Tuesday, 15 August 2017

ரயில் ஸ்நேகம் - கங்காருப் பாய்ச்சல்கள் (25)


”மச்சான் நான் சிட்னி வந்திருக்கிறன். உன்னைப் பாக்க ஆசையாக இருக்கடா” நண்பன் தவராஜா சொல்ல, மறுமுனையில்

“எனக்கும்தானடா. ஒரு நாளைக்கு வா. சந்திப்போம்” என்றான் புவி.

25 வருடங்களுக்கு முன்னர், இருவரும் இலங்கையில் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள்.

புவி அவுஸ்திரேலியா வந்து பத்து வருடங்கள். பெரிய வீடு வசதிகளுடன் இருக்கின்றான். தவராஜா வேலை நிமிர்த்தம் சிட்னி வந்திருந்தான்.

குறிப்பிட்ட நாளில் தனது வீட்டிற்கு அண்மையாகவுள்ள ஸ்ரேசனிற்கு வரும்படி சொன்னான் புவி.

Tuesday, 8 August 2017

விளக்கேற்றுபவன் – சிறுகதை”சிவராசனுக்கு கறன்ற் அடிச்சு பெரியாஸ்பத்திரியிலை இருக்கின்றாராம். நாங்கள் எல்லாரும் பாக்கப் போறம். கெதியிலை வெளிக்கிடு. அப்பா சந்தியிலை கார் பிடிக்கப் போயிட்டார்” அம்மா சொன்னார்.

நாங்கள் குடும்பமாக போவது என்றால் தான் அப்பா கார் பிடிப்பார். முன்னர் ஒரு தடவை ‘அன்னையும் பிதாவும்’ படம் பார்க்க அப்படிப் போயிருந்தோம்.

அமரசிங்கம் அண்ணையின் கார் வந்துவிட்டது. அப்பா சைக்கிளை காரின் மேல் போட்டுக் கொண்டுவந்தார்.

நான் காரின் ஜன்னலோரமாக அமர்ந்திருந்தேன். அப்பா முன் சீற்றில் இருந்தார். அமரசிங்கம் அண்ணைக்கும் சிவராசன் அண்ணையைத் தெரிந்திருந்ததால், அவரைப் பற்றிக் கதைத்துக் கொண்டு வந்தார் அப்பா.

”சிவராசன் குடிக்கிறவன் தான். ஆனால் ஒருநாளும் வேலைக்குப் போகும்போது குடிப்பவன் அல்ல. வேலைக்கும் நல்ல ஒழுங்கு. எனக்கென்னவோ சந்தேகமாத் தான் கிடக்கு”

“சந்தேகம் எண்டா?” அமரசிங்கம் அண்ணை கேட்க,

Tuesday, 1 August 2017

வேலை வேண்டும் - கங்காருப் பாய்ச்சல்கள் (24)


இன்று நான் ஒரு நியூசிலாந்து நாட்டவரை---கிவி ஒருத்தரைச்--- சந்தித்தேன்.

தான் வெலிங்ரன் நகரில் இருந்ததாகவும் இங்கு வந்து ஐந்து வருடங்கள் முடிந்துவிட்டதாகவும் சொன்னார்.

என்னை வரவேற்ற முதல் நாடு நியூசிலாந்து. அமைதியான ஆரவாரமற்ற எங்குமே பசுமை நிறைந்த நாடு அது.

அவர் கடந்த நாலைந்து வருடங்களாக, வேலை வழங்கும் ஏஜென்சி மூலமாக தற்காலிக வேலைகள் பல செய்து வருவதாகச் சொன்னார். அவர் அப்படிப்பட்ட வேலைகளைத்தான் விரும்புவதாகவும் சொல்கின்றார்.

தான் இங்கு வந்து முதல் மூன்று நான்கு மாதங்கள் மிகவும் கஸ்டப்பட்டுப் போய்விட்டதாக கவலை கொண்டார். இது எல்லோருக்கும் பொதுவானதுதான்.

