Monday, 30 March 2020

சத்திய போதிமரம் - சிறுகதை


 
கே.கணேஷ்

அன்று திங்கட்கிழமை ஆனதால் பஸ்ஸில் அதிகமான நெருக்கடி. சந்தை நாளானபடியாலும் ‘கோடு கச்சேரி’ என்று போனவர்கள் நிறைந்திருந்தபடியாலும் பஸ் நிறைய ஜனங்கள் இருந்தனர். சட்டப்படி முப்பதிரண்டு பிரயாணிகள் ஏற்றப்படவேண்டிய பஸ்ஸில் எழுபத்திரண்டு பிரயாணிகளாவது ஏறியிருப்பார்கள். ஒரு ஆசனத்தில் இரண்டு பேர்தான் உட்கார வேண்டியது. ஆனால் மூன்று பேரை அமர்த்தி இருந்தான் கண்டக்டர். என் பக்கத்தில் அமர்ந்திருந்த பால்கார கிரிபண்டாவோ இரட்டைநாடி ஆசாமி. மூன்று பேர் அமர்ந்ததும் என்பாடு சிரமமாகிவிட்டது. நெருக்கிப் பிடித்துக்கொண்டு ஒருவகையாக உட்கார்ந்தோம். பஸ்ஸும் புறப்பட்டுச் சென்றது. பாதித் தூரத்திற்குக் கிட்டத்தட்ட வந்திருக்கும். எவனோ ஒருவன் சைக்கிளில் சென்றவன், சைகை காட்டிவிட்டுச் சென்றான். ‘பொலிஸ்காரர்கள் இருக்கின்றார்கள்’ என்பதுதான் அதன் பொருள். டிரைவர் உடனே பஸ்ஸை நிறுத்தி பிரயாணிகள் எல்லோரையும் உட்கார வைக்கத் தொடங்கினான். இரண்டுபேர் உட்கார வேண்டிய இடத்தில் நான்குபேரை உட்கார வைக்கும் சிரமமான காரியத்தில் ஈடுபட்டான் கண்டக்டர். வெளிப்பார்வைக்கு ‘ஓவர் லோடா’கத் தோன்றாமலிருக்கும் என்பது அவன் எண்ணம். மீண்டும் பஸ் புறப்பட்டது.

Saturday, 28 March 2020

வெள்ளம் – சிறுகதை


 

இராஜ.அரியரட்ணம்

மின்னல் மின்னி இடியிடித்தது. தொடர்ந்து நிகழ்ந்த ஊழிக்கூத்தைப் படம் பிடிக்க வேண்டியதில்லை. இப்படித்தான் வானம் பார்த்து நிற்கும் யாழ்ப்பாணத்தில் இருந்தாற்போல் இருந்து வெள்ளம் வரும். ஒரு கலக்குக் கலக்கும்.  மக்களை அல்லோல கல்லோலப்படுத்திவிட்டு  அகப்படுகிற எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போய்விடும்.

சிங்கப்பூர் பணத்தில் முளைத்த கல்வீடுகள் நிமிர்ந்து நிற்கும். ஏழை மக்களின் குடிசைகளைச் சின்னாபின்னமாக்கித் தலைசாய்க்க இடம் இல்லாமற் தவிக்கச் செய்துவிடும். கல்வீடுகளில் இருந்த பணக்காரர்களையும் அந்தமுறை வந்த வெள்ளம் பீதிகொள்ளச் செய்துவிட்டது.

இத்தனைக்கும் கந்தப்பருடைய குடிசை அசையவில்லை. திடற்பூமி. வெள்ளம் வந்தாலும் எங்கேயோ ஓடி மறைந்துவிடும்.

Thursday, 26 March 2020

பாதிக் குழந்தை - காதர் மொகைதீன் மீரான் ஷா (பித்தன்)


 


“உலகமெல்லாம் தேடினேன். ஒரு மனிதனைக் கூடக் காணவில்லை!” என்று யாராது சொன்னால், அவனைப் பைத்தியக்காரன் என்றோ, குருடன் என்றோதான் உலம் முடிவு கட்டும். ஆனால், மனிதனைப் போல் அலங்காரம் செய்து கொண்ட பயங்கர மிருகங்கள்தான் உலகத்தில் அதிகம் என்று சொன்னால் அதை யாரும மறுக்க மாட்டார்கள்.

நல்ல பாம்பு என்று சொல்வதனால் அதனிடம் விஷம் இல்லை என்று சொல்ல முடியுமா? அது பாம்பு, மனிதன் ஏன் படமெடுத்து ஆடுகிறான்? இதுதான் இன்றைய உலகத்தால் முற்றுப்பெறாமல் விடப்பட்ட வசனம், அல்லது வசனம் முடிவு பெறாத முற்றுப்புள்ளி. இது ஆண்டவனுக்குப் புரியவில்லை. மனிதர்கள் எப்படி விளங்கிக் கொள்ளப் போகிறார்கள்?

