Friday 3 November 2023

படைப்புகள் மீதான பார்வை

 எனது `சுருதி’ வலைத்தளம் பற்றியும், அதிலுள்ள படைப்புகள் பற்றியுமான வாசகர்களின் கருத்துகளை அறிய விரும்புகின்றேன்.

வாசகர்கள் தங்கள் கருத்துகளை எனது வலைத்தளத்தில் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.


Thursday 2 November 2023

எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்/பால்வண்ணம்/சிறுகதைகள்/நூல்அறிமுகம்/ @akkaKuruvi


சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எனது `பால்வண்ணம்’ சிறுகதைத்தொகுப்பின் முழு ஒலிவடிவம்
நன்றி : பண்டாரவன்னியன் புத்தகசாலை

Thursday 26 October 2023

நினைவில் நின்றவை - சிறுகதை ஒலிவடிவம்

 

நன்றி : சொல்வனம்

ஒலி வடிவம் - சரஸ்வதி தியாகராயன்

Wednesday 25 October 2023

நினைவில் நின்றவை – சிறுகதை

 

சோஷல்

மஞ்சு சில வருடங்களாக புற உலகில் இருந்து ஒதுங்கி இருக்கின்றாள். எந்தவொரு நிகழ்விற்கும் அவள் விரும்பிப் போவதில்லை. யாருடனும் பழகுவதுமில்லை.

கொழும்பில் மகன், மருமகள், பேரப்பிள்ளையுடன் இருந்த காலங்களில் அவள் தனிமையை உணர்ந்ததில்லை. மகனுக்கு சின்சினாட்டிப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை செய்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தபோது அவள் கொஞ்சம் கலங்கிப் போய்விட்டாள். மகனின் எதிர்காலம் கருதி, வற்புறுத்தி அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தாள். அதன் பின்னர் ஊருக்குத் திரும்பி, போரினால் சிதிலமடைந்திருந்த தனது வீட்டைத் திருத்தி அங்கேயே தங்கிக் கொண்டாள். தனது அந்திமகாலம் அங்கேயே கழிய வேண்டும் என்பது அவள் விருப்பம். பொழுதுபோக்குக்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அக்கம்பக்கத்தில் உள்ள பிள்ளைகளுக்குப் படிப்புச் சொல்லிக் குடுப்பாள்.

ஒருநாள் மதியம், “எயிற்றி ரூ பட்ச் கெற்றுகெதர் வைக்கப் போகின்றோம்” என்று சொல்லியபடி நந்தனும் முரளியும் அவளின் வீட்டுக் கதவைத் தட்டினார்கள். அவளும் நந்தனும் எல்லாப் பிரச்சினைக்குள்ளும் இலங்கையில் தான் இருக்கின்றார்கள். முரளி கனடாவிலிருந்து ஒன்றுகூடலை ஒழுங்கு செய்யவென வந்திருந்தான்.

“இது ஒரு காலங்கடந்த ஒன்றுகூடல் எண்டு நான் நினைக்கிறன். இருபது இருபத்தைஞ்சு வருஷத்துக்கு முந்திச் செய்திருக்க வேணும் முரளி…”

நாற்பது வருடங்கள் கழித்து ஒரு ஒன்றுகூடல் தேவையா என்பது மஞ்சுவின் மனதில் பெருங் கேள்வியாக எழுந்தது. முரளி தலைக்குள் கையை வைத்துக் கோதினான்.

“செய்யக்கூடிய நிலையிலையா அப்ப நாடு இருந்தது. யுத்தம் முடிஞ்ச கையோடை செய்திருக்க வேணும். எங்கை… ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சோலியள். ஒவ்வொரு நாட்டிலையும் போய் ஒளிஞ்சிருக்கிற ஆக்களைத் தேடிப்பிடிச்சு ஒண்டாக் கொண்டுவாறதெண்டா சும்மா லேசுப்பட்ட காரியமா?” என்றான் நந்தன்.

