
ச.முருகானந்தன்
வானத் திரையில் சூரியனின் ஒளித்தடம் துவங்கத் தொடங்கிவிட்டது. பீடி ஒன்றைப் பற்ற வைத்தபடி கடற்கரையை நோக்கி நடந்து கொண்டிருந்தான் சீனித்தம்பி. மார்கழி மாதப் பனிக்குளிரில் அவனது உடம்பு வெடவெட என்று நடுங்கிக் கொண்டிருந்தது. கடற்கரையில் அவனது சக தொழிலாளர்களான மார்க்கண்டுவும் வீரசொக்கனும் நின்றிருந்தார்கள். அவனைக் கண்டதும் புலனசைத்தார்கள். இந்தச் சில வாரங்களும் தொழில் இல்லாததால் வள்ளங்கள் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. இன்னும் ஒரு வாரத்தில் சோளகம் பிறந்துவிடும்; தொழிலும் தொடங்கிவிடும்.
நண்பர்கள் மூவரும் கடலில் இறங்கிக் கணுக்காலளவு நீரில் நின்றபடி சோளகம் பிறக்கப் போவதற்குரிய அறிகுறிகள் தென்படுவதைப்பற்றி உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அலைகள் மெதுவாக வந்து போய்க் கொண்டிருந்தன.
“சோளகம் பிறக்கும் பொழுது அடுத்த பருவத்தோட தாமெல்லாம் கடலுக்குப் போகலாம் போலிருக்கே” என்று குதூகலத்துடன் கூறினான் மார்க்கண்டு. உண்மை தான். சோளகம் பிறந்துவிட்டால் அந்தச் கடலோரப் பிரதேச மீனவ மக்கள் மத்தியில் எத்தனை குதூகலம். வாழ்க்கையில் வசந்தம் வருவது போன்ற மகிழ்ச்சிச் கரையிலே கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் வள்ளங்கள் எல்லாம் கடலில் ஓடத் தொடங்கிவிடும். மீனவப் பெண்கன் குழந்தைகளுக்குக் கூட சிறுசிறு தொழில்கள் கிடைத்து விடும். பிற இடத்து மீன் முதலாளிகள்கூட அங்கே படையெடுத்து வரத் தொடங்கி விடுவார்கள்.