சுரேந்தருக்கு 15 வயதாகிவிட்டது. கடந்த மாதம் தான் அவன்
தனது பதினைந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடினான். நீண்ட நாட்களாகத் தனக்கொரு ஐ - போன்
வாங்கவேண்டுமென்று விருப்பம் கொண்டிருந்தான். அவனது தாயார் அதற்கெனவே சிறுகச்
சிறுகப் பணம் சேமித்திருந்தார். அவனது பிறந்தநாள் அன்று, சுரேந்தர் ஆச்சரியப்படும்
விதத்தில் அவனது பரிசுப்பொருள், ஐ - போன் கிடைத்தது. அது முதல் கொண்டு, உறங்கும்
நேரம் தவிர்ந்த ஏனைய பொழுதுகளில் எல்லாம் அவனது கைகளில் ஐ-போன் தவழ்ந்து
விளையாடியது.
நேற்று, சனிக்கிழமை அவனது பள்ளி நண்பன் சுதேஷின்
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அவனது வீட்டிற்குச் சென்றிருந்தான். சுதேஷ் பிஜி
தேசத்தைச் சேர்ந்தவன். அவனின் வீட்டிற்கு, முன்பும் பல தடவைகள்
சென்றிருக்கின்றான். பிறந்தநாள் கொண்டாட்டம் தடல்புடலாக நடந்து கொண்டிருந்தது.
ஆண்களும் பெண்களுமாக அவனது வயதையொத்த நண்பர்கள் கூச்சலும் கும்மாளமுமிட்டவாறே
இருந்தார்கள். கேக் வெட்டியாயிற்று.
அதன்பின்னர் டிஸ்க்கோ நடனம் ஆடுவதற்காக கராஜ்
சென்றார்கள். வெளியே இருட்டு மெல்ல ஆக்கிரமித்திருந்தது. சுதேஷ் கராஜ் கதவை றிமோற் கொன்ரோலரினால்
திறந்து வைத்தான். கீச்சாமாச்சா என்று சத்தமிட்டவாறே நண்பர்கள் உள்ளே சென்றார்கள்.
அங்கே டிஸ்க்கோ ஆட்டத்திற்கான மின்விளக்குகள் ஏற்கனவே அலங்கரிக்கப்பட்டிருந்தன. பல
வர்ணங்கள் கொண்ட – அதற்கென வடிவமைக்கப்பட்ட, வட்ட வடிவமான பெரிய மின்குமிழ்கள்
கூரையின் மேலே தொங்கிக் கொண்டிருந்தன. பட்டை தீட்டப்பட்ட இரத்தினக்கற்கள் போல
ஒளிர்வதற்காக அவை காத்திருந்தன. அவற்றை ஒளிரவிடுவதற்காக ஏற்கனவே
ஒளிர்ந்துகொண்டிருந்த மின்விளக்கை அணைத்தான் சுதேஷ். ‘டிஸ்க்கோ லைற்’றின் ஆளியை
அழுத்துவதற்குள் இடைப்பட்ட நொடி நேரத்தில், ஏழெட்டு அந்நிய இளைஞர்கள் சரசரவென
உள்ளே நுழைந்தார்கள்.