“ஆர் ஆர் வருகினம்? வாற ஆக்களின்ரை லிஸ்ற் இருக்கோ?”

Tuesday 24 October 2023

பால்வண்ணம் சிறுகதை நூலின் அறிமுக நிகழ்வு




பால்வண்ணம் சிறுகதை நூலின் அறிமுக நிகழ்வானது  2023.10.22 அன்று பிற்பகல் 03.00 மணிக்கு வவுனியா நகரசபைப் பொதுநூலகத்தில் பண்டாரவன்னியன் புத்தகசாலையின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்றது.

இவ் நிகழ்விற்கு தமிழருவி .சிவகுமாரன் அவர்கள் தலைமை வகித்திருந்தார். மேலும் கொ.பாபுஏழாலை அகரா ஆகியோர் நூல் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டிருந்தார்கள். நேற்றைய தினம் புத்தக ஆர்வலர்கள் சூழ அருமையான பொழுதாக இருந்தது. இளையோர்களும் அறிஞர்களுமாக தமது கருத்துகளை வழங்கிருந்தார்கள்.




தகவல் - பண்டாரவன்னியன் புத்தகசாலை

Sunday 15 October 2023

`பால்வண்ணம்’ சிறுகதைத்தொகுப்பு அறிமுகம்


எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் அவர்கள் எழுதிய 'பால்வண்ணம்' சிறுகதைத் தொகுப்பானது 2023.10.22 அன்று பிற்பகல் 03.00 மணிக்கு நமது வவுனியா நகரசபைப் பொது நூலக கேட்போர்கூடத்தில் அறிமுக நிகழ்வாக இடம்பெறவுள்ளது. இலக்கிய விரும்பிகளை அன்போடு அழைக்கிறோம்.
சென்றிடுவீர் எட்டுத்திக்கும்,எங்கே போகிறோம்,மெல்பேர்ண் வெதர்,கார்காலம்,ஏன் பெண்ணென்று,வளர் காதல் இன்பம் ஆகியன இவரது பிற நூல்களாகும். தொடர்ந்து இலக்கியங்களோடு செயற்பட்டுவரும் இவரது எழுத்துகளின் வாசனையை நுகர்ந்துகொள்ள நமது எழுத்தாளர்கள் பற்றி அறிந்துகொள்ள வாருங்கள்.

புத்கங்களோடு இயங்குதலொன்றையே பெருங்கனவாகக்கொண்டு இயங்கிவரும் பண்டாரவன்னியன் புத்தகசாலையின் ஒன்பதாவது நூல் அறிமுகமும் உரையாடலும் நிகழ்வுக்கு அனைவரும் வாருங்கள். திரையரங்கு செல்கையில் பிள்ளைகளை எவ்வாறு ஆர்வமாகவும் சந்தோசமாகவும் அழைத்துச் செல்கின்றீர்களோ அதுபோல இவ்வாறான நிகழ்வுகளுக்கும் உங்கள் பிள்ளைகளை அழைத்து வாருங்கள்.
சிந்திப்பவர்கள் சிறப்படைவார்கள். வாங்க மக்கா!

பண்டாரவன்னியன் புத்தகசாலை / 0772244616

Sunday 24 September 2023

Sunday 10 September 2023

யாழ் பறவை (LYRE BIRD) – சிறுகதை

 


நாளைக்குக் காலமை சவரின் ஹில் பாக்கப் போகிறோம். நீங்களும் வெளிக்கிட்டு நில்லுங்கோ. போற வழியிலை உங்களையும் கூட்டிக்கொண்டு போறோம்,” மகள் தன் பெற்றோருக்கு, முதல்நாள் இரவு தொலைபேசியில் அழைப்பு விட்டிருந்தாள்.