Thursday, 20 July 2017

ஆச்சர்யம் தரும் எழுத்தாளர் குரு.அரவிந்தன்ஞானம் - அட்டைப்பட அதிதி கட்டுரை


குரு.அரவிந்தன் - எமது சமகாலத்து எழுத்தாளர். ஊரில் என் அயல் கிராமமான மாவிட்டபுரம், காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நான் படித்த யூனியன் கல்லூரியின் அயல் பாடசாலைகளான நடேஸ்வரா, மகாஜனாக் கல்லூரிகளில் கல்வி பயின்றவர். இவரது தந்தையார் குருநாதபிள்ளை நடேஸ்வராக்கல்லூரி கனிஷ்ட பாடசாலை அதிபராகவும், உள்ளுராட்சி மன்ற முதல்வராகவும் கடமையாற்றியவர்.

குரு.அரவிந்தன் இலங்கையில் இருக்கும் காலத்தில் பட்டயக்கணக்காளர் நிறுவனத்தில் உயர்கல்வி பயின்று, ’மகாராஜா’ நிறுவனத்தில் கணக்காளராகவும் பின் நிதிக்கட்டுப்பாளராகவும் பணி புரிந்துள்ளார். 1988 இல் கனடாவிற்கு புலம்பெயர்ந்தார். தற்போது கனடா / அமெரிக்காவில் கணக்காளராகவும், ரொறன்ரோ கல்விச் சபையில் பகுதி நேர ஆசிரியராகவும் கடமையாற்றுகின்றார்.

Friday, 14 July 2017

மூப்பும் பிணியும் - கங்காருப் பாய்சல்கள் (23)

தொண்ணூறு வயதையும் தாண்டிய எழுத்தாளர் ஒருவர் எனக்கு நண்பராக இருந்தார். அவருக்கு காது கேட்பது கொஞ்சம் மந்தம். காது கேட்கும் கருவியொன்றை எப்போதும் மாட்டியிருப்பார். ஆனால் கண்பார்வை மிகவும் கூர்மையானவர்.

அடிக்கடி தொலைபேசியில் கதைப்பார். அவருடன் கதைக்கும்போது நாலு வீடுகள் கேட்கக் கத்திக் கதைப்பேன். இடைக்கிடை அவரைப் போய் பார்த்து வருவேன். 30 நிமிடங்கள் கார் ஓடும் தூரத்தில் இருந்தார்.

காலம் நகர்கின்றது.

Saturday, 8 July 2017

விஷப் பரீட்சை - குறும் கதை


(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

கஸ்டப்பட்டுக் குடும்பத்தைக் காப்பாற்றும் தந்தை மகனையிட்டுக் கவலை கொண்டார்.

வயது பத்தொன்பது. படிப்பைக் குழப்பிவிட்டான். வேலையும் இல்லை. ஷொப்பிங் சென்ரர்களில் திருடுகின்றான்.

பொலிஸ் வந்து தந்தையை எச்சரிக்கை செய்வார்கள். மகன் தப்பிவிடுவான்.

“மகனே! ஐஞ்சுக்கும் பத்துக்கும் திருடி என்ரை மானத்தை வாங்காதை. திருடுவதென்றால் பெரிசாச் செய். என்னையும் நல்லா வாழ வை. நீ போய் ஜெயிலிற்குள் சிலகாலம் இரு” என்றார் தந்தை.

மகன் ஆடிப் போனான்.
Saturday, 1 July 2017

சொல்லிவிடு! - கங்காருப் பாய்ச்சல்கள் (22)


ஒருநாள் மாலா தனது நண்பி சுகந்தியுடன் கலியாணவீடு
ஒன்றில் வெகு சுவாரஸ்யமாக உரையாடிக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவரும் கெக்கட்டம் விட்டுச் சிரிப்பதை தூரத்தேயிருந்து கவனித்துக் கொண்டிருந்தாள் யோகராணி.

கலியாணவீட்டிற்கு வந்திருந்த ஒரு இளம்பெண்ணை, சுகந்திக்கு சுட்டிக்காட்டி மாலா கதைத்துக் கொண்டிருந்தாள்.

கலியாணவீடு முடிந்து வீடு திரும்பும்போது, மாலாவை யோகராணி கார்த் தரிப்பிடத்தில் சந்தித்தாள்.

”அப்பிடியென்ன சுகந்தியோடை பெரிய கெக்கட்டம் போட்டுச் சிரிச்சியள்?” – யோகராணி.

Saturday, 24 June 2017

பம்மாத்து உலகம் - குறும் கதை


50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை

பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்து 30 வருடங்கள் நிறைவு பெறுவதையிட்டு சிங்கப்பூரில் சந்தித்தோம்.

