நாளாந்தம் பழகும் சில நண்பர்கள், உறவினர்களிடமிருந்து சிலவேளைகளில் சொல்லாமல்
கொள்ளாமல் தொலைபேசி அழைப்புகள் நின்றுவிடுவதுண்டு. எங்காவது வெளிநாட்டுக்குப்
பயணம் செய்வதற்காகவோ அல்லது தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் பேசும் தருணங்களாகவோ
அல்லது இன்னும் ஏதாவது பூடகமான விஷயங்களாகவோ அவை அமையலாம். சில பொழுதுகளில்
எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு ஒன்றுமே நடவாதது போல முன் வந்து நிற்பார்கள்.
அப்படித்தான் ஒருநாள் இராசலிங்கமும் அவர் மனைவி சுலோசனாவும்
திடீரென்று, நினையாப்
பிரகாரமாக சிறீதரனின் வீட்டிற்கு தரிசனம்
கொடுத்தார்கள். சிறீதரனின் மனைவி பவானி முகத்தை 'உம்'மென்று வைத்துக் கொண்டு அவர்களை வரவேற்றாள்.
"கனகாலமா
வரேல்லைத்தானே! அதுதான் சும்மா ஒருக்கா வந்திட்டுப் போவம் எண்டு" என்று 'சும்மா'வைச் சற்று
அழுத்திச் சொன்னான் இராசலிங்கம். தொடர்ந்து,
"அப்பிடியெண்டில்லை.
இனி ஈஸ்ரேண் சபேப்பிலையிருந்து வெஸ்டேர்ண் சபேப்பிற்கு வாறதுக்கு பத்துப்
பதினைஞ்சு டொலர் பெற்றோலுமெல்லே செலவாகுது" காசைக் காரணம் காட்டினாள்
சுலோசனா.
"நாங்கள்
நினைச்சோம்... உங்களிலை ஆரோ ஒருத்தருக்கு வேலை பறிபோட்டுதோ எண்டு"
உதட்டுக்குள் சிரித்தாள் பவானி.