Friday 26 April 2024

காதைத் திறந்து வையுங்கள், வாயைப் பொத்திக் கொள்ளுங்கள் - கங்காருப்பாய்ச்சல்கள் (44)

 
என்னுடைய நண்பர்களில் சிலர், ஒரு சிலரின் மின்னஞ்சல்களைப் பார்ப்பதற்கு முன்னரே உடனுக்குடன் அழித்துவிடுவதாகச் சொல்வார்கள். மேலும் அவர்களின் எந்தவொரு படைப்பையும் புத்தகத்தையும் தாங்கள் வாசிப்பதில்லை எனவும் சொன்னார்கள். அவர்களின் கொள்கைகள், செயற்பாடுகள், நடத்தைகள் இவற்றைவிட வேறென்ன அவர்களின் படைப்புகளில் இருக்கப் போகின்றது என்பது அவர் வாதம். இப்பொழுது நானும்.

ஒரு அமைப்பில் உள்ளவர்கள் முறையற்று நடந்து கொள்கின்றார்கள் என அவர்களை ஒருவர் நிராகரிப்பதும் - பின்னர் அவர்கள் விருதைத் தந்தவுடன் `யார் தந்தால் தான் என்ன, அது எனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியதுதான்என ஏற்றுக் கொள்வதும் எந்த வகையில் நியாயம்? அவர்கள் அவரின் வாயை மூடுவதற்குத்தான் இதைச் செய்கின்றார்கள் என்பதை விருதைப்பெறுபவரின் பேராசை பிடித்த மனம் நிராகரித்துவிடுகின்றதே!

எஸ்.பொ இலக்கியத்தோட்டத்தில் விருதைப் பெற்றுக்கொண்டு, பாதி வழியில் திரும்பும்போது அந்த அமைப்பைக் காறித் துப்பிவிட்டாரே!

மனித மனங்களைச் செழுமையாக்குவதற்கே இலக்கியம். சண்டை செய்து வியாக்கியானம் பேசுவதற்கு அல்ல.

தமிழ் வளர்க்கக் கடமைப்படாத எழுத்தாளர்களினதும் (30 வார்த்தைகள் தமிழில் எழுதினால் 300 வார்த்தைகள் ஆங்கிலம் கலக்கும்) –மனிதாபிமானமற்ற சுயநலப்போக்குடைய எழுத்தாளர்களினதும் படைப்புகளை – அது எத்தகைய உச்சம் கொண்ட போதிலும் நான் படிப்பதில்லை.

அவை என்னில் எந்தவித மாற்றத்தையோ தாக்கத்தையோ ஏற்படுத்தப் போவதில்லை என்பதில் நான் திடமாக இருக்கின்றேன்.

எழுத்தாளர்களிடமிருந்து நியாயமான படைப்புகள் வெளிவரல் வேண்டும். அவர்களின் நோக்கம் எது என்று தெரியாமலே, சொல்லி வைத்த சிலரால் பாராட்டப்படுகின்றார்கள். பின்னர் தாமே பணம் கொடுத்து அவற்றை பிற மொழியிலும் மொழிபெயர்க்கின்றார்கள்.

Monday 22 April 2024

நல்ல இலக்கியங்கள் எப்படி உருவாகும்? - கங்காருப்பாய்ச்சல்கள் (43)

 
பணம் படைத்த, செல்வாக்குள்ள இலக்கியவாதிகள் சிலர் காந்தம் போன்றவர்கள். கடதாசிப் பேப்பரில் உள்ள இரும்புத்துகள்கள், அதன் பின்னால் உள்ள காந்தத்தின் இழுவைக்கு அசையுமாப் போல் பத்திரிகைக்காரர்களும் சஞ்சிகைக்காரர்களும் அசைகின்றார்கள். நமக்கென்னவோ அற்பத்தனமான இரும்புத்துகள்களும் கடதாசிப் பேப்பருமே தெரிகின்றன. பின்னால் உள்ள காந்தம் தெரிவதில்லை. காலமும் அதன் சுவடுகளில் போகும் இலக்கியங்களும், விளக்கில் விழுந்த விட்டில்கள் போல் தத்தளிக்கின்றன.

°

நாம் யாருக்காக எழுதுகின்றோம். மக்களுக்குத் தானே!

இதில் நாம் ஏன் இன்னொரு எழுத்தாளரின் விமர்சனத்தைப் பெரிது பண்ண வேண்டும்? எழுத்தாளர் என்பவர் மக்கள் கூட்டத்தினரின் ஒர் அங்கத்தவரே தவிர வாசகர் கூட்டத்தைப் பிரதிபலிப்பவர் அல்லவே.

வாசகப் பரப்பிலிருந்து வரும் விமர்சனத்தையே நாம் பெரிதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதுவும் ஒன்றிரண்டு விமர்சனங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு எடை போடாமால், ஒட்டுமொத்த விமர்சனங்களையும் வாசித்து சமன்செய்து  சீர் தூக்கிப் பாருங்கள்.

°

‘உந்தக் கதை கவிதை நாவல் எல்லாம் சுத்த வேஸ்ற். வாழ்க்கைக்கு உதவாது. அபுனைவு நூல்கள்தான் வாழ்க்கைக்கு உதவும்.’ என்று என்னுடைய நண்பர் ஒருவர் சொல்கின்றார்,

அவர் புனைவு நூல்களைப் படிப்பது இல்லை. தூக்கி எறிந்துவிடுவார். வரலாற்று நூல்கள் மற்றும் அபுனைவுப் படைப்புகளையே அவர் விரும்பிப் படிக்கின்றார்.

அவருக்கு நான் எந்தவிதமான விளக்கம் கொடுக்கலாம்?

நவீன தொழில்நுட்பம் சார்ந்த படைப்புகளைத் தவிர ஏனையன எல்லாம் எப்போதோ எழுதப்பட்டுவிட்டன. அவற்றை காலத்துக்கு ஏற்ற விதத்தில் நவீனமயப்படுத்தி எழுதுவதுதான் இன்றுள்ளவர்களின் வேலை.

 

Thursday 18 April 2024

ஏன் போட்டிகளுக்கு எழுதவேண்டும்? - கங்காருப்பாய்ச்சல்கள் (42)

நாம் ஒரு படைப்பை எழுதி, பத்திரிகை/சஞ்சிகைகளிலோ அல்லது இணையத்தளங்களிலோ பிரசுரிக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை எத்தனை பேர்கள் படிக்கின்றார்கள், அந்தப் படைப்புப் பற்றிய வாசகர்களின் கருத்துக்கள் என்ன என்பதை எப்படி அறிவது? படிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் வெறுமனே கடந்து சென்றுவிடுகின்றார்கள். இணையத்தளங்களில் முகத்துக்காக சில முகத்துதிக் குறிப்புக்கள், விருப்பக்குறீடுகளைப் போட்டுவிட்டுக் கடந்து விடுகின்றார்கள்.

போட்டிகளுக்கு அனுப்பும்போது அந்தப் படைப்புகளை நடுவர்கள் படிக்கின்றார்கள். போட்டியில் பரிசு கிடைத்துவிட்டதென்றால், போட்டியில் பங்குபற்றியவர்கள் படிக்கின்றார்கள். தங்கள் படைப்பைக் காட்டிலும், பரிசு பெற்றவர்களின் படைப்பில் அப்படி என்ன விசேசம் இருக்கின்றது என ஆராய்கின்றார்கள். வாசகர்கள் கூட பரிசு பெற்ற படைப்புகளை வாசிக்க விருப்பப்படுகின்றார்கள்.

போட்டியில் வென்ற படைப்புகளை நீங்கள் ஓகோ என்று பார்க்கத் தேவையில்லை. அந்த நேரத்தில் வந்த படைப்புகளில் சிறந்தவை அவை. ஆனால் அவை வாசிக்கத் தகுந்த படைப்புகள். ஒரு படைப்பை எழுதிவிட்டு, பிரசுரமாவதற்கு முன்னர் நண்பர்கள் வாசகர்களிடம் வாசிக்கக் குடுத்தது போல என எடுத்துக் கொள்ளுங்களேன்.

இன்று எழுத்தாளர்களைக் கவனிக்காது, தமது வட்டம் சார்ந்தவர்களை மாத்திரம் முதன்மைப்படுத்துபவர்களின் மத்தியில், போட்டிகளே எழுத்தாளர்களுக்கு உற்சாகம் தருபவை.

