Monday, 26 August 2024

ஒருபக்கம். மறுபக்கம்? - நெடுங்கதை

 

நன்றி : சொல்வனம் இலக்கிய இதழ்

பகுதி 2

“அப்பா… இஞ்சை பாருங்கோ சீனறியை…” ஆச்சரியத்தால் செளம்யாவின் கண்கள் அகல விரிந்தன. அமலனின் சத்தம் வராது போகவே, “அப்பா சரியான நித்திரை” என்றாள்.

தாரிணி சீற்றுக்குள்ளால் கையை நுழைத்து அமலனுக்குக் கிச்சுக்கிச்சு மூட்டினாள்.

“இந்தாள் இப்பிடியே தூங்கி வழிஞ்சா ரஞ்சனுக்கு நித்திரைதான் வரும். பிள்ளை நீ போய் முன்னுக்கு இரு…” செளம்யாவைப் பார்த்து தாரிணி சொன்னாள்.

“றைவிங் செய்யேக்கை நான் ஒருநாளும் தூங்க மாட்டன்” என்றான் ரஞ்சன்.

இவர்களின் கலாட்டாவில் சிந்தனை அறுந்த அமலன், கண்ணைக் கசக்கியபடியே சுற்றுமுற்றும் பார்த்தான். சில மலைகள் ஒதுங்கிப் பதுங்கி பின்புறம் ஓட, பனித்தூவல் சூழ்ந்த செழிப்புடன் கூடிய பிரதேசமென எங்குமே பச்சைப்பசேல் என்றிருந்தது மலையகம்.

“கண்டி வந்திட்டுது” என்றான் அமலன்.

Tuesday, 20 August 2024

ஒருபக்கம். மறுபக்கம்? - நெடுங்கதை

நன்றி : சொல்வனம் இலக்கிய இதழ்

பகுதி 1

முப்பத்தி இரண்டு வருடங்களில் ஒருவரால் என்னவெல்லாம் செய்ய முடியும்? ஒரு வேலையில் அமர்ந்து படிப்படியாக முன்னேறி மனேஜராகலாம்; திருமணம் முடித்து பிள்ளைகள் பெற்று பேரப்பிள்ளைகளையும் கண்டடையலாம்; ஒரு அழகான வீடு கட்டி, முன்னே வாகனங்களை நிறுத்தி வைக்கலாம். இப்படி மூச்சு முட்டிக் களைத்து விழும்வரை ஒருவரால் அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆனாலும் இந்தக் காலப்பகுதியில் எத்தனையே மனிதர்களால் தமது சொந்த ஊரை ஒருதரமேனும் பார்க்க முடிந்ததில்லை.

இரண்டாயிரத்து இருபத்தி மூன்றாம் ஆண்டு அமலனுக்கு அந்தச் சந்தர்ப்பம் கிட்டியது. இந்துசமுத்திரத்தின் முத்து அவனை வரவேற்றது. அங்கே அந்த முத்தின் வடபகுதியில் அமலனுக்கு ஒரு வீடு முன்னொரு காலத்தில் இருந்தது.

அவனும் மனைவி தாரிணியும், மகள் செளம்யாவும் அதைப் பார்ப்பதற்காகச் சென்றார்கள். அமலனுக்கும் தாரிணிக்கும் ஊரைப் பார்ப்பது சொர்க்கம். ஆனால் அவுஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த செளம்மியாவிற்கு வெறுங்காணியைப் பார்ப்பதில் என்ன சந்தோசம் இருக்கப் போகின்றது? இருக்கின்றது. சிறுவயது முதல் உணவு ஊட்டுவதுபோல், தாம் பிறந்து வளர்ந்த ஊரைப்பற்றி தம் மூதாதையர் பற்றி, சிறுகச்சிறுக சொல்லியே அவளை வளர்த்திருந்தார்கள். தாங்கள் பிறந்து வளர்ந்த வரண்ட பூமியுடன், இயற்கை எழில் கொஞ்சும் இலங்கையின் ஏனைய பிரதேசங்களையும் சுற்றிக் காட்டினால் அவள் மகிழ்ச்சி கொள்வாள் அல்லவா?

Tuesday, 13 August 2024

கள்ளனும் பொலிசும்


 மனம் ஏதோ சிந்தனையில் லயித்திருக்க, கார் தன் பாட்டில் போய்க் கொண்டிருந்தது. வடக்கு மெல்பேர்ணில் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.

