Friday 27 January 2023

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் (2/14)


 மெல்பேர்ண் வெதர் – குறுநாவல்

அதிகாரம் 2 : அழகான பெண்

வான் மான் நூஜ்ஜின் ஒரு வியட்நாமியன். அவனால் ஆங்கிலம் கதைக்க முடியாதுவிடினும் எப்படியோ சுழியோடி தனது வாழ்க்கையைக் கொண்டு செல்கின்றான். குள்ள உருவம், சப்பை மூக்கு. மொட்டந்தலை. அவனைக் கோபப்படுத்த வேண்டுமாயின், மூக்கை சப்பையாக நசித்துக் காட்டினால் போதும். கோபம் உச்சிக்கு ஏறிவிடும். அப்படிச் செய்துதான் நந்தனும் அவனைக் கோபப்படுத்துவான்.

நந்தன் இலங்கை நாட்டைச் சேர்ந்தவன். அந்தக் கார்த் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்து நான்கு வருடங்கள் ஆகின்றன.

வான் மான் நூஜ்ஜின், நந்தனுக்குச் சீனியர், பதினைந்து வருடங்களாக அங்கே குப்பை கொட்டுகின்றான். அவன் ஒரு வேடிக்கைப் பேர்வழியும் கூட.

ஒருநாள் இப்பிடித்தான் அவனது மொட்டந்தலைக்கு முடி வளர நந்தன் ஒரு மருந்து சொன்னான். ‘பசுவின் கன்றைப் பிடித்து அதன் நாக்கினால் தலை முழுவதையும் நக்க விடு’ என்றான் நந்தன். சொன்னதுதான் தாமதம் தன் மூக்கை அகல விரித்தான். வியட்நாம் பாஷையில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளையும் பாவித்து நந்தனைத் திட்டத் தொடங்கிவிட்டான்.

Monday 23 January 2023

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் (1 / 14)

 


மெல்பேர்ண் வெதர் – குறுநாவல்

அதிகாரம் 1 : புறப்பாடு

 மேல் மாடியில் தனது அறைக்குள் நின்றபடி ஜன்னலினூடாக வெளியே பார்வையை ஓடவிட்டாள் அவள். வானம் கருகருவென்று இருட்டி இருந்தது.

 ’மகளைப் பள்ளியில் இருந்து கூட்டி வரும்போது வானம் இப்படி இருக்கவில்லையே!’

 திடீரென்று வானம் கோபம் கொண்டு மழை பொழியத் தொடங்கியது. வெப்பமாக வீசிய காற்று ஒடுங்கிவிட, மின்னல் ஒன்று வரிஞ்சு கட்டி வீட்டின் மேலால் ஓடி ஒளிந்தது. சடசடத்துப் பெய்த மழையினால் புழுதி அடங்க, மண் மணம் மூக்கைத் துளைத்தது. மூக்கை மேலும் கீழும் பக்கவாட்டிலுமாகத் தேய்த்துக் கொண்டாள். காலநிலைக்குத் தகுந்தால் போல் உடைகளை அணிந்து கொண்டாள். சிறிதாக மேக்கப் போட்டுக் கொண்டாள்.

Wednesday 18 January 2023

தள்ளாமையை மீறி என் ரஸனை

 

பால் வண்ணம்

கவிஞர், எழுத்தாளர், ஓவியர் எஸ்.வைத்தீஸ்வரன்   

இது ஒரு ஸ்வாரஸ்யமான, வாழ்க்கையின் பல்வேறு மனித அனுபவங்களின் இலக்கியப் பான்மையான சித்தரிப்புகளின் தொகுப்பு. சிறுகதையா... அல்லது சுய அனுபவங்களின் செறிவான நினைவு கூறலா என்கிற குழப்பம் அவ்வப்போது எழுந்தாலும் ஒரு தரமான படைப்பு என்பதில் ஐயமில்லை.


சுமார் இருபது வருடங்களுக்கு முன் இலங்கைப் போர் முடிந்து அதன் புகைக்கங்குகள் மெல்ல அணைந்து அடங்கிப் புழுங்கிக் கொண்டிருந்த தருணம் ஏராளமான மக்கள் அவதியும் துக்கமுமாக புலம்பெயர்ந்து கொண்ட வருஷங்களில் இலக்கியம் திசையறியாது குழம்பிப் போய் ஸ்தம்பித்துப் போனது. வருடங்கள் போகப் போக மக்களின் புலம்பெயர்ந்த வாழ்க்கையின் புதிய அனுபவங்களின் சேகரங்கள் அவர்கள் உள்மனத்தில் வேரூன்றி கிளைத்து மனித இயல்பின் படைப்புணர்வை மெல்ல மெல்ல விசாலப்படுத்தி தற்போது சுதாகர் போன்ற நல்ல படைப்பாளிகள் மூலமாக நல்ல ஆவணங்களாக வெளிப்படுவதை நான் கண்டு வாசித்து மகிழ்ச்சி அடைகிறேன்


