Monday 27 February 2023

"பால்வண்ணம்" சிறுகதைத்தொகுப்பு - ஒரு கண்ணோட்டம்




கிறிஸ்டி நல்லரெத்தினம்

 ஆஸ்திரேலியாவை வதிவிடமாய் கொண்ட ஈழத்து எழுத்தாளர் கே. எஸ். சுதாகரின் புதிய படைப்பு "பால்வண்ணம்" சிறுகதைத்தொகுப்பு. 1983ல் இருந்து சிறுகதை, குறுநாவல், ஆய்வுக்கட்டுரை, விமர்சனம் ஆகிய பல பாதைகளில் தடம் பதித்தவரின் மூன்றாவது சிறுகதை தொகுப்பு இது. இலக்கிய சஞ்சிகை, இணையதளம், பத்திரிகை என பல தளங்களில் அயராமல் எழுதிவரும் புலம்பெயர் எழுத்தாளர் கே.எஸ்.சுதாகருக்கு வேறு அறிமுக பாமாலை வேண்டியதில்லை.

 இச்சிறுகதைத்தொகுதியின் புகுமுகத்தையும் இன்ஜின் அறையையும் பற்றி அனேக நண்பர்கள் பல தளங்களில் ஏற்கனவே சிலாகித்து விமர்சனம் செய்துவிட்டனர். எனவே நூலை படித்த போது என்னை வருடிய சில தருணங்களை மட்டுமே இங்கு மையில் தோய்க்கிறேன்.

 நவீன இலக்கியத்தின் ஒரு முக்கிய அம்சமான சீண்டல் அல்லது நிலைகுலைவு இவரின் கதைகளின் சிறப்பு. சுதாகரின் கதைகள் 'எல்லாம் சுபம்' என்று என்றும் முடிவதில்லை. பல கதைகளில் வாசகனை சீண்டி அவனை ஒரு முடிவிலிக்கு (infinity) அழைத்துச்சென்று அங்கு அவனை பரிதவிக்க விட்டுவிட்டு விலகிப்போகிறார் ஆசிரியர். இது ஒரு புது அணுகுமுறை. வாசகனுக்கு இது ஒரு புது அனுபவமே!

Tuesday 21 February 2023

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் (6/14)

 


அதிகாரம் 6 : புங் ஒரு புதிர்

நந்தன் வேலை செய்யும் பகுதிக்கு முதல் பகுதியான BODY SHOP இல் சில தமிழ் இளைஞர்கள் வேலை செய்து வந்தார்கள். இந்த ‘பொடி ஷொப்பில்’ தயாரிக்கப்படும் காரின் முதுகெலும்பான பனல்கள், கதவுகள், உதிரிப்பாகங்கள் போன்ற இரும்பிலான பாகங்கள் வெல்டிங் மூலம் இணைக்கப்படுகின்றன. பின்னர் அந்த உடல்கள் கொன்வேயர் (conveyor) மூலம் PAINT SHOP இற்கு இழுத்து வரப்படுகின்றன.

’பெயின்ற் ஷொப்பில்’ வேலை முடித்து நந்தன் வீடு திரும்பும்போது அந்தத் தமிழ் இளைஞர்கள் வெளியிலே இருக்கும் வாங்குகளில் இருந்து கதைப்பதை அவதானித்திருக்கின்றான். அன்று அவர்கள் பெரிதாகச் சத்தம் போட்டு வாக்குவாதத்தில் இருந்தார்கள். அதற்குக் காரணம் குலம்.

Tuesday 14 February 2023

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் (5/14)

 











அதிகாரம் 5 : ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை.


இப்போது நந்தனும் புங்கும் பெயின்ரின் தரத்தை நிர்ணயிக்கும் குவாலிற்றி கொன்ரோல் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஹெவின் என்னும் ஜெர்மன் நாட்டு மனிதர் குறூப்லீடராக இருந்தார். அறுபது வயதை நெருங்கும் நோமா என்ற நியூசிலாந்துப் பெண்மணியும், நட்டஷா என்ற கிறீக் நாட்டு இளம்பெண்ணும் ரீம்லீடர்களாக இருந்தார்கள்.

ஒருமுறை வேலை சற்று முன்னதாக எல்லாப்பகுதிகளிலும் முடிவடைந்துவிட்டது. இரவு ஒரு மணி இருக்கும். வேலை செய்யுமிடத்தை துப்பரவு செய்துவிட்டு, ஒவ்வொருவரும் அவரவர் வேலையில் மூழ்கி இருந்தார்கள். புங் நிலத்தில், முதுகை சுவருடன் சார்த்தியபடி தனது ரெலிபோனில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தாள். வியட்நாமியர்கள் கொடுத்து வைத்தவர்கள். குள்ள உருவம் கொண்டதால் வளைந்து நெளிந்து வேலை செய்வார்கள். நினைத்த நேரம் நினைத்தபடி இருந்து எழும்புவார்கள்.

