
கடந்த வருட ஆரம்பத்தில் ’பின்லாந்தின் பசுமை நினைவுகள்’
என்ற புத்தகத்தை வாசித்திருந்தேன். உதயணன் என்னும் புனைபெயரைக் கொண்ட
ஆர்.சிவலிங்கம் என்பவர் அதன் ஆசிரியர். கனடாவில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு
வந்திருந்த, பல்கலைக்கழகத்தில் என்னுடன் ஒன்றாகப் படித்திருந்த நண்பன்---ஆசிரியரின்
மருமகன்--அந்தப் புத்தகத்தை எனக்குத் தந்திருந்தார்.
உதயணன் 1957 – 1980 காலப்பகுதிகளில் வீரகேசரி, தினகரன், சுதந்திரன்,
ஈழநாடு, சிந்தாமணி, தினபதி மலர், சுடர், அஞ்சலி, கலைச்செல்வி, தமிழோசை, தமிழின்பம்
போன்றவற்றில் எழுபதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிக் குவித்தவர். கல்கி,
குமுதம் போன்ற இந்திய இதழ்களிலும் சில படைப்புகள் வந்துள்ளன. கலைச்செல்வியில் ‘இதய
வானிலே’, ‘மனப்பாறை’ ஆகிய நாவல்களும், வீரகேசரிப் பிரசுர நாவல்களாக ‘பொன்னான
மலரல்லவோ’, ‘அந்தரங்ககீதம்’ (சில மாறுதல்களுடன் ’மனப்பாறை’) போன்ற நாவல்களையும்
எழுதியிருக்கின்றார். மேலும் மித்திரன் நாளிதழில் ‘மனக்கோட்டை’ தொடர்கதை,
சிந்தாமணியில் ‘கொடிமல்லிகை’ குறுநாவல் வந்துள்ளன. அத்துடன் நகைச்சுவைக் கட்டுரை,
இதழியல், மொழிபெயர்ப்பு என்பவற்றிலும் சிறந்து விளங்குகின்றார்.

ஆரம்பத்தில் ஆசிரியராக நாவலப்பிட்டியிலும், பின்னர்
அரசாங்க எழுதுவினைஞராக பல்வேறு பகுதிகளிலும் கடமையாற்றினார். சில வருடங்கள்
ஈராக்கில் பணி புரிந்தார்.