Thursday, 22 November 2018

அவன் விதி – சிறுகதை


எனது மைத்துனரின் கலியாணவீட்டிற்காக கனடா போயிருந்தேன். கலியாணத்தின் போது எனது பள்ளி நண்பன் சதீசை சந்தித்தேன். அவன் தான் ஒரு அதிசயச் செய்தி ஒன்றைச் சொன்னான்.

எங்களுடன் படித்த மனோரஞ்சன்---மனோ---கனடாவில் பெரிய செல்வந்தனாக இருக்கின்றான். பல உணவகங்களுக்குச் சொந்தக்காரன். 25 மில்லியன்  மேற்பட்ட வியாபாரத்தைக் கொண்டது.

25 மில்லியன் டொலர்கள்….

இந்த விடயம் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. இது எப்படி நிகழ்ந்தது?

Thursday, 8 November 2018

பள்ளிச் சிறுமியின் பருவச்சுமை


அண்டனூர் சுராவின் ’கொங்கை’ நாவலை முன் வைத்து

தமிழர் பாரம்பரியத்தில் ஒரு பெண் பூப்பெய்திவிட்டால், அதை ஒரு சடங்காக ‘சாமர்த்திய வீடு’ என்னும் பெயரில் கொண்டாடிவிடுவார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் இன்னும் சிலர் அதற்குப் பெரிய விழாவே எடுத்துவிடுவார்கள். பெண்ணைக் ஹெலிகொப்டரில் ஏற்றி இறக்கி, பெரிய அரியணையில் மேள தாளங்களுடன் சுமந்து வந்து தாலாட்டி விடுகின்றார்கள். ஒருமுறை சிட்னி நகரில் எனது நண்பர் ஒருவரின் பிள்ளையின் சாமர்த்தியவீட்டிற்கு மெல்பேர்ண் நகரில் இருக்கும் நானும் மனைவியும் வேலையில் விடுப்பு எடுத்துக் கொண்டு போனபோது, வேலைத்தலத்தில் அதை விளங்கப்படுத்தப் பட்ட பாடு சொல்லிமாளாது. இதற்குச் சடங்கா? எங்கள் நாட்டில் பண்பாட்டில் இது இல்லையே எனப் பலர் சொன்னார்கள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் ஒரு சில நாடுகளில் பெண் பருவமெய்திவிட்டால் அவர்களின் வீட்டு வாசலில் கொடி கட்டிப் பறக்கவிடுவார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

இது ஒருபுறமிருக்க, சமீபத்தில், அவுஸ்திரேலியாவில் எனது இன்னொரு நண்பரின் பெண் எட்டு வயதிலேயே பெரியவளாகிவிட்டாள். மகிழ்ச்சி கொள்ளவேண்டிய தந்தை பெரும் துயரத்திற்கு உள்ளானார். மிகவும் சிறிய வயதிலே-பேதைப் பருவத்திலே-இது நடந்தமைக்கு யார் என்ன செய்யமுடியும். அவர் காதும் காதும் வைத்ததுமாப்போல் நாலுபேருடன் சடங்கை முடித்துவிட்டார்.

Tuesday, 6 November 2018

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018


கனடாவில் கடந்த 25 வருடங்களாகப் பல்வேறு வழிகளில் கலை, இலக்கிய சேவையாற்றிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், தனது  25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி.

பரிசு பெறும் எழுத்தாளர்களுக்காகப் 16 பரிசுகள், மொத்தம் இலங்கை நாணயம் 170,000 ரூபாய்களும்;,  சான்றிதழ்களும் காத்திருக்கிறன.

பரிசுபெறுகின்றவர்கள் வாழும் நாடுகளில் உள்ள நாணயப் பெறுமதிக்கு ஏற்ப அவர்களுக்குரிய பரிசு, நாணய மாற்றம் செய்யப்படும்

முதலாவது பரிசு இலங்கை ரூபாய்கள் – 50,000
(அமரர் பண்டிதர் எவ். எக்ஸ். அலெக்ஸாந்தர் ஞாபகார்த்தமாக.)

Friday, 2 November 2018

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் அவுஸ்திரேலியா எழுத்தாளருக்கு முதல் பரிசு.

போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி முடிவுகள் - 2018

2018 ஆம் ஆண்டு போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டிக்கான பரிசு பெறும் கதைகளைத் தேர்வு செய்யும் இறுதிக்கட்ட பணி அக்டோபர் 31 அன்று நடைபெற்றது.

நடுவர் குழு தோழர்கள் ம.காமுத்துரை, தேனி சீருடையான், அல்லி உதயன் ஆகியோர் சிறந்த கதைகளை முதல் மூன்று சுற்றுகளில் தேர்வு செய்தனர். இறுதிச் சுற்றில் பரிசுக்குரிய கதைகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எழுத்தாளர்.உதயசங்கர் அவர்களை தலைமையாகக் கொண்டு நடுவர் குழு இறுதி செய்தது.

மொத்தம் போட்டிக்கு வந்த கதைகள் : 337

பரிசுபெற்ற சிறுகதைகள் விவரம்

முதல் பரிசு:

பாம்பும், ஏணியும் - கே.எஸ்.சுதாகர் (ஆஸ்திரேலியா)

இரண்டாம் பரிசு:

குறத்திகள் ஆடும் மூன்றாம் ஜாமம் - சிவக்குமார் முத்தய்யா (சென்னை)

மூன்றாம் பரிசு :

சபீரின் உம்மா கதை சொல்வதில்லை - இடலாக்குடி அசன் (நாகர்கோவில்)

Thursday, 1 November 2018

வளர்த்தவர்கள் – சிறுகதை

ஆராதனாவிற்குத் திருமணம். தாலி கட்டி முடிந்துவிட்டது. எல்லாரும் வரிசையில் நின்று மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். ஹோல் நிரம்ப மகிழ்ச்சி ஆரவாரம்.

ஆராதனாவிற்கு சமீபத்தில்தான் பதினெட்டு வயது முடிந்திருந்தது.

ஆராதனாவின் அப்பா வழி உறவினர்கள் எல்லாரும் வாழ்த்துத் தெரிவிக்கையில் “நான் தான் ஆராதனாவைத் தூக்கி வளர்த்தேன்” என்று மறக்காமல் மாப்பிள்ளையிடம் சொன்னார்கள். அம்மா வழி உறவினர்களுக்கு அந்த பாய்க்கியம் கிடைக்கவில்லை.

“நான் தான் ஆராதனாவைத் தூக்கி வளர்த்தேன்.”
“நான் தான் ஆராதனாவைத் தூக்கி வளர்த்தேன்.” மாப்பிள்ளைக்குக் கேட்டுக் கேட்டுப் புளித்துவிட்டது.

சுமதி மச்சாள் அட்சதை போடும்போது, அதற்கும் மேலே போய், “உன்ரை அம்மா இதையெல்லாம் பாக்கக் குடுத்து வைக்கவில்லையே” என மூக்கால் சிணுங்கி ஆராதனாவைக் கட்டிப்பிடித்து அழுதாள். ஆராதனாவின் கண்கள் குளமாகின.

Tuesday, 23 October 2018

தெரிவு – குறும்கதை


இலக்கியவிழா. திரு. சின்ராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக ஈழத்திலிருந்து வருகை தந்திருந்தார். சின்ராஜ் பிரதேசச் செயலாளர், எழுத்தாளர், கல்விமான் என்ற மகுடங்கள் கொண்டவர். அவரது முகத்தைப் பார்த்த மாத்திரத்தில் எங்கோ நிரம்பப் பழகியவர் போன்றிருந்தது.

