர்கள் தாயகத்தில் இருக்கும்போது எழுதி வெளியிட்ட நாவல்களை இங்கு நான் கருத்தில் கொள்ளவில்லை. மேலும் இங்கே குறிப்பிடும் எல்லா நாவல்களையும் வாசிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டவில்லை. இருப்பினும் தரவிற்காக அவற்றையும் சேர்த்துள்ளேன்.]

உலகில் எத்தனையோ நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள், சமகால தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கிய கூறாக இருக்கின்றன. காலத்துக்குக் காலம் மக்கள் பல்வேறு காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்துள்ளார்கள். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் தமிழர்கள் படைக்கும் படைப்புகளை 'புலம்பெயர் தமிழ் இலக்கியம்' எனவும் 'புகலிட தமிழ் இலக்கியம்' எனவும் இரு தொடர்களால் அழைக்கின்றோம். இதில்கூட சில மாற்றுக்கருத்துகள் நிலவுவதைக் காணலாம். திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன், 'புலம்பெயர்ந்தோர் இலக்கியம்' என்று கூறுவது தவறு என்றும், அதை 'அந்தந்த நாட்டு தமிழ் இலக்கியம்' என்று சொல்லலாம் என்றும் சொல்கின்றார். அவர் கூறும் சொற்றொடர் ஓரளவிற்கு 'புகலிட தமிழ் இலக்கியம்' என்பதையே சுட்டி நிற்கின்றது.

Sunday, 8 June 2014

ஆள் மாறாட்டம்


யூனிவசிட்டியில் படிக்கும்போது நான், திரு, சிவா என்று மூன்றுபேர் ஒரு அறையில் இருந்தோம். வெள்ளிக்கிழமை விரிவுரைகள் முடித்து, விடுதிக்கன்ரீனில் சாப்பிட்டுவிட்டு சில ஹோம்வேர்குகளை செய்துகொண்டு இருந்தபோது திடீரென்று

"நாளைக்கு நாங்கள் பெரஹரா பார்க்கப் போகின்றோம்" என்றான் திரு.
"எக்ஷாம் வாற நேரத்திலை உதுக்கெல்லாம் போய் வீணாக நேரத்தை செலவழிப்பதா? நான் வரமாட்டன்" என்றான் சிவா.
"நிறைய வடிவு வடிவான சிங்களப்பெட்டையள் எல்லாம் வருவாளவை. எக்ஷாமா பெரஹரவா? நீயே தீர்மானி" என்று திரு மீண்டும் உசுப்பேத்தினான். எனக்கென்னவோ பெரஹரா பார்க்கப் போறதுதான் நல்லது என்று பட்டது.

'எண்ணப்பறவை சிறகடித்து - விண்ணில் பறக்கின்றதா
உன் இமைகளிலே உறக்கம் வர - கண்கள் மறுக்கின்றதா' பாட்டு ஒன்று கேட்டுக்கேள்வி இல்லாமல் தக்க சமயமெனப் புறப்பட்டது.

"ஒரு ஆளின்ரை சத்தத்தைக் காணேல்லை" திரு என்னைச் சுட்டிக்காட்டி சிவாவிற்கு கண்ஜாடை செய்தான். நான் இன்னமும் 'வடிவு வடிவான' பாட்டு வரிகளிலேயே மூழ்கி இருந்தேன்.

அடுத்தநாள் மதியம் 'அக்பர் ஹோல்' பஸ் ஸ்ராண்ட் நோக்கிப் போய்க்கொண்டிருந்தோம். வழியில் எங்களுடன் விஜயனும் சேர்ந்திருந்தான்.
"ஏய்.. மச்சான் நான் வரேல்லையடா"  என்றான் திரு.
"நீதானேடா துவக்கினனி. பிறகு நீயே வரேல்லை எண்டா...."
"எக்ஷாமடா... எக்ஷாமுக்கு நிறையப் படிக்கக் கிடக்கு" என்று சொல்லியவாறு அக்பர்ஹோல் நோக்கி திரும்பிவிட்டான் திரு.

