Wednesday, 29 August 2018

மெல்பேர்ண் வெதர் (8) - குறு நாவல் அதிகாரம் 8 - கொண்டாட்டம்

மக்காறியோ செய்யமுடியாததை தான் செய்து முடித்துவிட்டதாக தப்பட்டம் அடித்தான் ஜோசுவா. ஆனால் மக்காறியோ அதை நம்பத் தயாரில்லை. நிஜத்தில் ஒருநாள் காட்டுகின்றேன் எனச் சபதம் போட்டான் ஜோசுவா.

ஒருநாள் டியர்பார்க் ஹோட்டலில் இரவைக் கழிப்பதென முடிவு செய்தார்கள் ஜோசுவாவும் புங்கும். இரண்டுபேரும் கார்த்தரிப்பிடத்தில், வேலை ஆரம்பித்து பதினைந்து நிமிடங்களுக்குள் சந்தித்துக் கொள்வதென்று முடிவு செய்திருந்தார்கள்.

வேலை ஆரம்பிப்பதற்கான மணி ஒலி கேட்டது. சற்று நேரத்தில் காரில் இருந்து இறங்கி சுற்றுமுற்றும் பார்த்தாள் புங். குளிர் காலம் வானம் இருண்டு கிடந்தது. மெதுவாக நடந்து ஜோசுவாவின் காரைச் சேர்ந்தாள். கதவைத் திறந்து, கார் சீற்றைச் சரித்துவிட்டு குளிர் உடுப்பின் தொப்பியால் தன் தலையை மூடிக்கொண்டு ஒருக்களித்துப் படுத்தாள். இனி அவளைத் தெருவில் போகும் ஒருவரும் கண்டுகொள்ள முடியாது.

ஜோசுவா தன் கழுத்தைச் சரித்து அவளைப் பார்த்துச் சிரித்தான். அவள் ஒன்றும் சொல்லாமல் மெளனமாக தன் வாயைச் சுழித்தாள். அந்தச் சுழிப்பு அவன் மனதைக் கிறங்க வைக்க காரை மெதுவாகக் கிழப்பினான்.

இந்தக் காட்சியை கார்த்தரிப்பிடத்தில் இன்னொரு காருக்குள்ளிருந்து மக்காறியோ பார்த்துக் கொண்டிருந்தான்.

Wednesday, 22 August 2018

மெல்பேர்ண் வெதர் (7) - குறு நாவல்


அதிகாரம் 7 - பின் தொடருதல்

தொழிற்சாலை நிர்வாகம், ஒவ்வொரு கிழமையும் வேலை செய்யும் நேரங்களில் இரண்டுமணித்தியாலங்களை சேகரித்து வைத்துக் கொள்வார்கள். இருபதுநாட்களுக்கொருதடவை அப்படிச் சேரும் நேரத்தை வேலை செய்பவர்கள் வேண்டும்போது ஒரு லீவு நாளாக எடுத்துக் கொள்ளலாம். இந்த முறைமையை RDO- Roaster Day Off என்று சொல்வார்கள்.

இந்த RDO வை சாதகமாகப் பாவித்து காதல் சோடிகள் லீவு எடுத்துக் கொள்வார்கள். அன்றைய தினத்தை முழுவதும் கொண்டாடியே தீருவார்கள். அவர்கள் வேறு வேறு குறூப்பில் இருந்துவிட்டால் லீவு எடுப்பதில் எந்தவித பிரச்சினையும் இராது. ஒரே குறூப்பில் இருந்தால், இரண்டுபேர்கள் ஒரு நேரத்தில் RDO வைப் பாவிக்க முடியாது. இருக்கவே இருக்கின்றது ‘சிக் லீவ்’. இருவருக்கும் தீராத வருத்தம் வந்துவிட்டால் அதுவே துணை.

இப்படிப்பட்ட ஒருவர் குறூப்பில் வரவில்லை என்றால், அவரின் சோடி வந்திருக்கின்றாரா என்று மற்றைய பகுதிகளில் தேடிக் கண்டுபிடித்து விடுவார்கள். அன்று முழுவதும் அவர்களைப் பற்றிய கதைகள்தாம் கதைப்பார்கள்.

“நண்பா! இப்போது அவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள்?”

Wednesday, 15 August 2018

மெல்பேர்ண் வெதர் (6) - குறு நாவல்


அதிகாரம் 6 - புங் ஒரு புதிர்

நந்தன் வேலை செய்யும் பகுதிக்கு முதல் பகுதியான BODY SHOP இல் சில தமிழ் இளைஞர்கள் வேலை செய்து வந்தார்கள். இந்த ‘பொடி ஷொப்பில்’ தயாரிக்கப்படும் காரின் முதுகெலும்பான பனல்கள், கதவுகள், உதிரிப்பாகங்கள் போன்ற இரும்பிலான பாகங்கள் வெல்டிங் மூலம் இணைக்கப்படுகின்றன. பின்னர் அந்த உடல்கள் கொன்வேயர் (conveyor) மூலம் PAINT SHOP இற்கு இழுத்து வரப்படுகின்றன.