ஆம்! சின்ராஜ் வேறு யாருமல்ல. என்னுடன் பதினொராம் வகுப்பு வரையும் ஒன்றாக விஞ்ஞானம் படித்த சின்னராசாதான்.

Monday, 15 October 2018

’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.சோமசுந்தரம்)

இது ஒரு சோசலிச இலக்கியம். கதை கிர்கீஸிய (Kyrgyzstan) என்னும் இடத்தில் நடைபெறுகின்றது. இதன் அயல் நாடுகளாக கஸ்கஸ்தான், சீனா இருக்கின்றன. இந்தக்கதையின் கதைசொல்லி---கிச்சினே பாலா---தன் பதின்ம வயதில் நடந்தவற்றைச் சொல்கின்றான். அப்போது அவனுக்கு வயது 15. இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலம். அவனது சொந்தபந்தங்கள் கூர்ஸ்க்கிலும் ஒர்யோலிலும் உள்ள போர்முனைகளில். பெண்களும் போர்முனைக்குச் செல்ல இயலாதவர்களும் சிறுவர்களும் கூட்டுப்பண்ணையில் வேலை செய்கின்றார்கள். வயலில் வேலை செய்வதும் தானியத்தை ரயில் நிலையத்திற்குக் கொண்டு செல்வதும் அவன் வேலை. அவனது இரண்டு சகோதர்களும் போர்முனையில். தாயாரும் தங்கையும் வீட்டில். முதிய தகப்பனார் தனது தச்சுக்கூடத்தில் வேலை செய்கின்றார்.

அவனது பக்கத்து வீட்டு (சிறியவீடு என்று அழைப்பார்கள்) நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட, அவரது விதவையை அவனின் தகப்பனார் மணந்து கொள்கின்றார். விதவையின் இரண்டு மகன்கள்கூடப் போர்முனையில். மூத்தவன் ஸாதிக் மணம் முடித்து சிறிது காலத்திற்குள்ளாகவே போர்முனைக்குச் சென்றுவிட்டான். ஸாதிக்கின் மனைவிதான் ஜமீலா. அவர்களும் கூட்டுப்பண்ணையில் வேலை செய்கின்றார்கள்.

Saturday, 6 October 2018

மெல்பேர்ண் வெதர் (14)- குறு நாவல்


இறுதி அதிகாரம் (14) - அவளின் விலை 300,000 டொலர்கள்

ஒரு காலத்தில் பெரிய ‘ஹீரோயினாக’ தொழிற்சாலையை வலம் வந்த புங், கடந்த இரண்டு வாரங்களாகப் பேச்சு மூச்சற்று இருக்கின்றாள். முகத்தில் பூச்சற்று, நறுமணமற்று யாருடனும் பேசமுடியாதவாறு ஏங்கித் தவிக்கின்றாள். இப்பொழுதெல்லாம் அவளை நிமிர்ந்து பார்க்கும் ஒருவன் நந்தன் தான்.

இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் அவள் எல்லாவற்றையும் தவிர்த்தே இருந்திருப்பாள். அவள் யார் மனதையும் புண்படுத்தியதாக இதுவரை காலமும் தொழிற்சாலையில் ஒருவரும் சொல்லவில்லை. இத்தனை காலமும் நந்தனுக்கு அவள் செய்த உதவிகளுக்கு நன்றிக் கடனாக வாய் மூடி மெளனமாக இருந்தான் அவன்.

Monday, 1 October 2018

மெல்பேர்ண் வெதர் (13)- குறு நாவல்

அதிகாரம் 13 - பெண் சிலந்தி (peacock spider)

அந்தச் சம்பவத்தை அறிந்த வான் மான் நூஜ்ஜின், ஒருநாள் நந்தனை இரகசியமாக் கூப்பிட்டான். வான் மான் நூஜ்ஜின் இப்போது போனும் கையுமாகத் திரிகின்றான். வேலை செய்யும்போதும் ஒரு கையில் போன். சாப்பிடும்போதும் போன். சிறுநீர் கழிக்கும்போதும் ஒரு கையில் போன். அவனது போனில் ஆங்கில வார்த்தைகள் கிடையாது. தாய் மொழிக்கே முதலிடம். வியட்நாம் பாஷையில் ஃபேஸ்புக் துள்ளித் திரிந்தது. அவன் தனது போனைத் திறந்து ஒரு வீடியோக்கிளிப்பை நந்தனுக்குக் காண்பித்தான். அதில் புங் – நடப்பது, இருப்பது, ஓடுவது, சிரிப்பது போன்ற காட்சிகளைக் கொண்ட ஒரு கிளிப் ஆக இருந்தது. எப்பவோ களவாக அவளைப் பின் தொடர்ந்து எடுத்திருக்கின்றான் நூஜ்ஜின்.

“ஐ லைக் புங்” என்றான் நூஜ்ஜின்.

Tuesday, 25 September 2018

மெல்பேர்ண் வெதர் (12) - குறுநாவல்


அதிகாரம் 12 - கிணறு வெட்டப் பூதம்

தொழிற்சாலைக்கு புதியவர்களை காலத்துக்குக் காலம் வேலைக்கு எடுப்பது வழமை. அப்படி வருபவர்களை ஆறுமாத கால ஒப்பந்த அடிப்படையில் எடுத்து, பின்னர் நன்றாக பணி புரிபவர்களை நிரந்தரமாக்குவார்கள். சிலரை மேலும் ஆறுமாதங்கள் வைத்திருந்து பார்ப்பார்கள். நன்றாகச் செய்தால் அவர்களையும் நிரந்தரமாக்குவார்கள். ஒன்றுக்கும் உதவாதவர்களை கலைத்து விடுவார்கள்.

அதே நேரத்தில் தொழிற்சாலையில் பல வருடங்கள் வேலை செய்பவர்களை, அவர்கள் விரும்பினால் ஒரு தொகையைக் கொடுத்து (package) தொழிற்சாலையில் இருந்து விலகும்படி கேட்பார்கள். குழறுபடி செய்பவர்கள், சோம்பேறிகள், பிரைச்சனைக்குரியவர்களைத் தேடிப் பிடித்துக் கலைத்தார்கள்.

ஒருநாள் - தெளிந்த நீரோடைக்குள் பாறாங்கல் விழுந்தது போல தொழிற்சாலையில் ஒரு சலசலப்பு. அதை பலரும் கூட்டமாக ஒளித்திருந்து விவாதித்தார்கள். ஒருவருக்கும் சரியான தகவல் தெரியவில்லை. புதிதாக வந்த பெண்கள் பற்றியதாக அந்தப் பேச்சு இருந்தது.

Tuesday, 18 September 2018

மெல்பேர்ண் வெதர் (11) - குறு நாவல்

அதிகாரம் 11 – தீராவெறி

விடுமுறை முடித்து எல்லாரும் வேலைக்குத் திரும்பினார்கள்.

அதன் பிறகு ஒருநாள் நட்டாஷா வேலையை றிசைன் பண்ணிவிட்டுப் போய்விட்டாள். போகும்போது எல்லாரிடமும் வந்து கதைத்துவிட்டுப் போனாள்.

“நான் ஏதாவது தவறு செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று நந்தனிடம் சொன்னாள்.

அவள் அப்பாலே போனதும்,
“நட்டாஷாவின் வயிற்றைப் பார்த்தாயா நந்தன்? வீங்கி இருக்கின்றது. உள்ளே குட்டி எட்றியான் இருக்கின்றான்” என்றான் ரான்.

