Saturday, 31 May 2014

ஒரு இலட்சம் புத்தகங்கள் - சுஜாதா

சிங்களத் தீவினுக்கோர்
பாலம் அமைப்போம்

-மகாகவி

Welcome to delegates of Bharathi International

நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் துணியில் ஐந்து நட்சத்திர ஓட்டலின் வாயிலில் ஆடின. தலைப்பாகைக்காரரின் படம் கீழே துடித்துக் கொண்டிருந்தது. அருகே பல வர்ணக் கொடிகள் சஞ்சலித்துக் கொண்டிருந்தன. டாக்டர் நல்லுசாமி கண்ணாடிக் கதவைத் திறப்பதற்கு முன் சேவகன் திறந்து புன்னகைத்தான். உள்ளே குளிர்பதனம் செய்யப்பட்ட அரங்கில் கம்பளத்தில் தமிழறிஞர்கள் நிறைந்திருந்தார்கள். புதுக்கவிஞர் கேக் கடித்துக்கொண்டிருந்தார். சாகித்திய அகாதமி சிகரெட்பற்றவைத்துக் கொண்டிருந்தார். பரிபாடல் சோபாவில் உட்கார்ந்து கொண்டு தொடை மேல் காகிதம் வைத்துக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். உரையாடலில் தமிழ் உலவியது.

"தமிழ்நாட்டிலே சாஸ்த்ரங்களில்லை. உண்மையான சாஸ்த்ரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்து விட்டு, தமிழ்நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடம் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள்..."
"இதைச் சொன்னது யாரு, சொல்லுங்க பார்க்கலாம்?"
"பேரறிஞர் அண்ணாங்களா?"
"இல்லைங்க. பார்ப்பனரான சுப்பிரமணிய பாரதி. `காற்றுன்னு வசன கவிதை படிச்சுப் பாருங்க"

Saturday, 24 May 2014

வீமன்காமம் சி டிதர்மலிங்கம் அடிக்கடி 'லெட்டர் பொக்ஸ்' பார்த்து வந்தார். இன்றைக்கு குறைந்தது ஆறேழு தடவைகளாவது தனக்கு கடிதம் வந்திருக்கின்றதா என்று பார்த்துவிட்டார். அவரைப் பார்க்க மருமகள் வாணிக்கு சிரிப்பு வந்தது.

உயர் பாதுகாப்பு வலயங்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பின்னர், ஒருமுறையாவது தனது கிராமத்தையும் வீட்டையும் போய்ப் பார்த்துவிடத் துடியாய்த் துடித்தார். அவரது 21 வருடக் கனவிற்கு அவரது உடல்நிலை இடம் கொடுக்கவில்லைஊரில் உள்ள அவரின் தம்பி முறையான பாலனுக்குக் காசை அனுப்பி, தனது கிராமத்தையும் வீட்டையும் வீடியோ எடுத்துப் பார்ப்பது என்று திட்டம் ஒன்றை வகுத்தார். பாலனுக்கு காசு அனுப்பி மூன்று கிழமைகள் ஆகிவிட்டன. தினமும் கடிதத்தின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்.

'220 கல்லு மணல் லொறி - 550 பாக் சீமெந்து - 2250 ஓடுகள்' போட்டுக் கட்டிய வீடு என்று புலம்பாத நாளில்லை.

மாலை மூன்று மணியிருக்கும். உடுப்புகளை மாட்டிக் கொண்டு முகமலர்ச்சியுடன் நின்றார்.
"ரூபன் இண்டைக்கு எத்தினை மணிக்கு வேலையாலை வருவான்?" என்று மருமகளிடம் மகனைப் பற்றி விசாரித்தார்.
"இரவு செல்லும் மாமா" என்றாள் வாணி.
"உதிலை பிள்ளை ... கடையடிக்குப் போட்டு வாறன்" மருமகளிடம் சொல்லிவிட்டு வெளியேறினார்.