அதை விடுத்து ஒரு படைப்பைப் பிரசுரித்துவிட்டு, அதை மின்னஞ்சல்கள் மூலம் பலருக்கும் அனுப்பிவிட்டோ அல்லது ரெலிபோனில் கதைத்தோ புகழ்ச்சிகளைப் பெற்றுக் கொள்வதில் என்ன இருக்கின்றது? வாசகர்களை வலிந்து பெற்றுக்கொள்ளக் கூடாது.

இளம் எழுத்தாளர்களே! உங்கள் படைப்புகளை பல்வேறு போட்டிகளுக்கும் அனுப்பி உங்களைப் பரீட்சித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். பல்வேறு போட்டிகளுக்கும் அனுப்புவதால், வித்தியாசம் வித்தியாசமான அமைப்புகள், நடுவர்கள் உங்கள் படைப்புகளைப் பார்வையிடுவார்கள். 

Friday 5 April 2024

அவள் விதி அவன் – சிறுகதை

  
எனது மைத்துனரின் கலியாணவீட்டிற்காக கனடா போயிருந்தேன். கலியாணத்தின் போது எனது பள்ளி நண்பன் சதீசை சந்தித்தேன். அவன் தான் ஒரு அதிசயச் செய்தி ஒன்றைச் சொன்னான்.

எங்களுடன் படித்த மனோரஞ்சன்---மனோ---கனடாவில் பெரிய செல்வந்தனாக இருக்கின்றான். 25 மில்லியன்களுக்கும்  மேற்பட்ட வியாபாரத்தைக் கொண்ட, பல உணவகங்களுக்குச் சொந்தக்காரன்.

25 மில்லியன் டொலர்கள்…. இந்த விடயம் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. இது எப்படி நிகழ்ந்தது?

படிக்கும் காலங்களில் அவன் என்றுமே திறமைசாலியாக இருந்தது கிடையாது. சுமார் ரகம் அவன்.

மனோ அகதியாக வந்து வேலை தேடி அலைந்தான். ஒருநாள் ஆங்கில வகுப்பு முடிந்து, சுவிஸ் சலற்றில் உணவருந்திக் கொண்டிருக்கும்போது அவனுக்கொரு யோசனை வந்தது. அங்கே வேலை கேட்டுப் பார்த்தால் என்ன? என்ன ஆச்சரியம். வேலை கிடைத்தது. டிஸ்வாசரில் பாத்திரங்கள் கழுவும் வேலை.

அப்புறம் பிரியாவைத் திருமணம் முடித்த கையோடு, ஒரு உணவகத்தை விலைக்கு வாங்கினான். பின்னர் தொடர்ந்து அவனுக்கு யோகம் அடித்தது. எல்லாம் பிரியா வந்த நல்ல நேரம்தான் எனச் சொல்லுமளவுக்கு மூன்று பிள்ளைகளுக்கும் ஐந்து உணவகங்களுக்கும் சொந்தக்காரனானான். அவனின் ஆளுமை, ஆற்றல் – எல்லோரும் அண்ணார்ந்து பார்க்குமளவிற்கு கிடுகிடுவென்று உயர்ந்தான். எத்தனையோ பேருக்கு வேலை வழங்கிக் கொண்டிருந்தான்.

ஆயிரம் கனவுகளுடன் பிரியாவை மகாராணியாக்கி வாழ்ந்தான் மனோ.

அகதியாக வந்து இன்று எத்தனையோ தொழிலகங்களுக்கு அதிபதியாக இருக்கும் மனோவிற்கு, மேஜர் விருது வழங்கிக் கெளரவித்தார்.

அந்தக்காலத்தில்தான் நான் எனது மைத்துனனின் கலியாணத்திற்காக கனடா சென்றிருந்தேன். கலியாணவீட்டிற்கு வரமுடியவில்லை என மிகவும் மனம் வருந்தினான். தனது வீட்டிற்கு வரும்படி எங்களுக்கு அழைப்பு விடுத்தான்.

Monday 18 March 2024

குவிகம் குறும் புதினம் போட்டி முடிவுகள் (2024-25)

(குறும் புதினத்திற்கென்று தமிழில் வெளிவரும் ஒரே மாத இதழ்)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

17.03.24  அன்று குவிகம் அளவளாவல் நிகழ்வில் திரு அரவிந்த் சுவாமிநாதன்  அறிவிப்பின் படி 

1. சங்கரி அப்பன்   – முதல் பரிசு  –    Rs.10000  – உறவின் மொழி

2.  மைதிலி நாராயணன் (ஷைலஜா )  – Rs. 6000 – இரண்டாம் பரிசு –                  கங்கை உள்ளம்.

3. அன்புக்கரசி ராஜ்குமார் – மூன்றாம் பரிசு  – Rs. 4000 – கொட்டு முரசே

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&குவிகம் குறும் புதினம் மாத இதழில் ஏப்ரல் 24 முதல் மார்ச் 25 வரை பிரசுரமாகும் கதைகளுக்கான போட்டி வழக்கம் போல் இந்த ஆண்டும் அக்டோபர் மாதம் துவங்கியது . டிசம்பர் 31 ஆம் தேதி போட்டிக்கான கதைகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள். 

இந்த ஆண்டு ,  மூன்று சிறந்த குறும் புதினங்களிற்கான பரிசுத் தொகை 10000 ,6000, 4000 ரூபாய் என்று அதிகரிக்கப்பட்டது. 

இந்த வருடம் 109 கதைகள் போட்டியில் பங்கேற்றன. 

முதல் சுற்று நடுவர்கள் , 

1. ராய செல்லப்பா 

2. சு வித்யா 

3. JC கல்லூரி மாணவர் குழு 

ஆகியோர் வந்திருந்த  கதைகளை அலசி ஆராய்ந்து அவற்றிற்கு மதிப்பெண் இட்டு அனுப்பி வைத்தனர். 

மூவருடைய மதிப்பெண்களையும் சராசரிப்படுத்தி 109 கதைகளில் முதல்  24 கதைகளைத் தேர்ந்தெடுத்தோம். 

தேர்ந்தெடுக்கப்பட்ட   24 கதைகள்  மாதம் இரண்டு கதைகள் வீதம் நமது குறும் புதினம் மாத இதழில் ஏப்ரல் 2024 முதல் மார்ச் 25 வரை வெளிவரும். அதற்கான சன்மானம் 1000 ரூபாய் வழங்கப்படும். 

இவற்றுள்  மூன்று சிறந்த கதைகளுக்கு சன்மானத்திற்குப் பதிலாக சிறப்புப் பரிசுகள் 10000, 6000, 4000 ரூபாய்  வழங்கப்படும். 

அதைத் தேர்ந்தெடுக்க அமெரிக்காவில் வெளிவரும் ‘தென்றல்’ பத்திரிகையின் சென்னை ஆசிரியர்  அரவிந்த் சுவாமிநாதன் அவர்களை வேண்டிக் கொண்டோம். 

அவரது முடிவு 17 ஆம் தேதி நடைபெறும் குவிகம் அளவளாவல் நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும். 

போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

பிரசுரிப்பதற்காகத்  தேர்ந்தெடுக்கப்பட்ட 24 கதைகளின் ஆசிரியர்களுக்குப் பாராட்டுதல்கள்! 

போட்டியில் பரிசுகளை வெல்லப்போகும் 3 பேருக்கும் முன் கூட்டிய வாழ்த்துக்கள் !

109 கதைகளில் 24 கதைகள் போக மீதமுள்ள 85 கதைகளை எழுதிய ஆசிரியர்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் கதை வெற்றி பெற்ற கதைகளைவிட எந்த விதத்திலும் குறைவானது அல்ல. வேறு பத்திரிகைக்கு அனுப்பினால் அவர்களுக்கு இதைவிட சிறந்த அங்கீகாரமும் பரிசுகளும் கிடைக்கலாம். அதனால் அவர்கள் தொடர்ந்து நம் குவிகம் அமைப்பிற்குத் தங்கள் ஆதரவைத் தர வேண்டுமென்று அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.  