Wednesday, 12 September 2018

மெல்பேர்ண் வெதர் (10) - குறு நாவல்


அதிகாரம் 10 – புதிய தலையிடி

விடுமுறை முடிந்து வேலை தொடங்கியதும் புங் ஜோசுவாவை மெது மெதுவாக வெட்டத் தொடங்கினாள்.

ஜோசுவாவுக்கோ அவளைத் தன் மனத்தில் இருந்து அகற்றுவது என்பது முடியவே முடியாத காரியம். அவளின் மோகனக் கவர்ச்சியில் சிக்குண்டு தவித்தான். அவள் இன்னமும் வருவாள், இன்பத்தை அள்ளிப் பருகலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கும்போது, அவள் தான் தப்புவதற்கான முயற்சியில் ஈடுபடத் தொடங்கிவிட்டாள்.

புங் இப்போது நந்தனை தனது உற்ற நண்பனாக பாவனை செய்து கொண்டாள். உண்மையில் ஜோசுவாவைக் கோபப் படுத்துவதற்காகவே அவள் இந்த நெருக்கத்தை நந்தனுடன் ஏற்படுத்திக் கொண்டாள். ஜோசுவாவை கொடுமையான தனிமை வாட்டியது.

அவள் இனித் தனக்குக் கிடைக்கமாட்டாள் எனத் தெரிந்துகொண்டதும், அவளுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களில் சிலவற்றை ஃபேஸ்புக் மூலம் தனது நெருங்கிய நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டான் ஜோசுவா. இவை அமீபாக் கலங்கள் போல் பிரிந்து பிரிந்து பலரிடம் சென்றன.

Sunday, 9 September 2018

தகவல் பகிர்வு : இலங்கைத் தமிழ்க் குறும்படத் திரைக் கதைப் போட்டி 2019
காக்கைச் சிறகினிலே இதழ்க் குழுமம் முன்னெடுக்கும்
நான்காவது ஆண்டு கிபி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு 2019 (வள்ளுவராண்டு 2050)

குறும்படத் திரைக் கதைப் போட்டி : ‘இலங்கைத் தமிழர் வாழ்க்கை’ : பூர்வீகம் - இடப்பெயர்வு – புலப்பெயர்வு - இதனோடான தொடர்ச்சியும் நீட்சியும்

காக்கைச் சிறகினிலே இதழ்க் குழுமம் தமிழ் இலக்கிய போட்டியாக முதல் முறையாக « குறும்படத் திரைக் கதைப் போட்டி » நடாத்துகிறது. இந்த முதற் போட்டியின் கதைக் களத் தெரிவாக « இலங்கைத் தமிழர்கள் வாழ்க்கை » எனும் தலைப்பு தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது. உலகப் பெரு வெளியில் அளப்பெரிய அனுபவங்களைச் செறிவாகப் பெற்றுள்ள ஓர் இனக்குழுமாக இந்த இலங்கைத் தமிழர்களது வாழ்வு அமைந்திருக்கிறது.

Wednesday, 5 September 2018

மெல்பேர்ண் வெதர் (9) - குறு நாவல்


அதிகாரம் 9 – கண் மண் தெரியா நட்பு

கணவன், பிள்ளைகள் தொடர்பாக பெரும்பாலானவற்றை நந்தனுடன் பகிர்ந்து கொள்ளூம் அவள், ஜோசுவா தொடர்பாக எந்த ஒன்றையுமே கதைப்பதில்லை. நட்பில்தான் எத்தனை விதம்! குடும்பம் நடத்த கணவன்; செக்ஸ் இற்கு ஒரு நண்பன்; வேலையில் கதைத்துப் பேச இன்னொரு நண்பன்.

“என்னுடைய பிள்ளைகள் இரண்டு பேருக்கும் பிறைவேற் ஸ்கூலில் படிக்க வருஷத்திற்கு நாற்பதாயிரம் செலவாகின்றது.”

“நேற்று டொக்லண்டில் சாப்பிடப் போனோம். ஓல் யு கான் ஈற். ஹெட்டிற்கு எண்பது டொலர்கள். நான்கு பேரும் சாப்பிட முன்னூற்றி இருபது டொலர்கள்.”

அவள் தொடர்ந்தும் நந்தனின் நண்பியாக, தன்னுடைய பெருமைகளைப் பேசிக் கொண்டிருப்பாள்.

”இந்த நாட்களில் ஒரு ஆண் துணையை மாத்திரம் நம்பி ஒன்றும் செய்ய முடியாதுஎன்றாள் புங். நந்தனுக்கு அவள் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது.

Wednesday, 29 August 2018

மெல்பேர்ண் வெதர் (8) - குறு நாவல் அதிகாரம் 8 - கொண்டாட்டம்

மக்காறியோ செய்யமுடியாததை தான் செய்து முடித்துவிட்டதாக தப்பட்டம் அடித்தான் ஜோசுவா. ஆனால் மக்காறியோ அதை நம்பத் தயாரில்லை. நிஜத்தில் ஒருநாள் காட்டுகின்றேன் எனச் சபதம் போட்டான் ஜோசுவா.

ஒருநாள் டியர்பார்க் ஹோட்டலில் இரவைக் கழிப்பதென முடிவு செய்தார்கள் ஜோசுவாவும் புங்கும். இரண்டுபேரும் கார்த்தரிப்பிடத்தில், வேலை ஆரம்பித்து பதினைந்து நிமிடங்களுக்குள் சந்தித்துக் கொள்வதென்று முடிவு செய்திருந்தார்கள்.

வேலை ஆரம்பிப்பதற்கான மணி ஒலி கேட்டது. சற்று நேரத்தில் காரில் இருந்து இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தாள் புங். குளிர் காலம் வானம் இருண்டு கிடந்தது. மெதுவாக நடந்து ஜோசுவாவின் காரைச் சேர்ந்தாள். கதவைத் திறந்து, கார் சீற்றைச் சரித்துவிட்டு குளிர் உடுப்பின் தொப்பியால் தன் தலையை மூடிக்கொண்டு ஒருக்களித்துப் படுத்தாள். இனி அவளைத் தெருவில் போகும் ஒருவரும் கண்டுகொள்ள முடியாது.

ஜோசுவா தன் கழுத்தைச் சரித்து அவளைப் பார்த்துச் சிரித்தான். அவள் ஒன்றும் சொல்லாமல் மெளனமாக தன் வாயைச் சுழித்தாள். அந்தச் சுழிப்பு அவன் மனதைக் கிறங்க வைக்க காரை மெதுவாகக் கிழப்பினான்.

இந்தக் காட்சியை கார்த்தரிப்பிடத்தில் இன்னொரு காருக்குள்ளிருந்து மக்காறியோ பார்த்துக் கொண்டிருந்தான்.

Wednesday, 22 August 2018

மெல்பேர்ண் வெதர் (7) - குறு நாவல்


அதிகாரம் 7 - பின் தொடருதல்

தொழிற்சாலை நிர்வாகம், ஒவ்வொரு கிழமையும் வேலை செய்யும் நேரங்களில் இரண்டுமணித்தியாலங்களை சேகரித்து வைத்துக் கொள்வார்கள். இருபதுநாட்களுக்கொருதடவை அப்படிச் சேரும் நேரத்தை வேலை செய்பவர்கள் வேண்டும்போது ஒரு லீவு நாளாக எடுத்துக் கொள்ளலாம். இந்த முறைமையை RDO- Roaster Day Off என்று சொல்வார்கள்.

