Monday 29 March 2021

இப்பென்ன தெரியுது? - கங்காருப் பாய்ச்சல்கள் (37)

Telstra, Optus என்று சொல்லிக்கொண்டு தினமும் எமது வீட்டு போனிற்கும், மொபைல்போனிற்கும் வரும் அழைப்புகள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. அவர்களின் தொல்லைகள் தாங்க முடிவதில்லை.

NBN தொடர்பு வந்ததன் பிற்பாடு எதையும் நம்பிச் செய்ய முடிவதில்லை. வங்கிக்கணக்கென்றால் என்ன... மின்னஞ்சல் செய்வது என்றால் என்ன... நட்ட நடுவில் குறுக்கறுத்துவிடும். முறைப்பாடு செய்தால் எமது அரைநாளை விழுங்கிவிடுவார்கள். பெயர் விபரம் என்று எல்லாம் கேட்டு முடிய, கடைசியில் அவர்கள் செய்யும் வேலை இதுதான். சுவரில் இருக்கின்ற, NBN BOX இற்கான இணைப்பை ஒரு தடவை துண்டித்து மீண்டும் இணைப்பதாகும். திரும்பத் திரும்ப முறையிட்டால் இன்னொன்றையும் செய்யச் சொல்வார்கள். மின்னிணைப்பை (power) ஒருதடவை துண்டித்து மீண்டும் இணைக்கச் சொல்வார்கள். அத்துடன் முதல் சொன்னவாறு NBN BOX இற்கான இணைப்பை ஒரு தடவை துண்டித்து மீண்டும் இணைத்துவிட்டு, NBN BOX இலிருந்து modem இற்கான இணைப்பையும் ஒருதடவை துண்டித்து மீண்டும் இணைப்பதாகும். இவை எல்லாவற்றையும் விட, எமது முறைப்பாட்டிற்கான தீர்வு ஒன்றையுமே சரிவரச் செய்யாமல், கடைசியில் ஒரு கேள்வி கேட்பார்களே அதுதான் அன்றைய உரையாடலின் முத்தாய்ப்பு. ”வேறென்ன உதவி வேண்டும்?”

இப்போதெல்லாம் இதற்காகப் போய் முறையிடுவதில்லை. நானாகவே செய்யப் பழகிக் கொண்டேன்.

சமீபத்தில் ஒரு புது விளையாட்டு துவங்கியிருக்கு. யாருக்காவது தொலைபேசி எடுத்தால் சில நிமிடங்களில் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடும். பின்னர் மீளத் தொடர்பு ஏற்படுத்தினால் கதைக்கக்கூடியதாக இருக்கும். ஏதோ உலகத்தின் மிக முக்கிய பெரும்புள்ளி ஒருவரின் உரையாடலை ஒட்டுக் கேட்பது போன்றிருக்கும் அது.

நேற்று ஒரு பெண்மணி எனது மொபைல்போனிற்கு அழைப்பு விடுத்தார். அப்போது நான் படுக்கையில் இருந்தேன்.

“நான் Telstraவில் இருந்து கதைக்கின்றேன். நீங்கள் சமீபத்தில் ஒரு முறைப்பாடு செய்திருந்தீர்கள்...” என்றவாறு பேச்சை ஆரம்பித்தார்.

நாங்கள் சொல்லும் எந்தவொரு முறைப்பாட்டையும் செவிமடுத்துத் தீர்த்து வைக்காமல், இப்படிக் கழுத்தறுக்கும் நபர்களின் அழைப்புகள் வந்தால் நான் குஜாலாகிவிடுவது வழக்கம். அவர் பொய்யான இலக்கத்தில் இருந்து ரெலிபோன் செய்கின்றார் என்பதை நான் அறிந்து கொண்டேன். அவருடன் நான் உரையாடலைத் தொடர்ந்தேன். “நீங்கள் எத்தனை computer வைத்திருக்கின்றீர்கள்? வீட்டில் எத்தனை பேர் இருக்கின்றீர்கள்? Computer தவிர வேறு என்னவெல்லாம் வைத்திருக்கின்றீர்கள்?” அவர் என்னிடம் இப்படியெல்லாம் கேள்விகளைத் தொடுத்தார்.