பல்வேறு நாடுகளில் இருந்தும் நண்பர்கள் வந்தார்கள்.

சந்தித்தவுடன், “மச்சான் எப்பிடியடா இருக்கிறாய்?” எனது அவுஸ்திரேலியா நாட்டு நண்பன் கேட்டான்.

வீட்டில் இருந்து கிட்டிய தூரத்தில் அவன் இருக்கின்றான். இங்கு தொலைபேசி இலவசம். இருப்பினும் ஒருபோதும் நாங்கள் பேசவில்லை, சந்திக்கவில்லை.

2200 டொலர்கள் செலவழித்து சிங்கப்பூர் வந்த நான் சொன்னேன்,

“நல்லாக இருக்கின்றேன்.”


Wednesday, 14 June 2017

கனவு காணும் உலகம் – சிறுகதை

தர்மு ஒரு கடின உழைப்பாளி - ரக்சி ஓட்டுனன். காலையில் பிள்ளைகளைப் பள்ளிக்கூடம் அனுப்பி வைத்துவிட்டு, மதியத்துடன் வேலையை ஆரம்பிப்பான். இரவு இரண்டு மணிக்குள் வீடு திரும்பிவிடுவான்.

அன்று தனது கடைசிப் பிரயாணி ஒருவரை விமானநிலையத்திலிருந்து அவரது வீட்டில் இறக்கிவிட்டு, தனது வீட்டிற்குப் போக எத்தனிக்கும்போது –

மறுமுனையில் நின்ற ஒரு இளம்பெண் –வயது முப்பதிற்குள் இருக்கலாம் - வேக வேகமாகத் தனது கைகளை ஆட்டினாள். அப்போது நேரம் இரவு ஒன்று பதினைந்து. வெளியே கடும் குளிர். நிற்காமல் இழுத்துக் கொண்டு வந்த தர்முவுக்கு, கண்ணாடிக்குள் தெரிந்த அவள் தோற்றம் தர்மசங்கடத்தைக் கொடுத்தது. அவள் தன் இருகரங்களையும் கூப்பி மன்றாடும் தோற்றம் தெரிந்தது. கை  எடுத்துக் கும்பிட்ட பின்னர் அது யாராக இருந்தால்தான் என்ன? அவன் மனம் இளகியது. கருணை உள்ளம் கொண்ட அவனுக்கு அவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

“ஒருவேளை நான் இருக்கும் பக்கமாகவும் அவள் போகக்கூடும்”

ரக்சி நின்றது.

Wednesday, 7 June 2017

சுற்றுலா போய் வருகின்றோம் – சிறுகதை

ரவிராஜ் வீடு ஒன்றை வாங்கினான். மனைவி பவித்திராவிற்கு வீடு நன்றாகப் பிடித்துக் கொண்டது. வீட்டின் உரிமையாளர் வீட்டைச் சுற்றிக் காட்டினார். வீட்டைப் பற்றி விலாவாரியாகச் சொன்னார்.

அதன் பின்னர் தனது அயலவர்களைப் பற்றி பெருமையாகச் சொன்னார். வீட்டின் உரிமையாளருக்கு, எதிர்ப்புறமாக இருந்த வீட்டுக்காரர்களில் திருப்தி இருக்கவில்லை. அங்கே ஒரு பெண்ணும் அவளின் இரண்டு மகள்மாரும் குடி இருந்தார்கள். அவர்களைப் பற்றி மேலெழுந்தவாரியாக சில குறைபாடுகளைச் சொன்னார். அந்தப்பெண் விவாகரத்துப் பெற்றவள், குப்பைக்குடும்பம், கூத்துக்குடும்பம். இவை போதாதா அந்தக் குடும்பத்துடன் பழகுவதா இல்லையா என மூடிவு செய்ய? ரவிராஜ் குடும்பத்தினர் அவர்களுடன் பழகுவதில்லை என முடிவு செய்தனர்.

வீட்டிற்குப் போன முதல்நாள் மாலை நேரம் – அந்த வீட்டுப் பெண்பிள்ளைகளில் ஒருத்தி---ஏழோ எட்டோ படிக்கக்கூடும்--- தனது நண்பி ஒருத்தியுடன் வந்து இவர்களின் வீட்டின் கதவைத் தட்டினாள். அவள் தன் மார்புடன் இரண்டு பந்துகளை அணைத்திருந்தாள்.