 குவிகம் குறும் புதினம் 24-25 ஆண்டிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள்

எண் பெயர் புனைப்பெயர் குறும் புதினம்

1 எஸ்.கௌரிசங்கர் எதிர்பாராதது
2 இலக்குவனார் திருவள்ளுவன் இளவல், குவியாடி விருதாளர் திரைக்கதை எழுதுகிறார்
3 சுஜாதா நடராஜன் நயன்தூக்கின்!
4 கல்பனா சன்யாசி சூப்பர் மார்க்கெட்
5 ராஜேஷ் வைரபாண்டியன் ஓணான் குழி
6 ஆர்.பாலஜோதி பாலஜோதி ராமச்சந்திரன் தாழம்
7 மைதிலி நாராயணன் ஷைலஜா கங்கை உள்ளம்.
8 கொற்றவன் பொன்னியின் காவலன்
9 அன்புக்கரசி ராஜ்குமார் கொட்டு முரசே
10 இராஜலட்சுமி பூமரப்பாவை
11 வசந்தா கோவிந்தராஜன் வேர்களும் விழுதுகளும்
12 சு. இராஜமாணிக்கம் அண்டனூர் சுரா செம்புலம்
13 வா.மு.கோமு மாடு மேய்க்கும் கரடியார்
14 இ.மணி அபிமானி இரண்டாவது இடம்
15 ஈ. ரா.மணிகண்டன் ஈ ரா இறைவன் பப்புன் பேராசிரியர்
16 ரா.ராஜசேகர் பியானோ வாசிக்கும் பூனை
17 மஞ்சுளா சுவாமிநாதன் கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு கொஞ்சம் பட்ஜெட்
18 எச். நஸீர் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் மனச்சிடுக்கு…
19 புவனா சந்திரசேகரன் மூன்று புள்ளிகள்
20 சங்கரி அப்பன் உறவின் மொழி
21 துரை. அறிவழகன் காத்தப்ப பூலித்தேவன்
22 கே.எஸ்.சுதாகர் நன்றே செய்வாய், பிழை செய்வாய்!
23 ஜமுனா ஜகன் மியாமி மிதவை
24 அஷ்ரப் பேகம் பெஷாரா குழலினிது யாழினிது

Saturday 16 March 2024

நான்கு நாட்கள் கொண்டாட்டம் – சிறுகதை

ஒலி வடிவில் கேட்க

“ஐயா… இதைப்போல ஒரு ஐம்பது, போஸ்ற்கார்டில் எழுதித் தர முடியுமா?” பவ்வியமாக சால்வையை இடுப்பில் ஒடுக்கிப் பிடித்தபடி அகத்தன் நின்று கொண்டிருந்தான். உடம்பின் மேல் வெறுமை படர்ந்திருந்தது. அதிலே கன்றிப்போன காயங்களும், வெய்யில் சுட்டெரித்த தழும்புகளும் இருந்தன. என்னவென்று வாங்கிப் பார்த்தார் உடையார்.

அது உண்மையில் போஸ்ற்கார்ட்டே அல்ல. அதனளவில் வெட்டப்பட்ட காகித அட்டைகள். அதில்,

பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ்

நிகழும் ரெளத்திரி வருடம், மாசி மாதம் இருபதாம் நாள் நடைபெறவிருக்கும் வள்ளியம்மையின் சாமர்த்திய வீட்டுக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

கொண்டாட்டம் நாலுநாட்கள் நடைபெறும்.

தங்கள் நல்வரவை நாடும்,

அகத்தன் – பாய்க்கியம் குடும்பத்தினர்

“ஓ… சாமத்தியச் சடங்கு வைக்கப் போறாய் போல கிடக்கு?”

Monday 11 March 2024

`பால்வண்ணம்’ சிறுகதைத்தொகுதிக்கு சரவணன் மாணிக்கவாசகம் அவர்கள் எழுதிய விமர்சனம்



பால்வண்ணம் - கே.எஸ்.சுதாகர்:


ஆசிரியர் குறிப்பு:

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையைச் சேர்ந்தவர். பொறியியல் பட்டதாரி. ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். 1983ல் இருந்து எழுதி வருகிறார். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு குறுநாவல் ஏற்கனவே வெளியான இவரது படைப்புகள். இது சிறுகதைத் தொகுப்பு.

தமிழில் நல்ல சிறுகதைகள் இருபது முதல் இருபத்தைந்து எழுத்தாளர்களாலேயே, இப்போது திரும்பத்திரும்ப எழுதப்படுகின்றது என்ற என் கருத்தை மெய்ப்பிக்கும் வகையிலேயே எல்லாம் நடக்கிறது. ஒரு நாவல் வாசித்த போது அதே எழுத்தாளரால் இரண்டு வருடங்கள் முன்பு எழுதிய தொடர்புடைய சிறுகதையை என்னால் நினைவுகூர முடிந்தது. நல்ல சிறுகதைகளை எழுத வேண்டும் என்று நினைப்பவர்கள் எழுதி முடித்ததும் சில நாட்கள் மறந்துவிட்டு இரண்டு மூன்று இடைவெளிகளில் மறுபடியும் வாசித்துப் பாருங்கள்.

கதைகளில் வேறு சாத்தியங்களையும் யோசித்துப் பாருங்கள்.

'ஏன்' என்ற கதையை எடுத்துக் கொள்வோம். அதன் மையஅச்சு, ஜனனிக்கு பிறந்த பெண்குழந்தையின் நிறம். அதைச்சுற்றியே கதை சுழன்றிருக்க வேண்டும். அக்குழந்தையைக் கொன்று, வேறெங்கோ திரிந்து கதை முடிகிறது.

தொகுப்பில் எனக்குப் பிடித்த இரண்டு கதைகள் ' பால்வண்ணம்", " யாரோ ஒளிந்திருக்கிறார்கள்". பால்வண்ணம் கதையில், அவள் இரவு வீட்டில் தங்கச் சொல்வதில் ஆரம்பித்து, இரவு, அவள் அறைக்குள் சென்றாலும் அவள் சாதாரணமாகப் பேசுவது, அவன் மனதில் அவள் உயரத்தில் இருப்பது என்று எல்லாமே நன்றாக வந்திருக்கின்றன. இரண்டாவது கதையில் மெய்நிகர் உலகம் எப்படி நிஜஉலகை ஆக்கிரமிக்கிறது என்பதில் இருந்து விலகாது செல்கிறது.

சிறுகதைகளுக்கு முக்கியமாக வேண்டியது Focus. அது பல கதைகளிலில்லை. நம்மால் பயன் பெறுவோர், எதிர்காலப் பயனுக்கு வைத்துக் கொண்டோர், உற்றார், பெற்றோர், உறவினர், நண்பர் என்று எவர் சொல்வதையும் உங்கள் கதைகளைப் பொறுத்தமட்டில் காதுகொடுத்துக் கேட்காதீர்கள். அவர்கள் மனமறிந்து பொய் சொல்பவர்கள். பொது வாசிப்பில் சொல்லப்படும் குறைகளுக்கு அதிக முக்கியத்துவம் செலுத்துங்கள். நிறைய வாசித்துக் குறைவாக எழுதுங்கள். Stock marketல் சம்பாதிப்பதை விட நல்ல சிறுகதை எழுதுவதென்பது கடினம் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.


பிரதிக்கு:

Zero Degree 89250 61999

முதல்பதிப்பு செப்டம்பர் 2022

விலை ரூ. 190.


சரவணன் மாணிக்கவாசகம்

மாசி 09, 2024

Sunday 10 March 2024

`பால்வண்ணம்’ சிறுகதைத்தொகுதிக்கு சுதர்சன் பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதிய விமர்சனம்

 


உங்கள் 'பால்வண்ணம்' சிறுகதைத் தொகுதி கிடைக்கப் பெற்றது. படித்து மகிழ்ந்தேன். மிக்க நன்றி சுதாகர்.


முகப்புக் கதை 'பால்வண்ணம்' என்னை மிகவும் கவர்ந்து கொண்டது. யுகதருமத்தின் நூல்வேலியை தகர்க்காமல் நகர்கின்ற கதை மாந்தரை சித்தரிக்கின்ற பாங்கு மிகவும் அழகு. படித்து முடித்ததும், மனதினில் இயல்பாய் சில கேள்விகள். நூல்வேலிகளைத் தகர்த்து, கனவாய் போன அந்தக் காதலின் பாதையில் ஒரு முறை ஏன் அவர்களால் நிஜமாய் பயணிக்க முடியவில்லை? மனதில் வலிமை இல்லையா? அல்லது உடலையும், உள்ளத்தையும் உறுத்தி போலியாக வாழ்ந்தாலும் சமுதாய கட்டுப்பாடுகளை மீறாமல் இருத்தலே கௌரவமான வாழ்க்கை என்று யுகதருமம் செய்த சிந்தனை சிறையின் அப்பாவி ஆயுட்கைதிகளா இவர்கள்?

'கலைந்தது கனவு' என்னை கவர்ந்த மற்றுமொரு நல்ல கதை. யார் மீதும் குறை சுமத்தாமல் ஒரு யதார்த்தத்தை அழகாக தருகின்றது. காதல் ஒரு பருவ நாடகம் என சொல்லாமல் சொல்கின்றது. இறுதியில் 'வேலைக்குப் போவதற்கான ஆயத்தத்தை தொடங்கினாள்.' என கதை முடிகின்றபோது, அவள் செல்லரித்துப் போன சம்பிரதாயங்களின் சிக்காமல் ஒரு புதுவாழ்க்கைக்கு விரைவிலேயே தயாரகிவிடுவாள் என வாசகன் மனதினில் ஒர் அமைதியுண்டாகின்றது.