பஸ் ஸ்ராண்டை நெருங்கி விட்டோம். நாங்கள் மூவரல்ல, ஒரு பட்டாளமே பெரஹரா பார்க்கப் புறப்பட்டிருக்கின்றார்கள் என்று தெரிகிறது. அந்தக்கூட்டத்தில் கலர் கலரான உடுப்புகளில் நாலைந்து பள்ளிமாணவிகளும் இருந்தார்கள்.
"எட்டி நடவுங்கோ..." என்றபடி விஜயன் கைகளை விசுக்கி விசிக்கி நடந்தான். பின்புறமிருந்து பஸ் ஒன்று வந்து எங்களைக் கடந்து போனது.
"கொத்தப் போறாண்டா...   கொத்தப் போறாண்டா..." என்று விஜயன் பதகளிப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே, அந்த பஸ் அந்த நாலைந்து பெண்களையும் கொத்திக்கொண்டு போய்விட்டது.

காட்சிப் பிழை


பாலகிருஷ்ணனின் மாமா அமிருக்கு ஒரு விருந்தாளி வந்திருந்தார். 'ஹோல்' மகிழ்ச்சியும் சிரிப்புமாக களை கட்டியிருந்தது.

விருந்தாளி, பாலகிருஷ்ணனையும் அவனது மனைவி கலைச்செல்வியையும் பார்ப்பதற்குத்தான் வந்திருக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவர்கள் இருவரும் இலங்கையிலிருந்து கனடாவிற்கு வந்திருந்தார்கள். கனடாவில் கலைச்செல்வியின் அப்பாவும் அண்ணனும் இருக்கின்றார்கள். வவனியாவிலிருந்து கொழும்பு வந்து பின்னர் கனடா வந்த களைப்பு இன்னமும் தீரவில்லை.

குளியலறைக்குள் பாலகிருஷ்ணன் 'ஷேவ்' செய்து கொண்டிருந்தான்முப்பது வருடங்களாகியும் பாலாவின் முகத்தினில் இருந்த தழும்புகள் மறையவில்லை. அதை தடவிப் பார்த்தான். காலம் போக வடுக்கள் எல்லாம் மறைந்து, உடம்பில் ஒரே ஒரு வடு மாத்திரமே தங்கும் என சொல்வார்கள். ஆனால் முப்பது வருடங்களாகியும் வடுக்கள் பத்திரமாக, அதே இடத்தில் அப்படியே இருந்தன. அவை நிலைக்கண்ணாடியில் இப்போது விஸ்வரூபமாகத் தெரிகின்றன.

"மன்னிக்கிற மனப்பான்மை இன்னும் எங்கடை ஆக்களுக்கு வரேல்லை எண்டுதான் சொல்லுவன்" வந்திருக்கின்ற நண்பருக்கு, மாமா சொல்லிக் கொள்கிறார். வந்தவருக்கு அடியும் விளங்கவில்லை; நுனியும் விளங்கவில்லை.

"அமிர்... கொஞ்சம் புரியும்படியாகத்தான் சொல்லுங்களேன்" என்றவருக்கு வாயில் கைவிரலை வைத்து 'உஷ்' என்று சைகை காட்டிவிட்டு,
தன் கைகளை குளியலறை நோக்கி விசிறிக் காட்டுகிறார் அமிர். வந்தவர் தனது இடுப்பை இரண்டாக மடித்து, பார்வையை குளியலறை நோக்கி எறிகின்றார்.

பாலாவின் முகத்திலே சரேலென்று 'ஷேவிங் றேஷர்' பதிந்தது. மெல்லிய கீறலாக இரத்தம் கசிந்தது.
"பாலா எத்தனை மணிக்கு உங்கடை பிரன்ஸ் வாறதெண்டு சொன்னனியள்?" மனைவி செல்வி அவனுக்குப் பின்னால் வந்து நின்று கேட்டாள். 'டவலி'னால் முகத்தை ஒற்றியபடியே "ஆறு மணிக்கு" என்று சொல்லிவிட்டு நிலாமுற்றத்திற்கு விரைந்தான் பாலா.

நிலாமுற்றம் - இரண்டு பூச்சாடிகள், ஒரு உடுப்புக் காயப்போடும் 'குளோத் றாக்', மற்றும் மூன்று மனிதர்கள் நிமிர்ந்து நிற்கக்கூடிய இடம். 'கென்னடி றோட்டில்' இருக்கும் அந்த 'பிளற்றின்' பத்தாவது மாடியிலிருந்து பார்க்கும்போது ஸ்காபரோவின் பெரும்பாலான பகுதிகள் தெரிகின்றன. திட்டமிட்டு அமைக்கப்பட்ட போக்குவரத்து நெடுஞ்சாலைகள் நீள்சதுர வடிவில் விரிந்து கொண்டே அழகு காட்டுகின்றன. எங்குமே 'சிக்னல்' விளக்குகள். மருந்துக்கும் 'றவுண்ட் எபவுற்' ஐக் காணமுடியவில்லை.