ஏன் மனிதனுக்குப் பகுத்தறியும் தன்மை கிடையாதா? விஷத்தை விடக் கொடியவர்கள் மனிதன் என்ற போர்வையில் நடமாடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறானே! ஏன் உலகம் அத்தகையவர்களை மதித்து மரியாதை செய்கிறதே ஏன்…?

Tuesday, 24 March 2020

தேர் - எஸ்.பொன்னுத்துரை


 

முகத்தார் என்றழைக்கப்படும் ஆறுமுகம் துயிலெழுவது ஒரு திருக்காட்சி. தலையணையையும் போர்வையையும் உட்திணித்துப் பாயைப் பக்குவமாகச் சுருட்டி வைப்பது ஒரு கலை. கொட்டாவியை மறைபொருளெதுவுமின்றி ஊளையிட்டு, கைகளை நீட்டி மடக்கி, உடலை உலுப்பிச் சோம்பலை முறித்தால், துயிலெழு படலத்தின் ஓரம்சம் நிறைவுறும். தலைமாட்டில் நெருப்புப் பெட்டியும், தாவடிப் புகையிலைச் 'சுத்து'ம் எப்பொழுதும் தயாராக இருக்கும். 'சுத்தை' நேர்த்தியாகப் பற்றவைத்தால், கால்கள் தம் இச்சையாகவே கொல்லைப் பக்கம் நடக்கத் தொடங்கும். எப்பொழுது தொடக்கம் வைகறை துயிலெழும் வழக்கத்தை வாலாயப்படுத்திக் கொண்டார் என்பது அவருக்கே ஞாபகமில்லாத சங்கதி.
 

Sunday, 22 March 2020

கற்சிலை - நவாலியூர் சோ.நடராஜன்

கல்லிற் கோதிய அந்த உருவம் முடிந்து தன்னெதிரே நின்றதைக் கண்ட கணேசாச்சாரி புன்முறுவல் செய்தான், அக்கற்சிலையின் புன் முறுவல் போல. இந்த முறுவலின் வனப்புத்தானென்ன! புதிதாய் உலகத்தைக் கண்டு ஆச்சரியமடையும் குழந்தையின் அப்பழுக்கில்லாத தூய உள்ளத்திலிருந்து எழும் மனோரம்மியமான புன்முறுவல் போன்றது. என்ன பூரணமான அமைவு, விஸ்வகர்மாவும் செய்யமுடியாத கற்சிலை! “என் உள்ளக் கோவிலில் இத்தனை காலமாகக் கண்ணாம்பூச்சி விளையாடிக்கொண்டிருந்த என் இலட்சியம் இன்றே இக் கல்லில் அமைந்தது” தன் வாழ்க்கையின் நோக்கமெல்லந் திரண்டு சிற்றுளி மூலம் திவ்வியமாயன உருப்பெற்ற அச்சிலை முன் கணேசாச்சாரி தெண்டனிட்டு அஞ்சலி செய்தான். சந்தோஷத்தினால் தன்னை மறந்து ஆனந்தக் கூத்தாடினான். இளமை முழுவதும் அவன் மனதில் தாண்டவமாடிய பல்வேறு உணர்ச்சியின் வரலாறுகள் போல அச்சித்திரசாலையெங்கும் சலவைக்கல்லிற் சமைந்த உருவங்கள் கிடந்தன. அந்தோ அந்த வாசற்கதவண்டை இரண்டு மோகினிச் சிலைகள், உயர உள்ள மரக்கட்டையில் கிருஷ்ணனை நினைந்து அழுங்கும் இராதையின் சாயல். இந்த மூலையில் காமனை எரித்த சங்கரர் நிஷ்டை. அங்கே பர்வத குமாரியின் தவக்கோலம். இவற்றையெல்லாம் தன் மனதில் கர்ப்பமாக்கிக் கையினாற் பிரசவித்த கணேசாச்சாரி தன் சித்திரசாலையில் ஒருவரும் பிரவேசிக்கக்கூடாதெனத் தடுத்துவிட்டான். எனது மனோவிலாசத்துக்கும் உள்ள அமைதிக்கும் ஏற்பட்ட இச்சிற்ப சாலையில் மற்றவர்களுக்கு என்ன வேலை! இதென்ன தாசிகள் வீடா? நாடகசாலையா? இவர்களெதற்காக இங்கே வரவேணும்? இது நூதன சாலையுமல்ல, மிருகசாலையுமல்ல. எனது மனச் சாந்திக்காக நான் செய்யும் விளையாட்டை மற்றவர்கள் பார்த்து அதிசயப்படவும் வேண்டாம். சிரிக்கவும் வேண்டாம்.