“உங்களுக்கு speed test செய்யும் முறை தெரியுமா?” என்று கேட்டார். நான் “தெரியாதே!” என்றேன்.

”உங்கள் computer ஐ ஸ்ராற் செய்யுங்கள். கூகிளைத் திறவுங்கள்” என்றார்.

நான் படுக்கையில் இருந்தபடியே அவருடன் நடிக்கத் தொடங்கினேன்.

“ஒகே... கூகிளைத் திறந்துவிட்டேன். சொல்லுங்கள்” என்றேன்.

“நான் சொல்வதை கூகிளில் ரைப் செய்யுங்கள்”

“ஓகே..”

”s p e e d ...” என்று ஒவ்வொரு எழுத்தாக எழுத்துக்கூட்டிச் சொல்லிவிட்டு, “இப்ப computer இல் என்ன தெரிகின்றது?” என்று கேட்டார்.

“உம்முடைய முகம் தெரிகின்றது” என்று நான் சொன்னேன்.

மறுமுனையிலிருந்து இணைப்புத் துண்டிக்கப்பட்டது.

 

Friday 26 March 2021

விநோத உடைப் போட்டி - கங்காருப் பாய்ச்சல்கள் (36)

விநோத உடைப்போட்டி ஒரு குறிப்பிட்ட நேரத்தில்---ஓரிரு மணித்துளிகளோ அல்லது ஒரு நாளோ---நடைபெறும். அப்போட்டியில் கலந்து கொள்பவர்கள், தாம் தெரிவு செய்த பாத்திரங்களாக மாறி பார்வையாளர்களை அசத்துவார்கள். போட்டி முடிகையில் அவர்கள் தங்கள் வேடங்களைக் கலைத்து விடுவார்கள்.

வாழ்க்கையில் சிலர், ஒரு குறிப்பிட்ட காலத்தை அடைந்ததும் வேடங்களை அணிந்து கொள்கின்றார்கள். கூடியவரை அவர்கள் தமது அந்திமகாலம் வரையிலும் அந்த வேடங்களைக் கலைப்பதில்லை. பெரும்பாலும் தமது ஆசாபாசங்கள் நிறைவேறியதும், தங்களால் இனி ஒன்றும் முடியாது என்றபோதும் – ’அந்திமகாலம்’ அவர்களைப் புடம் போட்டுக் கொள்ளும். அந் நிலையில் அவர்களின் வேடங்கள் கலைந்து விடுகின்றன. வேடத்தைக் கலைக்காமல் வீறாப்புடன் சென்றவர்களும் உண்டு.

 

Sunday 21 March 2021

மெல்பேர்ண் வெதர் - குறுநாவல் Amazon kindle இல் நாளை (22.03.2021) இலவசம்

 

நாவல் குறித்தான உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Melbourne weather - novel - நாவலுக்கான இணைப்பு

வெளிநாட்டு வாழ்க்கை விசித்திரமானது. இயந்திரமயமான போக்கில் எதிலும் ஒரு தீவிரம். அடுத்தவரை நேசிக்கவோ, ஏன் குடும்பத்தைக் கவனிக்கவோ முடிவதில்லை.

இந்த நாவல் பல்லினக்கலாசார மக்கள் வேலை செய்யும் கார் உற்பத்தித் தொழிற்சாலையொன்றில் நடைபெறுகின்றது. உலக சமுதாய கலாசாரம் எவ்வளவுக்கு உடலின்ப வெறியில் சீரழிகின்றது என்பதைக் கதை சொல்லும் அதே சமயம், தமிழ்ச்சமுதாயம் அந்தச் சாக்கடையில் தவிக்கவில்லை என்பதையும் தொட்டுச் செல்கின்றது.