'ஏன்' என்ற கதை என் ஊகத்தோடு கதை நெடுகிலும் கண்ணாமூச்சி விளையாடியது எனறுதான் சொல்ல வேண்டும். நல்லதொரு கதைக்கரு.

'அம்மாவின் எண்பதாவது பிறந்ததின உரை' என்ற கதை தலைமுறை இடைவெளிகளின் சிந்தனை மாற்றங்களினால் அம்மாக்கள் எப்படி தம் பிள்ளைகளினாலேயே கிழவிகள் ஆக்கப்படக்கூடும் என்ற விழிப்புணர்வை சுவையான சம்பவக் கோர்வைகளினூடு பதிவு செய்கின்றது.

'அனுபவம் புதுமை' கதையில் வரும் பேராசிரியரின் மனசாட்சியுடனான போராட்டத்தை படிக்கின்ற போது, கடந்து வந்த பாதையில் எமது பிள்ளைகளுக்காக நாம் மனசாட்சியுடன் நடத்திய போராட்டங்களும், சரியோ தவறோ, எடுத்த முடிவுகளும் நினைவினில் வந்து மெல்ல நெருடுகின்றது.

இந்தச் சிறுகதைத் தொகுப்பு நல்லதோர் இனிமையான வாசிப்பு அனுபவத்தை தந்திருக்கின்றது.

முன்னுரையில் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் ஞானசேகரன் குறிப்பிடுகின்ற கீழ்க்கண்ட உங்கள் கருத்து மிகவும் அருமையானது. குறிப்பாக எழுத முயற்சிப்பவர்கள் கவனத்திற் கொள்ளவேண்டியது.

_"நான் போட்டிக்கென்று சிறுகதைகள் எழுதுவதில்லை. எழுதிய சிறுகதைகளை போட்டிக்கு அனுப்புகிறேன். எழுதும் கதைகளையும் உடனே பிரசுரிப்பதில்லை. என்னுடனே இருந்து கொள்ளும் அந்தக் கதைகளை ஒரு சிற்பி செதுக்குவது போல செதுக்குகின்றேன்."_

அன்புடன்
சுதர்சன் பாலசுப்பிரமணியம்
சிட்னி (அவுஸ்திரேலியா)

Friday 8 March 2024

கொஞ்சம் இலக்கியம், கொஞ்சம் வளவளா - கங்காருப்பாய்ச்சல்கள் (41)

 

இலங்கையில் போர்க்காலங்களில் நடந்த சம்பவங்களைப்பற்றி நீங்கள் ஏன் எழுதுவதில்லை என்று சில எழுத்தாளர்களிடம் கேட்கும்போது, அவர்கள் அந்தக்காலங்களில் தாங்கள் இலங்கையில் இருக்கவில்லை என்று உதாசீனமாக அந்தக் கேள்வியைத் தட்டிக் கழிக்கின்றார்கள். ஆனால் அவர்கள் பிறப்பதற்கு முன்னால் நடந்த சரித்திரச் சம்பவங்களைப் பற்றியெல்லாம் எழுதுகின்றார்கள், தெரிந்து வைத்திருக்கின்றார்கள். சங்ககால இலக்கியங்களிலெல்லாம் மேற்கோள் காட்டுகின்றார்கள். சங்ககாலப் பாத்திரங்களை மீளவும் கொண்டுவந்து படைப்புகளில் முன் வைக்கின்றார்கள். தாங்கள் காணாத சந்தித்திராத, புத்தகங்களில் மட்டும் படித்து அறிந்த அவற்றைப் பற்றியெல்லாம் எழுத முடிகின்றது என்றால், நம் கண்முன்னே நாளாந்தம் நடக்கும் இவற்றைப்பற்றி எழுத முடியாதா என்ன?



பத்திரிகைகள், சஞ்சிகைகள், சிற்றேடுகள் பணத்திற்குள் முடங்கிக் கிடத்தல் நல்லதல்ல.

பத்திரிகையை விடுங்கள். இலக்கியத்தை வளர்த்தெடுக்கப் புறப்பட்ட சஞ்சிகைகளிற்கு இவை ஆரோகியமானதல்ல. சஞ்சிகையின் வளர்ச்சிக்கு என்று பணத்தைக் கொடுத்துவிட்டு, தன்னுடைய படைப்புகளையே போடுங்கள் என்று எழுத்தாளர்கள் தொடர்ந்து படைப்புகளை அனுப்புதல் எழுத்தாளருக்கு அழகல்ல. அதைவிடுத்து ஒரு சிலரின் படைப்புகளைப் போட வேண்டாம் என்று சொல்பவர்களும் உண்டு.

எந்தப் பெரிய கொம்பனாகவிருந்தாலும் சரி, அவரின் படைப்புகளையே தொடர்ந்து பிரசுரிக்கும் இதழாசிரியருக்கும் அது அழகல்ல. இவை ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தாது. எதிர்காலத்தில் சஞ்சிகை படுத்துவிடும்.



பத்திரிகைத்துறையில் இருந்து வந்து எழுதுபவர்களின் எழுத்து நடைக்கும், ஏனைய எழுத்தாளர்களின் எழுத்து நடைக்கும் நிறையவே வித்தியாசம் இருப்பதாக நான் உணர்கின்றேன். எழுத்தை தமது தேவைக்காகப் பாவிப்பதற்கும், மக்களின் நல்வாழ்க்கைககாக எழுதுவதற்கும் வித்தியாசம் உண்டல்லவா? ஒன்று எழுத்தை விற்பது, மற்றயது எழுத்தை வளர்ப்பது.

இயல்பாக ஆர்வத்தில் எழுதப்படும் படைப்புகளுக்கும், ஒரு கொள்கைக்காக தாம் சார்ந்த அமைப்புக்காக எழுதியே ஆகவேண்டும் என வலிந்து எழுதப்படும் படைப்புகளுக்கும் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. முதல்வகைப் படைப்புகள் இலக்கியப்படைப்புகள், இரண்டாமவை இளக்காரமானவை.

Tuesday 5 March 2024

அவசர உலகம், அவசர இலக்கியம் - கங்காருப்பாய்ச்சல்கள் (40)

 

இந்த அவசர உலகில் கதையோ நாவலோ வேகமாக நகருவதையே எல்லோரும் விரும்புகின்றார்கள்.

என்னைப் பொறுத்த வரையில் நாவலோ சிறுகதையோ அதன் போக்கில் விறுவிறுப்புக் காணப்பட வேண்டும். கதைப் போக்கில் இறுக்கம் கடைப்பிடிக்கப்படல் வேண்டும். வளவளா வாய்க்கியங்கள் வெட்டி எறியப்படல் வேண்டும்.

நாவலோ சிறுகதையோ பக்க எண்ணிக்கையால் தீர்மானம் செய்யப்படுவதில்லை. ஒரு நாவலை எழுதுபவர், எங்கே இதை யாரேனும் ஒருவர் குறுநாவல் என்று கூறிவிடுவாரோ எனப் பயந்து, தேவையில்லாமல் பக்க எண்ணிக்கையைக் கூட்டுவதற்காக எப்போதோ யாரோ எழுதிய கவிதைகள், சில ஆவணங்களை இட்டு நிரப்புவது சரியாகப்படவில்லை.

இரசனையுள்ள ஒருவரால் ஒன்றோ இரண்டோ நல்ல சிறுகதைகளை/நாவல்களைப் படைத்துவிட முடியும். ஆனால் தொடர்ந்தும் அவரால் எழுத முடியாது. அதற்கு வாசிப்பும் பயிற்சியும் வேண்டும்.

 

Friday 1 March 2024

வாசிப்பு - - கங்காருப் பாய்ச்சல்கள் (39)

 

வாசிப்பில் பலவிதமான சுவைகள் இருக்கின்றன.

சில புத்தகங்களை ஒன்றிரண்டு பக்கங்களுக்கு அப்பால் நகர்த்தவே முடியாமல் இருக்கும்.

சில புத்தகங்கள் வாசிப்பதற்கு சுவையாக இருக்கும். ஆனால் நேரத்துடன் ஒப்பிடும்போது, இப்போது இந்தப் புத்தகங்களின் தேவை என்ன? ஆறுதலாக வாசிக்கலாம்தானே என்ற நோக்கில் மனம் வைத்துவிடும். பின்னர் நேரம் இருந்தால், புத்தகத்திற்கு யோகம் இருந்தால் மீளவும் வாசிக்கப்படும்.