மாலை ஆறுமணியளவில் ரூபன் வேலை முடித்து வீடு வந்து கொண்டிருந்தான். வரும்போது 'அவன் -இவன்' சி.டி இருந்தால் 'கே.எஸ்' ஸ்ரோஷில் வாங்கி வரும்படி சொல்லியிருந்தாள் வாணி. சிட்னியில் செவின் ஹில்சில் உள்ள 'கே.எஸ்' ஸ்ரோஷில் எல்லாப் புதுப்படங்களும் உடனுக்குடன் வந்துவிடும். சினிமாப் படங்கள் கொட்டிவிடப்பட்டிருந்தன. அதற்குள் 'அவனையும் இவனையும்' எப்படித் தேடுவது என்று மலைத்துப் போயிருந்த வேளையில், "தம்பி! வீமன்காமம் சீ டி இருக்கு வேணுமா?" என்றார் கடைக்காரர்.

கணினி விளையாட்டுக்கள்


மின்னஞ்சலில்  படைப்புகளை அனுப்பும் காலம் இது. நேரம், தபால் செலவு மிச்சம். ஒரு முறை முரசு அஞ்சலில் படைப்பை அனுப்பியிருந்தேன். சற்று நேரத்தில், 'Please send Bamini or Tharini" என்று பதில் வந்தது. 'பாமினியும் தாரிணியும் எனது கசின்மார்கள். அவர்களை எப்படி நாம் அனுப்ப முடியும்?' என்கின்றார் மனைவி. ஒரு சிலர் எந்த எழுத்துரு என்றாலும், அதை மாற்றி எடுக்கும் வல்லமை பெற்றவர்களாக இருக்கின்றாகள். அப்படி இயலாதவர்களுக்காக நாம்தானே மாற வேண்டும். இப்பொழுதெல்லாம் நான் அவரவர்களுக்குத் தகுந்தமாதிரி பாமினி, முரசு அஞ்சல், யுனிகோட் என்ற எழுத்துருக்களில் அனுப்பி வருகின்றேன்.

இந்தக் கணினியின் வருகையானது ஆரம்பத்தில் எனக்கு மிகவும் பயப்பீதியைத்தான் ஏற்படுத்தியது. 1983 ஆம் ஆண்டளவில்தான் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கல்குலேட்டரையே (calculator) அனுமதித்திருந்தார்கள். அதற்கடுத்த வருடமளவில் பேராசிரியர் குணசேகரா ( 'குண்டா' என்பது நாம் அவருக்கு அழைக்கும் செல்லப் பெயர்.) அவர்களால்தான் எமக்கு இந்த கணினி யுகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் அவரைப் பற்றியதொரு சிறு அறிமுகம். மெலிந்த தோற்றம். ஆஸ்மா நோயாளி. அப்போது ஜனாதிபதியாகவிருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனாவிற்கு ஆலோசனை வழங்கும் ஏழு விஞ்ஞானிகளுள் ஒருவர்.

நன்றாக ஞாபகம் இருக்கின்றது. அவர் எங்களுக்கு விரிவுரைகள் ஆரம்பித்து இரண்டாவதோ மூன்றாவதோ நாள். ஒட்டி உலர்ந்த நாயொன்று வகுப்பறைக்குள் நுழைந்தது. நாங்கள் ஆரவாரத்துடன் அதைத் துரத்தும் முயற்சியில் ஈடுபட்டோம். அந்த நாய் வகுப்பறைய விட்டுப் போவதாக இல்லை.  அது வாசலுக்கு வரும் வரைக்கும் காத்திருந்த பேராசிரியர் குணசேகரா, பந்தொன்றை உதைக்கும் வீரனைப் போல அந்த நாயைப் பந்தாடினார். அது காற்றிலே பறந்து போய் வெளியிலே விழுந்தது. சம்பவம் ஒரு அதிர்ச்சியாக இருந்தாலும், காட்சி சிரிப்பாக இருந்தது. அடக்க முடியாமல் வாய் பொத்தி - விட்டு விட்டுச் சிரித்தோம். ஆத்திரம் தாளாமல் 'டஸ்ர'ரைத் தூக்கி எங்களுக்குள் எறிந்துவிட்டுப் போய் விட்டார் பேராசிரியர்.

Friday, 16 May 2014

”விழுதல் என்பது...”

இன்று முதல் (16.05.2014)

“விழுதல் என்பது...”  பெரும் தொடர்கதை.

