Tuesday 25 April 2023

காட்சிப்பிழை - சிறுகதை - ஒலிவடிவம்

 

ஒலி வடிவில் கேட்க படத்தை `க்ளிக்’ செய்யுங்கள்
குரல் வடிவம் : ஆனந்தராணி பாலேந்திரா

Friday 21 April 2023

இருவேறு பார்வைகள் - சிறுகதை - ஒலிவடிவம்


ஒலி வடிவில் கேட்க படத்தை `க்ளிக்’ செய்யுங்கள்
 குரல் வடிவம் : ஆனந்தராணி பாலேந்திரா

Thursday 13 April 2023

பாடம் – சிறுகதை


 










சூரியகுமாருக்கு நாளை காலை பத்திற்கும் பன்னிரண்டுக்கும் இடைப்பட்ட சுப வேளையில் திருமண எழுத்து நடைபெற இருந்தது.

சூரியகுமாரின் அக்காவும் அத்தானும் மகள் ஆரபியும் நான்கு நாட்கள் முன்பதாகவே வீட்டிற்கு வந்துவிட்டார்கள். அக்கா தான் வீட்டிற்கு மூத்தவள். அதற்கடுத்து வரிசைக்கிரமமாக ஐந்து ஆண்கள். சூரியகுமார் கடைக்குட்டி.

அப்பா துரை சாய்வனைக்கதிரைக்குள் ஒருக்களித்துச் சரிந்தபடி எல்லாவற்றையும் அவதானித்தபடி இருக்கின்றார். அவரால் முன்னையைப்போல ஓடியாடி வேலைகள் செய்ய முடிவதில்லை. அவர் தனது மகளுக்கும், மூத்த மருமகளுக்கும் துரோகம் இழைத்துவிட்டதாக நினைத்து இன்று மனம் மறுகுகின்றார். மூத்தவள் இன்று எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாகக் கணவருடன் குடும்பம் நடத்துகின்றாள் என எண்ணுகின்றார்.

மறந்துவிடக்கூடிய சாதாரண நிகழ்வா அது! அவரின் மனம் அங்கே தாவுகின்றது.

பள்ளியால் வந்த மகள் புத்தகப்பொதியைத் தொப்பென்று போட்டுவிட்டு, வீட்டு வளவிற்குள் வேலிக்கரையோரமாக ஓடுகின்றாள். அவளது அவசரத்தை அவதானித்த அப்பா, வீட்டைவிட்டு வெளியேறி வீதிக்கு வந்து எட்டிப் பார்க்கின்றார். வாட்டசாட்டமான இளைஞன் ஒருவன் கிடுகுவேலியுடன் கதை பேசியபடி நிற்கின்றான். துரையைக் கண்டவுடன் வேலிக்குள் எதையோ மறைத்துவிட்டு மாயமாக அந்த இடத்தைவிட்டு நழுவிவிட்டான். வேலிக்குள் சொருகியிருந்த கடிதத்தை எடுத்து வந்தார் துரை. மகளைக் கூப்பிட்டார்.

“இதை முற்றத்திலை போட்டு என் கண் முன்னாலே எரி” தீப்பெட்டியை நீட்டினார் அப்பா. கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்பதை அவளும் அறியாள், அப்பாவும் அறியார்.

Friday 7 April 2023

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் (14/14)

 

அதிகாரம் 14 – அவளின் விலை

ஒரு காலத்தில் பெரிய ‘ஹீரோயினாக’ தொழிற்சாலையை வலம் வந்த புங், கடந்த இரண்டு வாரங்களாகப் பேச்சு மூச்சற்று இருக்கின்றாள். முகத்தில் பூச்சற்று, நறுமணமற்று யாருடனும் பேசமுடியாதவாறு ஏங்கித் தவிக்கின்றாள். இப்பொழுதெல்லாம் அவளை நிமிர்ந்து பார்க்கும் ஒருவன் நந்தன் தான்.

இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் அவள் எல்லாவற்றையும் தவிர்த்தே இருந்திருப்பாள். அவள் யார் மனதையும் புண்படுத்தியதாக இதுவரை காலமும் தொழிற்சாலையில் ஒருவரும் சொல்லவில்லை. இத்தனை காலமும் நந்தனுக்கு அவள் செய்த உதவிகளுக்கு நன்றிக் கடனாக வாய் மூடி மெளனமாக இருந்தான் அவன்.