 

இரவு இரண்டுமணி. தெரு வெறிச்சோடிப் போய் இருந்தது. நன்றாகக் குடித்துவிட்டிருந்த ஒருவன் வீதியின் நடுவே நின்று தள்ளாடிக் கொண்டிருந்தான். கதவுகளை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டேன். வேகத்தைக் குறைத்து ஓரமாகக் காரைச் செலுத்தும் போதுதான், எனக்குப் பின்னாலே ஒரு சிகப்புக்கார் வருவதைக் கண்டு கொண்டேன்.

 

அந்தக் கார் என்னை நெடுநேரம் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. இந்த இரவு நேரப் 'பின்தொடர்தல்' சிலவேளைகளில் ஆபத்தையும் கொடுக்கலாம். மீண்டும் ஒரு முறை அவனை நோட்டம் விட்டேன். வாட்டசாட்டமான ஒரு வெள்ளைக்காரன். எவனாக இருந்தாலென்ன? நிறையவே கொள்ளைக்காரன் - குடிகாரன் - குடுக்காரன் – கொலைகாரன் கதைகள் கேள்விப்பட்டிருந்தேன்.

 

அந்த இடத்தில், 'பலறாற்' வீதியில் பயணம் செய்யக்கூடிய அதிகூடிய வேகம் மணிக்கு 80 கிலோமீட்டராகும். இந்த வேகத்தைத் தணித்து 50 இற்குக் கொண்டுவந்தால் அவனை சலிப்பூட்டச்செய்யலாம். ஆனால் அவன் தொடர்ந்தும் என் பின்னாலேயே வந்து கொண்டிருந்தான். வீதியில் மூன்று பாதைகள் இருந்தும், அவன் இப்படி என்னைப் பின்தொடர்வது எனக்கு அவன்மீது சந்தேகத்தைக் கொடுத்தது.

 

'·புற்ஸ்கிறேய்' வைத்தியசாலை வந்தது. இந்த இடமெல்லாம் எனக்கு அத்துப்படி. அடிக்கடி வைத்தியசாலை போய்வந்த அனுபவம். இந்த இடத்தில் காரை பானாப்படச் (ப) செலுத்தி மீண்டும் 'பலறாற்' வீதிக்கு எடுத்தால், அந்தக் காலதாமத்தில் அவன் என்னை விட்டு முந்திப் போய் விடுவான். காரை எந்தவித 'சிக்னலும்' இல்லாமல் வெட்டித் திருப்பினேன். என்னுடைய வெட்டுதலில் அவன் சற்றுத் திணறிப் போனான். பின்னர் காரை வைத்தியசாலை இருக்கும் பக்கம் மெதுவாகச் செலுத்தினேன். மீண்டும் 'பலறாற்' வீதியில் எடுக்கும் பொழுதுதான் – அவனும் என்னைத் தொடர்ந்து மெதுவாக 'பானாப்பட' வருவதை அவதானித்தேன்.

 

பயம் பிடிக்கத் தொடங்கியது. எண்பது ஓடக்கூடிய வீதியில் மணிக்கு நூறு என்ற வேகத்தில் ஓடத் தொடங்கினேன். இனி என்ன செய்வான் பார்க்கலாம்? ஆனால் ஒவ்வொரு முறையும் பாழாய்ப்போன சிக்னலில் நிற்க வேண்டியதாயிற்று. அப்படி நிற்கும்போது அவனும் பின்னாலே வந்து விடுகின்றான்.

 

அடுத்து வந்த சிக்னலில், நாலாபக்கமும் வேறு வாகனங்கள் இருக்கவில்லை. அப்படியே சிக்னலில் நிற்காமல் - 'ரெட்' லைற்றில் – அதே வேகத்தில் எடுத்துக் கொண்டேன். அவனும் சிக்னலில் நிற்காமல் வேகவேகமாக வந்து கொண்டிருந்தான். கார் - 'மெயிட்ஸ்ரோன்', 'பிறேபுறூக்', 'சண்சைன்', 'ஆடியர்' என்ற இடங்களிலெல்லாம் அதே நூறு வேகத்தில் ஓடி, நான் இருக்கும் இடமான 'டியர்பார்க்'கை அடைந்தது. உள்ளேயிருக்கின்ற குறுக்குப் பாதைகளிலெல்லாம் காரை வெட்டி வெட்டி எடுத்தேன். அவனைக் காணவில்லை.