ஞாயிற்றுக்கிழமைகளில் சந்திரமோகனும் பராசக்தியும் தாமதித்தே உறக்கம் கலைவார்கள். அன்று நேரத்திற்கு எழுந்து தயாராகிவிட்டார்கள். மெல்பேர்ணில், பலரட் என்ற இடத்தில் உள்ள சவரின் ஹில்லை---தங்கச்சுரங்கத்தை---அவர்கள் ஏற்கனவே இரண்டு தடவைகள் பார்த்துவிட்டார்கள். இருப்பினும் மகள், மருமகன், பேர்த்தியுடன் பார்க்கப் போவது இதுதான் முதல் தடவை. ஆயிரத்து எண்ணூற்று ஐம்பதுகளில் பலரட் என்னுமிடத்தில் தங்கம் அகழ்ந்தெடுத்ததை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது இந்த `சவரிங் ஹில்’.

சந்திரமோகனும் மனைவியும் வெளிக்கிட்டு, நேரத்திற்குப் போய்விடவேண்டும் என்பதால் வீட்டிற்கு முன்னால் காத்து நின்றார்கள். எதிரே பரந்து விரிந்திருந்த, சந்திரமோகனின் விவசாய நிலப்பரப்பில் சிலர் வேலை செய்து கொண்டு நின்றார்கள். சந்திரமோகன் வீதியைக் குறுக்காகக் கடந்து – அப்பிள், பீச்சஸ், நெக்டரின் பழங்களை அறுவடை செய்து கொண்டிருந்தவர்களுடன் கதைத்துவிட்டு அங்கிருந்தபடியே மனைவியைப் பார்த்தார். இன்னமும் மகள் வரவில்லை.

 பராசக்தி தன் தோள்பட்டையில் தொங்கிக் கொண்டிருந்த பையை சரி பார்த்துக் கொண்டார். தின்பட்டங்கள் உள்ளே ஒளித்திருக்க, தண்ணீர்ப்போத்தல்கள் வெளியே நீண்டிருந்தன. மகள் குடும்பம், கரோலைன் ஸ்பிறிங்ஸ் என்ற இடத்திலிருந்து புறப்பட்டு, இவர்கள் இருக்கும் பக்குஸ்மாஸ் வந்தடைந்தார்கள். மகளின் காரைக் கண்டதும், சந்திரமோகன் நடையைத் துரிதமாக்கி விரைந்து வந்தார்.  தாமதிக்காமல் இருவரும் மகளின் காரினுள் ஏறிக்கொண்டார்கள்.

சந்திரமோகன் தம்பதியினருக்கு நடுவே பேர்த்தி நிலா இருந்தாள். பேர்த்திக்கு எட்டு வயதாகின்றது. இடுப்பிலிருந்து குடை போல விரிந்த ஆடையுடன், கையிலே ஒரு ஸ்ரைலான `ஹாண்ட் பாக்வைத்திருந்தாள் அவள். தலையில் குடை போல ஒரு தொப்பி `பிங்நிறத்தில் விரிந்திருந்தது. லிப் ஸ்ரிக் கூடப் பூசியிருந்தாள். அவளைக் கடைக்கண்ணால் பார்த்து புன்முறுவல் செய்துகொண்டார் சந்திரமோகன். பேர்த்தி நன்றாகத் தமிழ் கதைப்பாள். பக்குஸ்மாஸ் என்ற இடத்தில், தனது வாயைத் திறந்த பேர்த்தி, பலரட் வரும்வரையும் மூடவேயில்லை. அளப்பதும் அரைப்பதுமாக இருந்தாள்.

தாத்தா... உங்களுக்கு லயர்பேர்ட் தெரியுமா?”

நான் கூட லயர்பேர்ட் தான்.”

Sunday 27 August 2023

அம்மாவின் எண்பதாவது பிறந்ததின உரை – சிறுகதை

 

”அண்ணா! இஞ்சை வந்து பார் அம்மாவை...” வரதலிங்கத்தின் காதிற்குள் கிசுகிசுத்தான் சதாநேசன். இருவரும் பூனை போல கால்களைத் தூக்கித் தூக்கி வைத்து நடந்து, அம்மாவின் அறையை நோக்கிச் சென்றார்கள்., மறைவாக நின்று அம்மாவை எட்டிப் பார்த்தார்கள்.