இவருடைய படைப்புகளில் வடிவச் சிறப்பு உள்ளது. எதையும் சேதிகளாகத் தெரிவிக்காமல் இயல்பான மன ஓட்டத்துடன் உணர்வுடன் வெளிப்படுத்துவது நல்ல கலைநேர்த்தி


எல்லாமே கற்பனை பூசிய நிஜ அனுபவங்களின் வெளிப்பாடு. காதல் மனித நேயம்..சாதுர்யம் வக்கிரம் சுயநலம் இயலாமை எல்லாவற்றுக்கும் இந்தக் கதைகள் நல்ல உதாரணங்கள்.


பால் வண்ணம் கதையை விட " நமக்கு நாமே " கதையை நான் ரஸித்தேன். 96 என்று ஒரு தமிழ்ப்படம் இதே நிறைவேறாக் காதலை அற்புதமான காட்சி யாக்கி இருந்தார்கள். கனவு காணும் உலகம் aborigin பிரச்சினையை இன்னொரு வித்தியாசமான கோணத்தில் பொதுவான டிப்படை மனிதநேயத்தை வெளிச்சமாக்கியது சிறப்பு.


பால் வண்ணம் வாசிக்க வேண்டிய தொகுப்பு. வாழ்த்துக்கள்


வைதீஸ்வரன் 16 jan 2023

  

 

Sunday 15 January 2023

மெல்பேர்ண் வெதர் - குறுநாவல்


அடுத்த வாரம் முதல்....

காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுத்த கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு பெற்றது - 2018


வெளிநாட்டு வாழ்க்கை விசித்திரமானது. இயந்திரமயமான போக்கில் எதிலும் ஒரு தீவிரம். அடுத்தவரை நேசிக்கவோ, ஏன் குடும்பத்தைக் கவனிக்கவோ முடிவதில்லை.

இந்த நாவல் பல்லினக்கலாசார மக்கள் வேலை செய்யும் கார் உற்பத்தித் தொழிற்சாலையொன்றில் நடைபெறுகின்றது. உலக சமுதாய கலாசாரம் எவ்வளவுக்கு உடலின்ப வெறியில் சீரழிகின்றது என்பதைக் கதை சொல்லும் அதே சமயம், தமிழ்ச்சமுதாயம் அந்தச் சாக்கடையில் தவிக்கவில்லை என்பதையும் தொட்டுச் செல்கின்றது.

Friday 13 January 2023

கே.எஸ். சுதாகரின் 'பால்வண்ணம்' சிறுகதைத் தொகுப்பு - ஒரு கண்ணோட்டம்






 - ரஞ்ஜனி சுப்ரமணியம் –



'நான் எழுதும் கதைகளை உடனே பிரசுரிப்பதில்லை. என்னுடனே இருந்து கொள்ளும் அந்தக் கதைகளை ஒரு சிற்பி செதுக்குவது போல் செதுக்குகிறேன்' என்று எழுத்தாளர் கே.எஸ். சுதாகர் சிறுகதைத் தொகுப்பொன்றில் கூறியிருக்கிறார்.

கருவொன்றை தாய் சுமந்து குழந்தையாக உருவாவதற்கும், கருவொன்றை கதாசிரியர் சுமந்து கதையாவதற்கும் அதிக வித்தியாசங்கள் இருக்காதென இவ்வசனங்கள் நிரூபிக்கின்றன.

படைப்பாளியின் இயல்பான திறன், அழகியல் ரசனை என்பவற்றிற்கு ஏற்ப படைப்பின் தரம் பலவாறாக நிர்ணயிக்கப் படுகின்றது.படைத்த பின்னும் அக்குழந்தை எதிர்காலத்தில் நற்பெயர் பெற வேண்டுமே என்ற எதிர்பார்ப்பும் இரண்டுக்குமே பொதுவானது.


ஜனரஞ்ஜக எழுத்தாளரான கே.எஸ். சுதாகர் அவர்களின் 'பால்வண்ணம்' சிறுகதைத் தொகுப்பும் சிறப்பான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பது நியாயமே. தலைப்புக்குரிய முதலாவது சிறுகதையாகிய 'பால்வண்ணம்' , நுட்பமான புள்ளிகளால் வரையப்பட்ட வாழ்க்கைக் கோலங்களில், மனிதமனதின் உணர்வுச் சிதறல்களை அழகுறக் கூறுகிறது. இத்தொகுப்பு பற்றி எழுதுவதற்குரிய முக்கிய உந்துசக்தியாகவும் அதுவே அமைந்தது.