Thursday, 1 June 2017

நாய்க்கு சாப்பாடு வேணும் (கங்காருப் பாய்ச்சல்கள் - 21)


சமீப காலங்களாக இங்கே ஒரு கூத்து ஒன்று நடைபெறுவதை அவதானித்து வருகின்றேன்.

‘சந்திரிக்காவுக்குச் சாப்பாடு வேணும்’

ஆறு  மாதங்களுக்கு முன்னர் ஒரு பிறந்தநாள் விழாவிற்குச் சென்றிருந்தேன். அங்கே ஒருவர் உணவருந்தி முடிந்ததும்,

“சந்திரிக்காவுக்குச் சாப்பாடு வேணும். பாவம் அவள், நான் வீட்டை போனதும் என்ரை கையைக் கையையே பாப்பாள்” என்று சொல்லியபடி பிளாஸ்ரிக் பெட்டிகளில் சாப்பாட்டை எடுத்துச் சென்றார்.

அவர் தன்னுடைய மனைவியில் இவ்வளவு பாசமா?

Wednesday, 24 May 2017

குளிர்சாதனப்பெட்டியில் புத்தகங்கள் (கங்காருப் பாய்ச்சல்கள் - 20)

 

சமீபத்தில், மெல்பேர்ணில் ஃபிளமிங்ரன் (Flemington) என்னும் இடத்தில் மதியம் உணவருந்தப் போகும்போது, ஒரு அரிய காட்சியை வீதியில் கண்டேன்.

ஒரு குளிர்சாதனப்பெட்டிக்குள் சிலர் கையை நுழைத்து எதையோ நோண்டியபடி இருந்தார்கள். சாவதானமாக என்ன நடக்கின்றது என அருகில் நின்று பார்த்தேன்.

குளிர்சாதனப்பெட்டிக்கு மின் இணைப்பு இருக்கவில்லை. பாவனையற்ற, பழுதாகிப்போன குளிர்சாதனப்பெட்டி அது.

அதற்குள்: சிலர் புத்தகங்களை வைப்பதும், சிலர் எடுப்பதுமாக இருந்தார்கள். அது ஒரு குட்டி நூல்நிலையம். பின்னர் அதன் இரண்டு கதவுகளையும் இறுக மூடிவிட்டுப் போனார்கள்.

நான் அதனைத் திறந்து உள்ளே பார்த்தேன்.

Friday, 19 May 2017

அலங்காரம் அந்தரங்கமானது

(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

இன்று சீக்கிரமாகவே வேலையிடத்திற்கு வந்துவிட்டேன். பாத்றூமைத் திறந்து நுழைந்தேன்.

“பிரியா கெற் அவுற்” பேனாவால் இமைகளைக் கீறியபடி மொட்டந்தலையுடன் நின்ற மேலதிகாரி கத்தினார்.

இதுநாள்வரை அவரை அழகான அன்பான பெண்மணியாகவே சந்தித்திருந்தேன்.

அன்று முழுவதும் கடுமையான வேலைகள் தந்தார். அழ வைத்தார். வேலை முடிந்ததும் என்னைத் தனியாகச் சந்தித்தார்.

தன்னை அந்த நிலையில் பார்த்ததை, நான் யாருக்கும் சொல்லக்கூடாது என்று உறுதிமொழி வாங்கிக் கொண்டார்.
Monday, 15 May 2017

மனிதாபிமானம் - குறும் கதை


(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

ஒரு பெண்ணை ஆண் ஒருவன் கத்தியுடன் துரத்துவதை வைத்தியர்கள் ராமனும் ஜொனதானும் கண்டார்கள்.

“ஜொனதான் நீ பொலிஸைக் கூப்பிடு” அவர்களிடையே பாய்ந்தான் ராமன்.

பொலிஸ் வந்து இருவரையும் கைது செய்தது.

“இப்படியான வேளையில் எங்களுக்கு அறிவியுங்கள். அவர்களுக்குக் கிட்டப் போகாதீர்கள்” பொலிஸ் சொல்ல,

“ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டுமல்லவா?” என்றான் ராமன்


வைத்தியர்களாகிய நீங்கள் எத்தனையோ உயிர்களைக் காப்பாற்ற வேண்டியவர்கள், ஒரு உயிரை அல்ல என்றான் பொலிஸ்காரன்.