Friday, 20 March 2020

கடல் சிரித்தது - எஸ்.அகஸ்தியர் 
மூன்று நாட்களுக்கு முன் அந்தக் கடற்கரையில் முத்து பிணமாகக் கிடந்தான். அந்தச் சடலத்தின் சதைப் பிண்டங்கள் பிய்ந்து போய்க்கிடந்தன.
 

மீன்களின் மாமிச வெறிவேட்டைக்கும், கடல் அலைகளின் முரட்டு மோதல்களுக்கும் ஆளாகி அழுகி நெக்கு விட்டுப்போன அந்தப் பிரேதம் கரையில் சதா மோதிக் கொண்டிருந்தது.
 

காகங்கள் அதன் கண்களைத் திறந்து தின்று தீர்த்துவிட்டன. இன்னும் அதன் நாற்றம் 'வெடில்' அந்த ஊரை உசுப்பிவிட்டுக் கொண்டுதானிருந்தது.
 

'பாவம்! நாலு வருடங்களுக்குமுன், அடைக்கலமாதா கோயிலில் அவனைத் தன்நாயகனாகச் சத்தியப்பிரமாணம் செய்து ஏற்றுக்கொண்ட மேரியைக்கூடத் தவிக்கவிட்டு அவன் செத்துப்போய்விட்டான்.'
 

Wednesday, 18 March 2020

தண்ணீர்த் தாகம் - க.சச்சிதானந்தன் (ஆனந்தன்)
பங்குனி மாதம் வெயில் மிகவும் காய்தலாக அடித்துக்கொண்டிருந்தது. றோட்டில் அவ்வளவு நடமாட்டமில்லை. தூரத்தில் மாத்திரம் ஒருவன் குடை பிடித்துக்கொண்டு வியர்க்க விறுவிறுக்கத் தார் றோட்டில் அவசரமாய்ப் போய்க் கொண்டிருந்தான். அதற்கப்பால் ஒரு கட்டைவண்டி 'கடா கடா' என்று ஆடிஆடி வந்து கொண்டிருந்தது. பன்னிரண்டு மணி வெளியே யாரும் தலை காட்டவில்லை. பகல் முழுவதும் வெயிலிலே திரியும் நாய்கூட சுவரோத்தில் கிடந்தசிறு நிழலில் இளைத்துக் கொண்டிருந்தது. அவ்வளவு உக்கிரமான வெயில், பலர் பகலுறக்கம் போட்டார்கள். சிலர் புழுக்கம் தாளாமல் தவித்தார்கள். செட்டியார் புதினப் பத்திரிகையோடு தூங்கி வழிந்துகொண்டிருந்தார். 

Monday, 9 March 2020

தலைமுறை தாண்டிய தரிசனங்கள்குவீன்ஸ்லாந்து தமிழ்மன்றம் நடத்திய சிறுகதைப்போட்டியில் முதல் இடம் பெற்றது (2019)

பல்கலைக்கழகத்தின் கிழக்குப்புறப் படிக்கட்டுகளின் ஒரு அந்தத்தில், புத்தகங்களைப் பரப்பியபடி காத்திருந்தாள் கரோலின். கரோலின் அவுஸ்திரேலியா நாட்டு வெள்ளை இனத்துப் பெண். மருத்துவம் பயில்வதில் மூன்றாம் ஆண்டில் இருந்தாள்.

அடோனி அவளைக் கடந்து போகும் தருணங்களில் தன் வசம் இழந்து விடுவாள். புத்தகத்தைச் சற்றுக் கீழ் இறக்கி, மாரளவில் பிடித்துக்கொண்டு, கடைக்கண்ணால் ஒருதடவை அவனைப் பார்ப்பாள். ‘ஏதாவது கதையேன்’ என்பது போன்று அந்தப் பார்வை இருக்கும். அடோனி ஒரு அபொறியினல், திருடப்பட்ட தலைமுறையைச் சார்ந்தவன். மேற்கு அவுஸ்திரேலியாவில் இருந்து படிப்பதற்காக மெல்பேர்ண் வந்திருந்தான்.

இப்படித்தான், அன்று அடோனி அவளைக் கடந்து செல்கையில், திடீரென கரோலின் தன் இருப்பை விட்டு எழுந்து நின்று புன்னகைத்தாள். எத்தனை நாள் தான் கடைக்கண்ணால் வெட்டுவது? அடோனி பயந்தே போய்விட்டான். பளிங்குக்கண்கள், மெல்லிய கீற்றுப் போன்ற புருவங்கள், கூரிய நாசி, காற்றிலாடும் பறவையின் மெல்லிய பொன்நிற இறகுகளாகக் கூந்தல், பரிதிவட்டம் போன்றதொரு ஓலைத்தொப்பி. ஏதோ ஒரு பெயர் தெரியாத சென்றின் நறுமணம் ஒன்று அவளிடமிருந்து பிரிந்து வந்து அவனைச் சூழ்ந்து கொண்டது. இவை எல்லாமுமாகச் சேர்ந்து அவனைப் பொறி போல அப்பிக் கொண்டது. அதுவே அவர்களின்  மூச்சு முட்டும் தூரத்திற்குள்ளான முதல் அறிமுகம்.

