Friday, 13 March 2026

வேடம் தாங்கல் - சிறுகதை


அசோகன் புரண்டு புரண்டு படுத்தான். உறக்கத்திற்கும் விழிப்புக்குமிடையே மனம் பெண்டூலமாக ஆடிக்கொண்டிருந்தது. அலாரம் வைத்துவிட்டுப் படுத்தும் அவனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை. அலாரம் என்பது ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மனிதர்களுக்கு மாத்திரம் தான்.

கடந்த சில வருடங்களாக இழுபறி நிலையில் இருந்துவந்த `அந்த’ வீதி புனரமைப்புத் திட்டம் நடைமுறைக்கு வர இருந்தது. `அந்த’ வீதியின் பெயரை உச்சரிப்பதற்கே பலருக்கும் தயக்கமாக இருந்தது. வருடத்திற்கு குறைந்தது ஏழெட்டுப் பேரையாவது காவுகொள்ளும் அந்த வீதியின் கூனலைத் தட்டி நிமிர்த்த, அரசு இன்று அனுமதி வழங்கிவிட்டது.

அந்தத் திட்டத்தின் முக்கியமான முதன்மை எதிரி பறவைகள் என்றால் நீங்கள் வியந்து போவீர்கள்! அலாஸ்க்கா, சைபீரியா போன்ற பிரதேசங்களில் இருக்கும் சில பறவைகள், அங்கே நிலவும் குளிர் காலநிலையைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இங்குள்ள வெப்பத்தை நாடி வலசை வருகின்றன. ஏறக்குறைய 35 விதமான 2 மில்லியன் நீர்ப்பறவைகள் இப்படி வருடாவருடம் வந்து போகின்றன. அவை அந்த வீதிக்கு அருகாமையில் இருக்கும் காடுகளில் தமது வசந்தகாலத்தைக் குதூகலமாகக் கொண்டாடி ஞாபகச்சின்னமாக இனவிரித்தியும் செய்துகொண்டு, இங்கே குளிர்காலம் ஆரம்பிக்கும்போது மீண்டும் தமது பழைய இடங்களுக்குத் திரும்புகின்றன.

பறவைகளுக்குச் சார்பாக வாதாட `விலங்குகள் – பறவைகள்’ நலன் பேணும் அமைப்புகள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. எப்பொழுதெல்லாம் விபத்து நடந்து பிரச்சினை வலுக்கின்றதோ, அவர்கள் அவுஸ்திரேலியாவின் எந்த மூலை முடுக்குகளில் இருந்தாலும் மோப்பம் பிடித்து வரிசைகட்டி வந்துவிடுவார்கள். விபத்து நடக்கும் வீதியின் இருமருங்கிலும் நின்று, பதாகைகளை ஏந்தியவண்ணம் தமது கண்டனங்களைத் தெரிவிப்பார்கள். விபத்து நடக்கும் பகுதிகளுக்கு அருகில் இருக்கும் மரங்களைத் தறிப்பதால் காட்டின் சில பகுதிகள் பறிபோகும், பறவையினங்களின் வருகையில் வீழ்ச்சி ஏற்படும், வலசை வரும் பறவைகளின் வாழ்வுக்கு குந்தகம் ஏற்படும் என்பது அவர்களின் விவாதம்.

வசந்த காலத்தில் மட்டும் பறவைகள் வந்து போவதால், வருஷம் பூராவும் மக்கள் இன்னல் கொள்வதா என்பது அரச தரப்பினரின் ஆதங்கம். மேலும் காட்டின் ஒரு சிறு பகுதியை அழிப்பதால், பறவைகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்படாது என்பது அவர்கள் கருத்து.



அசோகன் ஒரு நில அளவையாளன். காலை எட்டு மணியளவில் தனது அலுவலகம் சென்று சக பணியாளர்களையும் அழைத்துக்கொண்டு, விபத்து நடக்கும் பிரதேசத்திற்குச் செல்வதென ஏற்கனவே திட்டமிட்டிருந்தான். அவனது அலுவகத்திற்குச் செல்லும் பாதை கரடுமுரடானது, மேடு பள்ளங்கள் கொண்டது. அந்தப் பாதை வழியே வாகனத்தை ஓட்டிச் செல்வது மழைக்காலத்தில் இலகுவானதல்ல. மெல்பேர்ணில் நிகழும் கடும் குளிரும் பனியும் அதிகாலை இருட்டும் அதற்கு உகந்ததல்ல.

