இது ஒரு சோசலிச இலக்கியம். கதை கிர்கீஸிய (Kyrgyzstan)
என்னும் இடத்தில் நடைபெறுகின்றது. இதன் அயல் நாடுகளாக கஸ்கஸ்தான், சீனா
இருக்கின்றன. இந்தக்கதையின் கதைசொல்லி---கிச்சினே பாலா---தன் பதின்ம வயதில்
நடந்தவற்றைச் சொல்கின்றான். அப்போது அவனுக்கு வயது 15. இரண்டாம் உலகப்போர்
நடைபெற்ற காலம். அவனது சொந்தபந்தங்கள் கூர்ஸ்க்கிலும் ஒர்யோலிலும் உள்ள
போர்முனைகளில். பெண்களும் போர்முனைக்குச் செல்ல இயலாதவர்களும் சிறுவர்களும்
கூட்டுப்பண்ணையில் வேலை செய்கின்றார்கள். வயலில் வேலை செய்வதும் தானியத்தை ரயில்
நிலையத்திற்குக் கொண்டு செல்வதும் அவன் வேலை. அவனது இரண்டு சகோதர்களும்
போர்முனையில். தாயாரும் தங்கையும் வீட்டில். முதிய தகப்பனார் தனது
தச்சுக்கூடத்தில் வேலை செய்கின்றார்.
அவனது பக்கத்து வீட்டு (சிறியவீடு என்று அழைப்பார்கள்)
நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட, அவரது விதவையை அவனின் தகப்பனார் மணந்து
கொள்கின்றார். விதவையின் இரண்டு மகன்கள்கூடப் போர்முனையில். மூத்தவன் ஸாதிக் மணம்
முடித்து சிறிது காலத்திற்குள்ளாகவே போர்முனைக்குச் சென்றுவிட்டான். ஸாதிக்கின் மனைவிதான்
ஜமீலா. அவர்களும் கூட்டுப்பண்ணையில் வேலை செய்கின்றார்கள்.