Wednesday, 24 July 2019

வட இந்தியப் பயணம் (4)


4.
அடுத்தநாள் வியாழக்கிழமை அதிகாலை 6 மணியளவில் ஜெய்ப்பூரிலிருந்து புறப்பட்டு, 9.30 மணியளவில் ஃபத்தேப்பூர் சிக்ரி (Fatehpur Sikri) என்னுமிடத்தை அடைந்தோம். ஜெய்ப்பூரைச் சுற்றிக்காட்டிய சுற்றுலா வழிகாட்டி அங்கேயே தங்கிவிட, புதியதொரு சுற்றுலா வழிகாட்டி ஒருவர் இணைந்து கொண்டார். அவர் முன்னையவரைவிட வயதில் மூத்தவரும், நகைச்சுவை மிக்கவருமாக இருந்தார்.

சுற்றிலும் எங்கும் சூனியமாக இருந்தது. அங்கிருந்து ஏழேழு பேர்கள் போகக்கூடிய  வாகனங்கள் எங்களுக்காகக் காத்திருந்தன. அவற்றை `ஜீப்’ என்று அழைத்தார்கள். ஒவ்வொரு ஜீப்பிற்கான கட்டணத்தையும் ஏழு பேர்களும் பங்கிட்டுக் கொண்டோம். ஜீப் வருடம் பூராகப் பயணம் மேற்கொண்டு கிழண்டிப் போயிருந்தது. இருக்கையில் இருந்து சற்றே எழும்பி, மேலே தொங்கும் கம்பி ஒன்றைப் பற்றிக் கொண்டோம். ஜீப் வளைவுகள், சந்து பொந்துகளைத் தரிசித்தபடி மேல் நோக்கிக் கிழம்பியது. ஆக்ரா கோட்டையை அடைந்தோம்.  இடையில் மனிதக் குடியிருப்புகள், கடைகள் எல்லாவற்றையும் பார்க்கக் கூடியவாறு இருந்தது. ஒரு ஜீப்பே போகமுடியாத பாதை இடைவெளியில் எப்படிக் கல், மண்ணைக் கொண்டு சென்று அங்கே கோட்டையை அமைத்தார்கள் என்பது வியப்புக்குரியதாக இருந்தது.

ஃபத்தேப்பூர் சிக்ரி உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ரா மாவட்டத்தில் இருக்கின்றது. ஜெய்ப்பூரிலிருந்து ஏறக்குறைய 200 கி.மீ தூரம். மன்னர் அக்பரால் கட்டப்பட்ட இம்மாநகரம் 1571 முதல்1585 வரை மொகலாயப் பேரரசின் தலைநகராக விளங்கியது.

“மொகலாயப் பேரரசின் கடைசி மன்னன் யார்?” என்று கேள்வியெழுப்பினார் சுற்றுலா வழிகாட்டி.

Friday, 19 July 2019

வட இந்தியப் பயணம் (3)


3.
ஆம்பேர் கோட்டை - ராஜா மான் சிங், மிர்ஷா ராஜா ஜெய்சிங் மற்றும் சவாய் ஜெய்சிங் ஆகிய மன்னர்களால் 200 ஆண்டுகளில் கட்டப்பட்டது.  மூத்தா என்னும் ஏரிக்கரையின் மீது அமைந்திருக்கும் இந்தக் கோட்டை இந்து – மொகலாயர் பாரம்பரியங்களைப் பறைசாற்றுகின்றது. ஜெய்ப்பூர் நகரம் உருவாகுவதற்கு முன்பே இது கட்டப்பட்டுவிட்டது. இங்கே பல அரண்மனைகள், மண்டபங்கள், கோயில் என்பன உண்டு. இக் கோட்டையில் ஷீல் மகால், ஜெய்கர் கோட்டை, கணேஸ் போல் என்பவற்றைப் பார்த்தோம்.

Friday, 12 July 2019

வட இந்தியப் பயணம் (2)
2.
மறுநாள் புதன்கிழமை. ஜெய்ப்பூர், அக்ரா, மதுரா போவதற்காகப் புறப்பட்டோம். பனிக்கர்ஸ் ரவல்ஸ் அமைந்திருக்கும் இடத்திற்கு முன்பாக காலை ஆறு மணிக்கு வரச் சொல்லியிருந்தார்கள். JAIPUR – FATEHPUR SIKIRI – AGRA- MATHURA  இவை அமைந்திருக்கும் பிரதேசத்தை தங்க முக்கோணம் (GOLDEN TRIANGLE) என அவர்கள் அழைக்கின்றார்கள். காலை 5.30 மணியளவில் ஹோட்டலில் இருந்து பொடி நடையாகப் புறப்பட்டோம். இரண்டொரு நாய்கள் படுத்திருந்தபடியே சோம்பலை முறித்துப் பார்த்தன. குரல் எழுப்புவதற்கான வலு இல்லை. ஒருவித மயக்க நிலையில் அவை இருந்தன. சில கேற்றுகள் இன்னமும் மூடப்பட்டிருந்தன. ஒருவாறு 15 நிமிடத்தில் பஸ் புறப்படுவதற்கான இடத்தை அடைந்துவிட்டோம்.


