அண்டனூர் சுரா
எழுதிய ‘முத்தன் பள்ளம்’ நாவலை முன்வைத்து.
’மேன்மை’ வெளியீடாக வந்திருக்கும் இந்த நாவலை
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட
அண்டனூர் சுரா (சு.ராஜமாணிக்கம்) எழுதியிருக்கின்றார். நாவலுக்குள் நுழைவதற்கு
முன்னர், அதன் சமர்ப்பணத்தை ஒரு தடவை பார்த்து விடுவோம்.
‘முத்தன்
பள்ளம் கிராமத்திற்கு ஒரு சாலை வசதி, மழைக்கு ஒழுகாத கூரை, பருவப்பெண்களுக்கேனும்
ஒரு பொதுக்கழிப்பறை, குடியிருப்பிற்கு பட்டா, அங்காடி, அங்கன்வாடி, பள்ளிக்கூடம், தேர்தல்
காலத்திலேனும் வேட்பாளர்கள் வந்துபோக ஒரு பொதுவழிப்பாதை, ஓர் அச்சமுமில்லாமல் பெண்
எடுத்தல் – கொடுத்தல், மழைக்காலங்களில் கூரைத்தண்ணீர் ஒழுகியோட விலைக்கேனும் ஒரு
சாண்நிலம், வெயில் காலங்களுக்கு ஓர் ஒட்டகம், மழைக்கு பரிசல், வாழும்
சந்ததியினருக்கு குறைந்தபட்ச மரியாதை, ஒன்றிய வரைபடத்தில் தனித்த இடம் இவற்றில்
ஒன்றேனும் இக்கிராம மக்களுக்குக் கிடைக்க யாரேனும் ஒருவர் காரணமாக இருப்பாராயின்
அவரது திருவடிக்கு….!’
சமர்ப்பணம் இப்படியென்றால், இந்த நூலுக்கு அணிந்துரை
எழுதிய நாஞ்சில் நாடன் இன்னும் ஒருபடி மேலே போய் – ‘அந்த ஒருவரின் காலடி மண்ணை எடுத்து நெற்றியில்
திருநீறாகவோ திருமண்ணாகவோ அணிய நாமும் சித்தமாக இருப்போம்’
என்கின்றார்.