Friday 19 March 2021

கார் காலம் - குறுநாவல் Amazon kindle இல் நாளை (20.03.2021) இலவசம்


 நாவல் குறித்தான உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கார் காலம் MONSOON (Tamil Edition) eBook: கே.எஸ்.சுதாகர்: Amazon.in: Kindle Store


நாவல் - அவுஸ்ரேலியாவில் உள்ள கதைக்களத்தையும், அங்கே உள்ள பாத்திரப்படைப்புக்களையும் கொண்டது.

மெல்பேர்ன் நகரின் எல்லைப்புறத்தில் அமைந்துள்ள ஒரு கார்த்தொழிற்சாலையில் கதை ஆரம்பமாகிறது.

நந்தன், ஆலின், புங், மாயா, ஒகாரா, அல்பேற்றோ, ஆச்சிமா, குலம், மக்காறியோ போன்ற பாத்திரங்கள் மட்டுமல்ல நீங்காத நினைவில் நிற்கும் மாதவி போன்றவர்களின் பாத்திரங்களும் இந்த நாவலுக்கு உயிர்த்துடிப்பைக் கொடுக்கின்றன. ஒரு கார் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றது என்பது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியுள்ளது.

கற்பனையில் மட்டும் வாழப் பழகிக்கொண்டவர்களுக்கு, நிஜவாழ்க்கையை அவுஸ்ரேலியாவில் புலம்பெயர்ந்தவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை எடுத்துச் சொல்லும் படைப்பு.

Thursday 18 March 2021

அற்பனுக்குப் பவிசு வந்தால் - கங்காருப் பாய்ச்சல்கள் (35)

ஒருமுறை நான் எனது நண்பனின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். நண்பனின் அப்பா நெஞ்சுவலி வந்தது என்று படுத்திருந்தார். நண்பன் தனது தந்தையையிட்டுக் கவலை கொண்டிருந்தான். ‘ஹாற் அற்றாக்’ மைனராக வந்திருக்கும் எனச் சந்தேகம் கொண்டிருந்தான். “வைச்சிருக்காதை… உடனை ஹொஸ்பிற்றலுக்குக் கூட்டிப் போ” என்றேன் நான். நான் அவனுக்குச் சொன்னதை அவனின் அம்மா உள்ளேயிருந்து கேட்டிருக்க வேண்டும்.

“நானும் பல தடவைகள் சொல்லிவிட்டேன். கேட்கின்றார் இல்லை. ஹொஸ்பிற்றல் போனால் காசை உருவி விடுவார்கள்” எனப் பயப்படுகின்றார்.

அவர்கள் குடும்பம் ஏழ்மையானதுதான். நான் அறிவேன். அதற்காக?

சில வருடங்கள் உருண்டோடி விட்டன. நண்பனின் குடும்பத்தினருக்கு பணம் எங்கிருந்தோ வந்துவிட்டது. இரண்டுமாடி கொண்ட புதுவீடு, வசதி வாய்ப்புகளுடன் இருந்தார்கள். அவனின் அப்பாவிற்கு பிறிதொருநாளும் நெஞ்சுவலி வந்திருக்கவில்லை. அன்று நண்பனின் அம்மாவைக் காணக் கிடைக்கவில்லை. தானாகவே அவன் சிரித்துக் கொண்டு சொன்னான். “அம்மாவுக்கு முகத்தில ஒரு சின்னப் பரு. சூட்டுக்கு வந்ததோ தெரியாது, அவ இப்ப பிறைவேற் டொக்ரரைப் பார்க்கப் போய்விட்டார்.”

அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பார்கள் என்பது இதுதான்.

காசு இல்லாவிட்டால் ‘ஹாற் அற்றாக்’ வந்தாலும் வைத்தியரைப் பார்க்க மாட்டார்கள். காசு கொட்டோ கொட்டென்று கொட்டிவிட்டால் ’சூட்டுப் பருவுக்கும்’ பிறைவேற் ஹொஸ்பிற்றல் தான். சிலரது வாழ்வில் இப்படியும் ஒருபக்கம்.

 

Thursday 11 March 2021

எனக்கான வெளி

 
நன்றி : வெற்றிமணி (பங்குனி 2021)