இந்த RDO வை சாதகமாகப் பாவித்து காதல் சோடிகள் லீவு எடுத்துக் கொள்வார்கள். அன்றைய தினத்தை முழுவதும் கொண்டாடியே தீருவார்கள். அவர்கள் வேறு வேறு குறூப்பில் இருந்துவிட்டால் லீவு எடுப்பதில் எந்தவித பிரச்சினையும் இராது. ஒரே குறூப்பில் இருந்தால், இரண்டுபேர்கள் ஒரு நேரத்தில் RDO வைப் பாவிக்க முடியாது. இருக்கவே இருக்கின்றது ‘சிக் லீவ்’. இருவருக்கும் தீராத வருத்தம் வந்துவிட்டால் அதுவே துணை.

இப்படிப்பட்ட ஒருவர் குறூப்பில் வரவில்லை என்றால், அவரின் சோடி வந்திருக்கின்றாரா என்று மற்றைய பகுதிகளில் தேடிக் கண்டுபிடித்து விடுவார்கள். அன்று முழுவதும் அவர்களைப் பற்றிய கதைகள்தாம் கதைப்பார்கள்.

“நண்பா! இப்போது அவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள்?”

Wednesday, 15 August 2018

மெல்பேர்ண் வெதர் (6) - குறு நாவல்


அதிகாரம் 6 - புங் ஒரு புதிர்

நந்தன் வேலை செய்யும் பகுதிக்கு முதல் பகுதியான BODY SHOP இல் சில தமிழ் இளைஞர்கள் வேலை செய்து வந்தார்கள். இந்த ‘பொடி ஷொப்பில்’ தயாரிக்கப்படும் காரின் முதுகெலும்பான பனல்கள், கதவுகள், உதிரிப்பாகங்கள் போன்ற இரும்பிலான பாகங்கள் வெல்டிங் மூலம் இணைக்கப்படுகின்றன. பின்னர் அந்த உடல்கள் கொன்வேயர் (conveyor) மூலம் PAINT SHOP இற்கு இழுத்து வரப்படுகின்றன.

’பெயின்ற் ஷொப்பில்’ வேலை முடித்து நந்தன் வீடு திரும்பும்போது அந்தத் தமிழ் இளைஞர்கள் வெளியிலே இருக்கும் வாங்குகளில் இருந்து கதைப்பதை அவதானித்திருக்கின்றான். அன்று அவர்கள் பெரிதாகச் சத்தம் போட்டு வாக்குவாதத்தில் இருந்தார்கள். அதற்குக் காரணம் குலம்.

குலம் சமீபத்தில் அவர்கள் வேலை செய்யும் பகுதிக்கு புதிதாக வேலைக்கு வந்திருந்தான். அவனுக்கு ஒரு பிரச்சினை இருந்தது. அவன் வேலை செய்யும் இடங்களில் யாராவது சிங்களவரைக் கண்டுவிட்டால் – அவர் யாரென்றும் பாராமல் அடித்துவிடுவான். பிறகு வீட்டிற்கு வந்துவிடுவான். இத்தனைக்கும் அவன் மனநிலை பாதிப்படைந்தவன் அல்ல. மனநிலை பாதிப்படைந்த சிங்களவர்களால் அவன் குடும்பத்திற்கு நேர்ந்த அவலம். அவனது இந்த அடிக்கும் செயலால் பல இடங்களில் வேலையை இழந்திருக்கின்றான். இதனால் அவன் ஒருபோதும் வேலையில் நிரந்தரமாக இருந்தது கிடையாது.. குலத்திற்கு என்ன நடக்கும் என்பது அங்குள்ளவர்களின் கவலையாக இருந்தது.

Wednesday, 8 August 2018

மெல்பேர்ண் வெதர் (5) - குறு நாவல்


 

அதிகாரம் 5 - ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை.

இப்போது நந்தனும் புங்கும் பெயின்ரின் தரத்தை நிர்ணயிக்கும் குவாலிற்றி கொன்ரோல் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஹெவின் என்னும் ஜெர்மன் நாட்டுமனிதர் குறூப்லீடராக இருந்தார். அறுபது வயதை நெருங்கும் நோமா என்ற நியூசிலாந்துப் பெண்மணியும், நட்டஷா என்ற கிறீக் நாட்டு இளம்பெண்ணும் ரீம்லீடர்களாக இருந்தார்கள்.

ஒருமுறை வேலை சற்று முன்னதாக எல்லாப் பகுதிகளிலும் முடிவடைந்து விட்டது. இரவு ஒரு மணி இருக்கும். வேலை செய்யுமிடத்தை துப்பரவு செய்துவிட்டு, ஒவ்வொருவரும் அவரவர் வேலையில் மூழ்கி இருந்தார்கள். புங் நிலத்தில், முதுகை சுவருடன் சார்த்தியபடி தனது ரெலிபோனில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தாள். வியட்நாமியர்கள் கொடுத்து வைத்தவர்கள். குள்ள உருவம் கொண்டதால் வளைந்து நெளிந்து வேலை செய்வார்கள். நினைத்த நேரம் நினைத்தபடி இருந்து எழும்புவார்கள்.

அப்போது அங்கே ஜோசுவா வந்தான். அவன் இப்போது Electro Deposition (பிறைமர் அடிப்பதற்கு முன், இரும்பிற்கு மின்னால் பதியவைத்தல்) என்ற பகுதியின் குறூப்லீடராக இருக்கின்றான். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு புங்கிற்கு முன்னால் குந்தி இருந்தான்.

Wednesday, 1 August 2018

மெல்பேர்ண் வெதர் (4) - குறு நாவல்
அதிகாரம் 4 : தவறுகள் வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்கின்றன

கணவனும் மனைவியும் தங்கள் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யாமல் இருக்கும்போது பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன. குடும்பத்தில் இருவரும் வேலை செய்யும் போது, குடும்பத்தை கொண்டு நடத்துவதில் சிக்கல் ஏற்படுகின்றது, அடுத்தவருடன் தம்மை, தம் பிள்ளைகளை ஒப்பிடுதல் சிக்கலுக்கு ஆரம்பம்.

மக்காறியோவின் மீதான விசாரணை புஸ்வாணமாகிப் போனது. அவனுக்கு எந்தவிதமான தண்டனையும் கிடைக்கவில்லை. ஆனால் அவன் மீதான ஒரு பதிவு ‘மனிதவள மேலாண்மை’ப் பகுதியில் (Human Resources) இருந்தது.

ஆனால் என்ன வேடிக்கை, இருவரும் ஒன்றுமே நடவாதது போல மீண்டும் பழகத் தொடங்கினார்கள். மக்காறியோவிற்கு சிலவேளை புங் மீது வன்மம் இருக்கக்கூடும். ஆனால் அவள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு சுமுகமாகக் கதைத்தாள், வேலை செய்தாள்.

புங் ஒரு அப்பாவி போலவும் எதையும் எளிதில் நம்பி விடுபவள் போலவும் காணப்பட்டாள்.

அவளுடன் உரையாடலை எப்படித் தொடங்குவது என்று நந்தனுக்குச் சங்கடமாக இருக்கும். ஆனால் அவள் நினைத்த நேரம் நினைத்த இடத்தில் பேச்சை ஆரம்பித்துவிடுவாள். சுற்றுச்சூழ இருப்பவர்களை அவள் கணக்கில் எடுப்பதில்லை.

Friday, 27 July 2018

மெல்பேர்ண் வெதர் (3)- நாவல்அதிகாரம் 3 : போரின் குழந்தை

பிறைமருக்கு மாற்றலாகிப் போன முதல்நாள், அவளுடன் வேலை செய்வதற்கு நந்தனுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. மறுநாள் காரின் இரண்டு பக்கங்களிலும் நின்று வேலை செய்தார்கள். அவளின் பெயரைச் சொல்லி அவளை அசத்த வேண்டும் என விரும்பினான் நந்தன்.