Sunday, 1 March 2020

கிழவி வேடம் – குறும் கதை


அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நதி மீது, திடீரென ஒரு பொருள் குறுக்காக எழுந்து நின்றால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அங்கே.

ஐயர் மந்திரங்கள் ஓத திருமணம் நடந்து கொண்டிருந்தது. வட்ட வடிவமான மேசைகளில் அமர்ந்திருந்து பல வகை உணவுகளைப் புசித்தும், பலவிதமான கதைகளப் பேசிக் கழித்தும் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தினரிடையே திடீரெனப் பிரசன்னமானார் இராசப்பு. பெயரில் தான் `அப்பு’ இருக்கின்றதேயொழிய அவருக்கு வயது ஐம்பதிற்குள் தான்.

மணவிழாவின் கண்கொள்ளாக் காட்சியை நேரிலும், சுவர் வழியே தொங்கிக் கொண்டிருக்கும் எல்.சி.டி ஊடாகவும் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் கண்கள், சிவபூசையில் புகுந்த கரடி மீது குவிந்தன.

Saturday, 29 February 2020

தூரத்தில் தெரிகிறது - சிசு.நாகேந்திரன்                இயமன் தூரத்திலிருந்துகொண்டே என்மேல் கண் வைத்துவிட்டான்.  ஆனால் அந்தத் தூரம்தான் எவ்வளவு என்று எனக்குத் தெரியவில்லை. தனது நாட்குறிப்பை எடுத்து அடுத்து எந்தெந்தத் திகதிகளில் யார்யாரின் முறை வருகிறது என்று புரட்டிப்புரட்டிப் பார்ப்பது தெரிகிறது.

Friday, 28 February 2020

மனிதன் கடவுளைப் படைத்தான் ! - சிசு.நாகேந்திரன்
பகுதி (3)

க் தி வழிபாடு
சக்திஎன்றால் (ஆங்கிலத்தில்) Energy
Potential energy - அடங்கியிருக்கும் சக்தி
Kinetic energy -  வெளிப்பட்ட சக்தி
சக்தியில்லாமல் உலகமோ, உலகிலுள்ள எந்த சீவராசிகளோ, பஞ்சபூதங்களோ எதுவும்  இயங்கமாட்டா.  ஒலி, ஒளி, வெப்பம், குளிர், மின்சாரம், மின்னணு, காந்தம்,  இணையம், சுழற்சி, இறுக்கநிலை  இவைகளெல்லாம் சக்தியின் ஒவ்வொரு விதமான வெளிப்பாடுகளேயாம். 
சிவபெருமான்கூட தனது சக்தியின் மூலமாகத்தான் படைத்தல், காத்தல், அருளல்,  மறைத்தல், அழித்தல் என்னும் ஐந்தொழிலையும் செய்கின்றார் என்கிறது சமயம். 

Thursday, 27 February 2020

மனிதன் கடவுளைப் படைத்தான் ! - சிசு.நாகேந்திரன்பகுதி (2)

இஸ்டதெய்வ வழிபாடு
இவ்வுலகில் மானிடனாகப் பிறந்த எவரும் தமது வாழ்க்கையில் துன்பம், கஸ்டம், துக்கம் முதலியவற்றை அனுபவிக்க விரும்புவதில்லை. மனிதர்கள் தமது வாழ்நாள் முழுவதும் சுமுகமான, இன்பமான வாழ்க்கையையே எதிர்பார்க்கிறார்கள்.

அத்தோடு, மறுபிறவியில் நம்பிக்கை ஊன்றியிருக்கும் இந்துமதம் போன்ற சமயங்களைச்    சார்ந்தவர்கள் தங்களுக்கு இப்பிறப்பில்மட்டுமல்ல, வரும் மறுபிறவிகளிலும்கூட நோய்நொடியற்ற சுபீட்சமான வாழ்வு கிடைக்கவேண்டுமென்பதற்காகவே  இப்பிறப்பில் தீவினைகள், பாபச்செயல்கள் முதலியவற்றைத் தவிர்க்கின்றார்கள்.