6 இணையங்களிலும் உதயன் பத்திரிகையிலும்

அக்கினிக்குஞ்சு (அவுஸ்திரேலியா)
பண்ணாகம் (யேர்மனி)
யாழ் இணையம் (இலண்டன்)
அலைகள் (டென்மார்க்)
வளர்நிலா  (பிரான்ஸ்)
கோட்டைக்கல்லாறு (இலங்கை)

திரு.கல்லாறு சதீஸ் (சுவீஸ்)
திரு.ஏலையா முருகதாசன் (யேர்மனி)
திருமதி.நிவேதா உதயராஜன் (இலண்டன்)
திரு.வண்ணைத்தெய்வம் (பிரான்ஸ்)
திரு.நோர்வே நக்கீரா (நோர்வே)
திரு.கே.எஸ் சுதாகர் (அவுஸ்ரேலியா)
திரு.வேலனையூர் பொன்னண்ணா(டென்மார்க்)
திரு.க.கிருஸ்ணமூர்த்தி (யேர்மனி)
திரு.நயினை விஜயன் (யேர்மனி)
திரு.கே.செல்லத்துரை (டென்மார்க்)
திரு.விக்கி நவரட்ணம் (சுவீஸ்)
திரு.குரு அரவிந்தன் (கனடா)
திருமதி.ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா (கனடா)
திரு.லெ.முருகபூபதி (அவுஸ்ரேலியா)
திரு.க.ஆதவன் (டென்மார்க்)
திரு.எம்என்எம். அனஸ் (இலண்டன்)
திரு. பன்னிருகரன் ஐயக்கொடி (சுவீஸ்)
திரு.சசிகரன் பசபதி (இலண்டன்) .


Wednesday, 7 May 2014

சென்றிடுவீர் எட்டுத்திக்கும்

புலம் பெயர் வாழ்க்கை

வெங்கட் சாமிநாதன்ஈழத் தமிழர் வாழ்க்கையில் 1983 ஒரு பெரிய திருப்பம். பிறந்த மண்ணைவிட்டு வெளியேறுவது அப்படி ஒன்றும் சாதாரணமாக எதிர்கொள்ளும் முடிவு அல்ல. நிர்ப்பந்தமாகிப் போகும்போது தாய் மண்ணைத் திரும்பப் பார்க்கப் போகிறோமா? இல்லையா? என்ற நிச்சயமின்றி எங்கு போகப் போகிறோம்? எப்படி வாழப் போகிறோம்? என்ற நிச்சயமுமின்றி சொந்த மண்ணை விட்டு பிரிவதும், பின் எங்கெங்கோ உலகப் பரப்பெங்கும் அலையாடப்படுவதும், ஒரு பயங்கர சொப்பனம் நிஜமாகிப் போகிற காரியம் தான். இப்போது முப்பது வருடங்கள் அலைக்கழிக்கப்பட்ட பிறகு கனடாவிலோ, ஆஸ்திரேலியாவிலோ இன்று ஒரு நிம்மதியுடன் வெளிமண்ணில், சூழலில் கலாசாரத்தில் வாழ்பவர்களின் வாழ்க்கை ஒருவாறான அலையாடல் ஓய்ந்த  அமைதி பெற்றுள்ளது, இழப்புகளின் நினைவுகள் சிலரை வருத்த, சிலர் விதிக்கப்பட்டுள்ள வாழ்க்கையுடன் சமாதானம் கொள்ள. அயல் மண்ணில் முதலில் வாடி வதங்கிப் பின் வேர் கொண்டு முளை துளிர்த்து வாழும் வளர்ச்சி கொள்ளும் இயல்பில் அல்ல.

ஒரு தலைமுறைக்காலம் சிலருக்கு பிறந்த மண்ணுடன் உறவுகளை அவ்வப் போது தொடர வாய்ப்புக்கள் தந்துள்ளது. சிலருக்கு அவ்வுறவுகள் மட்டுமல்ல மண்ணும் இல்லையெனவும் ஆக்கியுள்ளது. மிகவும் சிக்கலான வரலாற்றை ஈழ மண்ணில் பிறந்துள்ளோருக்கு தந்துள்ளது அந்த வரலாறு. ஈழத் தமிழரை உலகெங்கும் வீசியெறிந்துள்ளது இரண்டு தலைமுறை வரலாறு.

