Tuesday, 26 June 2018

மெல்பேர்ன் வெதர் - நாவல்அறிமுகம்

தனது வீட்டுக் கராஜை அழகு நிலையமாக மாற்றி தொழில் செய்து கொண்டிருந்தாள் அவள்.

ஒருநாள் தாடிக்காரர் ஒருவர் தன்னை அழகுபடுத்த அங்கே வந்தார். அவர் நெடு நேரமாகப் அவளைப் பார்ப்பதும் தலை குனிவதுமாக இருந்தார்.

அவரது முறை வந்தது.

தலைமுடி வெட்டியாயிற்று. தாடியை அழகுபடுத்திக் கொண்டிருக்கும் போது அவள் திடீரென மயங்கிக் கீழே விழுந்தாள். தாடிக்காரர் எழுந்து தலைதெறிக்க ஒட்டம் பிடித்தார்.

வீட்டிற்குள்ளிருந்து கணவனும் பிள்ளைகளும் பதகளிப்பட்டு ஓடி வந்தார்கள். அவர்களும் அழகு நிலையத்தில் இருந்தவர்களுமாகப் அவளைத் தூக்கி அருகே இருந்த செற்றிக்குள் படுக்க வைத்தார்கள். முகத்திற்கு தண்ணீர் தெளித்தார்கள்.

மயக்கம் தெளிந்ததும், பரபரப்பாக சுற்றுமுற்றும் பார்த்தாள் அவள்.

“அவரை ஒன்றும் செய்துவிடாதீர்கள். அவர் எனது முன்னாள் காதலன்” என்றாள் அவள்.

...தொடரும்...

Friday, 22 June 2018

மழையில் நனைந்த உறவு


சிசு.நாகேந்திரன்

“அவனுக்கென்ன, போய்விட்டான். போகும் இடம் சொல்லாமலே போய்விட்டான்.  அரைமணித்தியாலம் சொர்க்க சுகத்தையும், ஐந்துநிமிட இன்பத்தையும் தந்துவிட்டுப்  போய்விட்டான்.  அவனைப்பற்றிய தகவலே இல்லை. அன்று எனக்கு இன்பமூட்டி என்னை ஏமாற்றிவிட்டுப் போனவனை நான் எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது? எங்குதான் சென்று தேடுவது? விலாசமும் இல்லை. பெயர்மட்டும் தெரிந்தால் போதுமா? அவனுடன் தொடர்புகொள்வதுதான் எப்படி? ஒருவேளை பெயரும் உண்மையான பெயராக இருக்குமோ, என்னவோ!”

நந்தினி வேதனையுடன் மனம்புழுங்கிக்கொண்டு இடிந்துபோய், திண்ணைக் கப்புடன் சாய்ந்துகொண்டு, மடித்த முழங்கால்களுக்கிடையில் தலையை முட்டுக் கொடுத்தபடி, அழுது வடிந்துகொண்டிருந்தாள்.   அவளின் உள்ளத்தில் ஏக்கம் நிறைந்த எண்ணங்கள் மேலும் ஓடிக்கொண்டிருந்தன. ……

“இளம் பெண்ணாக, அதுவும் கன்னித்தன்மையைப் பறிகொடுத்த துர்ப்பாக்கிய வதியாக, நான் வெளியே புறப்பட்டு, அவனைத் தேடுவது சாத்தியமாகுமா? அவனைக் கண்டுபிடிக்காவிடில் என் கதி என்ன?  நான் ஒரு மடைச்சி! ஏமாளி! பொறுப்பில்லாதவள்! அன்று அவன் காட்டிய அனுதாபத்தில்  ஏமாந்து என்னைப் பறிகொடுத்தேனே! எவ்வளவு மோட்டு முண்டம்! எனது உடம்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் மற்றவர்களுக்குத் தெரியாது, ஆனால் எனக்குத் தெரியும்தானே!…….  சரி, அதை இப்போது நினைத்து அழுவதில் என்ன பயன்?

Sunday, 17 June 2018

பொன்சொரிந்த பொற்காலம்(பகுதி 2)


யூனியன்கல்லூரி நினைவுகள் பதிவுகள்

அந்தக் காலத்தில், ஒரே நேரத்தில் பல மாணவர்கள் நீர் அருந்த முடியாமல் இருந்தது. இதனால் பல மாணவர்கள் தெருவைக் கடந்து அப்பால் இருந்த தேநீர்க்கடைகளிலும், சாப்பாட்டுக் கடைகளிலும் நீர் பருகினார்கள். சிலர் அருகில் இருந்த வீடுகளிற்கும் சென்றார்கள். இந்தச் சிக்கலை நிவர்த்தி செய்ய 1980 ஆண்டில் ஏறக்குறைய 3000 மாணவர்கள் பாவிக்கக்கூடியவாறு பெரியதொரு தண்ணீர்த்தொட்டியை அதிபர் அமைத்துத் தந்தார். மேலும் இதே ஆண்டில் மாணவர்களுக்கு சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது. கனிஷ்ட பிரிவு ஆண்கள் நீல காற்சட்டையும் வெள்ளை சேட்டும், ஏனையவர்கள் யாவரும் வெள்ளை ஆடையும் காலணியும் அணிந்து வந்தார்கள்.

Sunday, 10 June 2018

பொன் சொரிந்த பொற்காலம் (பகுதி 1)யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்

பொற்கால யூனியனின் மைந்தன் நான்.

யூனியன் கல்லூரி மைதானத்தின் கிழக்கில் அமைந்த தகரக்கூரைக் கட்டடத்தில் நான் எனது ஆறாம் வகுப்பை ஆரம்பித்தேன். அப்போது அங்கு தந்தை செல்வா பாடசாலை இருக்கவில்லை. யூனியன் கல்லூரி ஒரே பாடசாலையாக இருந்தது. 1979ஆம் ஆண்டு தை மாதம் யூனியன் கல்லூரியில் இருந்து ஆரம்ப பிரிவு பிரித்தெடுக்கப்பட்டு, தந்தை செல்வா தொடக்கநிலைப் பள்ளி ஆரம்பமானது. அதன்பின்னர் யூனியன் கல்லூரியில் ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை நடைபெற்றது.

யூனியன்கல்லூரியில் இரண்டு அதிபர்கள் சேவையில் இருந்த காலங்களில் நான் அங்கு கல்வி பயின்றுள்ளேன். ஒருவர் திரு. நடராஜா, மற்றவர் திரு. கதிர். பாலசுந்தரம்.