Wednesday, 26 February 2020

மனிதன் கடவுளைப் படைத்தான் ! - சிசு.நாகேந்திரன்


(பகுதி 1)

மனித முயற்சிக்கு அப்பாற்பட்டது
ஆதிகாலத்து மனிதனுக்கு அன்றாட தேவைகள் மிகவும் குறைவாகவே இருந்தன. அவற்றுள் முக்கியமானவை உணவு தேடி உண்பதும், ஆண்பெண் உறவுமாகும். இவைகளோடு அவனது வாழ்நாட்கள் கழிந்தன.
அன்றாடத் தேவைகளை வெற்றிகரமாகக் கையாளுகிறோம் என்று அவன் திருப்தியடைந்திருந்தான்.
வேறு தேவைகள் ஏற்படாதவரையும் அவன் வேறெதையும்பற்றிச் சிந்திக்கவில்லை.
ஆனால், காலப்போக்கில், தனது அன்றாட தேவைகள் உணவோடும் உறவோடும் நின்றுவிடவில்லை என்பதையும், மேலும் பல தேவைகளும் ஆசைகளும் மனிதகுலத்துக்கு உண்டு என்பதையும் அனுபவரீதியாக உணரத்தொடங்கினான். அதனால், படிப்படியாக அவனுடைய  தேவைகளும் ஆசைகளும் விரிவடைந்த அவனுடைய முயற்சிகளும் பலதரப்பட்டவையாகப்  பரிணமித்தன.

Tuesday, 25 February 2020

நான் பிள்ளைத்தாச்சி - சிசு.நாகேந்திரன்நான் தலைப்பிள்ளைத்தாச்சி.

நான் திருமணமாகினவள்.  ஆதலால் நான் பிள்ளைத்தாச்சி எண்டு சொல்லுறதிலை வெக்கமில்லை.  ஆனால் எனக்குக் கலியாணமாகி (ஆறு) வருசம்.  இப்பதான் பிள்ளைப்பாக்கியம் கிடைச்சிருக்குது.  அதுவும் பிள்ளைவேண்டி நாங்கள் வேண்டாத தெய்வம் ல்லை. என்ரை புருசன் ஒஸ்ரேலியாவிலை (8) வருசமாயிருந்தவர்.  என்னைக் கலியாணங்கட்டி கொண்டு வரேக்கையே சொன்னவர், “வெளிநாடுகளிலை மனிசன்ரை வாழ்க்கை யந்திர வாழ்க்கை.  நாள் முழுவதும் பிசியாயிருக்கவேணும் எண்டது ஒரு கட்டாயம்.   விடிய எழும்பி வேலைக்கு ஓடுறது.  வேலை முடிஞ்சு வீட்டைவாற வழியிலை கடைத் தெருவிலை சொப்பிங் செய்து கொண்டு வரவேணும்.  வந்த களைப்போடை தேத்தண்ணி போட்டுக் குடிச்சுப்போட்டு உடனை சமையல் துவங்கவேணும்.  இடைக்கிடை Take away எடுக்கலாம் தான். நாக்குக்கு ருசியாயிருக்கும்,  ஆனால் அடிக்கடி அது வாங்கக் கட்டுபடியாகாது.  சுகாத்தியத்துக்கும் நல்லதல்ல.   சனி ஞாயிறுகளிலும் வேலைதான்.  வேலையெண்டால், பெரிய சமையல் செய்யிறது அப்பதான்.  அதோடை உடுப்புகள் தோய்ச்சுக் காயவிடுகிறது, வீடு வாசல் சுத்தப் படுத்துகிறது, சிநேகிதரைக் காணப்போறது, கூட்டங்களுக்குப் போறது, படம் பாக்கிறது - இப்பிடி பல சோலியளும் சனி ஞாயிறிலைதான் நடக்கும். அப்ப, தினமும் இடைவிடாத வேலைதான்.

Sunday, 23 February 2020

மனிதன் - அணுவா அல்லது அண்டமா? - சிசு நாகேந்திரன்            நாம் நிறைவேற்றமுடியாத ஆசைகள், எண்ணங்கள், கற்பனைகள்தாம் பின்னர் கனவில் தோன்றும் என்று சொல்வார்கள்.  அவர்கள் கூறுவதில் உண்மை இல்லாமலில்லை.  கனவோ கற்பனையோ என்று கூற முடியாத அளவுக்கு எனக்கு ஒரு அனுபவம் உண்டாயிற்று.

            வெளி முற்றத்தில் மல்லாக்கப் படுத்திருக்கிறேன்.  நித்திரை கொள்ளவில்லை.  மூளை வேகமாக வேலைசெய்தது.  கற்பனை கரை புரண்டு ஓடிற்று.  என்னுடைய உடலை அப்படியே கிடக்க விட்டு விட்டு, நான் (சூக்குமதேகம் - உயிர்) மேல்நோக்கிக் கிளம்பிவிட்டேன்.  மிக வேகமாக, சத்தத்திலும்பார்க்க வேகமாக, மேல்நோக்கிப் போய்க்கொண் டிருக்கிறேன். 