துன்பத்தினிடையே தான் புதிய, நினைத்துப் பார்க்காத மலர்ச்சிகளையும் மனிதரின் வாழவேண்டும் என்ற துடிப்பும். பச்சையே பார்க்கமுடியாத அடிவானம் வரை நீளும் பாலையில் கூட அபூர்வ மிக அழகான வித விதமான கத்தாழைகள் பூக்கும் மலர்கள் பார்க்க வினோதமானவை. உயிர்ப்பு இத்தகைய ஆச்சரியங்களைக் கொண்டது. எங்கு எது மலரும், எது எத்தகைய பயனுமற்ற விளைச்சல்களைப் பரப்பும் என்று யார் சொல்ல முடியும்? அமைதியான காலங்களில் வெற்றுப் பிரசாரங்களையும் கோஷங்களையும் தந்த ஒரு இனம், அலைக்கழிக்கப்பட்டு எங்கெங்கோ உயிர்த்தரிப்புக்கு வீசப்படும்போது அதன் ஜீவத்துடிப்பின் அடியோட்ட உணர்வுகளை மீட்டெடுக்கிறது. எதிர் நிற்கும் வாழ்வை அதன் குணத்தில் எதிர் கொள்கிறது. அதைப் புரிந்து கொள்ள முயல்கிறது. அரசியல், சித்தாந்த, ஜாதீய கோஷங்களை ஒதுக்கி. அதன் வாழ்க்கையின் ஆழ்ந்த அர்த்தங்களையும் மீட்டெடுக்கிறது.

இதையெல்லாம் வெற்று அரசியல் வாய்ப்பாடுகளில் அடைத்துவிட முடியாது. மனித ஜீவனின் அர்த்தங்கள் இப்படியெல்லாம் சுலபத்தில் சுலப, தயாரிக்கப்பட்டு அளிக்கப்படும் சித்தாந்த வாய்ப்பாடுகளில் சிக்கிவிடுவதில்லை. ஒவ்வொரு ஆளுமையையும் பொருத்தது இது. எந்த ஆளுமை எப்படி எதிர்வினையாக்கும் என்பதும் எந்த அரசியல் சமூகவியல் வாய்ப்பாடுகளிலும் அடங்கிவிடுவதில்லை. ஒரு வாய்ப்பாடு உருவாக்கப்பட்டதுமே, அதை மீறும் ஒரு ஜீவன் உடன் தோன்றிவிடுகிறது.

எங்கெங்கோ அலையாடப்பட்ட வாழ்க்கையில் உயிர்தரிப்பதே முழுமையும் முக்கியமானதுமாகிப் போய்விடும் நிர்ப்பந்தங்களில், அன்னிய மண்ணில் இரவு பூராவும் யந்திரங்களோடு யந்திரமாக இயங்கிவிட்டு, காலையில் தினசரி செய்தித்தாட்களை வீடு வீடாக வினியோகித்துவிட்டு வீடு திரும்பினால் பசிக்கு உண்டு படுக்கையில் விழச் சொல்லுமா, இல்லை கவிதை எழுதச் சொல்லுமா? இந்நிலைகளில், கவிதை எழுதும் ஜீவனை எப்படிப் புரிந்து கொள்வது? அல்லல் பட்ட ஜீவன் வாழும் இந்த மனிதக் கூட்டம் தான் தன் மொழியைப் பற்றிக் கவலைப் படுகிறது. உலகப் பரப்பு முழுதும் வீசி எறியப்பட்ட தமிழரோடு தமிழில் உறவு கொள்ள விழைகிறது. அதற்கு ஏற்ப புதிதாகத் தோன்றிய இணையத்தை தன் வசப் படுத்துகிறது. ஆச்சரியம் தான். இதில் முதல் காலடி வைப்பு புலம் பெயர்ந்த தமிழர்கள் தான். தமிழுக்கு அதை வளைத்துக் கொண்டு வந்ததும் புலம் பெயர்ந்த தமிழர்கள் தான். அவர்களுக்கு அந்தத் தேவை இருந்தது, செய்தார்கள் என்பது வேறு விஷயம்.

புலம் பெயர்ந்தோர் இலக்கியம் புலம்பல் இலக்கியம் என்று ஒருவர் சொன்னதாகப் படித்தேன். இதைவிட சின்னத் தனம் வேறு இருக்க முடியாது. சின்னத் தனமோ அல்லது தமிழருக்கே பழக்கமாகிப் போன வார்த்தை அலங்கார மோகமோ, எது காரணம் என்பது தேடுவது இது கொண்டுள்ள சின்னத்தனத்தை மறைப்பது தான்.

