Tuesday 31 March 2020

இரத்தம் – சிறுகதை




மு.தளையசிங்கம்

‘இன்னும் இந்தப் பு… அவங்கட…. ஊ… போறாங்கள்!”

சோமு, ஒருக்கால் கூனிக் குறுகினன். உள்ளத்தாலும் உடலாலும் எல்லாவற்றாலும் ஒரு கணம் தடுக்கி விழுந்துவிட்டது போன்ற ஒரு நிலை. ஒரு கணத் திகைப்புக்குப்பின் அவனை அறியாமலேயே அவன் அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டான். வேறு யாரும் அங்கு இருக்கவில்லை. தூரத்திலும் யாரும் வரவில்லை. அது அவனுக்கு ஒரு வகை நிம்மதியைக் கொடுத்தது. ஆனல் அது அந்தத் தடுக்கலின் நோவை, விழுந்தெழும்பியதினுள் ஏற்பட்ட வெட்கத்தைத் தனியே அனுபவிக்கத் தான்.

Monday 30 March 2020

சத்திய போதிமரம் - சிறுகதை


 




கே.கணேஷ்

அன்று திங்கட்கிழமை ஆனதால் பஸ்ஸில் அதிகமான நெருக்கடி. சந்தை நாளானபடியாலும் ‘கோடு கச்சேரி’ என்று போனவர்கள் நிறைந்திருந்தபடியாலும் பஸ் நிறைய ஜனங்கள் இருந்தனர். சட்டப்படி முப்பதிரண்டு பிரயாணிகள் ஏற்றப்படவேண்டிய பஸ்ஸில் எழுபத்திரண்டு பிரயாணிகளாவது ஏறியிருப்பார்கள். ஒரு ஆசனத்தில் இரண்டு பேர்தான் உட்கார வேண்டியது. ஆனால் மூன்று பேரை அமர்த்தி இருந்தான் கண்டக்டர். என் பக்கத்தில் அமர்ந்திருந்த பால்கார கிரிபண்டாவோ இரட்டைநாடி ஆசாமி. மூன்று பேர் அமர்ந்ததும் என்பாடு சிரமமாகிவிட்டது. நெருக்கிப் பிடித்துக்கொண்டு ஒருவகையாக உட்கார்ந்தோம். பஸ்ஸும் புறப்பட்டுச் சென்றது. பாதித் தூரத்திற்குக் கிட்டத்தட்ட வந்திருக்கும். எவனோ ஒருவன் சைக்கிளில் சென்றவன், சைகை காட்டிவிட்டுச் சென்றான். ‘பொலிஸ்காரர்கள் இருக்கின்றார்கள்’ என்பதுதான் அதன் பொருள். டிரைவர் உடனே பஸ்ஸை நிறுத்தி பிரயாணிகள் எல்லோரையும் உட்கார வைக்கத் தொடங்கினான். இரண்டுபேர் உட்கார வேண்டிய இடத்தில் நான்குபேரை உட்கார வைக்கும் சிரமமான காரியத்தில் ஈடுபட்டான் கண்டக்டர். வெளிப்பார்வைக்கு ‘ஓவர் லோடா’கத் தோன்றாமலிருக்கும் என்பது அவன் எண்ணம். மீண்டும் பஸ் புறப்பட்டது.

Saturday 28 March 2020

வெள்ளம் – சிறுகதை


 

இராஜ.அரியரட்ணம்

மின்னல் மின்னி இடியிடித்தது. தொடர்ந்து நிகழ்ந்த ஊழிக்கூத்தைப் படம் பிடிக்க வேண்டியதில்லை. இப்படித்தான் வானம் பார்த்து நிற்கும் யாழ்ப்பாணத்தில் இருந்தாற்போல் இருந்து வெள்ளம் வரும். ஒரு கலக்குக் கலக்கும்.  மக்களை அல்லோல கல்லோலப்படுத்திவிட்டு  அகப்படுகிற எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போய்விடும்.

சிங்கப்பூர் பணத்தில் முளைத்த கல்வீடுகள் நிமிர்ந்து நிற்கும். ஏழை மக்களின் குடிசைகளைச் சின்னாபின்னமாக்கித் தலைசாய்க்க இடம் இல்லாமற் தவிக்கச் செய்துவிடும். கல்வீடுகளில் இருந்த பணக்காரர்களையும் அந்தமுறை வந்த வெள்ளம் பீதிகொள்ளச் செய்துவிட்டது.