Friday, 21 February 2020

வாழ்க்கை என்பது என்ன? கனவா அல்லது நாடகமா? - சிசு நாகேந்திரன்         உலகமே ஒரு நாடகமேடை.  அதில் நாமெல்லோரும் நடிகர்கள். பூமி என்னும் மேடையில் ஒவ்வொருவரும் வெவ்வேறு வேடம் தரித்துக்கொண்டு தங்கள் தங்கள் பாத்திரங்களைச் செவ்வனே நடித்துவிட்டுப் போகிறார்கள். இந்த நாடகத்துக்கு ஒத்திகையில்லை.  நடிகர்களின் ஒப்பனையை இயற்கையே செய்து விடுகிறது. முன்னறிவிப்பின்றித் தோன்றி, தத்தம் பாத்திரங்களைத் திறம்பட நடித்துவிட்டு நடிகர்கள் மறைந்துவிடுகிறார்கள். உலக நாடகமேடையில் எல்லோருமே நடிகர்கள்.  பார்வையாளர்களும் அவர்களே!  வேறாக பார்வையாளர்கள் என்றில்லை.

Tuesday, 18 February 2020

வாழ்க்கைப் பாலம் - சிசு நாகேந்திரன்ஒரு நீண்ட பாலம். அது மிகவும் அகலமானது. அந்தப்பாலத்தின்கீழ் பெரிய ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.  பாலத்தின் தொடக்கத்தையும் முடிவையும் அறியமுடியாதபடி இரண்டு எல்லைகளையும் கருமுகில் மறைத்துக்கொண்டிருக்கிறது.

பாலத்தினூடாக சனங்கள் நிறையப்பேர் போய்க்கொண்டிருக்கிறார்கள். சிலர் நடந்துகொண்டும், சிலர் ஓடிக்கொண்டும், துள்ளி விளையாடிக்கொண்டும், வேடிக்கை பார்த்துக்கொண்டும் போவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.  அவர்களில் ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், முதியவர்கள், ஏழைகள், பணக்காரர்கள், வெவ்வேறு சமுதாயத்தினர், வேறுவேறு இனத்தவர்கள் என பலதரப்பட்ட மக்கள் அப்பாலத்தின் மேல் போய்க்கொண்டிருக்கிறார்கள்.

Tuesday, 11 February 2020

ஒட்டமோ ஓட்டம்அந்தத் தொழில்நுட்பக் கல்லூரியின்  இரண்டு வாசல்களும், இரண்டு வீதிகளைத் தொட்டு நின்றன. பிரதான வாசலின் முன்னால் வந்து நின்ற பேரூந்தில் இருந்து – சாயினியும், அவளது மூத்த அண்ணன் கிருபனும், அம்மாவும் அப்பாவும் இறங்கிக் கொண்டனர்.

சாயினி - கறுப்பு என்றாலும் திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு. பளீரிட்டு மார்புவரை கீழ் இறங்கி நிற்கும் `பொனி ரெயில்’. நெற்றியிலே மரூன் கலரில் துலங்கும் ஒரு அரசமிலை ஸ்ரிக்கர் பொட்டு. இரண்டு பெரிய வட்டங்கள் கொண்ட மூக்குக்கண்ணாடி. பள்ளிக்கு உரித்தான எடுப்பான ஆடை.

சாயினிக்கு இன்று கடைசிப் பரீட்சை. அவள் மனதில் பதட்டம். பரீட்சை எழுதுவதில் அவளுக்கு என்றுமே பதட்டம் இருந்ததில்லை. இன்று அவளது வாழ்க்கைக்கும் ஒரு பரீட்சை.

Friday, 7 February 2020

கங்காருப் பாய்ச்சல்கள் (29) - சிண்டு முடிகின்றார்கள்

அவுஸ்திரேலியாவில் அதிகம் சிண்டு முடிகின்றவர்கள் யார் என்று பார்த்தால் – தம் வாழ்நாளில் ஒருபோதுமே உழைத்துச் சாப்பிடாதவர்கள் தான். அவர்களால் காரும் ஓட முடியாது. எப்போதுமே கணவனிடம் (அல்லது மனைவி / பிள்ளைகள்) தங்கி இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாதது என்பதல்ல இதன் அர்த்தம். அவர்கள் குள்ளநரிக் கூட்டங்கள்.