உலகப் பரப்பு முழுதையும் தமிழ் இலக்கியத்தின் கதைக் களமாக்கியது புலம் பெயர்ந்தோரின் காரியம் தான். .முத்துலிங்கம், பொ.கருணாகரமூர்த்தி, . சிங்காரம், ஜெயந்தி சங்கர், என, இப்படி ஒரு நீண்ட அணிவகுப்பே முன் நிற்கிறது. இன்றைய  தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியவர்கள் இவர்கள். பல வண்ணங்களும் வளமும் பரப்பும் சேர்த்தவர்கள் இவர்கள்.

சமீபத்தில் வல்லமை என்னும் ஒரு இணைய இதழ் ஒரு வருட காலத்திற்கு சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தியது. அதில் எனக்குத் தெரிய வந்த சிறப்பான சிருஷ்டித் திறன்கள் வெளிநாட்டில் வாழும் தமிழர்களது தான்.  அமெரிக்காவிலிருந்து, மிச்சிகனா? பழமை பேசி, பெல்ஜியத்தில் வாழும் மாதவன் இளங்கோ, ஆஸ்திரேலியாவில் வாழும் சுதாகர், இவர்களில் எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம் தந்தவர்கள் பழமை பேசி, மாதவன் இளங்கோ பின் இப்போது நாம் அதிகம் பேசப் போகும் சுதாகர். இவர்கள் அனைவரும்  தாம் வாழும் வாழ்க்கையை எழுதுபவர்கள். தாம் சந்திக்கும் மனிதர்களைப் பற்றி எழுதுகிறார்கள். எல்லோரும் எனக்குத் தெரிந்த வரையில் இணைய இதழ்களிலிருந்தே, எழுத வந்தவரகள். புதிய திறன்கள். புதிய உலகங்களை, புதிய மனிதர்களை, புதிய உறவுகளை, புதிய வாழ்க்கைச் சிக்கல்களை, புதிய தார்மீக இடற்பாடுகளைப் பற்றி எழுதுபவர்கள். பிறந்த மண்ணின், விட்டு விட்டு வந்த மண்ணின் நினைவுகளும் மனிதர்களும் இன்னம் மறக்கவில்லை தான். எதையும் முழுதாக அழித்துத் துடைத்துவிட முடியுமா என்ன?

சுதாகர் ஈழமண்ணிலிருந்து 1995-ல் வெளியேறியவர். இப்போது வாழ்வது ஆஸ்திரேலியாவில். தான் எழுதியவற்றிலிருந்து பன்னிரெண்டு கதைகளை ஒரு தொகுப்பிற்காக முன் வைத்துள்ளார்.

Sunday, 4 May 2014

எங்கே போகிறோம்

அறிமுகம் -நூலகவியலாளர் என்.செல்வராஜாதெல்லிப்பழை வீமன் காமத்தைச் சேர்ந்த கே.எஸ்.சுதாகர் தனது ஆரம்பக் கல்வியை வீமன்காமம் ஆங்கில மகாவித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும் பெற்றுக்கொண்டவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல்பீடத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு 1987 முதல் காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் பொறியியலாளராகப் பணியாற்றியவர். 1990இல் அத்தொழிற்சாலை போர்ச்சூழல் காரணமாக மூடப்பட்டதன் பின்னர் 1990 முதல் 1993 வரையான காலத்தில் கொழும்பு துறைமுக அதிகார சபையில் பணியாற்றிய பின்னர் இவர் 1993 முதல் 1995 வரை வவுனியா பிரதேசத்தின் வீடமைப்புத் திட்டத் துறையில் பொறியியலாளராகவும்; பணியாற்றினார். 1995இல் நியுசிலாந்துக்குக் குடும்பத்தினருடன் புலம்பெயர்ந்து சென்று அங்கு ஆறு ஆண்டுகளைக் கழித்தபின்னர், மீண்டும் புலம்பெயர்ந்து 2000இல் அவுஸ்திரேலியாவில் குடியேறித் தற்போது மெல்பெர்ண் பிரதேசத்தில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகின்றார்.