அம்மா படுக்கையில் அமர்ந்தவாறு, வரதலிங்கம் சுவிஷில் இருந்து கொண்டுவந்த ஆடைகளைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் பஞ்சு போன்ற பாதங்கள் கட்டிலிலிருந்து நீண்டு அந்தரத்தில் தொங்கி ஆடிக்கொண்டிருந்தன. மனம் எங்கோ லயித்திருக்க, உதடுகள் மெல்லச் சிரிப்பதும் மூடுவதுமாக இருந்தன.

அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக இன்று காலைதான் வரதலிங்கமும் மனைவியும் சுவிஷிலிருந்து வந்திருந்தார்கள். வரதலிங்கம் ஒரு பக்திப்பழம். தனது கற்பித்தல் தவிர்ந்த நேரங்களில் - சுவிஷ் கோவில் ஒன்றில், அங்கீகரிக்கபடாத மந்திரங்கள் தெரியாத, மடைப்பள்ளி ஐயராக இருக்கின்றான். அவன் அம்மாவிற்காக சுவிஷில் இருந்து விலையுயர்ந்த ஆடைகளை வாங்கியிருந்தான். அம்மா வெள்ளை ஆடைகளை அணிவதில்லை. அதே நேரத்தில் மயிர்க்கூச்செறியும் ஆடைகளையும் தெரிவு செய்வதில்லை. மெல்லிய வர்ணங்கள்தான் அவர் விருப்பம். இதை ஏற்கனவே அறிந்திருந்த வரதலிங்கத்தின் மனைவி, அவருக்குப் பொருத்தமான ஆடைகளை வாங்கி வந்து அசத்தியிருந்தாள். வரதலிங்கத்திற்கும் சதாநேசனுக்கும் பின்னாலே நின்று தலையை நீட்டி மடக்கி அம்மாவை எட்டிப் பார்த்ததில் அவளுக்கு மூச்சிரைத்தது. உயரம் கட்டை என்பதால் துள்ளித்துள்ளி ஓசை எழுப்பியபடி அந்த அதிசயக் காட்சியைப் பார்த்தாள். அவளின் தொங்கலைப் பார்த்த இருவருக்கும் சிரிப்பு வர, அடக்க முடியாமல் போய்விட்டது. அதுவே அம்மாவின் செய்கைக்கு முற்றுபுள்ளி வைத்தது. நிமிர்ந்து அவர்களைப் பார்த்தார் அம்மா.

Monday 21 August 2023

இராம.செ.சுப்பையா நினைவு சிறுகதை போட்டி முடிவுகள்


இதனால் சகலமானவர்க்கும் அறிவிப்பது யாதெனில்..********************************************************************

என் தம்பியும் துபாயில் வசிக்கும் எழுத்தாளருமான தேவா சுப்பையா , தமது தகப்பனாரின் நினைவில் இராம செ.சுப்பையா நினைவு அறக்கட்டளை என்று தொடங்கி எனது கருமாண்டி ஜங்ஷன் யூ டியூப் சேனல் ஒருங்கிணைப்பில் கடந்த வருடம் ஒரு சிறுகதை போட்டி நடத்தி 60,000 ரூபாய் பரிசு தந்தார். கதைகளை சுவடு பதிப்பகம் மூலம் நூலாக கொண்டுவந்தார்.விழாவும் நடந்தேறியது .அறிவீர்கள்.

இந்த ஆண்டும் இராம.செ.சுப்பையா நினைவு சிறுகதை போட்டி அறிவித்தோம். சரியாக..264 சிறுகதைகள் வந்து சேர்ந்தது. மூன்று நடுவர்களாக அனுபவம் மிக்க ..எழுத்தாளர் சுப்ரபாலன் அவர்களும் எழுத்தாளர் ரிஷபன் அவர்களும் எழுத்தாளர் கணேஷ்பாலா அவர்களும் பொறுப்பேற்று முதல் கட்ட தேர்வாக ஒவ்வொருவரும் பத்து கதைகளை தேர்வு செய்து தந்தனர்.