Sunday, 2 February 2020

என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்


“டொக்ரர்…. இன்னுமொரு ஹொஸ்பிற்றலுக்குப் போய், செக் பண்ணிப் பார்த்தால் என்ன?” எதிரே இருந்த குடும்ப வைத்தியர் கருணாகரனிடம் கேட்டுவிட்டு, தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தாள் கமலா. கொஞ்ச நாட்களாக அவள் மனம் பதை பதைக்கின்றது. சரியாக உறக்கம் கொண்டு நாளாகிவிட்டன. திடீர் திடீரென உறக்கம் கலைந்து, எதையோ பறிகொடுத்தது போல யோசனைகள். வாழ்வின் சமநிலை குலைந்து மனம் அந்தரித்தபடி இருக்கின்றது.

அவுஸ்திரேலியாவிற்கு வந்த நாள் தொடக்கம், வைத்தியர் கருணாகரன் தான் இவர்களின் குடும்ப வைத்தியர். அவளுக்குப் பக்கத்தில் பன்னிரண்டு வயதில் மகளும், எட்டு வயதில் மகனும் இருந்தார்கள். இருவரும் தமது கைகளை முழங்காலுக்கு மேல் படரவிட்டபடி நிறுதிட்டமாக அமர்ந்திருந்தார்கள்.

வைத்தியர் கருணாகரன் நெடிதுயர்ந்த தோற்றம் கொண்டவர். மருத்துவத்துறையில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர். சற்றே வயிறு துருத்திக் கொண்டிருந்தாலும் கம்பீரத்திற்குக் குறைவில்லை. குழந்தைகள் இருவரும் தமது கழுத்தை உயர்த்தி வலிக்கும் வண்ணம், வைத்தியர் முகத்தைப் பார்த்தபடி இருந்தார்கள். வைத்தியர், கமலாவின் கேள்விக்கு பதில் தராமல், புத்தகமொன்றை எடுத்து பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“ரவுன்லை நீங்கள் போனதுதான் நல்ல ஹொஸ்பிற்றல். அவர்கள் என்ன சொல்கின்றார்கள்? திரும்பவும் எனக்குச் சொல்லுங்கள்!” புத்தகத்தினின்றும் கண்ணை விலத்தாமல் கேட்டார் கருணாகரன்.

Wednesday, 22 January 2020

"ஆஸ்திரேலியா - பல கதைகள் 2019" கதைப்போட்டி முடிவுகள்

அனைவருக்கும் வணக்கம்,


குயீன்ஸ்லாந்து தமிழ் மன்றம் நடத்திய 2019 ஆண்டுக்கான 'ஆஸ்திரேலியா பல கதைகள்' சிறுகதைப்போட்டிக்கு,
பெரியவர்கள் பிரிவில் 13 கதைகளும்,
இளையவர்கள் பிரிவில் 12 கதைகளும் வந்திருந்தன.

இதில் பெரியர்வர்கள் பிரிவில் நான்கு கதைகளுக்கும், இளையவர்கள் பிரிவில் 10 கதைகளுக்கும், பரிசுகள் வழங்கப்படுகின்றன.


பெரியவர்கள்


சிறப்புப் பரிசு: பெறுபவர் "சரசன்" எனும் ராஜப்பா


முதல் பரிசு: சுதாகரன் செல்லதுரை; கதை: தலைமுறை தாண்டிய தரிசனங்கள்

இரண்டாம் பரிசு: சியாமளா யோகேஸ்வரன்; கதை: நட்பும் ஒரு வரமே


மூன்றாம் பரிசு: சோழன்; கதை: நிழலா நிஜமா?

Sunday, 12 January 2020

ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக் குறிப்புக்கள்


 

இந்த வருடம்(2019) கனடா சென்றபோது எல்லாளன் ராஜசிங்கம் அவர்களைச் சந்தித்திருந்தேன். அவர் எழுதிய `ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக் குறிப்புக்கள்’ நூலை ஏற்கனவே வாசித்திருந்தேன். முன்னணி வெளியீடாக 2015 ஆம் ஆண்டு   வந்திருந்தது. அந்தப் புத்தகம் பற்றிய உரையாடல் வந்தபோது, அவர் அது பற்றி மேலும் சில தகவல்களைக் குறிப்பிட்டிருந்தார். அவர் இந்தியாவை விட்டுப் புறப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்ட போதிலும், அந்தப் புத்தகத்தின் மூலம் அவருடைய பழைய நண்பர்கள் மீண்டும் இணைந்துள்ளார்கள்  என்ற செய்திதான் அது. ஒரு புத்தகம் அந்த வேலையைச் செய்திருக்கின்றது என்றபோது மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது. தமிழீழப்போராட்டம் பற்றி பலரும் புத்தகங்கள் எழுதிவிட்டார்கள். சில சச்சரவை ஏற்படுத்தின. சில வரவேற்பைப் பெற்றன. எதுவாக இருப்பினும் அவை ஒவ்வொன்றும் அவர்களின் அனுபவம் சார்ந்த வெளிப்பாடுகள், கற்றுக் கொண்ட பாடங்கள், வருங்கால மூலதனம், அரசியல் ஆவணம்.