நோர்வே தமிழ்ச்சங்க மலர், அவுஸ்திரேலியாவின் மெல்பெரண் ஈழம் தமிழ்ச் சங்கம், மரத்தடி இணையம், இலண்டன் பூபாள ராகங்கள், கொழும்பு ஞானம் சஞ்சிகைதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், ஆகியவற்றின் சிறுகதைப் போட்டிகளில் பரிசுகளைப் பெற்றுக் குவித்தவர். அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினரான கே.எஸ்.சுதாகர் இந்த அமைப்பின் நிதிச் செயலாளராகவும் பணியாற்றியவர். சுருதி என்ற புனைபெயரிலும் பல படைப்புகளை எழுதி வருபவர்.

கே.எஸ்.சுதாகர் எழுதிய சிறுகதைகள் சிலவற்றை கொழும்பு ஞானம் சஞ்சிகையில் வாசித்திருக்கின்றேன். அப்போது அவரை ஒரு ஈழத்துப் படைப்பாளியாகவே அவரது கதைகளின் வாயிலாக அடையாளம் கண்டிருந்தேன்.

யாழ். கொம்மந்தறை என்ற சிற்றூரில் அமைந்துள்ள கம்பர்மலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின்; பழைய மாணவர் சங்கம், லண்டனில் 2006ம் ஆண்டு உலகளாவிய ரீதியில் அமைந்த பூபாள ராகங்கள் சிறுகதைப் போட்டி ஒன்றினை கொழும்பு தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து 2006இல் ஒழுங்கு செய்திருந்தார்கள். அச்சிறுகதைப் போட்டியில் தேர்வுக்குள்ளான 13 சிறுகதைகளையும் என்னிடம் அனுப்பி அவற்றுக்கான எனது மதிப்பீட்டை அச்சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையாகக் கேட்டிருந்தார்கள். முதல் மூன்று பரிசுக்குரிய கதைகளையும் அவர்கள் ஏற்கெனவே தெரிவுசெய்திருந்தார்கள். இப்போட்டியின் ஆறுதல் பரிசுக் கதைகளாகப் பத்துக் கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. அந்த ஆறதல் பரிசுக்கதைகளில் சிலவற்றை வாசித்தபோது அவற்றில் சிலவற்றை முதல் மூன்று பரிசுக்குள் காணமுடியாமல் போன எக்கம் என்னுள் இடைக்கிடையே எழுந்தது. இதையும் அந்த முன்னுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

ஆறதல் பரிசுபெற்ற கதைகளுள் ஒன்று ஆங்கொரு பொந்திடை வைத்தே என்ற கதையாகும். ஈழத்தமிழரின் உள்ளகப் புலப்பெயர்வின் ஒரு யதார்த்தத்தை அக்கதை துல்லியமாகக் காட்டியிருந்தது. பாதுகாப்பிற்காகத் தாம் இடம்பெயர்ந்து வாழ்ந்த நிலையில் கைவிடப்பட்ட தனது வீட்டிலிருந்து பொருட்கள் சிலவற்றையாவது எடுத்து வந்துவிடவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அயலவர் கோபாலருடன் சைக்கிளில் சென்று அலங்கோலமாகக் கிடக்கும் தன் வீட்டிலிருந்து அவசர அவசரமாகப் பொறுக்கிய சில பொருட்களுடன் தனியனாக வீடுதிரும்பும் இளைஞனின் (கதைஞரின்) விறுவிறுப்பான கதை அது. இடப்பெயர்வின் துயர், இக்கதையில் வாசகரின் மனதைத் துயர் கௌவும் வலுவைப் பெற்றிருந்தது. கோபாலருக்கு என்ன நேர்ந்திருக்கும் என்ற ஊகத்தை வாசகரிடமே விட்டுவிடுகின்றார் கதாசிரியர். அதற்கானதொரு தடயத்தையும் இடையில் அவர் அந்தப் பாழடைந்த வீட்டில் எதேச்சையாகச் சந்திக்கும் துணைப்படை இளைஞர்களின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பற்றிய உரையாடல்களில் விட்டுச்செல்கிறார். 

இந்தக் கதை என்னுள் மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தது. 1987இன் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பின்போது எமது வாழ்விடங்களிலிருந்து துரத்தப்பட்ட அனுபவங்களையும், இருப்பிடத்தை மீளப்பார்வையிட வெள்ளைக் கொடிபிடித்தபடி வந்து எமது வாழிடச் சேகரிப்புகளுக்கு நேர்ந்த அழிவைக்கண்டு விம்மி வெடித்த அந்தத் துயரம் தோய்ந்த நினைவுகள் அலையாக வந்து நீறுபூத்த நெருப்பாகியிருந்த மனதை மீண்டும் கிளறிப் புண்ணாக்கிய கதை அது.