“எனக்கு ஸ்ரோரில் வேலை கிடைத்திருக்கின்றது. பகல் வேலை. நிறைய ஓவர்டைம் இருக்கும். குடும்பத்தையும் பார்க்கலாம்” மகிழ்வுடன் எல்லாருக்கும் சொல்லித் திரிந்தாள்.

உண்மையில் இதுதான் நடந்தது. ஜோசுவாவை வேலை நீக்கம் செய்தபின்னர், புங்கை காரின் உதிரிப்பாகங்கள் வைத்திருக்கும் தொழிற்சாலயின் ஸ்ரோர் பகுதிக்கு இடம் மாற்றிவிட்டார்கள்.

Tuesday 4 April 2023

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் (13/14)

 
அதிகாரம் 13 – பெண் சிலந்தி (peacock spider)

அந்தச் சம்பவத்தை அறிந்த வான் மான் நூஜ்ஜின், ஒருநாள் நந்தனை இரகசியமாக் கூப்பிட்டான். வான் மான் நூஜ்ஜின் இப்போது போனும் கையுமாகத் திரிகின்றான். வேலை செய்யும்போதும் ஒரு கையில் போன். சாப்பிடும்போதும் போன். சிறுநீர் கழிக்கும்போதும் ஒரு கையில் போன். அவனது போனில் ஆங்கில வார்த்தைகள் கிடையாது. தாய்மொழிக்கே முதலிடம். வியட்நாம் பாஷையில் ஃபேஸ்புக் துள்ளித் திரிந்தது. அவன் தனது போனைத் திறந்து ஒரு வீடியோக்கிளிப்பை நந்தனுக்குக் காண்பித்தான். அதில் புங் – நடப்பது, இருப்பது, ஓடுவது, சிரிப்பது போன்ற காட்சிகளைக் கொண்ட ஒரு கிளிப் ஆக இருந்தது. எப்பவோ களவாக அவளைப் பின் தொடர்ந்து எடுத்திருக்கின்றான் நூஜ்ஜின்.

“ஐ லைக் புங்” என்றான் நூஜ்ஜின்.

“ஏற்கனவே நீ இரண்டு பெண்டாட்டிக்காரன். மூண்டாவதும் கேட்குதோ? உதை மூடி வை. வீட்டை போகப் போறாய்” நந்தன் தனது மூக்கை சப்பையாக நசித்துக் காண்பித்தான்.

ஓட்டமெடுத்தான் நூஜ்ஜின்.

Saturday 1 April 2023

மெல்பேர்ண் வெதர் – குறுநாவல் (12/14)

 

அதிகாரம் 12 – கிணறு வெட்டப் பூதம்

தொழிற்சாலைக்கு புதியவர்களை காலத்துக்குக் காலம் வேலைக்கு எடுப்பது வழமை. அப்படி வருபவர்களை ஆறுமாத கால ஒப்பந்த அடிப்படையில் எடுத்து, பின்னர் நன்றாக பணி புரிபவர்களை நிரந்தரமாக்குவார்கள். சிலரை மேலும் ஆறுமாதங்கள் வைத்திருந்து பார்ப்பார்கள். நன்றாகச் செய்தால் அவர்களையும் நிரந்தரமாக்குவார்கள். ஒன்றுக்கும் உதவாதவர்களை கலைத்து விடுவார்கள்.

அதே நேரத்தில் தொழிற்சாலையில் பல வருடங்கள் வேலை செய்பவர்களை, அவர்கள் விரும்பினால் ஒரு தொகையைக் கொடுத்து (package) தொழிற்சாலையில் இருந்து விலகும்படி கேட்பார்கள். குழறுபடி செய்பவர்கள், சோம்பேறிகள், பிரைச்சனைக்குரியவர்களைத் தேடிப் பிடித்துக் கலைத்தார்கள்.

ஒருநாள் - தெளிந்த நீரோடைக்குள் பாறாங்கல் விழுந்தது போல தொழிற்சாலையில் ஒரு சலசலப்பு. அதை பலரும் கூட்டமாக ஒளித்திருந்து விவாதித்தார்கள். ஒருவருக்கும் சரியான தகவல் தெரியவில்லை. புதிதாக வந்த பெண்கள் பற்றியதாக அந்தப் பேச்சு இருந்தது.

ஒப்பந்தத்தை நீடிக்க வேண்டுமாயின், தன்னுடன் படுத்து எழும்ப வேண்டும் என மக்காறியோ ஒரு பெண்ணிடம் கேட்டதாகத் தகவல்.