இன்னும் சில புத்தகங்கள் – விறுவிறுப்பாக எழுதப்பட்டிருக்கும். வாசிக்கத் தூண்டும். புத்தகத்தைக் கீழே வைக்க முடியாதபடி இழுத்துப் பிடித்து வைத்திருக்கும். வாசித்து முடித்துவிட்டு, புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, கண்ணை மூடி ஆழ்ந்து ஜோசித்தால் மனதில் ஒன்றும் இருக்காது. அதன்பின்னர் மறுபடியும் அந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்ற எண்ணமும் வராது.

இவையெல்லாவற்றையும் தாண்டி, விறுவிறுப்பாக எம்மை எங்கோ அழைத்துச் சென்று, வாசித்து முடித்தபின்னரும் மனதில் சலனத்தை ஏற்படுத்தி நீங்காத தடயமாக மனதில் வீற்றிருக்கும் புத்தகங்களும் இருக்கின்றன. அவற்றை மறுபடியும் மறுபடியும் வாசிக்க வேண்டும், இன்னமும் அதன் தேவை இருக்கின்றது என்ற நினைப்பில் பத்திரப்படுத்தி வைக்கத் தோன்றும்.

சில புத்தகங்களை, எழுதியவர்களுக்காகவே வாசிக்க வேண்டும் போல் இருப்பதில்லை. நம் கண் முன்னாலே அநியாயங்கள் பல செய்து, காறித்துப்ப வேண்டும் போல இருப்பவர்களின் – புத்தகங்கள் என்ன கனதியாக இருப்பினும் வாசிக்க வேண்டும் போல இருப்பதில்லை. சமீபத்தில் ஒரு புத்தகத்தை வாசிப்பதற்காக எடுத்தபோது – புத்தகத்தின் பின் அட்டையில் எழுதியிருந்த ஒரேயொரு பொன் வாய்க்கியத்திற்காக அந்தப் புத்தகத்தைத் திறக்காமல் இருந்தேன். அந்த வாய்க்கியம் அவருக்கே அச்சொட்டாகப் பொருந்தியிருந்ததுதான் அதற்குக் காரணம். தான் ஏதோ பெரிய கனவான் போலவும், மற்றவர்களை அவதூறு செய்வது போலவும் அந்த வாய்க்கிய அமைப்பு இருந்தது.

புத்தகத்தை வாசித்து முடித்த பின்னர், அதிலிருந்து புதிதாக பலவற்றை அறிந்துகொள்ள முடியுமென்றால் அதுவே சிறப்பு.

 

Saturday 24 February 2024

பதுங்கு குழி - எனக்குப் பிடித்த கதை



நந்தி (செ.சிவஞானசுந்தரம்)

ஹெலியின் யந்திர உறுமல் கேட்டது. ஆகாயத்தை அண்ணாந்து பார்த்தவாறு வரதன் கூக்குரலிட்டான்.

'ஒடி வாருங்கோ, தூரத்திலே இரண்டு பொம்மர்களும் தெரியுது.'

சில விநாடிகளில், மேலே மூன்று விமானங்கள் - உயரத்திலே பருந்துகள் போல் இரு பொம்மர்களும், தாழ ஒரு ஹெலிகொப்பறரும் வட்டமிட்டன. இதற்கிடையில் அந்த வட்டாரத்தில் வாழும் குடும்பங்கள் தமது பதுங்கு குழிகளில் ஒதுங்கிக் கொண்டனர். காலை 6-45 போல சூரியன் பௌர்ணமி ஒளியில் பொம்மர்கள் குறிபார்த்துச் சுடுவதற்குத் தகுந்த நேரம் என்ற பீதி எல்லோருடைய நெஞ்சையும் நெருக்கியது. அதற்கு முன் குண்டு வீச்சு இரு தடவையும் இதே நேரத்தில்தான் நல்லூரில் நடந்தது.

வரதனின் வளவில் வேலி ஓரமாக வெட்டப்பட்டிருந்த பதுங்கு குழியில் அவன், அவனின் தாய் செல்லமணி, தங்கை வரதா, அவர்கள் வீட்டில் தங்கியிருக்கும் ரோசராணியும் மரியம் பீபியும், அவர்கள் இருவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவிகள்.

'பாட்டா, எங்களுக்கும் ஒரு பதுங்குகுழி வெட்ட வேண்டும்' ;எங்கள் வகுப்பிலே எல்லாப் பையன்கள் வீட்டிலும் வெட்டியாச்சு', 'பதுங்கு குழி உயிருக்குப் பாதுகாப்பாம்'- இவ்வாறு ஐந்தாம் வகுப்பில் படிக்கும் வரதன் தன் தாயின் தகப்பனுக்கு, பாடசாலையில் இருந்து வரும்போது சில நாட்களாகக் கூறி வந்தான். செல்லத்துரைக் கிழவன் நேற்று முன்தினம் வரை இதை எல்லாம் கேட்டுச் சிரித்து விட்டுப் பேசாமல் இருந்தார். அந்த வட்டாரத்தில் இரு நாட்கள் குண்டுகள் மாடி வீடுகளில் விழுந்தது உண்மைதான். மாடிவீடுகள் போராளிகளின் காம்ப் என்ற எண்ணம் இராணுவத்திற்கு உண்டு. மாடி வீட்டு மச்சில் இருந்து 50 கலிபர் துவக்குப் பூட்டி ஹெலியை சுட்டு விழுத்த முடியுமாம். ஆனால் செல்லத்துரையின் வீடு மாடி அல்ல, அது ஒரு பழைய நாற்சார் வீடுதான். அத்துடன் பதுங்கு குழி வெட்டுவதற்குக் குறைந்தது 500 ரூபா வேண்டுமே! மூன்று பொம்மர்களை வைத்துக் கொண்டு ஒவ்வொரு வீட்டின் மேலும் அவர்களால் குண்டுகள் போட முடியாது. யாழ்ப்பாணக் கோட்டையிலிருந்து 'ஷெல்' அடிக்கிறார்கள். அதற்குப் பதுங்கு குழிகளால் பிரயோசனம் இல்லை' இப்படியாக, இலங்கை இராணுவத்தின் பரிமாணத்தை அறிந்த ஒருவர் போல் கிழவன் கூறிவந்தார்.

நேற்று முன்தினம், அதிகாலை 3-30. நல்லூரின் மேலே வானம் நொருங்கி ஒவ்வொரு வீட்டின் கூரைகளிலே இடித்துகழ்களாகச் சொரிந்தது போன்ற ஓசை எல்லோரையும் அடித்து எழுப்பியது. காங்கேசன் துறையிலிருந்து போராளிகளின் மோட்டார் வான் ஒன்றைத் துரத்தி வந்த ஒரு ஹெலி அதைக் கோட்டை விடவே, ஏமாற்றத்தில் வெறி பிடித்து துயிலிலிருந்த பூமிமேல் சரமாரியாகச் சுட்டுத்தள்ளியது. அயலிலே ஒரு வீட்டில் தூக்கத்திலிருந்த ஒரு வயோதிபரை துப்பாக்கிக் குண்டு துளைத்தது. மற்றவர்கள் வீடுகளிலே எங்கும் துவாரங்கள்: அவர்கள் வளவுகளிலே, வாழைகளிலே, பனைகளிலே, தென்னைகளிலே சன்னங்கள். அன்று நண்பகல் 'சீ பினேன்' ஒன்று வந்து படமெடுத்துச் சென்றது. சீப்பிளேன் வந்து போனால் பொம்மர் வரும் என்பதும் அனுபவம். வரதன் சொன்னான். 'கோள்மூட்டி வந்து போறான், நாளை ஆள்காட்டியைக் கூட்டிக் கொண்டு பொம்மர் வரும்' சீப்பிளேனைக் கோள்மூட்டி என்றும், பொம்மருக்குத் திசையும் குறியும் காட்டும் ஹெலியை, ஆள்காட்டி என்றும் பிள்ளைகள் பட்டம் சூட்டிவிட்டார்கள்.

அந்தியில் வரதனின் பாட்டா செல்லத்துரை இருவர் உதவியுடன் 'டானா' வடிவில் ஒரு பகுங்கு குழி வெட்டினார். பக்கத்துப் பிள்ளையார் கோயில் வளவில் சோடை போயிருந்த ஒரு தென்னைமரம் குழிக்கு மேலே அடுக்குவதற்கு வேண்டிய குற்றிகளுக்கு உபயோகப்பட்டது. அவற்றின் மேலே மண் மூட்டைகள் வைத்து மண்ணால் மூடப்பட்டது.

