1983
ஆண்டு நாட்டில் இனமுறுகல் மேலும் தீவிரமடைந்தது. ஜே.ஆர். ஜெயவர்த்தன அதற்கு மேலும்
மேலும் எண்ணெய் விட்டுக்கொண்டிருந்தார். யூலையில் பெரும் கலவரமாக வெடித்த அது பல தமிழர்களைக்
காவு கொண்டது.
சந்திரமோகனுக்கும்
பத்மினிக்கும் இடையில் இருந்த பிணக்கைத் தீர்த்து வைக்க பல மாதங்கள் எடுத்தன.
அவர்கள் இருவரும் இணைந்து வாழ்வதை, அவர்களைத் தவிர மற்ற எல்லாரும்
விரும்பியிருந்தார்கள். இதனால் விவாகரத்திற்கு விண்ணப்பிக்க பல மாதங்கள் எடுத்தன.
பொத்தி
வைக்கப்பட்டிருந்த இரகசியம் மெல்ல கசியத் தொடங்கியது. மலையகத்தில் இவர்களின்
பிரிவைப் பற்றி ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை. பத்மினியை அங்கு கூட்டிச்
செல்லாததற்கு நிறையவே சாக்குப் போக்குகள் சொல்லி வந்தான் சந்திரமோகன்.
நாட்டுபிரச்சினைகளையும் அதற்குக் காரணமாக இழுத்தான்.
சந்திரமோகனுக்குத் திருமணம் என்று கேள்விப்பட்ட நாளில் இருந்து சாரதா பித்துப் பிடித்தவள் போலானாள். எதையும் எவரையும் வெறித்துப் பார்த்தபடி இருந்தாள். தினமும் கோவிலுக்குச் சென்று சுவாமியை முழுசிப் பார்த்தாள். சந்திரமோகனுக்குத் திருமணம் நடந்த அன்று காலைகூட கோவிலில் போய் இருந்துவிட்டாள். பின்னர் அவளை பலாத்காரமாகவே கோவிலில் இருந்து அகற்ற வேண்டியிருந்தது.