(ஞானம் சஞ்சிகை நடத்திய அமரர் செம்பியன்செல்வன் (ஆ.இராஜகோபால்) ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி - 2018 இல் இரண்டாம் பரிசு பெற்ற கதை.)
”சேர்! எங்கே என் மனைவி உமா? வழமையாக எட்டு
மணிக்கெல்லாம் இங்கே வந்துவிடுவாரே…” காரைத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு வேகமாக
வந்த களைப்பில், மனைவியைக் காணாத அதிர்ச்சியுடன் கேட்டான் சிறீபாலன்.
“பயப்படாதீர்கள்! இன்னும் அரைமணி நேரத்திற்குள் இங்கு வந்துவிடுவார்.
இன்று கொஞ்சம் தாமதமாகிவிட்டது. நீங்கள் வெளியே உள்ள இருக்கையில்
அமர்ந்துகொள்ளுங்கள். அங்கே நிறையப் புத்தகங்கள் இருக்கின்றன. அல்லது ரெலிவிஷன்
பார்க்கலாம்” சொல்லியபடியே அந்த ஆண் தாதி சிறீபாலனை நிமிர்ந்து பார்த்தார். பார்த்த
மாத்திரத்தில், சிறீபாலனுக்கு இந்த நிலை வந்திருக்கக்கூடாது எனக் கவலை கொண்டார்.
அவருக்கு அருகே இருந்த பெண் தாதி மேசையில் குனிந்தபடி அவசர அவசரமாக எதையோ எழுதிக்
கொண்டிருந்தார்.