'தம்பீ!' என்று இழுத்தபடியே மாமாவின் நண்பர் பாலாவிடம் வருகின்றார்.
"தம்பி... 'தெமட்டகொட அங்கிள்' கான்சர் எண்டு ஆறேழு மாதமாப் படுத்துக் கிடக்கிறாராம். இன்னும் இரண்டோ மூன்று கிழமைகள் இருந்தாரில்லை. உம்மை ஒருக்கால் பாக்கவேணுமெண்டு ஆசைப்படுகிறாராம். ஒருக்கால் போய் பாரும். வாய்விட்டுக் கேட்டாப் போலும் பாக்காமல் இருக்கிறது சரியில்லை."
"நாங்கள் கனடாவுக்கு வந்தது எப்படி அவருக்குத் தெரியும்? மாமாதான் சொல்லியிருக்கிறார். அவர் என்னைப் பாக்க வேணுமெண்டு சொல்லுறது கூட மாமாவின்ரை இட்டுக்கட்டின கதை. அவரைப் போய்ப் பாக்கப் பண்ணுறதுக்கு மாமா செய்யிற தந்திரம்." அவனுடைய பதிலில் வந்தவர் விறைத்துப் போனார்.

Thursday, 5 June 2014

கங்காருப் பாய்ச்சல்கள் (2)


இலங்கையில் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது நண்பன் ஒருவன் ‘துசிததிஜேட்டரில் நல்ல ‘த்ரில்படமொன்று ஓடுவதாகச் சொன்னான். ‘சூட்டிங்படம். ஆங்கிலப்படம். நண்பனின் கதையைக் கேட்டு படம் பார்க்கச் சென்றோம்.

ஆரம்பத்தில் இருந்தே இரண்டுபேர் ஒரு மேசையின் முன்னால் இருந்து தர்க்கித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவனின் அருகில் துப்பாக்கி ஒன்று இருந்தது. அடிக்கடி கமரா அதனைப் ஃபோர்கஸ் செய்தது. கதை இடையிடையே எங்கோவெல்லாம் சென்று மீண்டும் அந்த மேசைக்கு வரும். மொத்த்த்தில் அந்த இரண்டு பேரும் மேசையும்தான் படம். இரண்டுமணி நேர உரையாடலின் பின்னர் துப்பாக்கி வைத்திருந்தவன், அதனை எடுத்து மற்றவனைச் சுட்டுக் கொன்றான். இதைப் பார்க்க இரண்டுமணி நேரம் பொறுமை சகிப்புத்தன்மை எல்லாம் வேண்டும்.

சிறுகதை ஒன்றில்---சுவரில் அடிக்கப்பட்ட ஆணி ஒன்றில் துப்பாக்கி ஒன்று தொங்கினால், கதை முடிவதற்குள் அந்தத் துப்பாக்கி வெடித்தே ஆக வேண்டும் என்று சொல்வார்கள். இல்லாவிடில் அந்த்த் துப்பாக்கி கதையில் வரக்கூடாது என்பார்கள். நல்ல ஒரு கதைக்கு அதுவே அடையாளம் என்பார்கள்---இதை யாரோ சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். இதனடிப்படையில் அந்தச் சினிமாவைப் பார்த்தால் அதுவும் நல்லதொரு படம் தான்.
ஒரு சிறுகதையின் ஆரம்பப் பந்தியில் ஒரு திருப்பத்தை (twist) வைத்துவிட வேண்டும் என்று சொல்லுவார்கள். சிலரது கதைகளில் –படத்தில் வரும் துப்பாக்கி போல் பொறியைக் காட்டுவார்கள். அதன் பிறகு அந்தப் படம் போலத் தாலாட்டுத்தான். சம்பவங்கள் எல்லாமே சிறுகதைகள் ஆகிவிடுவதில்லை. சிறுகதையில் ஒவ்வொன்றையுமே புட்டுப் புட்டுச் சொல்லவும் தேவையில்லை. வாசகர்கள் முட்டாள்கள் அல்ல.