ஆக 30 கதைகளிலிருந்து அறிவித்தபடி பத்து கதைகளை தேர்வு செய்தோம் ஆனால் சில கதைகளை விட முடியாத படி அமைந்ததால் இன்னும் இருவர்க்கு பரிசு கொடுக்க தீர்மானித்தோம்

அதன் படி அமிர்தம் சூர்யாவாகிய நானும் அறக்கட்டளை நிறுவனர் தேவா சுப்பையாவும் சுவடு பதிப்பக நல்லு ஆர் லிங்கமும் 12 சிறந்த சிறுகதைகளை தேர்வு செய்தோம்.

12 எழுத்தாளர்களும் அவர்களின் சிறுகதை தலைப்புக்களும்
***********************************************************************
1-சேது – பெண்டுளம்
2-வானவன் - யப்பா
3-நெய்வேலி பாரதிகுமார்- 44
4-சாரா – பய
5-விஜி முருகநாதன் – முத்து பெரிப்பா
6-பிரபாதேவி – முள் முத்தம்
7-டேனியல் ராஜா –மூன்றாம் நாள் உயித்தெழும் விதை
8-கே.எஸ் சுதாகர் – வளரி
9-பாலஜோதி – அரிமாச்சி
10-சுப்ரா – காரண காரியங்கள்
11-லதானந்த் – கிரால்
12-இரா. சாரதி – பொது வழிச் சாலை

நல்லு ஆர் லிங்கம் தமது சுவடு பதிப்பகம் மூலம் சிறந்த முறையில் நூலாக அச்சிட்டு தருவார்.

தேவா சுப்பையா தமது அறக்கட்டளை ,மூலம் சென்னையில் டிசம்பர் முதல் வாரம் சிறந்த ஆளுமைகளை கொண்டு விழா நடத்தி வெளியிடுவார்.

அதில் வெற்றிப்பெற்ற எழுத்தாளர்கள் கெளரவிக்கப்படுவார்கள்.

வெற்றி பெற்றவர்களுக்கு இன்னும் பத்து நாள்களுக்குள் ஜி பே மூலம் பரிசு தொகை 5000 ரூபாய் அனுப்பி வைக்கப்படும்

இப்படிக்கு….
இராம செ. சுப்பையா நினைவு அறக்கட்டளை சார்பாக ஒருங்கிணைப்பாளர் ..அமிர்தம் சூர்யா

Monday 24 July 2023

ஒரு றெயில் பயணம் - எனக்குப் பிடித்த கதை


 குப்பிழான் ஐ.சண்முகன்

கடகடவென்ற இரைச்சலுடன் புகையிரதம் விரைந்து கொண்டிருந்தது. உள்ளே கூட்டம் நெரிந்து குமைந்தது. நானிருந்த பெட்டியின் வாசற்புறக் கதவருகில் நின்று வெளியே தெரிந்த காட்சிகளில் கண்களை மேயவிட்டுக் கொண்டிருந்தேன். கரையோரப் பகுதியில், இடைக்கிடை நெடுமூச்சு விட்டவாறே புகையிரதம் சென்றது. எனது கண்கள் கரைப் பகுதிகளைத் துழாவின. ஓடிக் கொண்டிருக்கும் காட்சிகளில் மனது தங்காமலும் ஓடாத காட்சிகளில் மனது தங்கியும் கோலம் போட்டது.