”உனது பெயர் லோம் தானே?”
அவளிடமிருந்து பதில் வரவில்லை. மீண்டும் கேட்டான்.

“இல்லை!”

அவளது முகம் சடுதியாக இருண்டது. ஆனாலும் அவள் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.

“அப்ப உனது அப்பாவின் பெயரா அது?”

“இல்லை என்னுடைய பெயர் புங். யார் உனக்கு இதைச் சொல்லித் தந்தது?”

Friday, 20 July 2018

ஒரு பள்ளம் மேடாகின்றது - நூல் அறிமுகம்

 

அண்டனூர் சுரா எழுதிய ‘முத்தன் பள்ளம்’ நாவலை முன்வைத்து.

’மேன்மை’ வெளியீடாக வந்திருக்கும் இந்த நாவலை தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட அண்டனூர் சுரா (சு.ராஜமாணிக்கம்) எழுதியிருக்கின்றார். நாவலுக்குள் நுழைவதற்கு முன்னர், அதன் சமர்ப்பணத்தை ஒரு தடவை பார்த்து விடுவோம்.

‘முத்தன் பள்ளம் கிராமத்திற்கு ஒரு சாலை வசதி, மழைக்கு ஒழுகாத கூரை, பருவப்பெண்களுக்கேனும் ஒரு பொதுக்கழிப்பறை, குடியிருப்பிற்கு பட்டா, அங்காடி, அங்கன்வாடி, பள்ளிக்கூடம், தேர்தல் காலத்திலேனும் வேட்பாளர்கள் வந்துபோக ஒரு பொதுவழிப்பாதை, ஓர் அச்சமுமில்லாமல் பெண் எடுத்தல் – கொடுத்தல், மழைக்காலங்களில் கூரைத்தண்ணீர் ஒழுகியோட விலைக்கேனும் ஒரு சாண்நிலம், வெயில் காலங்களுக்கு ஓர் ஒட்டகம், மழைக்கு பரிசல், வாழும் சந்ததியினருக்கு குறைந்தபட்ச மரியாதை, ஒன்றிய வரைபடத்தில் தனித்த இடம் இவற்றில் ஒன்றேனும் இக்கிராம மக்களுக்குக் கிடைக்க யாரேனும் ஒருவர் காரணமாக இருப்பாராயின் அவரது திருவடிக்கு….!’

சமர்ப்பணம் இப்படியென்றால், இந்த நூலுக்கு அணிந்துரை எழுதிய நாஞ்சில் நாடன் இன்னும் ஒருபடி மேலே போய் – ‘அந்த ஒருவரின் காலடி மண்ணை எடுத்து நெற்றியில் திருநீறாகவோ திருமண்ணாகவோ அணிய நாமும் சித்தமாக இருப்போம்’ என்கின்றார்.

Sunday, 15 July 2018

மெல்பேர்ண் வெதர் (2) - நாவல்அதிகாரம் 2 : அழகான பெண்

வான் மான் நூஜ்ஜின் ஒரு வியட்நாமியன். அவனால் ஆங்கிலம் கதைக்க முடியாதுவிடினும் எப்படியோ சுழியோடி தனது வாழ்க்கையைக் கொண்டு செல்கின்றான். குள்ள உருவம், சப்பை மூக்கு. மொட்டந்தலை. அவனைக் கோபப்படுத்த வேண்டுமாயின், மூக்கை சப்பையாக நசித்துக் காட்டினால் போதும். கோபம் உச்சிக்கு ஏறிவிடும். அப்படிச் செய்துதான் நந்தனும் அவனைக் கோபப்படுத்துவான்.

நந்தன் இலங்கை நாட்டைச் சேர்ந்தவன். அந்தக் கார்த் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்து நான்கு வருடங்கள் ஆகின்றன.

வான் மான் நூஜ்ஜின், நந்தனுக்குச் சீனியர், பதினைந்து வருடங்களாக அங்கே குப்பை கொட்டுகின்றான். அவன் ஒரு வேடிக்கைப் பேர்வழியும் கூட.

ஒருநாள் இப்பிடித்தான் அவனது மொட்டந்தலைக்கு முடி வளர நந்தன் ஒரு மருந்து சொன்னான். ‘பசுவின் கன்றைப் பிடித்து அதன் நாக்கினால் தலை முழுவதையும் நக்க விடு’ என்றான் நந்தன்.

Thursday, 5 July 2018

மெல்பேர்ண் வெதர் (1) - நாவல்அதிகாரம் 1 : புறப்பாடு

மேல் மாடியில் தனது அறைக்குள் நின்றபடி ஜன்னலினூடாக வெளியே பார்வையை ஓடவிட்டாள் அவள். வானம் கருகருவென்று இருட்டி இருந்தது.

’மகளைப் பள்ளியில் இருந்து கூட்டி வரும்போது வானம் இப்படி இருக்கவில்லையே!’

திடீரென்று வானம் கோபம் கொண்டு மழை பொழியத் தொடங்கியது. வெப்பமாக வீசிய காற்று ஒடுங்கிவிட, மின்னல் ஒன்று வரிஞ்சு கட்டி வீட்டின் மேலால் ஓடி ஒளிந்தது. சடசடத்துப் பெய்த மழையினால் புழுதி அடங்க, மண் மணம் மூக்கைத் துளைத்தது. மூக்கை மேலும் கீழும் பக்கவாட்டிலுமாகத் தேய்த்துக் கொண்டாள். காலநிலைக்குத் தகுந்தால் போல் உடைகளை அணிந்து கொண்டாள். சிறிதாக மேக்கப் போட்டுக் கொண்டாள்.

பக்கத்து அறையைத் திறந்து எட்டிப் பார்த்தாள். அது அவளின் கணவனின் படுக்கை அறை. எல்லாப் பொருட்களும் போட்டது போட்டபடி கன்னாபின்னாவென்று சிதறிக் கிடந்தது. உள்ளே போகவில்லை. வெளியே நின்று பார்த்துவிட்டு கதவை இழுத்து மூடினாள். வேலை நாட்களில் அவள் அந்த அறைக்குள் போவதில்லை. அப்படியே கணவனும் இவளது அறைக்குள் வருவதில்லை. நேரில் பார்த்துக் கதைப்பதற்கு நேரமில்லை. ஒருவரோடு ஒருவர் கதைத்துப் பேச எங்கே நேரம்? ரெலிபோனில் சிலவேளைகளில் கதைப்பாள். எல்லாமே வார இறுதியில்தான் குடும்பம், கொண்டாட்டம்.

Tuesday, 26 June 2018

மெல்பேர்ன் வெதர் - நாவல்அறிமுகம்

தனது வீட்டுக் கராஜை அழகு நிலையமாக மாற்றி தொழில் செய்து கொண்டிருந்தாள் அவள்.

ஒருநாள் தாடிக்காரர் ஒருவர் தன்னை அழகுபடுத்த அங்கே வந்தார். அவர் நெடு நேரமாகப் அவளைப் பார்ப்பதும் தலை குனிவதுமாக இருந்தார்.

அவரது முறை வந்தது.

தலைமுடி வெட்டியாயிற்று. தாடியை அழகுபடுத்திக் கொண்டிருக்கும் போது அவள் திடீரென மயங்கிக் கீழே விழுந்தாள். தாடிக்காரர் எழுந்து தலைதெறிக்க ஒட்டம் பிடித்தார்.