Friday, 5 July 2019

வட இந்தியப் பயணம் (1)


1.

பாங்கொக் / சுவர்ணபூமி எயாப்போட்டின் ஊடாக, மெல்பேர்ணில் இருந்து புறப்பட்ட பயணம், பதின்மூன்றரை நேரப் பறப்பின் பின்னர் டெல்கியை அடைந்தது. டெல்கி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் திரு.பிரதாப் சிங் எமக்காகக் காத்து நின்றார். `தாய்’ விமானத்தில் பயணம் செய்த களைப்பே தெரியவில்லை. நேரம் அப்போது செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30.

நியூ டெல்கியில், கரோல் பா நகரில் அமைந்துள்ள Wood Castle  Hotel இல் தங்குவதற்கான ஏர்பாடுகளை ஏற்கனவே செய்திருந்தோம். ஒரு வாரம் அங்கு தங்கியிருந்து சுற்றிப் பார்ப்பது எனத் திட்டமிட்டிருந்தோம். எயாப்போட்டில் ரக்‌ஷி ஓட்டுனர்களின் கெடுபிடிகளை ஏற்கனவே அறிந்திருந்ததனால், ஹோட்டல் மூலமாகவே ஒரு சாரதியை ஒழுங்கு செய்திருந்தோம். அவர் தான் திரு பிரதாப் சிங். மூன்று பேர்களுக்கு என ஹோட்டல் பதிவு செய்திருந்ததால், அவர்கள் மூன்று பேர்களின் பொதிகளைச் சுமந்து வருவதற்காக பெரியதொரு வாகனத்தை ஒழுங்கு செய்து தருவதாகச் சொல்லியிருந்தார்கள். இருப்பினும் திரு பிரதாப் சிங்கின் காருக்குள் எல்லாப் பொதிகளையும் வைக்க முடியவில்லை. காரின் மேலே ஒரு பொதி உட்கார்ந்திருந்தது.
எயாப்போட்டில் எல்லாரும் வெள்ளைப் பேப்பர்களில் பெயரை எழுதித் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தவேளை, எமது வாகனச் சாரதியை எப்படிக் கண்டுபிடிப்பது என்று திண்டாடினோம். ஒருவர் மாத்திரம் ‘பிங்’ நிறப் பேப்பரில் பெயரை எழுதியபடி தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தார். 

Monday, 1 July 2019

எனக்குப் பிடித்த சிறுகதைகள் (10)


நள்ளிரவு 

அ.ந.கந்தசாமி
 

‘நான் நாளைக்கு ஜெயிலுக்குப் போகிறேன்’ என்றான் அவன் சர்வதாரணமாக.அவன் பேச்சிலே துக்கமோ, துயரமோ, அல்லது ஏக்கத்தின் ரேகைகளோ தென்படவில்லை. அமைதியாகவும் ஒருவித விரக்தியோடும் பேசினான் அவன். என் மனதிலே சுந்தராம்பாள் பாடிய ‘சிறைச்சாலை ஈதென்ன செய்யும்’ என்ற பாடல் ஞாபகத்திற்கு வந்தது. அந்தப்பாட்டிலே கூறப்பட்ட ‘சரீராபிமானமற்ற ஞான தீரரில்’ இவன் ஒருவனோ என்று என்னுள் நானே கூறிக்கொண்டேன். ஆனால் அவன் பேச்சில் விரக்தி மட்டுமல்ல ஒருவித ஆனந்தம்கூட அலை வீசியது. ஜெயிலுக்குப் போவதற்கா இவ்வளவு தூரம் சந்தோசப்படுகிறான் என்று எண்ணினேன் நான்.என்னுடன் பேசிய ‘அவன்’ ரொம்பக்காலம் என்னுடன் பழகியவன் அல்ல. அன்றுதான் அகஸ்மாத்தாக அவனைச் சந்தித்தேன். இரவு சினிமாவில் இரண்டாவது ஆட்டம் பார்த்துவிட்டு தன்னந்தனியாக கொழும்பு நகரில் எனது அறையை நோக்கி வந்துகொண்டிருந்தேன். அப்போழுது திடீரென எங்கள் நட்புக்குதவியாக மழை பொழிய ஆரம்பித்தது. நான் ஓடோடிச் சென்று, மெயின்ஸ்ரீட்டும், பூந்தோட்ட வீதியும் சந்திக்கும் இடத்தில் உள்ள கட்டடத்தில் ஒடுங்கிக்கொண்டேன். பழைய கிறீஸ்தவ தேவாலயங்களைப் போல் பிரமாண்டமான வளைவுகள் உள்ள வராந்தாவுடன் கூடிய இக்கட்டடத்தைப் பல தெருத்திகம்பரர்கள் தமது திருப்பள்ளிக்கு உபயோகப்படுத்திக் கொள்வது வழக்கம் என்பதை அப்படி ஒதுங்கியபோதுதான் தெரிந்துகொண்டேன்.