Tuesday, 2 May 2017

உறைபனியில் மீன் பிடித்தல்

சமீபத்தில் எனக்கு இந்த உறைபனியில் மீன் பிடிக்கும் சந்தர்ப்பம் கனடாவில் கிடைத்தது. குளிர்ந்த காலங்களில் இங்கேயுள்ள நீர்நிலைகள், குளங்கள் உறைபனியில் மூடிவிடும். இந்த உறைபனியின் தடிப்பம் அல்லது பருமன் அதிகரிக்கும்போது அதன் உறுதியும் அதிகரிக்கும். உறுதி கூடி பனி இறுகிய பின்னர் அதன்மேல் துளையிட்டு தூண்டில் வீசி மீன் பிடிக்கின்றார்கள்.

என்னதான் சொன்னாலும் எனக்கென்னவோ இது ஒரு ஆபத்து நிறைந்த விளையாட்டாகவே தோன்றுகின்றது. விபத்துகள் ஏற்கனவே நடந்தும் இருக்கின்றன.

Tuesday, 25 April 2017

தமிழால் உயர்ந்த உதயணன் (இராமலிங்கம். சிவலிங்கம்)

 

கடந்த வருட ஆரம்பத்தில் ’பின்லாந்தின் பசுமை நினைவுகள்’ என்ற புத்தகத்தை வாசித்திருந்தேன். உதயணன் என்னும் புனைபெயரைக் கொண்ட ஆர்.சிவலிங்கம் என்பவர் அதன் ஆசிரியர். கனடாவில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு வந்திருந்த, பல்கலைக்கழகத்தில் என்னுடன் ஒன்றாகப் படித்திருந்த நண்பன்---ஆசிரியரின் மருமகன்--அந்தப் புத்தகத்தை எனக்குத் தந்திருந்தார்.

உதயணன் 1957 – 1980 காலப்பகுதிகளில் வீரகேசரி, தினகரன், சுதந்திரன், ஈழநாடு, சிந்தாமணி, தினபதி மலர், சுடர், அஞ்சலி, கலைச்செல்வி, தமிழோசை, தமிழின்பம் போன்றவற்றில் எழுபதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிக் குவித்தவர். கல்கி, குமுதம் போன்ற இந்திய இதழ்களிலும் சில படைப்புகள் வந்துள்ளன. கலைச்செல்வியில் ‘இதய வானிலே’, ‘மனப்பாறை’ ஆகிய நாவல்களும், வீரகேசரிப் பிரசுர நாவல்களாக ‘பொன்னான மலரல்லவோ’, ‘அந்தரங்ககீதம்’ (சில மாறுதல்களுடன் ’மனப்பாறை’) போன்ற நாவல்களையும் எழுதியிருக்கின்றார். மேலும் மித்திரன் நாளிதழில் ‘மனக்கோட்டை’ தொடர்கதை, சிந்தாமணியில் ‘கொடிமல்லிகை’ குறுநாவல் வந்துள்ளன. அத்துடன் நகைச்சுவைக் கட்டுரை, இதழியல், மொழிபெயர்ப்பு என்பவற்றிலும் சிறந்து விளங்குகின்றார்.
 

ஆரம்பத்தில் ஆசிரியராக நாவலப்பிட்டியிலும், பின்னர் அரசாங்க எழுதுவினைஞராக பல்வேறு பகுதிகளிலும் கடமையாற்றினார். சில வருடங்கள் ஈராக்கில் பணி புரிந்தார்.

Wednesday, 12 April 2017

தாடிக்கார ஆசாமி - குறும் கதை

(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

தனது வீட்டுக் கராஜை அழகு நிலையமாக மாற்றி தொழில் செய்து கொண்டிருந்தாள் பிரவீனா.

ஒருநாள் தாடிக்காரர் ஒருவர் தன்னை அழகுபடுத்த அங்கே வந்தார்.

