நேர்காணல் – கே.எஸ்.சுதாகர்/தி.ஞானசேகரன் இணையவளி
பகுதி (2/2)
9) எழுத்து தவிர்ந்த வேறு என்ன இலக்கியச்
செயற்பாடுகளில் இயங்கி வருகிறீர்கள்?
எழுதுவதைக் காட்டிலும்
வாசிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. சிறுவயது முதல் இன்றுவரை தொடர்ச்சியாக வாசித்து
வருகின்றேன். வாசித்த புத்தகங்களில் சிறந்தவற்றை நண்பர்களுக்கு அறிமுகம் செய்வது, நண்பர்களிடையே
புத்தகங்களைப் பரிமாறிக்கொள்வது, கலந்துரையாடுவது மகிழ்ச்சி தரும் செயல்கள். போகும்
இடங்களில் இலக்கியநண்பர்களைச் சந்தித்து உரையாடுவது மனதிற்கு இதமானது. கனடா, இந்தியா
போன்ற நாடுகளுக்குச் சென்றபோது சில எழுத்தாளர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது.
அதேபோல பிறநாடுகளில் இருந்து இங்கு வரும் இலக்கியவாதிகளைச் சந்திப்பதும் உண்டு. கனடா
சென்றிருந்தபோது குரு.அரவிந்தன், வ.ந.கிரிதரன், எல்லாளன்(ராஜசிஙகம்), கடல்புத்திரன்(பாலமுரளி),
தேவகாந்தன், அகில், ஸ்ரீரஞ்சனி என்பவர்களைச் சந்தித்தது இன்னமும் பசுமையாக இருக்கின்றது.
அதேபோல் இந்தியாவிற்குச் சென்றபோது நா.முத்துநிலவன், அண்டனூர் சுரா, ஸ்ரீரசா (இரவிக்குமார்)
என்பவர்களைச் சந்தித்திருந்தேன்.
இணையங்களில் இல்லாத மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேடிப்பிடித்து தமிழில் தட்டச்சு செய்தும், இணையம் / வலைப்பூ இல்லாத எழுத்தாளர்களின் சில நல்ல படைப்புகளைத் தேடிப் பெற்றும் எனது வலைப்பூவில் பதிவிடுகின்றேன். நல்ல படைப்புகளை இனம் கண்டுகொண்டு, அவற்றை வாசகர்கள் படிப்பதற்காக இணையங்களிலும் முகநூல்களிலும் அறிமுகம் செய்கின்றேன்.