Friday, 27 July 2018

மெல்பேர்ண் வெதர் (3)- நாவல்அதிகாரம் 3 : போரின் குழந்தை

பிறைமருக்கு மாற்றலாகிப் போன முதல்நாள், அவளுடன் வேலை செய்வதற்கு நந்தனுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. மறுநாள் காரின் இரண்டு பக்கங்களிலும் நின்று வேலை செய்தார்கள். அவளின் பெயரைச் சொல்லி அவளை அசத்த வேண்டும் என விரும்பினான் நந்தன்.

”உனது பெயர் லோம் தானே?”
அவளிடமிருந்து பதில் வரவில்லை. மீண்டும் கேட்டான்.

“இல்லை!”

அவளது முகம் சடுதியாக இருண்டது. ஆனாலும் அவள் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.

“அப்ப உனது அப்பாவின் பெயரா அது?”

“இல்லை என்னுடைய பெயர் புங். யார் உனக்கு இதைச் சொல்லித் தந்தது?”

Friday, 20 July 2018

ஒரு பள்ளம் மேடாகின்றது - நூல் அறிமுகம்

 

அண்டனூர் சுரா எழுதிய ‘முத்தன் பள்ளம்’ நாவலை முன்வைத்து.

’மேன்மை’ வெளியீடாக வந்திருக்கும் இந்த நாவலை தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட அண்டனூர் சுரா (சு.ராஜமாணிக்கம்) எழுதியிருக்கின்றார். நாவலுக்குள் நுழைவதற்கு முன்னர், அதன் சமர்ப்பணத்தை ஒரு தடவை பார்த்து விடுவோம்.

‘முத்தன் பள்ளம் கிராமத்திற்கு ஒரு சாலை வசதி, மழைக்கு ஒழுகாத கூரை, பருவப்பெண்களுக்கேனும் ஒரு பொதுக்கழிப்பறை, குடியிருப்பிற்கு பட்டா, அங்காடி, அங்கன்வாடி, பள்ளிக்கூடம், தேர்தல் காலத்திலேனும் வேட்பாளர்கள் வந்துபோக ஒரு பொதுவழிப்பாதை, ஓர் அச்சமுமில்லாமல் பெண் எடுத்தல் – கொடுத்தல், மழைக்காலங்களில் கூரைத்தண்ணீர் ஒழுகியோட விலைக்கேனும் ஒரு சாண்நிலம், வெயில் காலங்களுக்கு ஓர் ஒட்டகம், மழைக்கு பரிசல், வாழும் சந்ததியினருக்கு குறைந்தபட்ச மரியாதை, ஒன்றிய வரைபடத்தில் தனித்த இடம் இவற்றில் ஒன்றேனும் இக்கிராம மக்களுக்குக் கிடைக்க யாரேனும் ஒருவர் காரணமாக இருப்பாராயின் அவரது திருவடிக்கு….!’

சமர்ப்பணம் இப்படியென்றால், இந்த நூலுக்கு அணிந்துரை எழுதிய நாஞ்சில் நாடன் இன்னும் ஒருபடி மேலே போய் – ‘அந்த ஒருவரின் காலடி மண்ணை எடுத்து நெற்றியில் திருநீறாகவோ திருமண்ணாகவோ அணிய நாமும் சித்தமாக இருப்போம்’ என்கின்றார்.

Sunday, 15 July 2018

மெல்பேர்ண் வெதர் (2) - நாவல்அதிகாரம் 2 : அழகான பெண்

வான் மான் நூஜ்ஜின் ஒரு வியட்நாமியன். அவனால் ஆங்கிலம் கதைக்க முடியாதுவிடினும் எப்படியோ சுழியோடி தனது வாழ்க்கையைக் கொண்டு செல்கின்றான். குள்ள உருவம், சப்பை மூக்கு. மொட்டந்தலை. அவனைக் கோபப்படுத்த வேண்டுமாயின், மூக்கை சப்பையாக நசித்துக் காட்டினால் போதும். கோபம் உச்சிக்கு ஏறிவிடும். அப்படிச் செய்துதான் நந்தனும் அவனைக் கோபப்படுத்துவான்.

நந்தன் இலங்கை நாட்டைச் சேர்ந்தவன். அந்தக் கார்த் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்து நான்கு வருடங்கள் ஆகின்றன.

வான் மான் நூஜ்ஜின், நந்தனுக்குச் சீனியர், பதினைந்து வருடங்களாக அங்கே குப்பை கொட்டுகின்றான். அவன் ஒரு வேடிக்கைப் பேர்வழியும் கூட.

ஒருநாள் இப்பிடித்தான் அவனது மொட்டந்தலைக்கு முடி வளர நந்தன் ஒரு மருந்து சொன்னான். ‘பசுவின் கன்றைப் பிடித்து அதன் நாக்கினால் தலை முழுவதையும் நக்க விடு’ என்றான் நந்தன்.

Thursday, 5 July 2018

மெல்பேர்ண் வெதர் (1) - நாவல்அதிகாரம் 1 : புறப்பாடு

மேல் மாடியில் தனது அறைக்குள் நின்றபடி ஜன்னலினூடாக வெளியே பார்வையை ஓடவிட்டாள் அவள். வானம் கருகருவென்று இருட்டி இருந்தது.

’மகளைப் பள்ளியில் இருந்து கூட்டி வரும்போது வானம் இப்படி இருக்கவில்லையே!’

திடீரென்று வானம் கோபம் கொண்டு மழை பொழியத் தொடங்கியது. வெப்பமாக வீசிய காற்று ஒடுங்கிவிட, மின்னல் ஒன்று வரிஞ்சு கட்டி வீட்டின் மேலால் ஓடி ஒளிந்தது. சடசடத்துப் பெய்த மழையினால் புழுதி அடங்க, மண் மணம் மூக்கைத் துளைத்தது. மூக்கை மேலும் கீழும் பக்கவாட்டிலுமாகத் தேய்த்துக் கொண்டாள். காலநிலைக்குத் தகுந்தால் போல் உடைகளை அணிந்து கொண்டாள். சிறிதாக மேக்கப் போட்டுக் கொண்டாள்.

பக்கத்து அறையைத் திறந்து எட்டிப் பார்த்தாள். அது அவளின் கணவனின் படுக்கை அறை. எல்லாப் பொருட்களும் போட்டது போட்டபடி கன்னாபின்னாவென்று சிதறிக் கிடந்தது. உள்ளே போகவில்லை. வெளியே நின்று பார்த்துவிட்டு கதவை இழுத்து மூடினாள். வேலை நாட்களில் அவள் அந்த அறைக்குள் போவதில்லை. அப்படியே கணவனும் இவளது அறைக்குள் வருவதில்லை. நேரில் பார்த்துக் கதைப்பதற்கு நேரமில்லை. ஒருவரோடு ஒருவர் கதைத்துப் பேச எங்கே நேரம்? ரெலிபோனில் சிலவேளைகளில் கதைப்பாள். எல்லாமே வார இறுதியில்தான் குடும்பம், கொண்டாட்டம்.