மதுரை மீனாட்சி அம்மன் கோவில். ஆனந்தனும் மல்லிகாவும்
முதன்முறை தரிசனத்திற்காக வருகின்றார்கள். அம்மனுக்கு எத்தனை கோபுரங்கள். அவர்களை
வசதியாக கோபுர வாசலுக்கு அண்மையில் இறக்கிவிட்டு, “நீங்கள் உள்ளே போய் தரிசனத்தை முடித்துக்கொண்டு
வாருங்கள். நான் காரை எங்காவது ஓரிடத்தில் நிற்பாட்டிவிட்டு இந்த இடத்தில் வந்து
நிற்கின்றேன்” சாரதி சொல்லிக்கொண்டே காரை வசதியாக நிறுத்துவதற்கான இடம் தேடிப்
புறப்பட்டான்.
ஒரே சனக்கூட்டம். எங்கு பார்த்தாலும் மனிதர்கள்
ஆரவாரமாகத் தெரிந்தார்கள். கோவிலுக்கு எந்தப் பக்கத்தால் போவது? கோபுரம் இருந்த
திசை நோக்கி ஆனந்தனும் மல்லிகாவும் நடந்தார்கள்
”அம்மா… ஒரு முழம் பூ வாங்கிக்கோம்மா… உங்களுக்கு நல்ல
அழகாக இருக்கும்” சொல்லிய திசை நோக்கித் திரும்பிப் பார்த்தாள் மல்லிகா. பத்து
வயது மதிக்கக்கூடிய சிறுபெண்.
அப்படியே உருக்கி வார்த்த அம்மன் விக்கிரகம் போல அழகாக
இருந்தாள். மல்லிகாவின் மனம் ஏக்கம் கொண்டது. ஒரு பிள்ளைக்காக எத்தனை வருடங்கள்
காத்திருக்கின்றாள். எத்தனை கோவில்கள் ஏறி இறங்கிவிட்டாள். தமக்கான குறையினை
அம்மனிடம் முறையிட வந்தவர்களல்லவா அவர்கள்.



