Thursday, 28 January 2016

அப்பு ஸ்ரைல்


50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும்கதை – 8

பொன்னுத்துரை அவுஸ்திரேலியாவிற்கு வந்தபோது இங்கே கடும் குளிர். புதித்தாகப் புட்டுக்குழல் அணிந்து சந்தி வரையும் நடை பழகினார். ஊரில் சாரம் அணிந்தவருக்கு அது புதிசு.

ஆடையில் இருந்து விலைப்பட்டியல் நீண்டு தொங்கியது. எதிரே வந்த சீனாக்காரன் குனிந்து லேபலில் விலையைப் பார்த்தான். 30 டொலர்கள்.

அடுத்தநாள் சீனாக்காரனும் மனைவியும் ஜாக்கிங் வருகையில் அவர்களது ஆடைகளிலும் விலைப்பட்டியல் தொங்கியது.

இப்போது எல்லாரும் லேபலைத் தொங்க விட்டபடி திரிகின்றார்கள்.Monday, 25 January 2016

அக்பர் விடுதிக்கு வந்த அழகி – குறும் கதை


அவுஸ்திரேலியாவில் ஒரு காலை நேரம்.

ரெலிபோன் அடித்தது. எடுத்தேன்.

மறுமுனையில் அந்தப்பெண் விக்கி விக்கி அழுதாள். பேச்சு வரவில்லை. எதையும் சரிவரச் சொன்னால்தானே அவர் யார் என்ன சொல்கின்றார் என்பதை நான் புரிந்து கொள்ளலாம். இருப்பினும் அவரது குரலில் இருந்து அவர் தமிழினி என்பதை அடையாளம் கண்டுகொண்டேன். தமிழினி நண்பன் ஜெயரதனின் மனைவி.

“உங்கடை வைஃப் இருக்கிறாவா? அவரிடம் கொடுங்கள்” ஒருவாறு தானே தன்னைத் தேற்றிக் கொண்டு சொன்னாள் தமிழினி.

Wednesday, 20 January 2016

பின்நவீனத்துவ எழுத்தாளர் வருகிறார் - சிறுகதைபிரபல பின்நவீனத்துவ (Postmodernism) எழுத்தாளர் சாரங்கன் அவர்கள் எதிர்வரும் மாதத்தில் (20.06.2015) நடைபெற இருக்கும் எழுத்தாளர் விழாவில் கலந்து கொள்வதற்காக, இந்தியாவில் இருந்து வருகை தர இருக்கின்றார். ஒரு வாரகாலம் நடைபெறும் இந்த எழுத்தாளர் விழாவின்போது அவர் என்னுடைய வீட்டில் தங்கியிருப்பார். அவருடன் கலந்துரையாடுவதற்கு வசதியாக ஒருநாள் கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்படுகின்றது. கலந்துகொள்ள விருப்பமானவர்கள் தொடர்பு கொள்ளவும் – பாலமுருகன்’ – என்று ஒரு விளம்பரம் பத்திரிகையில் வெளியாகியிருந்தது.

Friday, 15 January 2016

பித்தளைத்தகடு - குறும் கதைஇருபது வருட காலமாக இருந்துவந்த உயர் பாதுகாப்பு வலயம்’  நீக்கப்பட்டது. மக்கள் ஊருக்குச் சென்று காணி பூமிகளைத் துப்பரவாக்கினார்கள். வீடுகளைத் திருத்திக் கட்டினார்கள்.

வீரபத்திரர் கோவில் அரசமரமும் மணிக்கோபுரமும் ஷெல் அடியினால் சேதமடைந்து இருந்தது. கோவில் கட்டடத்திற்கு  எந்தவித பாதகமும் இல்லை. இருந்தும் கோவில் விக்கிரகங்கள் களவு போய்விட்டன. ஆமிக்காம் அருகில் இருந்தபடியால் அவர்கள் கோவில் கிணற்றைப் பாவித்திருக்க வேண்டும். கிணற்றுநீர் சுத்தமாக இருந்தது.
இந்த வருடம் சித்திரா பெளர்ணமிக்குப் போகவேண்டுமென சுபாஷ் நினைத்திருந்தான். அவனுக்கு நன்றாக நினைவிருந்தது, இருபது வருடங்களுக்கு முன்னர் ஒரு சித்திரை மாதத்தில்தான் எல்லோருமே ஊரைவிட்டு ஓடிப்போனார்கள்.