வீட்டிற்குள்ளிருந்து கணவனும் பிள்ளைகளும் பதகளிப்பட்டு ஓடி வந்தார்கள். அவர்களும் அழகு நிலையத்தில் இருந்தவர்களுமாகப் அவளைத் தூக்கி அருகே இருந்த செற்றிக்குள் படுக்க வைத்தார்கள். முகத்திற்கு தண்ணீர் தெளித்தார்கள்.

மயக்கம் தெளிந்ததும், பரபரப்பாக சுற்றுமுற்றும் பார்த்தாள் அவள்.

“அவரை ஒன்றும் செய்துவிடாதீர்கள். அவர் எனது முன்னாள் காதலன்” என்றாள் அவள்.

...தொடரும்...

Friday, 22 June 2018

மழையில் நனைந்த உறவு


சிசு.நாகேந்திரன்

“அவனுக்கென்ன, போய்விட்டான். போகும் இடம் சொல்லாமலே போய்விட்டான்.  அரைமணித்தியாலம் சொர்க்க சுகத்தையும், ஐந்துநிமிட இன்பத்தையும் தந்துவிட்டுப்  போய்விட்டான்.  அவனைப்பற்றிய தகவலே இல்லை. அன்று எனக்கு இன்பமூட்டி என்னை ஏமாற்றிவிட்டுப் போனவனை நான் எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது? எங்குதான் சென்று தேடுவது? விலாசமும் இல்லை. பெயர்மட்டும் தெரிந்தால் போதுமா? அவனுடன் தொடர்புகொள்வதுதான் எப்படி? ஒருவேளை பெயரும் உண்மையான பெயராக இருக்குமோ, என்னவோ!”

நந்தினி வேதனையுடன் மனம்புழுங்கிக்கொண்டு இடிந்துபோய், திண்ணைக் கப்புடன் சாய்ந்துகொண்டு, மடித்த முழங்கால்களுக்கிடையில் தலையை முட்டுக் கொடுத்தபடி, அழுது வடிந்துகொண்டிருந்தாள்.   அவளின் உள்ளத்தில் ஏக்கம் நிறைந்த எண்ணங்கள் மேலும் ஓடிக்கொண்டிருந்தன. ……

“இளம் பெண்ணாக, அதுவும் கன்னித்தன்மையைப் பறிகொடுத்த துர்ப்பாக்கிய வதியாக, நான் வெளியே புறப்பட்டு, அவனைத் தேடுவது சாத்தியமாகுமா? அவனைக் கண்டுபிடிக்காவிடில் என் கதி என்ன?  நான் ஒரு மடைச்சி! ஏமாளி! பொறுப்பில்லாதவள்! அன்று அவன் காட்டிய அனுதாபத்தில்  ஏமாந்து என்னைப் பறிகொடுத்தேனே! எவ்வளவு மோட்டு முண்டம்! எனது உடம்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மற்றவர்களுக்குத் தெரியாது, ஆனால் எனக்குத் தெரியும்தானே!…….  சரி, அதை இப்போது நினைத்து அழுவதில் என்ன பயன்?

Sunday, 17 June 2018

பொன்சொரிந்த பொற்காலம்(பகுதி 2)


யூனியன்கல்லூரி நினைவுகள் பதிவுகள்

அந்தக் காலத்தில், ஒரே நேரத்தில் பல மாணவர்கள் நீர் அருந்த முடியாமல் இருந்தது. இதனால் பல மாணவர்கள் தெருவைக் கடந்து அப்பால் இருந்த தேநீர்க்கடைகளிலும், சாப்பாட்டுக் கடைகளிலும் நீர் பருகினார்கள். சிலர் அருகில் இருந்த வீடுகளிற்கும் சென்றார்கள். இந்தச் சிக்கலை நிவர்த்தி செய்ய 1980 ஆண்டில் ஏறக்குறைய 3000 மாணவர்கள் பாவிக்கக்கூடியவாறு பெரியதொரு தண்ணீர்த்தொட்டியை அதிபர் அமைத்துத் தந்தார். மேலும் இதே ஆண்டில் மாணவர்களுக்கு சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது. கனிஷ்ட பிரிவு ஆண்கள் நீல காற்சட்டையும் வெள்ளை சேட்டும், ஏனையவர்கள் யாவரும் வெள்ளை ஆடையும் காலணியும் அணிந்து வந்தார்கள்.

Sunday, 10 June 2018

பொன் சொரிந்த பொற்காலம் (பகுதி 1)யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்

பொற்கால யூனியனின் மைந்தன் நான்.

யூனியன் கல்லூரி மைதானத்தின் கிழக்கில் அமைந்த தகரக்கூரைக் கட்டடத்தில் நான் எனது ஆறாம் வகுப்பை ஆரம்பித்தேன். அப்போது அங்கு தந்தை செல்வா பாடசாலை இருக்கவில்லை. யூனியன் கல்லூரி ஒரே பாடசாலையாக இருந்தது. 1979ஆம் ஆண்டு தை மாதம் யூனியன் கல்லூரியில் இருந்து ஆரம்ப பிரிவு பிரித்தெடுக்கப்பட்டு, தந்தை செல்வா தொடக்கநிலைப் பள்ளி ஆரம்பமானது. அதன்பின்னர் யூனியன் கல்லூரியில் ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை நடைபெற்றது.

யூனியன்கல்லூரியில் இரண்டு அதிபர்கள் சேவையில் இருந்த காலங்களில் நான் அங்கு கல்வி பயின்றுள்ளேன். ஒருவர் திரு. நடராஜா, மற்றவர் திரு. கதிர். பாலசுந்தரம்.

Monday, 28 May 2018

மூடியிருக்கும் கதவுக்குப் பின்னால்…….


சிசு.நாகேந்திரன்      

     அறைக்கதவு மூடியிருக்கிறது.  அறைக்குள் யார் இருக்கிறார்களென்று எனக்குத் தெரியும்.  ஆனால் என்ன செய்கிறார்களென்று அறியமுடியவில்லை.  கதவில் தட்டி அதைத் திறக்கச் சொல்ல எனக்கு உரிமையில்லை.  உள்ளே நடப்பதை நான் அறிய வேணுமென்ற ஆவல் என்னுள்ளே நின்று உழத்துகிறது.  ஆனால் அறியவேணுமென்ற அவசியமில்லை. தேவையுமில்லை. பின் எதற்காக ஆத்திரப்படுகிறாய் என்று கேட்காதீர்கள்.

     அறைக்குள் ஒரு குரல் அனுங்குமாப்போல் கேட்கிறது.  இன்னொரு குரல் ஏதோ சமாதானப் படுத்துமாப் போலும் கேட்கிறது.  

மனிதாபிமானமுள்ள ஒருவன் இதை எப்படி தாங்கிக்கொண்டிருப்பான்! 

Tuesday, 15 May 2018

குட்டி இளவரசன் - வயது வந்தோர்க்கான சிறுவர்நாவல்?


 

கூரியரில் ஒரு பார்சல் மகனுக்கு வந்திருந்தது. கையெழுத்திட்டு அதைப் பெற்றுக் கொண்டபோது ஒரு ஏமாற்றம். பெட்டியின் உருப்படிக்கு அது பாரமற்று இருந்தது.