கரையில் போடப்பட்டிருந்த கருங்கல் அணைகளில், மனிதர்கள் கூட்டம், கூட்டமாக இருந்து ஏதேதோ கதைத்துக்கொண்டிருந்தார்கள். காற்சட்டை போட்ட உத்தியோகம் பார்க்கும் மனிதர்களும், சாரம் அணிந்த சாதாரண தொழிலாளர்களும், கோவணம் தரித்த மீனவரும், பெண்களும், கிழவர்களும், இளைஞரும், குமரிகளும், கிழவிகளும், குழந்தைகளும் கூட்டம் கூட்டமாக, திட்டுத்திட்டாக அமர்ந்திருந்து ஏதேதோ அளவளாவினார்கள். மனிதர்கள் பிறந்த நாள் தொடக்கமே கதைத்துக்கொண்டே இருக்கிறார்கள்; ஆதாமும், ஏவாளும் கூடக் கதைத்திருப்பார்கள். இவர்கள்ளுக்கு எப்போதுதான் இக்கதை முடியுமோவென நான் எண்ணினேன்.

Saturday 1 July 2023

உரிமை எங்கே? - எனக்குப் பிடித்த சிறுகதை

 

செந்தூரன்

காலை மூன்று மணி பறங்கி மலைத் தோட்டம் ஏழாம் நம்பர் ‘லயத்தில்’ உள்ள சுப்பையா நாயக்கரின் ‘காம்பிராவி’ல் கொழுந்து கணக்குப்பிள்ளையிடம் கைமாற்றாக வாங்கிய ‘அலாரம்’ கணீர் என்று ஒலித்தது. வழக்கத்திற்கு மாறாகத் தூங்காமலே கனவு கண்டு கொண்டிருந்த சுப்பையா நாயக்கர் மணியோசை கேட்டதும் எழுந்து விட்டார். எழுந்தவர் சும்மாயிருக்கவில்லை. நாள் முழுவதும் உழைத்த களைப்பால் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த மனைவியையும், பிள்ளைகளையும் திட்டிக் கொண்டே எழுப்பினார் சுப்பையா.

“சனியனுங்கோ! நேரம் போச்சேன்னு கொஞ்சமாவது யோசனை இருக்கா? வெறகு கட்ட மாதிரில்ல ஆயியும் பிள்ளைகளும் கெடக்குதுக. ஏ…… புள்ளே , மீனாட்சி! எந்துருடி! எந்திரிச்சி அடுப்புப் பத்த வைச்சிப் புளிச்சாறு கட்டிடு, விடிஞ்சு வெள்ளக் கோழி கூவிடிச்சே, காது கேக்கலே? காதுல என்ன மத்துக் கட்டையா வச்சு அடைச்சிருக்கு? என்று சத்தமிட்டுக் கொண்டே மீனாட்சியை எழுப்பினார் நாயக்கர்.

“என்னங்க! என்னிக்கும் இல்லாத புதுமையா இன்னிக்கு என்னா வந்திரிச்சு? காலங்காத்தாலே எந்திரிச்சு ஏன் இப்படி சத்தம் போடுறிங்க? என்றாள் அரைத் தூக்கத்திலிருந்த மீனாட்சி.

Friday 9 June 2023

மாயாவதியின் கனவு - எனக்குப் பிடித்த சிறுகதை



செம்பியன் செல்வன் (ஆ.இராஜகோபால்)

‘புரிந்துணர்வுப் போர்நிறுத்தம்’, ‘தற்காலிகப் பேச்சு வார்த்தை’, ‘புலிகளே முன்வரும் போர்நிறுத்தம்’, ‘இனி வடக்குக்கும் போய் வரலாம்’, ‘ஏ – 9 பாதை திறப்பு’, ‘ஆஹா! இனி வடக்குக்கும் தெற்குக்கும் இடையே போக்குவரத்துக்கு எந்தத் தடையுமில்லை…’, ‘நாகதீபத்துக்குச் சென்று எத்தனை வருடங்களாகிவிட்டன’, ‘அந்தப் புத்த பகவானின் கருணை விழிகளின் முன்றலிலே அன்றலர்ந்த வெண்தாமரைகளாகிப் பனித்துளி மின்னக் கிடந்த காலைப் பொழுதுகள் தான் எத்தனை……?’ ஆத்மலயமும், சுருதியும் பிரபஞ்ச வெளியில் மோனரகஸ்யங்களுடன் ஒன்றி… ஒரே வெளிச்ச வீட்டில் வாசம் செய்த புலரிகள்தான் என்ன சுகமானவை!