நான்கு வருடங்களுக்கு முன்னரே அந்த வீதிப்புனரமைப்புக்காக நில அளவை செய்யப்பட்டு, திட்டவரை ஒன்று தயாரிக்கப்பட்டு, உறங்கிக் கொண்டிருந்தது. அதை பொறியியலாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, நகராட்சி மன்றம் உட்பட வேண்டியவர்கள் எல்லோரும் அங்கீகரித்துவிட்டார்கள். இன்று இன்னொருதடவை சம்பவம் நடைபெறும் இடத்துக்குச் சென்று மீள உறுதி செய்து கொண்டால் போதுமானது.

அலாரம் தன் வேலையைச் செய்தது. அவசர அவசரமாகக் காலைக்கடன்களை முடித்துவிட்டு, ஒரு கோப்பை தேநீர் அருந்தினான் அசோகன்.

மனைவி சியாமளா இன்னமும் இரவு வேலையால் வீடு திரும்பவில்லை. இந்நேரத்திற்குள் அவள் வந்திருக்க வேண்டும். அவள் `சண்சைன்’ வைத்தியசாலையில் தாதியாக வேலை செய்கின்றாள். சத்திரசிகிச்சையின் பின்னரான நோயாளிகளைக் கவனிக்கும் பொறுப்பில் இருப்பதால் சிலவேளைகளில் வரத் தாமதமாகும்.

அசோகனுக்கும் சியாமளாவுக்குமிடையேயான ஊடாட்டம், திருமணம் செய்துகொண்ட நாட்களில் இருந்ததைப்போல அல்லாமல் காலத்துடன் இறங்குமுகம் கொண்டிருந்தது. உண்மையில் இருவரும் திருமணத்தின் பின்னர் ஒட்ட மறுத்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். திருமணத்திற்கு முன்னர் எப்படி இருந்தார்களோ அப்படியே இருக்க முற்பட்டார்கள்.

அசோகன் வேலையிடத்தை விட்டு வீட்டிற்கு வந்த பின்னரும், பணிக் கோப்புகளில் மூழ்கிக் கிடப்பான். வேலை தவிர்ந்த எந்தவிதமான ரசனையும் அற்றவன். இசையில் இலக்கியத்தில் விளையாட்டில் என்று எதிலுமே நாட்டமற்றவன். சியாமளாவிற்கு மாறி மாறி, இரவு பகல் என்று வேலை இருந்தாலும், பெரும்பாலும் சமையல் முடிய அவளும் கணினியில் மூழ்கிவிடுவாள். சமையல், முகநூல், யு ரியூப், சுப்பர் சிங்கர் என கணினி களைகட்டும்.

ஒரே படுக்கையிலே அவர்கள் உறங்கிக் கொண்டாலும், இரண்டு ரோபோக்கள் போலவே நடந்து கொள்கின்றார்கள். அவர்களுக்கிடையே கனத்த மனத்திரை ஒன்று கூடு கட்டி நாட்களாகிவிட்டன.

அவளுக்கு அவன் ஒரு பாதுகாப்பு, தன்னாலே செய்ய முடியாத சில வேலைகளை செய்து கொள்ளுவான் என்ற இறுமாப்பு. அவனுக்கு அவள் மூலம் சில தேவைகள் – உணவு, உடுப்புகளை தோய்த்து அயன் செய்து வைத்தல், வீட்டைச் சுத்தமாக வைத்திருத்தல், பேச்சுத்துணை. இருவருக்குமே சமூகத்தில் இனிய தம்பதிகள் என்ற சுய கெளரவம்.

இருவருக்குமிடையே சண்டை சச்சரவுகள் என்று பெரிதாக வந்ததில்லை. வந்தால் கூட, அவன் தன்னுடைய பாட்டில் ஏதோ சொல்லிக்கொண்டு போவான். அவள் அவன் போகும் திசைக்கு எதிராக புறுபுறுத்தபடியே போவாள். குரலில் தான் ஏற்ற இறக்கம் இருக்குமேயொழிய சண்டையில் என்றுமே உரப்புக் கூடியது கிடையாது. உணர்வுக்குத்தான் அங்கே முதலிடம். வேடிக்கை பார்க்க யாராவது காதைக் குடுத்தால் புஸ்வாணம் வெடித்தது போல் இருக்கும்.