’பெயின்ற் ஷொப்பில்’ வேலை முடித்து நந்தன் வீடு திரும்பும்போது அந்தத் தமிழ் இளைஞர்கள் வெளியிலே இருக்கும் வாங்குகளில் இருந்து கதைப்பதை அவதானித்திருக்கின்றான். அன்று அவர்கள் பெரிதாகச் சத்தம் போட்டு வாக்குவாதத்தில் இருந்தார்கள். அதற்குக் காரணம் குலம்.

குலம் சமீபத்தில் அவர்கள் வேலை செய்யும் பகுதிக்கு புதிதாக வேலைக்கு வந்திருந்தான். அவனுக்கு ஒரு பிரச்சினை இருந்தது. அவன் வேலை செய்யும் இடங்களில் யாராவது சிங்களவரைக் கண்டுவிட்டால் – அவர் யாரென்றும் பாராமல் அடித்துவிடுவான். பிறகு வீட்டிற்கு வந்துவிடுவான். இத்தனைக்கும் அவன் மனநிலை பாதிப்படைந்தவன் அல்ல. மனநிலை பாதிப்படைந்த சிங்களவர்களால் அவன் குடும்பத்திற்கு நேர்ந்த அவலம். அவனது இந்த அடிக்கும் செயலால் பல இடங்களில் வேலையை இழந்திருக்கின்றான். இதனால் அவன் ஒருபோதும் வேலையில் நிரந்தரமாக இருந்தது கிடையாது.. குலத்திற்கு என்ன நடக்கும் என்பது அங்குள்ளவர்களின் கவலையாக இருந்தது.

Wednesday, 8 August 2018

மெல்பேர்ண் வெதர் (5) - குறு நாவல்


 

அதிகாரம் 5 - ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை.

இப்போது நந்தனும் புங்கும் பெயின்ரின் தரத்தை நிர்ணயிக்கும் குவாலிற்றி கொன்ரோல் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஹெவின் என்னும் ஜெர்மன் நாட்டுமனிதர் குறூப்லீடராக இருந்தார். அறுபது வயதை நெருங்கும் நோமா என்ற நியூசிலாந்துப் பெண்மணியும், நட்டஷா என்ற கிறீக் நாட்டு இளம்பெண்ணும் ரீம்லீடர்களாக இருந்தார்கள்.

ஒருமுறை வேலை சற்று முன்னதாக எல்லாப் பகுதிகளிலும் முடிவடைந்து விட்டது. இரவு ஒரு மணி இருக்கும். வேலை செய்யுமிடத்தை துப்பரவு செய்துவிட்டு, ஒவ்வொருவரும் அவரவர் வேலையில் மூழ்கி இருந்தார்கள். புங் நிலத்தில், முதுகை சுவருடன் சார்த்தியபடி தனது ரெலிபோனில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தாள். வியட்நாமியர்கள் கொடுத்து வைத்தவர்கள். குள்ள உருவம் கொண்டதால் வளைந்து நெளிந்து வேலை செய்வார்கள். நினைத்த நேரம் நினைத்தபடி இருந்து எழும்புவார்கள்.

அப்போது அங்கே ஜோசுவா வந்தான். அவன் இப்போது Electro Deposition (பிறைமர் அடிப்பதற்கு முன், இரும்பிற்கு மின்னால் பதியவைத்தல்) என்ற பகுதியின் குறூப்லீடராக இருக்கின்றான். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு புங்கிற்கு முன்னால் குந்தி இருந்தான்.

Wednesday, 1 August 2018

மெல்பேர்ண் வெதர் (4) - குறு நாவல்
அதிகாரம் 4 : தவறுகள் வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்கின்றன

கணவனும் மனைவியும் தங்கள் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யாமல் இருக்கும்போது பிரச்சினைகள் ஆரம்பமாகின்றன. குடும்பத்தில் இருவரும் வேலை செய்யும் போது, குடும்பத்தை கொண்டு நடத்துவதில் சிக்கல் ஏற்படுகின்றது, அடுத்தவருடன் தம்மை, தம் பிள்ளைகளை ஒப்பிடுதல் சிக்கலுக்கு ஆரம்பம்.

மக்காறியோவின் மீதான விசாரணை புஸ்வாணமாகிப் போனது. அவனுக்கு எந்தவிதமான தண்டனையும் கிடைக்கவில்லை. ஆனால் அவன் மீதான ஒரு பதிவு ‘மனிதவள மேலாண்மை’ப் பகுதியில் (Human Resources) இருந்தது.

ஆனால் என்ன வேடிக்கை, இருவரும் ஒன்றுமே நடவாதது போல மீண்டும் பழகத் தொடங்கினார்கள். மக்காறியோவிற்கு சிலவேளை புங் மீது வன்மம் இருக்கக்கூடும். ஆனால் அவள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு சுமுகமாகக் கதைத்தாள், வேலை செய்தாள்.

புங் ஒரு அப்பாவி போலவும் எதையும் எளிதில் நம்பி விடுபவள் போலவும் காணப்பட்டாள்.

அவளுடன் உரையாடலை எப்படித் தொடங்குவது என்று நந்தனுக்குச் சங்கடமாக இருக்கும். ஆனால் அவள் நினைத்த நேரம் நினைத்த இடத்தில் பேச்சை ஆரம்பித்துவிடுவாள். சுற்றுச்சூழ இருப்பவர்களை அவள் கணக்கில் எடுப்பதில்லை.