Saturday, 3 May 2014

இருவேறு பார்வைகள்ஒலி வடிவில் கேட்க 
இன்று காலை 11 மணிக்கு எனக்கொரு ஹொஸ்பிட்டல் அப்பொயின்மன்ற் இருந்தது. தேநீர் குடித்துவிட்டு அவசர அவசரமாகப் புறப்படுகின்றேன். இந்தத்தடவை இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்காமல் ஹொஸ்பிட்டலைவிட்டு நான் திரும்பப் போவதில்லை.

மூன்றாவது தடவை ஒப்பரேஷன்.

முதன்முதலில் இந்த வைத்தியசாலைக்கு வந்தபோது, 'Fistula' என்று அந்த இளம் டாக்டர் சொன்னதும் நான் சிரித்துவிட்டேன். பென்குவின் போன்ற உதடுகளைக் கொண்ட அந்த பிலிப்பீன்ஸ் நாட்டுப்பெண், ஏதோ தனது பாஷையில் சொல்கின்றாளாக்கும் என நினைத்துக் கொண்டேன். ஆனால் சிரிப்பதற்கு இதில் எதுவும் இல்லை என்று பின்னர் புரியலாயிற்று. பயந்து விடாதீர்கள். 'பிஸ்ரியூலா' என்பது ஒரு வருத்தத்தின் பெயர். இந்தமாதிரி ஒரு வருத்தம் எமது நாடுகளில் வந்திருந்தால், அதைக் குணப்படுத்த எடுக்கும் செலவை ஈடு செய்ய வாழ்நாள் முழுக்க உழைக்க வேண்டியிருந்திருக்கும். இங்கு அவுஸ்திரேலியாவில் எல்லாமே இலவசம். வருத்தங்களும் இலவசம்.

அது எனக்கு எப்படி வந்தது என்பதை உங்களுக்கு நான் சொல்லியாக வேண்டும். அது ஒரு சிறு சரித்திரம்.

ஒருமுறை எனது ஆசனவாயிலுக்கு அண்மையாக ஒரு கட்டி வந்தது. சாதாரணமாகத் தோன்றி மறையும் கட்டி போலத்தான் ஆரம்பத்தில் அது இருந்தது. நாளடைவில் அது பெருத்து ஒரு குண்டுமணி போலாகிவிடது. நாட்டுமருந்தான 'கறுப்புக்கழியை'த் தேடி கடை கடையாக அலைந்தேன். வெள்ளைக்காரன்ரை கடையிலை அது கிடைக்காது என அறிந்ததும், வியட்நாம் 'சைனீஸ்' கடைகளை நோக்கி நடையைத் திருப்பினேன். தென்படும் குட்டிப்போத்தல்கள் ரின்களை ஆராய்ச்சி செய்து மருந்து ஒன்றைப் பெற்றுக் கொண்டேன். பூசி சிலநாட்களில் கட்டி உடைந்தது. மாறி வருவது போன்று மாயை காட்டி, பின்னர் மீண்டும் உருக் கொண்டது. நாளாக அது 'நாட்பட்ட புண்' என்று பெயர் எடுத்துகொண்டது. வெட்கத்தில் டாக்டருக்குக் காட்டாமல் இருந்தது பெரியதொரு சங்கடத்தை உருவாக்கிவிட்டது. இப்போது திறந்தே கிடக்கும் புத்தகம் போலாகிவிட்டேன்.

புலம்பெயர்ந்து வந்த காலம். அப்பொழுதெல்லாம் வேலைக்கு மனுப் போட்டால் நேர்முகப் பரீட்சைக்குக் கூப்பிடுவதில்லை. அதற்கான பதிலும் கிடைப்பதில்லை. ரெலிபோன் செய்து விசாரித்த போது சில விஷயங்கள் புரிந்தன.