நாவல் ஒரு ‘வடம் என்றால், அதன் துண்டம்சிறுகதை ஆகும். அதற்காக பத்துப் பதினைந்து நல்ல சிறுகதைகளைச் சேர்த்துக் கட்டி அதை நாவல் என்று சொல்லப்படாது. சமீபத்தில் நல்ல சிறுகதைகளைப் படைக்கும் ஒரு மூத்த எழுத்தாளர் அப்பிடித்தான் செய்தார். அதையும் சிலர் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்.
தமிழ் அங்காடி ஒன்றிற்கு முன்னால் நின்றுகொண்டிருந்தேன். கடைக்குள்ளிருந்து எனக்குத் தெரிந்த இளைஞர் ஒருவர் வேகமாக கையில் ஒரு கட்டுப் பேப்பருடன் வெளியே வந்தார். சமீபத்தில் அவர் ஒரு சிறுகதைத்தொகுதியொன்றை வெளியிட்டிருந்தார். நானும் அதற்குப் போயிருந்தேன். என்னை நோக்கி வருகின்றார்.

“இன்னும் மூன்று கிழமைகளில் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட இருக்கின்றேன். ஒன்று ஆங்கில மொழிபெயர்ப்பு. மற்றது வியட்நாமிய மொழிபெயர்ப்பு.
கையிலிருந்த அழைப்பிதழ் ஒன்றை நீட்டினார். முற்றுமுழுதாக வியட்நாமிய மொழியில் அச்சிடப்பட்டிருந்த அழைப்பிதழ் அது. இடையே ஆங்கிலத்தில் -மொழிபெயர்கப்பட்ட புத்தகத்தின் பெயரும் அவரது பெயரும் மாத்திரம் இருந்தன. அவுஸ்திரேலியாவில் வியட்நாமியர்கள் அதிகம் பேர் வாழ்ந்து வருகின்றார்கள். அவர் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கின்றார். அங்கு நிறைய வியட்நாமியர்கள் வேலை செய்யக்கூடும்.
அப்போது எனக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது. கூட்டமொன்றில் ஒரு எழுத்தாளர் தனது சிங்கள் மொழிபெயர்ப்பு நூல் ஒன்றை என்னிடம் தந்தார்.

“என்ன தம்பி தூஷணத்திலை எல்லாம் எழுதிக்கிடக்கு அருகே ஒருந்த மூத்த எழுத்தாளர்---அவருக்கு காது கேட்காது, கண் பார்வை கூர்மை--- என்னிடம் இப்படிக் கேட்டார்.
“என்ன சொல்கின்றார்?என்றார் புத்தகத்தைத் தந்தவர். நான் மெளனமாகி நின்றேன்.
இது கந்தப்பு மாமா எழுதின எக்‌ஷாம்.

|என்னடி உமா... உன்ரை பிள்ளைக்கு மாக்ஸ் குறைஞ்சிட்டுதாம்!|
|கந்தப்பு மாமா இறந்த கவலை இருக்காதா பிள்ளைக்கு...|

“அதாரடி கந்தப்பு மாமா... இவ்வளவு நாளும் அவரைப்பற்றி எனக்கு ஒண்டும் சொல்லேல்லையே?
“அது செல்வி.... என்ரை இவர் நாதனரை தம்பியின்ரை சம்பந்த பகுதி ஆக்கள்

|கந்தப்பு மாமா எங்கை செத்தவர்?|
|இஞ்சாருங்கோ... கந்தப்பு மாமா எங்கையப்பா இருந்தவர்?|

“ஆரைப் பற்றிக் கேக்கிறீர்?
இல்லை... உங்கடை கந்தப்பு மாமா எங்கை இருந்தவர்?
“அரியாலையிலை எண்டுதான் நினைக்கிறன்

|அவர் சாகேக்கை எத்தினை வயது?|
|இஞ்சாருங்கோ கந்தப்பு மாமா சாகேக்கை எத்தினை வயதிருக்கும்?|
|ஆருக்குத் தெரியும்... தொண்ணூறு எண்டு நினைக்கிறன்|

“உமா... நீர் எப்பவாகிலும் கந்தப்பு மாமாவைச் சந்திச்சிருக்கின்றீரா?
“நானே சந்திக்கேல்லை. எப்பிடி உமா சந்திச்சிருப்பாள்?

|அப்ப ஒருத்தருமே செத்தவீட்டுக்கும் போகேல்லையெண்டு சொல்லுங்கோ|
|என்ன உமா விடுத்து விடுத்தெல்லாம் கேள்வி கேக்கிறாய்?|

“இல்லை உமா... எனக்கே கந்தப்பு மாமா செத்த கவலை இம்பிட்டு இருக்கேக்கை, உங்கடை பிள்ளைக்கு இருக்காதா என்ன?


பாய்ச்சல்கள் தொடரும்...