கிழவன் உள்ளே போகவில்லை. வெளியே மிஞ்சிய ஒரு மரக்குற்றியின் மேல், குழிக்குக் காவலாளிபோல் இருந்தார். வாய்விட்டுக் கூறாவிட்டாலும் அந்தக் குழி அவர் மனத்தில் சவக்குழியை ஞாபகமூட்டியது. வரதன் தலையை நீட்டிப் பார்த்து 'பாட்டா உள்ளே வாங்கோ' என்று அவசரப்படுத்தினான். 'தேவையானால் வாறன்' என்றார் செல்லத்துரை: சாவகாசமாக வெற்றிலையை மென்று இரத்தச் சிவப்பாகத் துப்பிக் கொண்டிருந்தார்.

மேற்குத் திசையிலே இரு பொம்மர்கள் மாறி மாறிச் சத்தாருக்குக் கீழே இறங்கியபின் மேலே உன்னிப் போகும் போது பேரோசைகள் கேட்டன. 'ஆஸ்பத்திரியைச் சுற்றித் தான் அருச்சுனை நடக்குது' என்று கிழவன் முணுமுணுத்தார். தொடர்ந்து ஹெலியின் சூடுகள்: அதை எதிர்த்து பையன்களின் 50 கலிபர் வேட்டுக்கள்: கோட்டையிலிருந்து nஷல்லோசைகள். பூமியின் நான்கு திக்கும் அதிர்ந்தன.

'வாங்கோ பாட்டா' மீண்டும் வரதன்.

Friday 16 February 2024

மன்னிப்பாரா? - எனக்குப் பிடித்த சிறுகதை



பவானி ஆழ்வாப்பிள்ளை


'மூர்த்தி, நான் பெற்ற ஒரே பிள்ளை நீயப்பா! என் ஆசை, கனவு, கற்பனை எல்லாம் உன்னைப் பொருளாகக் கொண்டவைதானே! நீ வாழ்வில் துன்பத்தைத் தேவையை உணராது வாழ்வதற்கென்றால் எந்தத் தியாகமும் எனக்குப் பெரிதாக தோன்றவில்லை. என் இதயம் துடிப்பதே உன் நினைவால் மூர்த்தி! அந்த இதயம் வெடித்து நான் இறக்க வேண்டுமென்றால் அந்த குலம் கெட்டவளை மனங்குளிர மணந்துகொள். உன்னைப் பெற்றவர்கள் ஊரில் தலைதூக்க முடியாது சிறுமைப்பட்டு, மனமுடைந்து சாவதுதான் சந்தோஷம் என்றால் அவளை மணந்துகொள்!..... எங்கே, என்னைப் பார் மூர்த்தி, அவளை மறந்துவிடுவேன் என்று ஒரு வார்த்தை சொல்லி என் மனங்குளிரச் செய்யடா!....' ஒரு வார்த்தைதான்!...... பெற்றவள் கெஞ்சுகிறேன்....' மூர்த்தி அந்தக் காட்சியை தினைவு கூரச் சகியாதவன் போல் கண்களை இறுக மூடிக்கொண்டான், பெற்றவளின் மனதை மகிழ்விக்க மூர்த்தி அந்த ஒரேயொரு வார்த்தையைக் கொடுத்து விட்டதால் இன்று உள்ளமும் உணர்வுமிழந்த உருவமாய் உலவுகிறான். அன்று மூர்த்திக்குப் பெருஞ்சோதனை. அவன் சுமை ஒன்றும் புதிதல்ல. யுகயுகமாய் இரு உணர்ச்சிகளுக்கிடையில் நிகழும் போராட்டம்தான் - ஒன்றைக் கடமை என்பர்! மற்றதைக் காதல் என்பர்! கதைகளில் படித்திருக்கிறான் மூர்த்தி. சினிமாவில் பார்த்திருக்கிறான். நேரில் கண்டுமிருக்கிறான். அவனுக்கு ஐந்து நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் நால்வர் காதலை மறந்து கடமை பெரிதெனக் கவலையற்றுக் கல்யாணமும் செய்து கொண்டார்கள். எஞ்சிய நண்பன் ஒருவன்தான் காதலித்து வெற்றி கண்டான். ஆனால் அவன் காதலித்தவளோ அந்தஸ்துள்ளவள், அழகுள்ளவள், ஆஸ்தியுள்ளவள் - எல்லா விதத்திலுமே அவனுக்கு ஈடுகொடுத்தாள். இந்நிலையில் காதலுக்குத் தோல்வி ஏது? பிச்சையைக் கூடப் பாத்திரமறிந்துதான் இடச்சொல்லி விட்டார்கள் பெரியவர்கள். காதலையும் அப்படித்தான் இடமறிந்து மதிப்பிட்டுக் கொடுக்கவேண்டுமோ?

Monday 12 February 2024

பிசகு - எனக்குப் பிடித்த சிறுகதை



க. அருள்சுப்பிரமணியம்

இளைப்பாறி ஏழெட்டு வருடங்களாகியும் ஆதியிலிருந்து எனக்கு ஆகிவந்த நல்ல பெயருக்கு இன்னும் பதினாறு வயசுதான். பொதுவில், ஒருவர் அரச சேவையிலிருந்து இளைப்பாறியதும் அவரிடமிருந்து மற்றவர்கள் பெற்று வந்த பயன்பாடுகள் அற்றுப் போக நேர்வதால் அவர் சார்ந்த ஈடுபாடு குறைவது அல்லது முற்றாக இல்லாமல் போவது வழமையான ஒன்று. என் விடயத்தில் இதற்கு மாறாக நடந்திருக்கிறது.

இன்றைக்கில்லை, வெள்ளைவேட்டி வாலாமணியில் படிப்பிக்கப் போய்வந்த அந்த ஆரம்ப நாட்களிலேயே மதிப்பும் மரியாதையும் அபரிமிதமாக வந்து அமைந்து விட்டது எனக்கு. அந்த மரியாதைப் பூவின் இதழ்கள் இன்னும் என் இல்லம் நாடி மணம் பரப்பியபடியே இருக்கின்றன. இதில் முக்கியமாக ஒன்றைச் சொல்ல வேண்டும். கிடைத்த கௌரவத்தை கட்டுக்குலையாமல் காத்துக் கொள்வது ஒன்றும் சாதாரணமான விசயமல்ல. சிறிது பிசகினாலும் சரிந்து விட வாய்ப்புண்டு.

இன்னமும், என்னைத் தெரிந்தவர்கள் எங்கே கண்டாலும் நின்று நாலு வார்த்தை சுகம் விசாரிக்காமல் விலகமாட்டார்கள். அவசர காரியமிருப்பின் போகிறபோக்கில் தலையாட்டி சிரித்துவிட்டுத்தான் போவார்கள். சிநேகமான சைகைகள் வழி தம் அன்பை வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு ஒரு திருப்தி.

சொந்த இடத்தில் மட்டுப்படாமல் வெளியூர்களிலும் என் கௌரவம் பாய்ந்து பரவியிருக்கிறது. நேற்றுக்கூட, நிலாவெளிப் பக்கமிருந்து கூட்டமாக வந்திறங்கினார்கள். எல்லாரும் வசதியாக இருக்க நாற்காலிகள் பத்தாமல் சிலர் முற்றத்திலும் நின்று கொண்டிருந்தார்கள். அடுத்த வாரம் அவர்கள் பகுதிப் பள்ளிக்கூடத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி. மாவட்ட கல்வி அதிகாரி பிரதம விருந்தினராக வருவதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார். விழாவைத் தலைமை தாங்கி நடத்திக் கொடுக்கும்படி என்னை வற்புறுத்திக் கேட்டார்கள். வழக்கத்தில் நானாகத் தேடிப் போய் உதவி செய்கிற பழக்கமுள்ளவன், வீடு தேடி வந்து விண்ணப்பவர்களின் முகம் முறிப்பேனா? முன்னரைப் போல் உடம்புக்கு முடியாவிடினும், வருகிறேன் என்றதும் வந்தவர்கள் அத்தனை பேர் முகங்களிலும் முழுநிலவு!