"நீங்கள் அவுஸ்திரேலியாவிற்கு வந்து சிறிது காலம் வேலை செய்திருக்கவேண்டும். உங்களுக்கு அவுஸ்திரேலியாவில் வேலை செய்த முன் அனுபவம் இருக்க வேண்டும்"
"முன் அனுபவம் என்பது ஏதாவது ஒரு வேலை சம்பந்தமானது. அது சுப்பர்மார்க்கெட்டாகவோ அல்லது ஏதாவதொரு தொழிற்சாலையாகவோ இருக்கலாம். நீங்கள் உங்களது சொந்தநாட்டில் செய்த வேலையாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. அதன் பிறகுதான் உங்களை நேர்முகத் தேர்வுக்குக் கூப்பிடுவோம்" என்று விளக்கம் தந்தார்கள்.

முதலில் ஒரு சுப்பர்மார்க்கெட் சென்று விசாரித்துப் பார்த்தேன். அவர்கள் சொன்ன பதில் எனக்கு மேலும் வியப்பைத் தந்தது.

"உங்களுக்கு அவுஸ்திரேலியாவில் ஏதாவது வேலை செய்த முன் அனுபவம் உண்டா? சுப்பர்மார்க்கெட் என்று இல்லை. ஏதாவது ... யோசித்துப் பாருங்கள்" அதே உரையாடலைத் திருப்பிப் போட்டார்கள். அவர்கள் உரையாடுவதில் கில்லாடிகள். சொன்னதையே நோகாமல் திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளைகள். எங்கு சென்றாலும், "அவுஸ்திரேலியாவில் ..." என்று ஆரம்பித்து விடுவார்கள்.

யார் அந்த அனுபவத்தை எனக்குத் தந்து என்னை அசர வைக்கப் போகின்றார்கள்?
ஒரு வேலையைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் அத்தனையையும் செயற்படுத்தினேன். விடாமுயற்சி. தன்னம்பிக்கை. தீவிர தேடுதல். Yellow Pages ஐப் பார்த்து எண்ணற்ற இடங்களுக்கு Resume யுடன் Covering letter ஐயும் இணைத்து அனுப்பினேன். கடித உறையின் மூலையில் சந்தணம் குங்குமமும் பூசத் தவறவில்லை. கை மேல் பலன் கிட்டியது. சண்சைன் என்ற இடத்திலிருந்த 'டயமண்ட் பிறஸ்' என்னை வரவேற்றது. பாருங்கள் பெயர்களை - சண்சைன்(Sunshine), டயமண்ட் பிறஸ்(Diamond Press). ஆரம்பமே அசத்தலாக இருந்தது. வேலை! - free way இல் வாகனங்கள் விரைந்து செல்லும் வேகம். 'அந்த' வேகத்தில் சீனத்துப்பெண்கள், வியட்நாமியப்பெண்கள் எல்லாம் என்னமாய் வேலை செய்கின்றார்கள்! ஒருவேளை அவர்கள் தாய்நாட்டில் இருந்த போது இதைவிட இன்னமும் கடினமாக உழைத்திருப்பார்களோ?

அங்குதான் எனக்கு இந்த வியாதி ஆரம்பமாகியிருக்க வேண்டும். எந்தவொரு சரீரத் தொழில்களும் செய்து பழக்கப்படாத எனக்கு தொடர்ச்சியாக உடம்பை வருத்தியதில் உருவாகியிருக்கலாம். ஆபரேஷன் செய்யப் போனபோது சத்திரசிகிச்சை மிகவும் எளிமையானது என்று வெளிநோயாளர் பிரிவு டாக்டர் சொல்லியிருந்தார். வெளிநோயாளர் பிரிவில் இருக்கும் டாக்டர்கள் சர்ஜரி (surgery) செய்வதில்லை. அவர்கள் consultation செய்யும் டாக்டர்கள். வெளிநோயாளர் பிரிவில் இருந்த டாக்டரை இரண்டு தடவைகள் சந்தித்து ஆலோசனைகள் பெற்றிருந்தேன். இருந்தும் எனக்கு ஆபரேஷன் செய்யவிருக்கும் டாக்டரைச் சந்திக்க முடியவில்லை. அவர் ஹொஸ்பிற்றலில் மிகவும் பிரபலம் ஆனவர். ஓய்வின்றி வேலை செய்பவர். 65 வயதைத் தாண்டிய அனுபவசாலி. அவர் செய்த ஆபரேஷன்களில் தொண்ணூறு வீதத்திற்கும் மேல் சக்ஸஸ் என்றார்கள்.

எனக்கு ஒரு புதன்கிழமை சத்திரசிகிச்சை.