தலைமுடி வெட்டியாயிற்று. தாடியை அழகுபடுத்திக் கொண்டிருக்கும் போது பிரவீனா மயங்கிக் கீழே விழுந்தாள். தாடிக்காரர் எழுந்து ஒட்டம் எடுத்தார். மயக்கம் தெளிந்ததும்,

“அவர் எனது முன்னாள் காதலன்” என்றாள் பிரவீனா.Monday, 6 February 2017

வாழ்வும் மூச்சும் இலக்கியத்திற்காக வாழ்ந்த இரசிகமணி

பாடசாலையில் 10 ஆம் தரத்தில் படித்த காலத்தில் (1977) கலாசாரமும் பண்பாடும் என்றொரு பாடம் இருந்தது. அதனை கதிர்.பாலசுந்தரம், த.சண்முகசுந்தரம் என்போர் நெறிப்படுத்தினார்கள். பாடத்திட்டத்தின்படி நாங்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டோம். ஒவ்வோரு குழுக்களும் எழுத்தாளர்/கலைஞரைச் சந்திக்க வேண்டும்.

குரும்பசிட்டி ஊர், எழுத்தாளர்கள் கலைஞர்களுக்குப் பேர் போனது. எனது தந்தையாரின் ஊரும் அதுதான். நான்  எனது குழுவினருடன் அங்கு சென்று இரசிகமணி கனக.செந்திநாதனைச் சந்திக்க முடிவு செய்தோம். எனது குழுவில் முரளிதரன், குகநேசன் இன்னும் சிலர் இருந்தார்கள்.

Sunday, 5 February 2017

அமரர் அருண்.விஜயராணி ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி 2016 முடிவுகள்


அக்கினிக்குஞ்சு இணையத்தளம் நடாத்திய அமரர் அருண்.விஜயராணி ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி 2016 முடிவுகள்

1 ஆம் இடம்
’ஜென்மநிழல்’
கெகிறாவ ஷகானா
கெகிறாவ - ஶ்ரீ லங்கா

2 ஆம் இடம்
’காதல்கவிதை விலாசம்’
மொகமட் ராபி
356/7 கண்டி வீதி
பாலையூற்று - திருகோணமலை

3 ஆம் இடம்
’அரங்கன் கணக்கு’
என்.கணேசன்
W- 80 கோவைபுகார்
கோயமுத்தூர் 641042
தமிழ்நாடு - இந்தியா

*************************

ஆறுதல் பரிசுபெறுபவர்கள் 

Saturday, 4 February 2017

அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016 முடிவுகள்

அக்கினிக்குஞ்சு இணையத்தளம் நடாத்திய அமரர் எஸ்.பொ. ஞாபகார்த்த அனைத்துலக குறுநாவல் போட்டி 2016 முடிவுகள் 

1 ஆம் இடம்

’லிவிங்டு கெதர்’

மேரிதங்கம் சில்வியா மேரி,

சென்னை


2 ஆம் இடம்.

’செல்லம்மா’

பர்வீன் பானு

86/2 நாட்டுமுத்து தெரு ,முதல் மாடி

தேனாம்பேட்டை, சென்னை 600018


3 ஆம் இடம்.

’வக்காத்துகுளம்’

தீரன் ஆர்.என்.நெளஷத்

சாய்ந்தமருது - ஶ்ரீ லங்கா
-------------

ஆறுதல் பரிசு

Wednesday, 1 February 2017

பார்ப்பதற்கும் வாங்குவதற்கும் - குறும் கதை(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)


படிக்கும் காலத்தில் மணிக்கூடு பெல்ற் போன்றவற்றை வாங்குவதற்கு நண்பன் விஜயனை கூட்டிச் செல்வோம்.

பல கடைகள் கூட்டிச் செல்வான். ஏறி இறங்கி சலித்துப் போவோம்.

“ஏன் மச்சான்… இந்தக் கடையிலை மலிவாக நல்லது இருக்கே! வாங்குவமா?”

”இதெல்லாம் சும்மா பாக்கிற கடை. வாங்கிறதுக்கெண்டு ஒரு கடை இருக்கு. வாருங்கள் அங்கு போவம்” என்பான் விஜயன்.

அப்படித்தான் அவனின் திருமணமும் நடந்தது.
Wednesday, 25 January 2017

நல்ல நேரம்(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

பெண்விடுதலையும் மாதர்சங்கமும்ராட்டினம் போல சுழலுறாள்தினமும் மருமகள் வெளிக்கிடும்போது மாமியாரின் அர்ச்சனை.

ஒருமுறைதீம் பார்க்கிற்கு சென்றார்கள். குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்க மாமியாருக்கு ஆசை வந்தது.

இதுவே நல்லநேரம். மருமகள் சொன்னார்,

மாமி! ராட்டினத்திலை ஏறுங்கோ. சுப்பரா இருக்கும்.”