Monday 22 January 2024

ஆகா என்ன பொருத்தம்! – ஐந்து நிமிடத் திரைப்பிரதி

 

ஆகா என்ன பொருத்தம்!ஐந்து நிமிடத் திரைப்பிரதி

நான்கு  பாத்திரங்கள் :     தந்தை (கிருஷ்ணா)

தாய் (சாந்தி)

மகன் (பிரசாந்)

பிரசாந்தின் காதலி (அபிநயா)

 

காட்சி 1

வீடும் வெளிப்புறமும்

காலை

(பிரசாந்திற்கு 27 வயதாகின்றது. கட்டிளங்காளை. முகத்தில் வலை வேலைப்பாடுகள் கொண்ட கன்னக் கிருதா, மீசை. தினமும் மடிப்புக் கலையாமல் ஆடைகளை அயன் செய்து போடுவான். நகரத்தில் ஆர்க்கிட்டெக்காக வேலை பார்க்கின்றான்.)

கிருஷ்ணா: மகன் எங்கையோ வெளிக்கிடுறான்போல கிடக்கு. வெளியிலை மோட்டச்சைக்கிளைத் துடைச்சுக் கொண்டு நிக்கிறான். இனிச் சனிக்கிழமை வெளிக்கிட்டான் எண்டா  வர பின்னேரமாகும்.

சாந்தி: போய் விசயத்தைச் சொல்லுங்கோ. காதும் காதும் வச்சது மாதிரி இருக்கட்டும். சத்தம் போட்டுக் கதையாதையுங்கோ.

கிருஷ்ணா : அவனிட்டைக் கேக்கிறதுக்கு முதல், உம்முடைய சினேகிதி மகாலச்சுமியோடை ஒருக்காக் கதையும்.

சாந்தி: மகாலச்சுமி ஒரு ஆளைத் தூது விட்டு என்னட்டைக் கேட்டதுக்குப் பிறகுதானே நான் இந்த விசயத்தையே தொடங்கிறன்.

கிருஷ்ணா: அட்றா சக்கை எண்டானாம்… அம்மன் கோயில் புக்கை எண்டானாம்.

சாந்தி: அச்சாப் பிள்ளை மாதிரி பிரசாந்திட்டைப் போய் விசயத்தைக் கக்கி விடுங்கோ…

கிருஷ்ணா : அவன் நீ சொன்னாத்தான் கேப்பான். நான் வள் சுள் எண்டு கதைக்கிற பேர்வழி. நீயெண்டா பக்குவமாக் கதைப்பாய்.

சாந்தி : உங்களோடை நிண்டு மாரடிச்சா காரியத்துக்கு ஆகாது.

(சாந்தி வீட்டுக்குள்ளிருந்து வெளியே வருகின்றாள். மகன் பிரசாந்திடம் கேட்பதா விடுவதா என்று தயங்குகின்றாள்.)

சாந்தி: பிரசாந்… உன்னோடை ஒண்டு கதைக்க வேணும். உனக்கும் வயது வந்துட்டுது. இந்த ஆவணியோடை இருபத்தேழு முடியுது. கலியாணம் செய்து கொள்ளுற எண்ணம் ஒண்டும் இல்லையா?

பிரசாந் : ஏன் அம்மா அவசரப்படுகிறியள்? (உதட்டிற்குள் சிரிக்கின்றான் பிரசாந். அம்மா அவனையே பார்த்தபடி நின்றார்)

பிரசாந் : ஏன் ஆரேனும் பெட்டையைப் பாத்து வைச்சிருக்கிறியளோ?

சாந்தி : உனக்கு என்ரை பிறண்ட் மகாலச்சுமியைத் தெரியுந்தானே! அவவுக்கு இரண்டு பெம்பிளப்பிள்ளையள். மூத்தவள் அபிநயா Jaffna யூனியிலை கொமேர்ஸ் டிகிரி செய்யிறாள். இந்த வருஷம் ஃபைனல் முடிக்கிறாள். அவளுக்கு இப்ப மாப்பிள்ளை தேடினம்.  அவளை உனக்குப் பேசலாம் எண்டு நானும் அப்பாவும் யோசிக்கிறம்.

உனக்கு அப்நயாவைத் தெரியும் தானே!

பிரசாந் : அம்மா… முதலிலை மரி பண்ணிற பிள்ளையை எனக்குப் பிடிக்க வேணும். என்னை அவவுக்குப் பிடிக்க வேணும். நாங்கள் இரண்டு பேரும் நீண்ட  நாட்கள் வாழ வேண்டும்.

(அப்பா கிருஷ்ணா வாசலில் வந்து நின்று இவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுக்கொண்டு நிற்கின்றார்)

சாந்தி : நீ சின்னனிலை அவளோடை விளையாடியிருக்கின்றாய். பானை சட்டியளுக்கை சோறு கறி சமைச்சிருக்கிறாய். ஊஞ்சல் ஆடியிருக்கிறாய். உனக்கு அவளைத் தெரியும். உனக்கு அவளைப் பிடிக்கும்.

பிரசாந் : அது சின்னனிலதானே அம்மா. இப்ப எப்பிடி இருக்கிறாளோ? நான் அபிநயாவைக் கண்டே இப்ப ஏழெட்டு வருஷங்கள் இருக்கும். நான் கலியாணம் செய்யப்போற பெம்பிளையோடை கொஞ்சநாள் பழகிப் பாக்கவேணும் அம்மா.

கிருஷ்ணா : (கெக்கட்டம் விட்டுச் சிரிக்கின்றார்) உனக்கு வரிச்சுமட்டை அடிதான் அவை தருவினம்.

பிரசாந் : அப்பா… நானே எனக்குரிய பெண்ணைத் தெரிவு செய்யுறன். என்னால முடியாட்டா உங்களிட்டைச் சொல்லிறன். இன்னுமொரு இரண்டு மூண்டு வருஷங்கள் எனக்குத் தாருங்கோ.

கிருஷ்ணா : நல்ல படிச்ச பிள்ளையள், வடிவான பிள்ளையள் எல்லாம் போயிடுவினம். பிறகு ஆறுதலா எண்டா உனக்கு வத்தல் சொச்சல் தான் வரும்.

(கிருஷ்ணாவும் சாந்தியும் ஒருவரையொருவர் பார்க்கின்றார்கள். பிரசாந் மோட்டச்சைக்கிளைத் தள்ளிக் கொண்டு புறப்படுகின்றான்)

 

காட்சி மாற்றம் 2

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் / நகரம்

மதியம்

பிரசாந் : (தனக்குள் கதைத்தல்) அம்மா ஏதோ அபிநயா… Jaffna university எண்டு சொல்லுறா… நான் வேலை செய்யிற இடத்துக்குக் கிட்டத்தான் யூனியும் இருக்கு. ஒரு நடை எட்டி ஆளைப் போய்ப் பாத்தா நல்லா இருக்கும்.

(மதியம் போல் யூனியை நோக்கி தனது வேலை செய்யுமிடத்திலிருந்து நடக்கின்றான். கொமேர்ஸ் படிக்கும் சில ஆண்களிடம் அபிநயா பற்றி விசாரிக்கின்றான். அவர்கள் தூரத்தில் நின்றபடி அபிநயாவைக் காண்பிக்கின்றார்கள். பிரசாந் தினசரிப் பேப்பர் ஒன்றில் ஓட்டை போட்டு அதற்குள்ளால் அபிநயாவைப் பார்க்கின்றான்.)

பிரசாந்: (திரும்பவும் தனக்குள் கதைக்கின்றான்) சும்மா சொல்லக்கூடாது. அம்மா சொன்னமாதிரி, அபிநயா மூக்கும் முழியுமாக செக்கச் செவேல் எண்டுதான் இருக்கிறாள்.

(கிட்டப் போய்) என்னைத் தெரியுதா எண்டு பாருங்கோ…

அபிநயா: தெரியுமே!  (பிரசாந்தை நிமிர்ந்து பார்த்தபடி வெட்கத்துடன் சொல்கின்றாள்)

பிரசாந் : என்னைப் பிடிச்சிருக்கா?

அபிநயா : என்ன? எல்லாரும் ஒரேயடியாகக் கிழம்பிவிட்டியள் போல கிடக்கு.

பிரசாந் : ஏன்.. ஏன் அப்படிக் கேட்கின்றீர்?

அபிநயா : போனகிழமை தான் அம்மாவும் கேட்டவா. உங்களைத் திருமணம் செய்ய விருப்பமா எண்டு..

(இரண்டு பேரும் சிரிக்கின்றார்கள்.)

பிரசாந் : முதலிலை நாங்க இரண்டு பேரும் பழகுவம். இரண்டு பேருக்கும் பிடிச்சுப் போச்செண்டா பிறகு அம்மா அப்பாட்டைப் போட்டுடைப்பம்.