அதை உடைத்து உள்ளே இருப்பதை மகன் காட்டினான். அது ’அப்பிள் மக் புக்’கில் ஒட்டக்கூடிய ஒரு பெரிய ஸ்ரிக்கர். அலுங்காமல் குலுங்காமல் நசியாமல் வந்து சேர்வதற்குத் தான் அந்தப்பெரிய பெட்டி. இரண்டுபேருமே சிரித்துக் கொண்டோம். அதன் பின்னர் அந்த ஸ்ரிக்கரைக் காட்டி ‘இது என்ன?’ என்று ஒரு போடு போட்டான் மகன். தூரத்தில் நின்று பார்த்த நான் ‘மலை’ என்றேன். பின்னர் சந்தேகம் வரவே கிட்டச் சென்று பார்த்துவிட்டு ‘தொப்பி’ என்றேன்.
எத்தனையோ பேருக்கு நான் இப்படி வரவேண்டும், இதற்குத்தான் படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும், அவற்றையெல்லாம் பெற்றோருக்காக மூட்டைகட்டி வைக்கவேண்டி ஏற்பட்டுவிடுகின்றது. அதே போல் இந்தப்புத்தகத்தின் கதைசொல்லிக்கும் ‘தான் ஒரு ஓவியனாக வரவேண்டும்’ என்றொரு ஆசை இருந்திருக்கின்றது. ஆனால் பைலற் ஆகிவிடுகின்றார்.

Monday, 7 May 2018

’அக்கினிக்குஞ்சு’ இணையத்தளம் ஏழாவது ஆண்டு நிறைவு விழா


ஏழாவது ஆண்டினை நிறைவு செய்து, எட்டாவது ஆண்டினில் அடியெடுத்து வைக்கின்றது அக்கினிக்குஞ்சு இணையத்தளம்.

1991 ஆம் ஆண்டிலிருந்து சஞ்சிகை வடிவில் பல இதழ்களை மணம் பரப்பி, பின்னர் இருபது ஆண்டுகள் கழித்து இணையத்தளமாக வடிவெடுத்து இன்று ஏழு ஆண்டுகளைப் நிறைவு செய்கின்றது அக்கினிக்குஞ்சு.

செய்திகள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாவல், சினிமா, நேர்காணல்கள், ஒளிப்படைப்புகள் என பல்சுவை அம்சங்கள் கொண்ட இந்த இணையத்தளம், பல்லாயிரம் வாசகர்களைக் கொண்டுள்ளது என்பதை இணையத்தளத்தில் வரும் வாசகர் கடிதங்கள் உணர்த்துகின்றன. ஒவ்வொரு வருட முடிவிலும் புத்தக வெளியீட்டுவிழா, சிறுகதை – குறுநாவல் போட்டிகள் என அசத்தும் இவ் இணையத்தளம் இவ்வருடம் இசையருவிப் பாடல் போட்டி, படைப்பாளர்/கலைஞர் கெளரவிப்பு என வருகின்றது மகிழ்ச்சியைத் தரும் செய்தி.தனி ஒரு மனிதனாக, ஃபீனிக்ஸ் பறவை போல், துடிப்புடன் இயங்கும் யாழ். பாஸ்கருக்கு வாழ்த்துக்கள்.

Saturday, 5 May 2018

கடைசிக் குற்றவாளியின் மரணவாக்குமூலம் – சிறுகதை


மெல்பேர்ண் நகர வைத்தியசாலை. ஏழாம் இலக்க வார்ட்.

நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு வெள்ளை இன முதியவர்---நோயாளி---வார்டின் முன்புறமாக அங்குமிங்குமாக நடக்கின்றார். நடப்பதும், பின்னர் தனது படுக்கையில் ஏறி இருந்து பெருமூச்சு விடுவதுமாக இருக்கின்றார்.

கடந்த நான்கு நாட்களாக அவர் மனம் பரிதவித்தபடி இருக்கின்றது. கடைசிக்காலம். மனம் ஏதோ சொல்ல விழைகின்றது.

பார்த்தால் பெரிய இடத்து மனிதர் போல தோற்றம். இன்னமும் கம்பீரம் குலையவில்லை. நிமிர்ந்த நடை. கண் பார்வைக்குக் குறைவில்லை. தினமும் அவரின் மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என ஒரு பட்டாளமே வந்து பார்த்துவிட்டுச் செல்கின்றார்கள். கலகலப்பான மகிழ்ச்சி ததும்பும் குடும்பம்.

திடீரென்று தனக்குப் பக்கத்தில் இருந்த ’தாதியரைக் கூப்பிடும் பட்டனை’ அழுத்தினார். அமைதியாக இருந்த ஏழாம் உவார்ட்டை அந்தச் சத்தம் அல்லோலகல்லோலப் படுத்தியது. ஒரு பெண் தாதி ஓடி வந்தாள்.

“பெரிய டாக்டரை நான் பார்க்க வேண்டும்.”

“ஏன் எங்களைப் பற்றி முறையிடவா?”

“இல்லை. என்னைப் பற்றி முறையிட வேண்டும்.”

Tuesday, 1 May 2018

இந்த மாமியார் கொஞ்சம் வித்தியாசமானவர் – குறும்கதைபாபுவின் மனைவி சசிகலா-சசி- கர்ப்பிணியாக இருந்தாள். அவளைப் பார்க்கும் சாட்டில் பாபுவின் பெற்றோர் பிறிதொரு மாநிலமான சிட்னியில் இருந்து வரவிருப்பதாக பாபு, தன் நண்பன் முகுந்தனிடம் சொன்னான். அவர்கள் வந்து போனதன் பிற்பாடு சசியின் பெற்றோர் வளைகாப்பு வைத்து, பிள்ளைபேற்றை ஒழுங்குமுறையில் கொண்டாட இலங்கையில் இருந்து வர இருக்கின்றார்கள் என்றும் சொன்னான்.

அவன் இந்தச் செய்தியைச் சொல்லி இரண்டுநாட்கள் இருக்கும், பாபுவின் தாயார் சிட்னியிலிருந்து முகுந்தனிற்கு ரெலிபோன் செய்தார்.

“தம்பி… வாறகிழமை மெல்பேர்ணிற்கு வாறம்.”

“ஓம் அனரி தெரியும். பாபு சொன்னவன்.”

“ஆனால் இது உமக்குத் தெரியாது. நாங்கள் உம்முடைய வீட்டிலைதான் தங்கப் போறம். இரண்டுகிழமைதான் நிற்போம்.”

Sunday, 22 April 2018

கங்காருப் பாய்ச்சல்கள் (28)


மின் இணைப்பு

அவன் அந்த வீட்டை நிமிர்ந்து பார்த்தான். வீட்டின் முன்புறத்தில் ஒருவர் கார் கழுவிக் கொண்டிருந்தார்.

|பெரியவரே, நீங்கள் எந்தக் கம்பனியின் மின் இணைப்பைப் பாவிக்கின்றீர்கள்?|

ஈரம் சொட்ட நின்ற அந்த வீட்டு மனிதர், அந்தப் பையனை நிமிர்ந்து பார்த்தார். தோளிலே ஒரு சீலைப்பை. கையில் ஒரு ஃபைல்.

|அதை நான் உனக்கு சொல்லப் போவதில்லை.| மூச்சிரைக்கச் சொன்னார் அவர். கார் கழுவுதல் என்பது இலகுவான வேலையல்ல. தனது வேலைக்கு இடையூறு தருகின்றானே என்பது அவர் கோபம்.

|எல்லா வழங்குனர்களையும்விட உங்களுக்கு மிகவும் குறைவான விலையில் நாம் தருவோம்.|

|கெதியிலை இந்த இடத்தை விட்டுப் போய்விடு. எனக்கும் உனக்கும் சண்டை வரப்போகுது.|

Wednesday, 18 April 2018

தூக்கிய திருவடி – சிறுகதை


ஜெயந்தி காலை ஆறு மணிக்கெல்லாம் வேலைக்குக் கிழம்பிவிடுவாள். வீட்டில் உள்ளவர்களுக்கு ‘பாய்’ சொல்லிவிட்டு, கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். மெல்லிய இருட்டு. கதவைப் பூட்டிவிட்டு காரில் ஏறப் போனவள் பதறியடித்துக் கொண்டு மீண்டும் வீட்டிற்குள் ஓடிவந்தாள்.