கங்காருப் பாய்ச்சல்கள் (1)தமிழ் எழுத்தாளர்கள் தமது படைப்புகளை பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கும்போது தேர்வு என்பது முக்கியமானதொன்றாகிறது. தேர்வு சரியாக அமையாவிடில் தமிழ் இலக்கியம் பற்றிய மதிப்பீட்டின் தரம் குறைந்துவிடும்.
புலம்பெயர்ந்த சில எழுத்தாளர்கள் பணம் இருக்கின்றதே என்ற கைங்கரியத்தில், தமது படைப்புகளை அசுரகதியில் மொழிபெயர்புச் செய்து அவசர அவசரமாக வெளியிட்டு வருகின்றார்கள். இந்தத் தனிநபர் முயற்சிகளைப்பற்றி சற்றுச் சிந்திக்க வேண்டியுள்ளது...!
சில எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் பார்த்துப பயந்து ஓடிய காலம் போய், எழுத்தாளர்கள் சிலரையே பார்த்துப பயந்தோடும் காலம் வந்துள்ளது. “சே! என்ன மனிசரப்பா... சும்மா இருந்த என்னைச் சந்திக்கவென்று வீட்டுக்கு வந்துவிட்டு, என் பெண் எப்படி இருக்கின்றாள்? என் மனைவியின் சமையல் பக்குவம் எப்படி? என் அம்மம்மாவை நான் முதியோர் இல்லத்தில் விட்டது பற்றியெல்லாம் கட்டுரை கட்டுரையாக எழுதிவிட்டாரே! என்று சமீபத்தில் என்னிடம் ஒரு நண்பர் புளுங்கினார்.
கதை எழுதலாம். கதையில் வேறு பெயர்களைப் போட்டு சம்பவங்களைத் திரித்து சுவைபட எழுதிவிட்டுப் போகலாம். ஆனால் கட்டுரை எழுதுவதென்பது? இது அவர்களின் எழுத்து வறட்சியைக் குறிக்கின்றதா?
சில எழுத்தாளர்கள் சிங்கள இனமக்களின் நல்ல இயல்புகளை மாத்திரம் கதையாகவும் கட்டுரைகளாகவும் எழுதித் தள்ளுகின்றார்கள். ஏதோ தமிழ் மக்கள் மிகவும் கூடாதவர்கள் என்பது போல. ஓரிரு படைப்புகளில் மாத்திரம் நான் இதை அவதானிக்கவில்லை. அவர்களின் எழுத்தே அப்படித்தான்.
எல்லா இன மக்களிலிலும் நல்லவர்களும் உள்ளார்கள், தீயவர்களும் உள்ளார்கள். இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எழுத்தில் ஒரு சமநிலை இருக்க வேண்டும்.
இப்பொழுதெல்லாம் சில எழுத்தாளர்களும் கலைஞர்களும் தங்களுக்கு ஏதாவது இருக்கும் பட்சத்தில்தான் விழாக்களுக்கோ கருத்தரங்குகளுக்கோ வருகின்றார்கள். ஏதாவது பேசுவதற்கோ, கவிபாடவோ, கருத்தரங்குகளில் கலந்து கொள்ளவோ அல்லது நூல் அறிமுகம், சிறப்புப்பிரதிகள் வாங்க என்றால்தான் அவர்கள் வருகின்றார்கள். இல்லாவிடில் ஏதாவது நொண்டிச்சாட்டு சொல்லி விடுகின்றார்கள்.
சமீபத்தில் ஒரு எழுத்தாளரை விழாவிற்கு பார்வையாளராக அழைத்தபோது “நான் அங்கு வருவதால் எனக்கென்ன benefit ? என்று கேட்டார்.
மேலும் சிலநாட்களிற்கு முன் முகநூலில் ஒரு நண்பர்,
“புத்தகம் வெளியிடுபவர்கள், தாங்களே ரீயையும் வடையையும் இலவசமாக வாங்கிக் குடுத்து புத்தகத்தை வெளியிடுகின்றார்கள் என்று குறைப்பட்டிருந்தார். அவரை ஒரு புத்தகவெளியீட்டு விழாவில் வந்து, அங்கு நடைபெறும் கவியரங்கில் கவிதை பாடக் கூப்பிட்டபொழுது ஐயையோ.... ரிக்கற் புறோகிறாமிற்கு எல்லாம் நான் கவிதை பாடுவதில்லை என்றார். காரணம் விழா நடத்துபவர் இரவு உணவும் வழங்குவதால் நிகழ்ச்சிக்கு சிறு தொகைப் பணத்தை ரிக்கற்றாக வைத்திருந்ததுதான்.

பாய்ச்சல்கள் தொடரும்...