இத்தனைக்கும் கந்தப்பருடைய குடிசை அசையவில்லை. திடற்பூமி. வெள்ளம் வந்தாலும் எங்கேயோ ஓடி மறைந்துவிடும்.

Thursday 26 March 2020

பாதிக் குழந்தை - காதர் மொகைதீன் மீரான் ஷா (பித்தன்)


 






“உலகமெல்லாம் தேடினேன். ஒரு மனிதனைக் கூடக் காணவில்லை!” என்று யாராது சொன்னால், அவனைப் பைத்தியக்காரன் என்றோ, குருடன் என்றோதான் உலம் முடிவு கட்டும். ஆனால், மனிதனைப் போல் அலங்காரம் செய்து கொண்ட பயங்கர மிருகங்கள்தான் உலகத்தில் அதிகம் என்று சொன்னால் அதை யாரும மறுக்க மாட்டார்கள்.

நல்ல பாம்பு என்று சொல்வதனால் அதனிடம் விஷம் இல்லை என்று சொல்ல முடியுமா? அது பாம்பு, மனிதன் ஏன் படமெடுத்து ஆடுகிறான்? இதுதான் இன்றைய உலகத்தால் முற்றுப்பெறாமல் விடப்பட்ட வசனம், அல்லது வசனம் முடிவு பெறாத முற்றுப்புள்ளி. இது ஆண்டவனுக்குப் புரியவில்லை. மனிதர்கள் எப்படி விளங்கிக் கொள்ளப் போகிறார்கள்?

ஏன் மனிதனுக்குப் பகுத்தறியும் தன்மை கிடையாதா? விஷத்தை விடக் கொடியவர்கள் மனிதன் என்ற போர்வையில் நடமாடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறானே! ஏன் உலகம் அத்தகையவர்களை மதித்து மரியாதை செய்கிறதே ஏன்…?

Tuesday 24 March 2020

தேர் - எஸ்.பொன்னுத்துரை


 





முகத்தார் என்றழைக்கப்படும் ஆறுமுகம் துயிலெழுவது ஒரு திருக்காட்சி. தலையணையையும் போர்வையையும் உட்திணித்துப் பாயைப் பக்குவமாகச் சுருட்டி வைப்பது ஒரு கலை. கொட்டாவியை மறைபொருளெதுவுமின்றி ஊளையிட்டு, கைகளை நீட்டி மடக்கி, உடலை உலுப்பிச் சோம்பலை முறித்தால், துயிலெழு படலத்தின் ஓரம்சம் நிறைவுறும். தலைமாட்டில் நெருப்புப் பெட்டியும், தாவடிப் புகையிலைச் 'சுத்து'ம் எப்பொழுதும் தயாராக இருக்கும். 'சுத்தை' நேர்த்தியாகப் பற்றவைத்தால், கால்கள் தம் இச்சையாகவே கொல்லைப் பக்கம் நடக்கத் தொடங்கும். எப்பொழுது தொடக்கம் வைகறை துயிலெழும் வழக்கத்தை வாலாயப்படுத்திக் கொண்டார் என்பது அவருக்கே ஞாபகமில்லாத சங்கதி.
 