அப்போது அங்கே ஜோசுவா வந்தான். அவன் இப்போது Electro Deposition (பிறைமர் அடிப்பதற்கு முன், இரும்பிற்கு மின்னால் பதியவைத்தல்) என்ற பகுதியின் குறூப்லீடராக இருக்கின்றான். சுற்று முற்றும் பார்த்துவிட்டு புங்கிற்கு முன்னால் குந்தி இருந்தான்.

Friday 10 February 2023

பால்வண்ணம் - எழுத்தாளர் வாசு முருகவேல் கருத்து

 



பால்வண்ணம் - சிறுகதைகள் - கே.எஸ்.சுதாகர்

புலம்பெயர்வாழ்வின் துயர்கள், அபத்தங்கள் என்று அலைக்கழியும் வாழ்வில் அசைபோட மிஞ்சி இருபது ஊரின் நினைவுகள் தான். ஏதோவொரு வகையில் ஊர் ஒரு வார்த்தையாக வந்து விழுவதை தவிர்க்க முடிவதில்லை. எத்தனை நெருக்கடி இருந்தாலும் ஊர் பிரியாமல் இருந்திருக்கலாம் என்று சொல்லாத நபர்கள் குறைவுதான்.

எழுத்தாளர் கே.எஸ்.சுதாகரின் சிறுகதைகள் நிதானமானவை. காதலை கூட இவ்வளவு நிதானமாக கையாண்டா ஒரு தலைமுறையை இப்போது படிக்கும் போது துல்லியமாக புரிந்து கொள்வது கடினமாகத்தான் இருக்கும். அவருடைய எந்தச்சொற்களிலும் அதிர்வுகள் இல்லை. ஒருவகையில் அந்த அமைதிதான் வாசிப்பில் சற்று நம்மை நிலைகுலைய வைத்து விடுகின்றது.

1983 காலப்பகுதியில் இருந்து எழுத்து துறையில் இயங்கி வருபவர் கே.எஸ்.சுதாகர் என்று குறிப்புகள் கூறுகின்றது. இந்த தொகுப்பின் சிறுகதைகள் 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டவையாகும்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படிக்கத்தொடங்கி மன நிறைவுடன் வாசித்து முடித்திருக்கிறேன்.

- வாசு முருகவேல்

02/02/2023

Monday 6 February 2023

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் (4/14)

 



 





அதிகாரம் 4 : தவறுகள் வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்கின்றன

கணவனும் மனைவியும் தங்கள் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யாமல் இருக்கும்போது பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன. குடும்பத்தில் இருவரும் வேலை செய்யும் போது, குடும்பத்தை கொண்டு நடத்துவதில் சிக்கல் ஏற்படுகின்றது, அடுத்தவருடன் தம்மை, தம் பிள்ளைகளை ஒப்பிடுதல் சிக்கலுக்கு ஆரம்பம்.

மக்காறியோவின் மீதான விசாரணை புஸ்வாணமாகிப் போனது. அவனுக்கு எந்தவிதமான தண்டனையும் கிடைக்கவில்லை. ஆனால் அவன் மீதான ஒரு பதிவு ‘மனிதவள மேலாண்மை’ப் பகுதியில் (Human Resources) இருந்தது.

ஆனால் என்ன வேடிக்கை, இருவரும் ஒன்றுமே நடவாதது போல மீண்டும் பழகத் தொடங்கினார்கள். மக்காறியோவிற்கு சிலவேளை புங் மீது வன்மம் இருக்கக்கூடும். ஆனால் அவள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு சுமுகமாகக் கதைத்தாள், வேலை செய்தாள்.

புங் ஒரு அப்பாவி போலவும் எதையும் எளிதில் நம்பி விடுபவள் போலவும் காணப்பட்டாள்.

Saturday 4 February 2023

பால்வண்ணம் - ஒலிவடிவம்


 

SRS தமிழ் வானொலியின் கதையாடல்

குரல் வடிவம் : ஆனந்தராணி பாலேந்திரா


Wednesday 1 February 2023

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் (3/14)

 

அதிகாரம் 3 : போரின் குழந்தை

பிறைமருக்கு மாற்றலாகிப் போன முதல்நாள், அவளுடன் வேலை செய்வதற்கு நந்தனுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. மறுநாள் காரின் இரண்டு பக்கங்களிலும் நின்று வேலை செய்தார்கள். அவளின் பெயரைச் சொல்லி அவளை அசத்த வேண்டும் என விரும்பினான் நந்தன்.

”உனது பெயர் லோம் தானே?”

அவளிடமிருந்து பதில் வரவில்லை. மீண்டும் கேட்டான்.

“இல்லை!”

அவளது முகம் சடுதியாக இருண்டது. ஆனாலும் அவள் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.

“அப்ப உனது அப்பாவின் பெயரா அது?”

“இல்லை என்னுடைய பெயர் புங். யார் உனக்கு இதைச் சொல்லித் தந்தது?”