Wednesday, 8 January 2020

வேர்களைத் தேடும் விழுதின் பயணம்


பகுதி (2)

இப்படித்தான் மலைக் கிராமமான ஜுஃப்பூரில் இயல்பு  வாழ்க்கை நடத்தி வந்த குண்டா கிண்டே தனது பதினேழாவது வயதில் பிடிபடுகின்றான். காடொன்றில் தனது தம்பிக்கு முரசு செய்வதற்கு மரம் வெட்டிக்கொண்டிருந்த வேளை ஆப்பிரிக்கக் கைக்கூலிகளிடம் அகப்பட்டுக் கொள்கின்றான். ஆண் பெண் பேதமின்றி அடிமையாகப் பிடிக்கப்பட்டவர்களை அம்மணமாக்கி - உடல் உறுப்புக்களைப் பரிசோதித்து – மாட்டுக்கு குறி சுடுவது போல நெருப்பினால் அடையாளமிட்டு கப்பலில் ஏற்றினார்கள். சொற்ப உணவு, சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட வாழ்க்கை. பாலியல் வல்லுறவு, தமது மலசலத்தின் மேலே இருப்பு. மனதைப் பதற வைக்கும் நான்கரை மாதங்கள் கடல் பயணம். கப்பல் அமெரிக்காவில் உள்ள நேப்பிள்ஸ் என்ற இடத்தைச் சென்றடைந்ததும், அவர்கள். உடல்வாகுக்கு ஏற்றபடி ஏலம் கோரப்பட்டார்கள்.

Thursday, 2 January 2020

போடி மாலன் நினைவு சிறுகதைப் போட்டி முடிவுகள் - 2019


முதல் பரிசு - வியாபாரிகள் – அரும்பாவூர் இ.தாஹிர் பாட்சா
இரண்டாம் பரிசு : தப்பு தான் – சத்யானந்தன், சென்னை.
மூன்றாம் பரிசு - நில் – முத்துச்செல்வன்


கூடுதல் பரிசுகள்:
================
1. தேசவிரோதியின் மிஞ்சிய குறிப்புகள் - அ.கரீம், கோவை
2. அவள் ஒரு பூங்கொத்து - தேவகி கருணாகரன், ஆஸ்திரேலியா.


சான்றிதழ் பெறும் கதைகள்:
====================
1. தாய்க்கோழி - சோ.சுப்புராஜ், சென்னை.
2. விவசாயி கனவு - பா. ஏகரசி தினேஷ், திருச்சி
3. மனசு – தங்கேஸ், சின்னமனூர்.
4. கடவுளின் சாயல் - ஐ.கிருத்திகா, திருச்சி.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்,
தேனி மாவட்டக்குழு.

Wednesday, 1 January 2020

வேர்களைத் தேடும் விழுதின் பயணம்
பகுதி (1)

ஒருமுறை நண்பன் ஒருவனுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது, அவன் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டினான். தனது மகன் பாடசாலையில் `ஃபமிலி றீ’ பற்றி ஒரு செயல்திட்டம் செய்வதாகவும், தன்னுடையதும் மனைவியினதும் இரண்டாவது பரம்பரைக்கு அப்பால் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாகவும் கவலை கொண்டான்.

“உனது குடும்பத்தில் எந்த எல்லை வரை உன்னால் சொல்ல முடியும்?” திடீரென என்னிடம் கேட்டான் அவன். குடும்பத்தின் ஆணி வேரைக் கண்டிபிடித்து விடவேண்டும் என்பதில் அவனது ஆர்வம் உச்சத்துக்கே சென்றுவிட்டதை அவதானித்தேன். அமைதியாக மனதை ஒருநிலைப்படுத்தி நானும் என் குடும்பத்திற்குள் பயணித்தேன். மூன்றாவது பரம்பரைக்கு அப்பால் என்னால் நகர முடியவில்லை.

இந்த உரையாடலின் பின்னர், இதுவரை காலமும் வாசிப்பதற்கு பின் போட்டுவந்த அலெக்ஸ் ஹேலியின் `வேர்கள்’ நாவலைக் கையில் எடுத்தேன். `எதிர் வெளியீடாக. வந்திருக்கும் இந்த நாவலை 2018 இல் இந்தியா சென்றபோது வாங்கியிருந்தேன். இந்தப் புத்தகத்தின் பருமன் தான் இத்தனை நாளும் என்னை வாசிப்பதற்குப் பயம் காட்டியிருந்தது. ஏறக்குறைய 910 பக்கங்கள். எல்லாவற்றையும் புறம் தள்ளி ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். பொன். சின்னத்தம்பி முருகேசனின் அழகு தமிழ் என்னை அசைய விடாமல் கட்டிப் போட்டிருந்தது.