 

வீடு வந்ததும் 'றிமோற்கொன்ரோலினால்' கராஜின் கதவைத் திறந்து உள்புகுந்தேன். மீண்டும் கராஜின் கதவை மூடும்போது வீட்டு வாசலில் ஒரு கார் வந்து வேகமாக 'பிரேக்' போட்டு நின்றது. உடனே உள்ளே எரிந்து கொண்டிருந்த லைட்டை அணைத்தேன். சற்றுநேரம் ஓசைப்படாமல் உள்ளே நின்றேன். நெஞ்சு திக்குத்திக்கென்றது. சற்று நேரத்தில் கராஜின் கதவை அவன் தட்டினான். நான் கராஜிற்குள்ளிருந்து வீட்டிற்குள் போகும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனேன்.

 

உள்ளே மனைவியின் காதிற்குள் விஷயத்தை மெதுவாகச் சொன்னேன். வீட்டு விளக்குகள் எல்லாவற்றையும் பளீரென எரியவிட்டோம். ஏறக்குறைய கத்துவதற்கு ரெடி. அவன் வீட்டின் முன் கதவைத் தட்டி "நான்பொலிஸ்" என்றான். 'எப்படி அவனை நாம் நம்புவது?' இதுவரையும் ஒரு கள்ளனைப் போல என்னைப் பின்னாலே துரத்தியவனை எப்படி நான் பொலிஸ் என நம்புவது?

 

"எவனாக இருந்தாலும் காலையில் வா!" என்றேன்நான்.

 

சொல்லிவிட்டு ஜன்னல் திரைச்சீலையை மெல்ல விலக்கி அவன் போய் விட்டானா எனப் பார்த்தேன். ஏதோ ஒரு சிறுபேப்பரில் பேனாவால் கிறுக்கி எழுதி எமது தபால்பெட்டிக்குள் போட்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்றான் அவன். மேலும் கொஞ்சநேரம் தாமதித்துவிட்டு தபால்பெட்டிக்குள் போட்டிருந்த துண்டை எடுத்து வந்தேன்.

 

கூடிய வேகத்தில் ஓடியது, 'சிக்னலில்' நிற்காமல் 'ரெட்' லைற்றில் எடுத்தது போன்ற பல்வேறு காரணங்களிற்காக தண்டம் அறவிடப்பட்டிருந்தது. அவுஸ்திரேலியாவிற்கு வருமானத்தை ஈட்டித்தரும் அந்தத் தொழிலில் கள்ளனும் அவனே பொலிசும் அவனே!

Thursday, 8 August 2024

காட்டுக்குள்ளே திருவிழா


 வாழ்க்கை பல புதிர்களையும் மர்மங்களையும் கொண்டது.

1988 / 89 காலப்பகுதி - அப்பொழுது ‘லங்கா சீமென்ற் தொழிற்சாலையில் பொறியியலாளராக வேலைசெய்து கொண்டிருந்தேன். மதிய வேளைகளில் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுவிட்டுப் போவது வழக்கம். சைக்கிள்தான் எனது வாகனம். அப்பொழுது ‘பிள்ளைபிடிகாரர் நாயாய்ப் பேயாய் அலைந்து திரிந்த காலம். வீதிகள் எங்குமே எப்பொழுதுமே வெறிச்சோடிக் கிடந்தன.

சிலவேளைகளில் நண்பர் ஜனாவுடன் கூடிக்கொண்டு வேலைக்குச் செல்வது வழக்கம். அவர் எனக்கு சீனியராக வேலை செய்துகொண்டிருந்தார். தோற்றத்திலும் சீனியர். அன்று அவரின் தெல்லிப்பழை வீட்டிற்குச் சென்று, எனது சைக்கிளை அங்கு வைத்துவிட்டு அவருடன் செல்வதாக ஏற்பாடு.

மோட்டார் சைக்கிள் கே.கே.எஸ் வீதியால் விரைந்து கொண்டிருந்தது. மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்கு சற்று முன்பாக வீதியோரத்தில் ஒரு வாகனம் நிறுத்தியிருந்ததைக் கண்டோம். மூடி அடைக்கப்பட்ட `மூடுமந்திரம்அது. மோட்டார் சைக்கிள் அதனை அண்மித்தவுடன், எதுவித அசுமாத்தமும் இல்லாமல் இருந்த அந்த வாகனத்தில் இருந்து முகமூடி அணிந்த இருவர் துள்ளிக் குதித்தார்கள்.

“அண்ணை... அண்ணை... நிறுத்துங்கோ... இப்பிடி ஓரங்கட்டுங்கோ!