Tuesday, 1 November 2022

ஜீசஸ் ஹாண்டில் – சிறுகதை

                             

இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தை விமானம் அடைந்த போது, நேரம் செவ்வாய்க்கிழமை அதிகாலை மூன்று முப்பதாகிவிட்டது. குணசேகரன், அவர் மனைவி கமலா, பிள்ளைகள் விமல், பாவனியை அழைத்துச் செல்வதற்காக பிரதாப்சிங் விமான நிலையத்தில் காத்திருந்தார். புது தில்லியில், கரோல் பா நகரில் அமைந்திருக்கும் `இரும்புக் கோட்டை’ ஹோட்டலுக்குப் போய் சேருவதற்கிடையில் புது தில்லியின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைச் சொல்லிவிட்டார் பிரதாப்சிங்.

மெல்லிய செயற்கை வெளிச்சத்தில் வீதிகள் அழகாக இருந்தன. அமைதியாகவும் இருந்தன.

“இப்போது மயான அமைதியாக இருக்கும் இந்தப் பிரதேசங்கள் எல்லாம், இன்னும் கொஞ்ச நேரத்தில் விழிப்படைந்துவிடும். அதன் பின்னர் மனிதர்களே நகர்ந்துகொள்ள முடியாதவாறு நெரிசலாகவிடும்.” சொல்லிவிட்டு கண்ணைச் சுழற்றி எல்லாரையும் பார்த்துவிட்டு, “மிகவும் அவதானமாக இருங்கள்” என்று தாழ்ந்த குரலில் எச்சரிக்கையும் செய்தார். காரின் கதவுக் கண்ணாடிகளில் ஒன்று சிறிது பதிந்திருக்க வேண்டும். இரவுக்காற்று காரிற்குள் விசில் அடித்து அவரது எச்சரிக்கையை ஆமோதித்தது.

Tuesday, 25 October 2022

தூங்கும் பனிநீர் –குறும் திரைப்படப்பிரதி

 
ஐந்து  பாத்திரங்கள் :           சிந்து, பிரதீபன் (சிந்துவின் தம்பி),

சிந்துவின் அம்மா, சிந்துவின் அப்பா,

ஜோதி ரீச்சர்

 

காட்சி 1

உள்

வீடு

மாலை

சிந்துவும் பிரதீபனும் ஹோலிற்குள் இருந்து, ரெலிவிஷனில் தமிழ் சினிமா பார்க்கின்றார்கள். (க்ளோஸ் ஷாட் / close shot). ஹோலிற்குள் லைற் எரிகின்றது. வீட்டிற்கு வெளியே கார் வந்து நிற்கும் சத்தம்.

      பிரதீபன்    : அக்கா…! அப்பாவும் அம்மாவும் வேலையாலை வந்திட்டினம்.

சிந்து       : சனலை நியூசிற்கு மாத்து. படிக்கிறதை விட்டிட்டு, படம் பாத்துக் கொண்டிருக்கிறாய் எண்டு தெரிஞ்சா அம்மா கத்துவா.

பிரதீபன் அவரசப்பட்டு ரி.வி சனலை மாத்துகின்றான். அது எத்தனையோ சனலுக்கு மாறி மாறிப் போய் கடைசியில் நியூஸ் சனலுக்கு வருகின்றது. சிந்து வீட்டின் கதவை நோக்கிப் பார்க்கின்றாள். சிந்துவின் அம்மா கதவைத் திறந்தபடி நிற்கின்றார்.

சிந்துவின் அம்மா : சிந்து… பிரதீபன்… இரண்டு பேரும் நான் சொல்லுறதை வடிவாக் கேளுங்கோ… நானும் அப்பாவும் ஒருக்கா ஜோதி ரீச்சர் வீட்டை போட்டு வாறம். வாறதுக்கு கொஞ்சம் லேற்றாகும். நீங்கள் இரவுச் சாப்பாட்டை முடிச்சிட்டுப் படுங்கோ. நாங்கள் திறப்பு வைச்சிருக்கிறம்... திறந்துகொண்டு வருவம்.

சிந்து & பிரதீபன்  : ஐய்… ஜோதி ரீச்சர் வீடுதானே! நாங்களும் வாறம்.

சிந்துவின் அம்மா : உங்களை நாங்கள் இன்னொருநாள் கூட்டிக்கொண்டு போவம். இப்ப ஒரு அவசர அலுவலாப் போறம். அப்பா காருக்குள்ளை இருக்கிறார்.

சிந்து              : என்னம்மா நீங்கள்? (சலித்தபடி) ஜோதி ரீச்சர் ஒஸ்ரேலியாக்கு வந்தாப் பிறகு நான் ஒருக்காவும் அவவைச் சந்திக்கேல்லை.

சிந்துவின் அம்மா : சரி.. சரி.. கண்ணைக் கசக்கிறதை விட்டிட்டு ஹப்பியா இரு. இன்னும் ஆறு மாசத்திலை உனக்குக் கலியாணம். கதவை உள்ளாலை பூட்டிப் போட்டு இருங்கோ. Bye

சிந்து & பிரதீபன்  : bye அம்மா…