”அண்ணா! இஞ்சை வந்து பார் அம்மாவை...” வரதலிங்கத்தின் காதிற்குள் கிசுகிசுத்தான் சதாநேசன். இருவரும் பூனை போல கால்களைத் தூக்கித் தூக்கி வைத்து நடந்து, அம்மாவின் அறையை நோக்கிச் சென்றார்கள்., மறைவாக நின்று அம்மாவை எட்டிப் பார்த்தார்கள்.
அம்மா படுக்கையில் அமர்ந்தவாறு, வரதலிங்கம் சுவிஷில் இருந்து கொண்டுவந்த ஆடைகளைப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரின் பஞ்சு போன்ற பாதங்கள் கட்டிலிலிருந்து நீண்டு அந்தரத்தில் தொங்கி ஆடிக்கொண்டிருந்தன. மனம் எங்கோ லயித்திருக்க, உதடுகள் மெல்லச் சிரிப்பதும் மூடுவதுமாக இருந்தன.
அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக இன்று காலைதான் வரதலிங்கமும் மனைவியும் சுவிஷிலிருந்து வந்திருந்தார்கள். வரதலிங்கம் ஒரு பக்திப்பழம். தனது கற்பித்தல் தவிர்ந்த நேரங்களில் - சுவிஷ் கோவில் ஒன்றில், அங்கீகரிக்கபடாத மந்திரங்கள் தெரியாத, மடைப்பள்ளி ஐயராக இருக்கின்றான். அவன் அம்மாவிற்காக சுவிஷில் இருந்து விலையுயர்ந்த ஆடைகளை வாங்கியிருந்தான். அம்மா வெள்ளை ஆடைகளை அணிவதில்லை. அதே நேரத்தில் மயிர்க்கூச்செறியும் ஆடைகளையும் தெரிவு செய்வதில்லை. மெல்லிய வர்ணங்கள்தான் அவர் விருப்பம். இதை ஏற்கனவே அறிந்திருந்த வரதலிங்கத்தின் மனைவி, அவருக்குப் பொருத்தமான ஆடைகளை வாங்கி வந்து அசத்தியிருந்தாள். வரதலிங்கத்திற்கும் சதாநேசனுக்கும் பின்னாலே நின்று தலையை நீட்டி மடக்கி அம்மாவை எட்டிப் பார்த்ததில் அவளுக்கு மூச்சிரைத்தது. உயரம் கட்டை என்பதால் துள்ளித்துள்ளி ஓசை எழுப்பியபடி அந்த அதிசயக் காட்சியைப் பார்த்தாள். அவளின் தொங்கலைப் பார்த்த இருவருக்கும் சிரிப்பு வர, அடக்க முடியாமல் போய்விட்டது. அதுவே அம்மாவின் செய்கைக்கு முற்றுபுள்ளி வைத்தது. நிமிர்ந்து அவர்களைப் பார்த்தார் அம்மா.