
புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்
நான் அறிந்த நாளிலிருந்தே நடுவிலம்மான் எங்கள் வீட்டிலேயே தங்கியிருந்தாலும் அவரது சொந்தப் பெயர் மண்டலாய் என ஐந்தாம் வகுப்புப் படித்த போதே எனக்குத் தெரிய வந்தது. அதுவும் ஒரு நாள் ஆறுமுகப்பாவின் கடைக்கு கூப்பன் எடுக்க அம்மாவுடன் அவவின் சேலைத் தலைப்பைப் பிடித்தபடி சென்ற போது, “மண்டலாய் இப்போது மாடு மேய்க்க மாவில் பக்கம் வாறதில்லையோ?” என்று கூப்பனை வெட்டியவாறே அவர் கேட்க “நடுவிலம்மான் இப்ப கிளைப்பனையடிப் பக்கமாப் போறார் போலை” என அம்மா சொன்னபோதுதான் அவரது இயற்பெயரை நான் அறிந்துகொண்டேன்.
எங்களது நாச்சார வீட்டின் கடைசி அறையோடு தெற்குப் புறமாக ஒரு ஒத்தாப்பு இறக்கி அக்கொட்டிலிலேயே நடுவிலம்மான் வசித்து வந்தார். டச்சுக் காலத்து வாங்கில் ஒன்றில் முதுகுப்பாட்டிற்கு மாந்தோலும் கால்மாட்டிற்கு சாக்கும் விரித்து அதில்தான் கிடந்தெழும்புவார்.
ஒத்தாப்பு மூலையில் பிய்ந்து போன பழைய கதிரை ஒன்றின் மேல் பென்னாம்பெரிய சூட்கேஸ் ஒன்று வைத்திருப்பார். அதற்குப் பக்கத்தில் முண்டு கொடுத்துக்கொண்டு ஒரு ஸ்ரூல்’ பழி கிடக்கும். அவருக்குரிய ‘தேத்தண்ணி கோப்பியையோ’ அல்லது சோறு போட்ட வட்டிலையோ அதில்தான் வைக்க வேண்டும் என்பது ஐந்தாறு வருஷங்களுக்கு முந்தியே அவர் போட்ட உத்தரவாம். அம்மாதான் ஒருநாள் அவர் ஆறுமுகப்பாவின் கடையடிப் பக்கம் போன பின்பு பரமரகசியம் போல் எனக்குச் சொன்னா.
நடுவிலம்மானுக்கு இடது கால் ஏலாது. இழுத்திழுத்துத்தான் நடப்பார். சின்ன வயதில் சிங்கக் குட்டி மாதிரித் திரிந்தாராம். இடையில் பாரிச வாதத்தால் பாதிக்கப்பட்டு கால் இப்படி சூம்பிப் போயிற்றாம். ஆனாலும், தேகத்தை வளைத்து பம்பரமாகத் தொழில்கள் செய்வார்.
ஒவ்வொரு நாளும் கருக்கலோடு எழுந்து அரிசியைக் கழுவி உரலில் போட்டால் போதும். நொடிப் பொழுதில் மாவாக்கி அம்மாவின் கையில் கொடுத்து விடுவார். அவர் அரிசி இடிக்கும் போது இடுப்பில் கை வைத்து நான் பார்த்துக் கொண்டு நிற்பேன். நெற்றியிலும் நெஞ்சிலும் வியர்வை வழிந்தோட மூசிமூசி இடிப்பார். பார்க்கப் பாவமாக இருக்கும். அம்மா, தான் இடிப்பதாகக் கேட்டாலும் உலக்கையை விட மாட்டார். “புட்டுக்கு உலையை வைச்சு மற்ற அலுவல்களைக் கெதியாப் பார். பொடியளுக்கு பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு” என்பார். ஒவ்வொரு நாளும் விடியப்புறம் அவரது வேலை அதுவாகத்தான் இருக்கும்.