அதிகாரம் 6
ஒரு சிறு குச்சுவீடு. அங்கு ஏற்கனவே
படுத்த படுக்கையாகிக் கிடக்கும் டேவிட்டின் தாயார். அவளைப் பராமரிப்பதற்காக
தினமும் அங்கு வந்து போன பெண், பத்மினி போன மறுநாளில் இருந்து வருவதை
நிறுத்திவிட்டாள்.
டேவிட்டின் வயது முதிர்ந்த தாயார்
எழும்பி நடக்க முடியாதவராக இருந்தார். அவருக்கு உணவு மருந்து மாத்திரைகள்
கொடுத்து, மலம் கழுவி, உடுபுடவைகள் கழுவிப் பராமரித்தாள் பத்மினி. அடிக்கடி
சிறுநீர் வாடை வீசும் துணிகளைத் துவைப்பதும், உலரவிட்டு மடித்து வைப்பதிலும் பத்மினியின்
காலம் கழிந்தது. டேவிட் தனது கடந்தகாலம் பற்றி எதையுமே கேட்காதது அவளுக்கு அந்தச்
சுமையைக் காவும் சக்தியைக் கொடுத்தது.
மாலை வேளைகளில் மாரியம்மன் கோவிலுக்குச் சென்று வருவாள். எப்பொழுதாவது டேவிட்டிற்கு நேரம் இருந்தால், சினிமா பார்ப்பாள். அந்த வேளைகளில் முன்பு வந்து போய்க்கொண்டிருந்த அந்தப் பெண் அம்மாவிற்குத் துணையாக வந்து நிற்பார்.