அபிநயா : அதுதான் எனக்கும் சரியெண்டு படுகுது. படிப்பும் முடிய இன்னும் ஆறு மாதங்கள் இருக்கு.

பிரசாந் : அப்ப நாளைக்கு எங்கை சந்திப்பம்?

அபிநயா : எண்டாலும் நீங்கள் படு அவசரம் தான்.

(இருவரும் பழகத் தொடங்கினார்கள். ஒருவருக்கும் தெரியாமல் காதும் காதும் வைச்ச மாதிரி மோட்டச்சைக்கிளில் சுற்றுகின்றார்கள். கடற்கரை, பார்க், கோயில் என்று காதல் செய்தார்கள். பிரசாந் ஒரு கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டான். அபிநயா தலைக்கு ஒரு மொட்டாக்குப் போட்டுக் கொண்டாள். பிரசாந் அபிநயாவுக்கு மோட்டச்சைக்கிள் ஓடுவதன் நுணுக்கங்களைச் சொல்லிக் குடுத்தான். இருவரும் நிறைய விடயங்களைக் கற்றுக் கொண்டார்கள். தங்களையும் புரிந்து கொண்டார்கள். பிரசாந்திற்கு நினைத்ததை விட அபிநயாவை ரொம்பவும் பிடித்துப் போனது. அவளும் கொமேர்ஸ் படித்து பிரசாந்தையும் படித்துக் கொண்டாள்.)

காட்சி மாற்றம் 3

கடற்கரை

மாலை

அபிநயா : நாங்கள் இரண்டு பேரும் பழகத் தொடங்கி இப்ப ஒரு வருஷமாப் போச்சு. இரண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சும் போச்சு. வீட்டிலையும் கலியாணம் பேசத் தொடங்கிட்டினம். இனி என்ன வீட்டிலை சொல்ல வேண்டியதுதான்.

பிரசாந் : உங்கடை குடும்பத்தாரும், எங்கடை குடும்பத்தாரும் தொடக்கி வைச்சினம். இப்ப நாங்கள் இரண்டு பேருமாச் சேந்து முடிச்சு வைக்கப் போறம்.

அபிநயா : இண்டைக்கு இரவு சாப்பாட்டு மேசையிலை நான் என்ரை அம்மா அப்பாட்டைச் சொல்லப் போறன். அதே மாதிரி நீங்களும் சொல்லுங்கோ. ஒரு ஒன்பது மணி மட்டிலை நீங்கள் எனக்கு ரெலிபோன் செய்யுறியள்.

பிரசாந் : ஏன் என்ரை அச்சாக்குஞ்சு நீர் ரெலிபோன் எடுக்க மாட்டீரோ?

 

காட்சி மாற்றம் 4

பிரசாந் வீடு

இரவு

(கிருஷ்ணா பேப்பர் படித்தபடி சாய்வனைக் கட்டிலில் இருக்கின்றார். சாந்தி குசினிக்குள் வேலையாக இருக்கின்றாள். அம்மாவைச் சுற்றி குழையக் குழைய வருகின்றான் பிரசாந்.)

சாந்தி : என்னடா குட்டி போட்ட பூனை மாதிரி சுத்திச் சுத்தி வாறாய்…

பிரசாந் : அம்மா…. முந்தி ஒருநாள் அபிநயா எண்ட பிள்ளையைப் பற்றிக் கேட்டனீங்களல்லவோ? அவளுக்குக் கலியாணம் முடிஞ்சுதோ?

(கிருஷ்ணா பேப்பருக்கு மேலால் குசினியை எட்டிப் பார்க்கின்றார்.)

சாந்தி : எடப் போடா நீ… அவள் உனக்குச் சரிவராதடா மகனே! உங்கட இரண்டு பேரின்ரையும் சாதகங்களைப் பொருத்தம் பாத்தனாங்கள். துண்டறப் பொருத்தம் இல்லை எண்டு சாத்திரி சொல்லிப் போட்டார்.

பிரசாந் : எப்ப பாத்தனியள்?

சாந்தி : ஒரு வருசத்து முன்னை. உன்னைக் கேட்ட பிறகு பாத்தனாங்கள்.

(கிருஷ்ணா உதட்டுக்குள் சிரிக்கின்றார். பிரசாந் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு தனது அறைக்குள் செல்கின்றான்.)

பிரசாந் : கண்டறியாத சாத்திரமும் மண்ணாங்கட்டியும்..

(கிருஷ்ணா சாந்தியிடம் கையால் சாடை மாடையாக என்னவென்று கேட்கின்றார்)

 

காட்சி மாற்றம் 5

பிரசாந்தின் அறை

இரவு

(பிரசாந்தின் மொபைல் போன் அடிக்கின்றது.)

அபிநயா: நீங்கள் அடிப்பியள் அடிப்பியள் எண்டு பாத்துக் கொண்டு இருந்தன். எல்லாமே புஸ் வாணமாப் போச்சு. இப்ப என்ன செய்யிறது?

பிரசாந் : விடியக் காலமை ஐஞ்சு மணிக்கு வீரபத்திரர் கோயிலடிக்கு வாரும்.

அபிநயா : என்ன சொல்லுறியள்?

பிரசாந் : சுரைக்காய்க்கு உப்பில்லை எண்டு சொல்லுறன். எங்கடை அம்மா அப்பாவை இனி உந்தச் சாத்திரத்தை ஒருக்காலும் விடமாட்டினம். நாங்கள் ஓடிப்போறதுதான் இதுக்கு ஒரே வழி.

 

Sunday 14 January 2024

நேர்முகம்


 நேர்முகம் – சிறுகதை

வருண் மருத்துவம் படிப்பதற்கான நேர்முகத் தேர்வுக்காக மெல்பேர்ணில் இருந்து சிட்னி வந்திருந்தான். அவன் ஏற்கனவே மெல்பேர்ண் பல்கலைக்கழகத்தில் மூன்று வருடங்கள் பயோசயன்ஸ் படித்திருந்தான். நேர்முகத்தேர்வு நடைபெறும் பல்கலைக்கழகத்திற்கு நேரத்திற்குப் போகவேண்டும் என்பதற்காக முதல்நாள் இரவே வந்து, பல்கலைக்கழகத்திற்கு அருகேயிருந்த சிட்னி பார்க் ஹோட்டலில் தங்கியிருந்தான்.

அதிகாலை ஏழுமணிக்கே நகரம் பன்றி கிழறிய கறையான் புற்றாகிவிட்டது. ஒரே சன நெரிசல். வருண் ஹோட்டலில் இருந்து கீழ் இறங்கி ஒரு கோப்பி அருந்தினான். போய்ச் சேரவேண்டிய இடம் பனிப்புகாரினுள் ஒளிந்திருந்தது. குளிர்காற்று உடலை ஊடுருவ கூகிள்மப் பாதை காட்டியது.

Tuesday 9 January 2024

`அலெக்ஸ் பரந்தாமனின் `ஒரு பிடி அரிசி’ சிறுகதைத்தொகுப்பு

      

ஒரு சிறுகதையானது நாம் வாழ்ந்த/வாழுகின்ற இடம், சுற்றுப்புறச்சூழல், நம் மீது ஆதிக்கும் செலுத்தும் சக்திகள் என்பவற்றைப் பொறுத்தே இருக்கும்.

எனது முதல் சிறுகதையான `ஈழநாடுபத்திரிகையில் வெளிவந்த (1983) `இனி ஒரு விதி செய்வோம்அப்படிப்பட்ட ஒன்றுதான். முதலாழி, தொழிலாளி, கண் தெரியாதவன், கால் ஊனமாகிப் போனவன், விசரி போன்ற பாத்திரங்கள் கொண்டு பின்னப்பட்டது. அதன் பின்னர், 1995 ஆம் ஆண்டு வரையும் வெளிவந்த எனது படைப்புகள், இலங்கை என்ற வட்டத்திற்குள் சுற்றிச் சுழன்று வந்து கொண்டிருந்தன. அப்புறம் புலம்பெயர்ந்து போன பின்னர், எல்லாமே மாறிப் போய்விட்டன. நான் இலங்கையில் தொடர்ந்தும் இருந்திருந்தால், அலெக்ஸ் பரந்தாமன் அவர்கள் எழுதிய `ஒரு பிடி அரிசிஎன்ற தொகுப்பில் உள்ள கதைகளைப் போலத்தான் தொடர்ந்தும் எழுதியிருப்பேன். அதற்குரிய சூழ்நிலை தான் அப்பொழுதும் / இப்பொழுதும் அங்கே நிலவுகின்றது. அப்படியான ஒரு சமுதாயத்திற்குள் தான் நானும் அப்போழுது இருந்தேன்.