Monday, 11 January 2016

கதை கதையாம் காரணமாம்! - சிறுகதை ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தி ஆறு.
முதலாவது நாள்

            “பாக்கியம், பாக்கியம். பிள்ளைக்கு ஒரு ரீச்சிங் றெயினிங் கண்டியிலை இருக்காம். தம்பியும் நாளைக்குப் போறானாம் எண்டு கேள்விப்பட்டன். ஒருக்கால் கூட்டிக் கொண்டு போய்ச் சிற்றம்பலம் வீட்டை விட்டிட்டான் எண்டால், அவள் மிச்சம் எல்லாத்தையும் வெண்டு விடுவாள்.”

            “போறதெண்டுதான் சொல்லிக் கொண்டு நிக்கிறான். உந்தக் கோதாரிப் படிப்பை விடெண்டாலும் விடுகிறானில்லை. உந்தப் பிரச்சினையளைத் துளைச்சுக் கொண்டு எப்பிடித்தான் போகப் போறானோ? இனி விடிய இருக்கிற நிலமையையும் பாத்துத்தான்...“

Saturday, 9 January 2016

அஞ்சலி நினைவுப்பகிர்வு


           அமரர் திருமதி அருண் விஜயராணி

                   அஞ்சலி நினைவுப்பகிர்வு

கடந்த  13-12-2015 ஆம் திகதி அமரத்துவம் எய்திய அருண். விஜயராணியின் நினைவாக நடைபெறும் அஞ்சலி நிகழ்வு  -  நினவுப்பகிர்வு 

நடைபெறும் இடம்:PRESTON CITY HALL
 (284, Gower Street, Preston, Victoria - 3072, Australia)


காலம்: 31-01-2016 ஞாயிற்றுக்கிழமை


மாலை 4.30 மணிமுதல் மாலை 6.30 மணி வரையில்.

தங்கள் வரவை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-
திரு. அருணகிரி ( கணவர் )     0416 25 5363

arun16354@gmail.com

Friday, 8 January 2016

கதையும் கடிதமும்50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும்கதை – 7

செல்வா மீது அவனது மாமா மாமி கடும் கோபம் கொண்டிருந்தார்கள்.

செல்வா தனது சிறுகதை ஒன்றில் மாமனராப் பற்றி தரக் குறைவாக எழுதியதே அதற்குக் காரணம். அதற்கு மாமனார் தனது எதிர்ப்பை இப்படித் தெரிவித்தார்.


| தம்பிக்கு என்னைப் பற்றித் தெரியேல்லை. என்ரை மகளைப் பற்றி ஒரு கடிதம் உவருக்குப் போட்டன் எண்டால், உவற்ரை குடும்பம் பிரியும்.|

Tuesday, 5 January 2016

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்


50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும்கதை – 6

நீங்கள்தான் கட்லட் செய்து வருவதாக எல்லாருக்கும் சொல்லி இருக்கின்றேன். வரும்போது 50 கட்லட்டுகளுடன் வாருங்கள்.

பிறந்தநாள் விருந்து தொடங்கியது.

பிளேற் ஒன்றிற்குள் பலகாரங்களைப் போட்டுக் கொடுத்தார்கள். கட்லட்டைக் கடித்த போது கசந்தது.

நண்பியைக் கூப்பிட்டேன். நாங்கள் கொண்டு வந்த கட்லட் எங்கே?

அதுஎங்களுக்கு. நான் வேலை செய்யும் இடத்திற்கு கொண்டு போகப் போகின்றேன். ‘இது’  நான் செய்தது. உங்களுக்கு!

வேலை செய்யும் இடத்தில் அவருக்குப் புகழ். இங்கே எனக்கு?Friday, 1 January 2016

ஏன் வரவில்லை?
50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும்கதை – 5

சதாசிவம், மகன் சதீஷின் திருமணத்திற்கான அழைப்பிதழ்களை அனுப்பிக் கொண்டிருந்தார். முகவரி இல்லாதவர்களைத் தொடர்பு கொண்டார்.

நண்பன் சாந்தனிற்கு ரெலிபோன் செய்தார். ரெலிபோனில் ‘றிங்ஓசையுடன் ‘டொக்என்ற  சத்தம் கேட்டது.

“உவங்களுக்கு எப்பவும் ஊர் சுத்துறதுதான் வேலைகோபத்தில் கத்தினார்.

எப்படியோ சாந்தனுக்கும் அழைப்பிதழ் அனுப்பினான் சதீஷ்.

சதீஷ்... ஏன்ராப்பா சாந்தன் திருமணத்திற்கு வரவில்லை?

“அப்பா... அவங்கட ஆன்சர்போனிலை நீங்கள் என்னத்தைப் பதிஞ்சனியள்?

சதாசிவத்திற்கு ‘டொக்சத்தம் ஞாபகத்திற்கு வந்தது.