“காரைக் காணவில்லை. ஓடியாங்கோ எல்லாரும்”

சில மாதங்களாக இங்கே விநோதமான கார்த் திருட்டுகள் நடக்கின்றன. நம்பர்பிளேற் திருட்டு, காருக்கு கல்லுகளை அடுக்கிவிட்டு நான்கு ரயர்களையும் கழட்டிக் கொண்டு போதல், பெற்றோலை உறுஞ்சி எடுத்தல் போலப் பல வகை.

“பதறாதையப்பா. முதலிலை வேலை செய்யிற இடத்துக்கு இண்டைக்கு வேலைக்கு வரேலாது எண்டு சொல்லும். பிறகு பொலிசுக்கு அடிப்பம்” என்றான் கணவன் குமரேசன்.

பிள்ளைகள் வீட்டில் இடி விழுந்தாலும் எழும்ப மாட்டார்கள்.

Wednesday, 11 April 2018

மொழியியல் விருதினைப் பெற்றுக்கொள்கின்றார் ஜெயராமசர்மா


 தமிழ்நாடு அரசினால் வழங்கப்படும் அதியுயர் விருதான மொழியியல் விருதினை - அவுஸ்திரேலியா மெல்பேர்ணைச் சேர்ந்த மகாதேவாஐயர் ஜெயராமசர்மா அவர்கள் பெற்றுக் கொள்கின்றார்.
Tuesday, 10 April 2018

' உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018' - (வள்ளுவராண்டு 2049) காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுத்த கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு - முடிவுகள் :

காக்கைச் சிறகினிலே இதழின் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த கவிஞர் 'கி பி அரவிந்தன்' கனவின் மீதியில் எழும் தடமாக இந்தப் போட்டி அமைகிறது. பாரதி கண்ட "சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் !" என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்றாகவும் தொடரப்படுகிறது.
இதற்கமைய நடாத்தப்பட்ட ‘உலகத் தமிழ்க் குறுநாவல் போட்டி 2018’. உலகளாவிய சுயாதீனப் படைப்புகளை வழங்கும் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் போட்டியாகும்.

தொன்மமும் நீட்சியுமாக நீண்ட நெடிய பயணத்தில் இயங்கும் தமிழ் இயல் - இசை - நாடகமென்ற முத்தளத்தையும் கடந்து ‘கணினித் தமிழாக’ புதிய பரிமாணத்தில் இன்று பவனி வரும் சூழலில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்!’ என்றபடி பாரெங்கும் விரவித் தொடரும் வாழ்வின் அசைவினைப் பதியும் படைப்புகளை ஊக்குவிக்கும் உலகத் தமிழ்ப் படைப்புப் போட்டி.யாகும்.நெறியாளர் தமிழ் இலக்கிய ஆர்வலர் மதிப்புக்குரிய இ. பத்மநாப ஐயர் அவர்களது வழிகாட்டுதலுடன் உலகளாவிய தமிழ் எழுத்தாளர்கள் கொண்ட நடுவர் குழு பரீட்சித்து எட்டப்பட்ட முடிவுகள்.

Saturday, 24 March 2018

கடமை கடவுளிடம் சேர்க்கும் - சிசு.நாகேந்திரன்


முற்றும் துறந்த முனிவர் ஒருவர் ஒரு பெரிய விருட்சத்தின் கீழ் ஆழ்ந்த நிட்டையில் இருக்கும்பொழுது அவரது உடம்பில் ஏதோவொரு எச்சம் விழுந்ததை உணர்ந்தார். உடனே அவர் அண்ணாந்து பார்க்கையில் தலைக்குமேலே மரக்கிளையில் ஒரு கொக்கு இருப்பதைக் கண்டு அதை உற்றுப் பார்த்தார். அவரது பார்வையில், பாவம், அந்தக் கொக்கு எரிந்து சாம்பலாகிவிட்டது. அவரது தவப்பயன் அத்தனை வலிமை கொண்டது. உடனே போய் ஆற்றிலிறங்கிக் குளித்து உடம்பைச் சுத்தம்செய்துகொண்டார்.  

Sunday, 18 March 2018

விதியின் வழியே மதி செல்லும் - சிசு.நாகேந்திரன்


ஒரு மனிதனின் வாழ்க்கையானது அவன் முன்பு செய்துகொண்ட நல்வினை தீவினைகளைப் பொறுத்தே அமையும்.  அவனுடைய பிராரத்துவ வினைகளின் பயனை அடைவதற்கு ஏற்ற விதத்தில்தான் அவனுடைய வாழ்க்கைமுறைகள், வாழ்க்கைவசதிகள், கல்வி, செல்வம், பெற்றோர், மனைவி, பிள்ளைகள், சுற்றம் சூழல் முதலிய யாவும் ஏலவே அமைக்கப்பட்டிருக்கும்.  மனிதன் தன் வாழ்க்கையைத் தன்னிஸ்டப்படி நடத்துவதாக எண்ணிக்கொண்டிருக்கிறான். அது அவனுடைய அறியாத்தனமாகும்.  ஏற்கனவே தண்டவாளம் போடப்பட்டுவிட்டது.  ஓடும் ரயில் அத்தண்டவாளத்தில்தான் போகலாம்.  தான் விரும்பியவாறு பாதையை மாற்றிப் போகமுடியாது.  அதேபோலத்தான் மனிதவாழ்க்கையும்.   வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் ஏற்கனவே விதியினால் திட்டமிடப்பட்டு அது நியமித்தபடியே நடந்தேறும். இதற்கு உதாரணமாக ஒரு சிறு கதையை இங்கு பார்ப்போம்.

Monday, 12 March 2018

விக்ரர் துறைமுகமும் ’கிரனைட்’ தீவும்


ஊர் சுற்றிப் புராணம் – தெற்கு அவுஸ்திரேலியா

விக்ரர் துறைமுகம் (Victor Harbour) தெற்கு அவுஸ்திரேலியாவின் கடல் சார்ந்த ஒரு நகரமாகும். அடிலையிட் நகரத்தில் இருந்து 80 கி.மீ தெற்குப்புறமாக உள்ளது.
 

அங்கே பார்ப்பதற்கு பல இடங்கள் இருக்கின்றன. அவற்றுள் பிரசித்திபெற்ற ஒன்று ‘கிரனைட் தீவு’ (Granite Island). இது ஒரு ஆளில்லா தீவு. சுற்றுலாப்பயணிகளைக் கவர்ந்திழுக்கும் இடம். 500 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் நிலத்திற்கு அடியில் உருகிய பாறைகளினால் (Magma) உருவானவை இந்த கிரனைற் பாறைகள். மழை, கடல் அலைகள், காற்று என்பவற்றினால் கரையோரம் அரிக்கப்பட்ட பொழுது இந்தத் தீவு வெளித் தோன்றியது. Ramindjeri இன ஆதிவாசிகள் இங்கே வாழ்ந்தார்கள். அவர்கள் இந்த நிலப்பரப்பிற்கு Nulcoowarra எனப் பெயரிட்டிருந்தார்கள். காலப்போக்கில் அவர்கள் இடம்பெயர்ந்துவிட்டார்கள்.