
குவிகம் குறுநாவல் ஆகஸ்ட் 2024
காந்திமதியின் காதலன் – கல்கி
`காந்திமதியின் காதலன்’ ஒரு குறுநாவல் எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்குச் சான்றாகின்றது. அதனால்தான் காலம் கடந்தும் இன்றும் வாழ்கின்றது. இரண்டு ஸ்வாமிமார்களை எப்படி முடிச்சுப் போட வைக்கின்றார் என்பது நாவலின் உச்சம்.
இரண்டாம் இடம் – அபிமானி
சீரான எழுத்து நடை. வித்தியாசமான உவமைகள். ஏழை மாணவன் மலையரசனுக்கும், நேர்மையான ஆசிரியருக்குமிடையே நடக்கும் உணர்ச்சிப் போராட்டம் தான் கதை. அதிகாரம் மேலிடத்தில் இருக்கும்போது, ஆசிரியரினால் என்ன செய்ய முடியும்? இங்கே இரண்டாம் இடம் எதுவென்பது தெட்டத் தெளிவாகவே தெரிகின்றது. சிறுவன் எடுக்கும் முடிவு எதிர்பாராத திருப்பம்.
குவிகம் குறுநாவல் செப்டெம்பர் 2024
மியாமி மிதவை – ஜமுனா ஜெகன்
ஃபெர்மூடா முக்கோணத்தையும், அதனூடாகப் பயணம் செய்யும் பாண்டியநாட்டு சரக்குக் கப்பலையும் இணைக்கும் கற்பனை செறிந்த மாயாஜாலக் கதை. திகிலும் மர்மங்களும் நிறைந்த ஃபெர்மூடா முக்கோணத்தை நேரில் எதிர்கொண்ட அனுபவம் இங்கே கிடைக்கிறது. இடையிடையே வாழ்க்கையின் தத்துவங்கள், காட்சிகளின் வர்ணனைகள் போனஸ்.
குழலினது யாழினிது - பெஷாரா
குழந்தைகள் உலகம் அழகானது. எத்தனை குழந்தைகள்! எத்தனை கேள்விகள்!! எல்லாரிடமும் அன்பு செலுத்தி அரவணைத்து அறிவுரைகள் சொல்கின்றாள் `அவள்’. அவள் யார்? அதுதான் கதை. கதை குழந்தைகளுக்கானது மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் தான்.

குவிகம் குறுநாவல் ஒக்டோபர் 2024
உயிர்மேல் ஆசை – வ.ச.நாகராஜன்
வஞ்சனையின்றி உறவுகளுக்கு உதவும் சுந்தரிக்கு, சுகவனேசுவரர் தரிசனம் சொர்க்கம். இன்று அவள் எல்லாவற்றையும் இழந்து முதுமையின் விளிம்பில். அவளைப் போலவே சுகவனேசுவரர் ஆலயமும் கவனிப்பாரற்ற நிலையில். திடீரென்று கிடைத்த புதையலை கோவிலுக்கே குடுத்துவிட்டு, சுகவனேசுவரர் தரிசனத்தைக் காண்பதற்காக அவளுக்கு உயிர்மேல் ஆசை வந்துவிடுகின்றது. சிறப்பான கதை.
ஓணான்குழி – ராஜேஷ் வைரபாண்டியன்
மூக்கையா, மொச்சை, குன்னிமுத்து, வீரச்சங்கிலி, கோட்டையன், வண்ணக்கிளி, தேன்சிட்டு என்று பாத்திரங்களை கதைக்குள் அறிமுகம் செய்யும் உத்தி சிறப்பு. கொள்ளை காதல் அமானுஷ்யம் மாந்திரிகம் நரபலி எனச் சம்பவங்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து, ஒரு சீரான நதியோட்டம் போல சொல்லிச் செல்கின்றார் ஆசிரியர்.
வேர்களும் விழுதுகளும் – வசந்தா கோவிந்தராஜன்
முதல் திருமணம் திருநெல்வேலியில் ஊர் உறவுகள் என்று ஏகத்துக்கும் தடல்புடல். அடுத்த தலைமுறை சென்னையில் சாதி மாறிக் காதல் கலியாணம். அப்புறம் மூன்றாவது தலைமுறை அமெரிக்காவில். அவசரக் காதல். திருமணம் ஆகாமலே கர்ப்பம். காதலனின் கொரோனா மரணம். வேர்களும் விழுதுகளும் அந்நியமாகிப் போகின்றன.