ராட்டினம் மாமியாரை சுழட்டி ஆட்டியது, உலுப்பியது, தொப்பெனக் கீழே போட்டது. ஐயோ! அலறினார்.

இறங்கியதும் மருமகளை முழுசிப் பார்த்தார். பின்னர் ராட்டினம் என்று மருமகளை என்றுமே சொன்னதில்லை.
Tuesday, 17 January 2017

ரகசிய பொலிஸ் 115 – Flashbacks


அண்ணா என்னை அதிகம் காங்கேசந்துறையில் இருக்கும் ராஜநாயகி, யாழ் திஜேட்டருக்குத்தான் கூட்டிச் செல்வார். அப்போது தெல்லிப்பழையில் துர்க்கா திஜேட்டர் கட்டப்படவில்லை.

காங்கேசன் துறை வீதியில் இருக்கும் ராஜநாயகியில் தான் அதிகம் படம் பார்ப்போம். பெரும்பாலும் எம்.ஜி.ஆர் படங்கள்தான்.

“அண்ணா படிப்பை விட்டு அதிகம் படம் பார்க்கின்றார். தான் கெட்டுப்போவதுமல்லாமல் தம்பியையும் குழப்புகின்றார்” என்பது அக்காவின் குற்றச்சாட்டு. அடிக்கடி அம்மாவிடம் முறையிடுவார். நாங்கள் படம் பார்க்கப் போகும் முயற்சிகளை தன்னால் ஆனமட்டும் குழப்புவார்.

Tuesday, 10 January 2017

தோப்பூர் மகாராஜா - சிறுகதை


காரை நிறுத்திவிட்டு, பிரமாண்டமாகத் தெரிந்த அந்த வீட்டை நிமிர்ந்து பார்த்தேன். வீட்டின் பின்புலத்தில் எங்குமே பச்சைப் பசுஞ்சோலை. ஒரு முதிய கம் மரத்தில் ஒரு சோடிக்கிளிகள். கிங் பறற்---யாழ்ப்பாணத்து பச்சைக்கிளிகள் போல அல்ல--- ஆண் கிளிக்கு சிகப்புத்தலை, பெண்கிளிக்கு பச்சைத் தலை. அதனைப் பார்த்து ரசித்த எனக்கு, அதன் ஓரமாக அமைந்த அழகான அந்த வீட்டைப் பார்க்க ஆத்திரமாக வந்தது.

யாழ்ப்பாணத்தில் தோப்பு என்ற ஊரில், ஒரு ஓலைக்குடிசையில் வாழ்ந்த ராஜசிங்கம் – அவுஸ்திரேலியா வந்து, அடுத்தவரை ஏமாற்றி அடாத்து வேலைகள் செய்து கட்டிய வீடு அது.

Sunday, 1 January 2017

கனவு காணும் உலகம் – கட்டுரை-         பன் நெடுங்காலமாக இலங்கையில் வாழ்ந்து வரும் எமது மக்கள்---மூதாதையர்கள்---ஆவணங்களைக் பாதுகாத்து வைப்பதிலும், பதிவு செய்வதிலும் தவறிவிட்டார்கள். யாழ்.நூலகம்  எரிந்து போனதும், போர் காரணமாக பல ஆவணங்கள் அழிந்து போனமையும் துர்ப்பாக்கியமாகும்.

அவுஸ்திரேலியாக்கண்டம் 200 வருடங்கள் பழமை வாய்ந்தது. ஆனால் அதற்கு முன்னரே அங்கு ஆதிவாசிகள் வசித்து வருகின்றார்கள். அவர்களுக்கு பல இன்னல்கள் நேர்ந்த போதிலும், ஓரளவிற்கு அவர்கள் தமது ஆவணங்களை பாதுகாத்து வைத்திருக்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும். சமீபத்தில்கூட அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலப்பரப்புகளில் சிலவற்றை அவுஸ்திரேலிய அரசு மேற்கு அவுஸ்திரேலியாவில் மீளக் குடுத்திருக்கின்றது. அவுஸ்திரேலிய முன்னைநாள் பிரதமர் ஹெவின் ரட் 2008 ஆம் ஆண்டு, ஆதிக்குடிகளுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களை ஒரு மனித உரிமை மீறல் என அறிவித்து அவர்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தார்.