மாயாவதி கனவுகளில் ஆழ்ந்து போனாள்.

‘அம்மே!…. அம்மே!…’ – யாரோ உலுக்கி எழுப்புகிறார்கள்.

மகன் கருணாரத்ன வாலிப மிடுக்குடன் நிற்கிறான்.

‘ஆ!… எவ்வளவு வளர்ந்து விட்டான்!…’ அவனையே வைத்த விழி மூடாமல் ஆர்வத்துடன் பார்த்தாள். அவன், யாழ்ப்பாணத்தில் இருந்து வீட்டைத் துறந்து, பேக்கரியை விட்டு, எல்லாவற்றை யும் குடும்ப நண்பர்…. சிவப்பிரகாசத்திடம் ‘என்ன செய்வியோ ?… ஏது செய்வியோ….. எல்லாம் உன் பொறுப்பு!’ என்று ஒப்படைத்து விட்டுப் புறப்பட்டபோது இவன் கைக்குழந்தை. இவன் அழுதபோது ‘அம்மா’ என்றது இப்போது ஞாபகம் வருகிறது. ஆனால், இன்றோ ….?

Friday 2 June 2023

எனக்கு வேணும்


பூப்புனித நீராட்டுவிழாவுக்குச் சென்றிருந்தோம். வழக்கம்போல அலங்கார மேடை, கண்ணைப் பறிக்கும் சோடனைகள். சினிமாப்பாடல்கள் காதைப் பிழந்தன. வட்ட வடிவ மேசையும் கதிரைகளும் போட்டிருந்தார்கள். அதற்கு வடிவான சட்டைகளும் போட்டிருந்தார்கள். நானும் மனைவியும் ஒரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டோம்.

Friday 26 May 2023

சின்னான் - குறுநாவல்

 

`சின்னான்’ வாழ்வில் என்றும் `பெரியான்’

`சின்னான்’ குறுநாவலின் ஆசிரியரான சண்முகம் சந்திரன் வாசகர்களுக்குப் புதியவரல்லர். ஏற்கனவே ஞானம் பதிப்பக வெளியீடான `ஆத்மாவைத் தொலைத்தவர்கள்’ சிறுகதைத்தொகுப்பின் மூலம் நன்கு அறியப்பட்டவர். அனுபவம் மிக்க இவரின் எழுத்துகள் மனிதநேயம் கொண்டவை. நல்ல கவிஞரும் கூட. இவரது இந்த குறுநாவலில் கூட ஆத்மாவைத் தொலைத்த பலரைத் தரிசிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள ஏழு தீவுகளில் ஒன்றான நெடுந்தீவில் கதை நிகழுகின்றது. நெடுந்தீவிற்கு வழங்கப்படும் பெயர்களில் பசுத்தீவும் ஒன்று. அதன் வழியாக நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சந்திரன் தனது புனைபெயரை `ஆவூரான்’ என வைத்துக் கொண்டார்.

விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் இக்குறுநாவல் ஏதோ ஒரு மர்மதேசத்திற்குள்  நுழைவதைப் போன்ற பிரம்மையுடன் எம்மை அழைத்துச் செல்கின்றது. கதையின் பின்புலமாக ---மாவிலி துறைமுகம், சாறாப்பிட்டி, ஒல்லாந்த கோட்டை, வெடியரசன் கோட்டை, குவிந்தாக் கோபுரம், நெழுவினிப்பிள்ளையார், முருகன் கோவில், கடற்கரை--- என நெடுந்தீவின் அழகான காட்சிகளை ஆசிரியர் காட்சிப் படுத்தியிருக்கின்றார்.