Sunday 22 March 2020

கற்சிலை - நவாலியூர் சோ.நடராஜன்

கல்லிற் கோதிய அந்த உருவம் முடிந்து தன்னெதிரே நின்றதைக் கண்ட கணேசாச்சாரி புன்முறுவல் செய்தான், அக்கற்சிலையின் புன் முறுவல் போல. இந்த முறுவலின் வனப்புத்தானென்ன! புதிதாய் உலகத்தைக் கண்டு ஆச்சரியமடையும் குழந்தையின் அப்பழுக்கில்லாத தூய உள்ளத்திலிருந்து எழும் மனோரம்மியமான புன்முறுவல் போன்றது. என்ன பூரணமான அமைவு, விஸ்வகர்மாவும் செய்யமுடியாத கற்சிலை! “என் உள்ளக் கோவிலில் இத்தனை காலமாகக் கண்ணாம்பூச்சி விளையாடிக்கொண்டிருந்த என் இலட்சியம் இன்றே இக் கல்லில் அமைந்தது” தன் வாழ்க்கையின் நோக்கமெல்லந் திரண்டு சிற்றுளி மூலம் திவ்வியமாயன உருப்பெற்ற அச்சிலை முன் கணேசாச்சாரி தெண்டனிட்டு அஞ்சலி செய்தான். சந்தோஷத்தினால் தன்னை மறந்து ஆனந்தக் கூத்தாடினான். இளமை முழுவதும் அவன் மனதில் தாண்டவமாடிய பல்வேறு உணர்ச்சியின் வரலாறுகள் போல அச்சித்திரசாலையெங்கும் சலவைக்கல்லிற் சமைந்த உருவங்கள் கிடந்தன. அந்தோ அந்த வாசற்கதவண்டை இரண்டு மோகினிச் சிலைகள், உயர உள்ள மரக்கட்டையில் கிருஷ்ணனை நினைந்து அழுங்கும் இராதையின் சாயல். இந்த மூலையில் காமனை எரித்த சங்கரர் நிஷ்டை. அங்கே பர்வத குமாரியின் தவக்கோலம். இவற்றையெல்லாம் தன் மனதில் கர்ப்பமாக்கிக் கையினாற் பிரசவித்த கணேசாச்சாரி தன் சித்திரசாலையில் ஒருவரும் பிரவேசிக்கக்கூடாதெனத் தடுத்துவிட்டான். எனது மனோவிலாசத்துக்கும் உள்ள அமைதிக்கும் ஏற்பட்ட இச்சிற்ப சாலையில் மற்றவர்களுக்கு என்ன வேலை! இதென்ன தாசிகள் வீடா? நாடகசாலையா? இவர்களெதற்காக இங்கே வரவேணும்? இது நூதன சாலையுமல்ல, மிருகசாலையுமல்ல. எனது மனச் சாந்திக்காக நான் செய்யும் விளையாட்டை மற்றவர்கள் பார்த்து அதிசயப்படவும் வேண்டாம். சிரிக்கவும் வேண்டாம்.

Friday 20 March 2020

கடல் சிரித்தது - எஸ்.அகஸ்தியர்



 




மூன்று நாட்களுக்கு முன் அந்தக் கடற்கரையில் முத்து பிணமாகக் கிடந்தான். அந்தச் சடலத்தின் சதைப் பிண்டங்கள் பிய்ந்து போய்க்கிடந்தன.
 

மீன்களின் மாமிச வெறிவேட்டைக்கும், கடல் அலைகளின் முரட்டு மோதல்களுக்கும் ஆளாகி அழுகி நெக்கு விட்டுப்போன அந்தப் பிரேதம் கரையில் சதா மோதிக் கொண்டிருந்தது.
 

காகங்கள் அதன் கண்களைத் திறந்து தின்று தீர்த்துவிட்டன. இன்னும் அதன் நாற்றம் 'வெடில்' அந்த ஊரை உசுப்பிவிட்டுக் கொண்டுதானிருந்தது.
 

'பாவம்! நாலு வருடங்களுக்குமுன், அடைக்கலமாதா கோயிலில் அவனைத் தன்நாயகனாகச் சத்தியப்பிரமாணம் செய்து ஏற்றுக்கொண்ட மேரியைக்கூடத் தவிக்கவிட்டு அவன் செத்துப்போய்விட்டான்.'
 

Wednesday 18 March 2020

தண்ணீர்த் தாகம் - க.சச்சிதானந்தன் (ஆனந்தன்)




பங்குனி மாதம் வெயில் மிகவும் காய்தலாக அடித்துக்கொண்டிருந்தது. றோட்டில் அவ்வளவு நடமாட்டமில்லை. தூரத்தில் மாத்திரம் ஒருவன் குடை பிடித்துக்கொண்டு வியர்க்க விறுவிறுக்கத் தார் றோட்டில் அவசரமாய்ப் போய்க் கொண்டிருந்தான். அதற்கப்பால் ஒரு கட்டைவண்டி 'கடா கடா' என்று ஆடிஆடி வந்து கொண்டிருந்தது. பன்னிரண்டு மணி வெளியே யாரும் தலை காட்டவில்லை. பகல் முழுவதும் வெயிலிலே திரியும் நாய்கூட சுவரோத்தில் கிடந்தசிறு நிழலில் இளைத்துக் கொண்டிருந்தது. அவ்வளவு உக்கிரமான வெயில், பலர் பகலுறக்கம் போட்டார்கள். சிலர் புழுக்கம் தாளாமல் தவித்தார்கள். செட்டியார் புதினப் பத்திரிகையோடு தூங்கி வழிந்துகொண்டிருந்தார். 

Monday 9 March 2020

தலைமுறை தாண்டிய தரிசனங்கள்



குவீன்ஸ்லாந்து தமிழ்மன்றம் நடத்திய சிறுகதைப்போட்டியில் முதல் இடம் பெற்றது (2019)

பல்கலைக்கழகத்தின் கிழக்குப்புறப் படிக்கட்டுகளின் ஒரு அந்தத்தில், புத்தகங்களைப் பரப்பியபடி காத்திருந்தாள் கரோலின். கரோலின் அவுஸ்திரேலியா நாட்டு வெள்ளை இனத்துப் பெண். மருத்துவம் பயில்வதில் மூன்றாம் ஆண்டில் இருந்தாள்.

அடோனி அவளைக் கடந்து போகும் தருணங்களில் தன் வசம் இழந்து விடுவாள். புத்தகத்தைச் சற்றுக் கீழ் இறக்கி, மாரளவில் பிடித்துக்கொண்டு, கடைக்கண்ணால் ஒருதடவை அவனைப் பார்ப்பாள். ‘ஏதாவது கதையேன்’ என்பது போன்று அந்தப் பார்வை இருக்கும். அடோனி ஒரு அபொறியினல், திருடப்பட்ட தலைமுறையைச் சார்ந்தவன். மேற்கு அவுஸ்திரேலியாவில் இருந்து படிப்பதற்காக மெல்பேர்ண் வந்திருந்தான்.

இப்படித்தான், அன்று அடோனி அவளைக் கடந்து செல்கையில், திடீரென கரோலின் தன் இருப்பை விட்டு எழுந்து நின்று புன்னகைத்தாள். எத்தனை நாள் தான் கடைக்கண்ணால் வெட்டுவது? அடோனி பயந்தே போய்விட்டான். பளிங்குக்கண்கள், மெல்லிய கீற்றுப் போன்ற புருவங்கள், கூரிய நாசி, காற்றிலாடும் பறவையின் மெல்லிய பொன்நிற இறகுகளாகக் கூந்தல், பரிதிவட்டம் போன்றதொரு ஓலைத்தொப்பி. ஏதோ ஒரு பெயர் தெரியாத சென்றின் நறுமணம் ஒன்று அவளிடமிருந்து பிரிந்து வந்து அவனைச் சூழ்ந்து கொண்டது. இவை எல்லாமுமாகச் சேர்ந்து அவனைப் பொறி போல அப்பிக் கொண்டது. அதுவே அவர்களின்  மூச்சு முட்டும் தூரத்திற்குள்ளான முதல் அறிமுகம்.

Sunday 1 March 2020

கிழவி வேடம் – குறும் கதை


அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நதி மீது, திடீரென ஒரு பொருள் குறுக்காக எழுந்து நின்றால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அங்கே.

ஐயர் மந்திரங்கள் ஓத திருமணம் நடந்து கொண்டிருந்தது. வட்ட வடிவமான மேசைகளில் அமர்ந்திருந்து பல வகை உணவுகளைப் புசித்தும், பலவிதமான கதைகளப் பேசிக் கழித்தும் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தினரிடையே திடீரெனப் பிரசன்னமானார் இராசப்பு. பெயரில் தான் `அப்பு’ இருக்கின்றதேயொழிய அவருக்கு வயது ஐம்பதிற்குள் தான்.

மணவிழாவின் கண்கொள்ளாக் காட்சியை நேரிலும், சுவர் வழியே தொங்கிக் கொண்டிருக்கும் எல்.சி.டி ஊடாகவும் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் கண்கள், சிவபூசையில் புகுந்த கரடி மீது குவிந்தன.