சின்னச்சின்ன விஷயங்களுக்காக அவளுடன் தொலைபேசியில் கதைத்து, அவளைத் தொந்தரவு செய்ய அசோகன் பெரும்பாலும் விரும்புவதில்லை.

அவளுக்கு ஒரு குறிப்பு எழுதி, சாப்பாட்டு மேசையின் மேல் வைத்துவிட்டுப் புறப்பட்டான் அசோகன்.

“மாலை ஜனனியின் மெஹந்தி நைட் போக வேண்டும். தயாராக இரு.” குறிப்பில் இருந்தது இதுதான்.



அசோகன் – சியாமளா தம்பதியினரின் வீட்டுக்கு இரண்டு வாசல்கள் இருந்தன. முன்புறமாக பிரதான வாசலும், கராஜ் எனப்படும் கார்த்தரிப்பிடமும் இருந்தன. வீட்டைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் `கலபொன்ட்’ தகர வேலிகள் அறுக்கைகளாக இருக்கின்றன. மேற்குப்புறமாக இருக்கும் `கலபொன்ட்’ வேலியில் ஒரு கதவு இருக்கின்றது. அதைத் திறந்துகொண்டு உள்ளே போனால் வீட்டின் இரண்டாவது வாசல் வந்துவிடும். அவர்கள் வீடு அமைந்திருக்கும் வீதியைக் `குளோஸ்’ என்று சொல்லுவார்கள். ஒரு மனிதர் தனது பாதங்களை எதிரெதிராக வைத்திருப்பதைப் போல முடிவிடம் இருக்கும். அதில் இருந்து அடுத்த வீதிக்கு ஒரு நடை பாதை உண்டு. வாகனங்கள் அதனூடாகப் போய்வர முடியாது.

நான்கு படுக்கை அறைகள் கொண்ட வீடு என்பதால், வீட்டின் ஒரு பகுதியை இன்னொருவருக்கு வாடகைக்குக் குடுக்கலாம். சியாமளாவுடன் தாதியாக வேலை செய்யும் வெள்ளையினத்துப் பெண்ணான மார்க்கிரட் சில வருடங்களாக அங்கே தங்கி இருக்கின்றாள். குளியலறை, கழிப்பறை என்பவற்றை இணைப்பாகக் கொண்ட ஒரு அறையில் அவள் இருந்தாள். தானே சமைத்து சாப்பிட்டுக் கொள்வாள். அதற்கு அமைவாக பின்புறத்தில் ஒரு குசினி இருந்தது. மேற்குப்புறமாக இருக்கும் வாசலினூடு அவள் புழங்கி வந்தாள். அந்தப் பக்கத்திலேயே அவள் தனது காரையும் நிறுத்திக் கொள்வாள்.

வேலை முடித்து வீட்டுக்கு வந்த சியாமளாவிற்கு, அசோகன் எழுதி வைத்த குறிப்பு எரிச்சலைத் தந்தது. அவள் இப்படியான நிகழ்வுகளுக்குப் போவதைத் தவிர்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இருந்தும், தொடர்ந்தும் அசோகன் அவளை வற்புறுத்துவது அவளுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.

திருமணம் செய்த ஆரம்ப காலங்களில் எல்லா விசேட நிகழ்வுகளுக்கும் இருவருமே ஒன்றாகப் போய் வந்தவர்கள்தான். அவளால் சில வருட முயற்சிக்குப் பின்னரும் கருவுற முடியாமல் இருந்ததால், மழலைச் செல்வம் இனித் தங்களுக்கு இல்லை என்பதை உணர்ந்து கொண்டார்கள். இருந்தும் சகித்துக்கொண்டு மன உறுதியுடன் எல்லா நிகழ்வுகளிலும் பங்குபற்றினார்கள். எப்பொழுது சிலரின் கேலிக்கும் கிண்டலுக்கும் அவமானம் கொள்ள நேர்ந்ததோ, அன்றிலிருந்து சியாமளா இப்படியான நிகழ்வுகளுக்குப் போவதைத் தவிர்த்துக் கொண்டாள். ஆனால் அசோகன் அப்படி நடந்து கொள்வதில்லை. அவன் தனித்துப் போய்வரப் பழகிக் கொண்டான்.

இனவிருத்தி என்பது ஆண், பெண் இருவரும் பொதுவான விடயம் என்றாலும், குழந்தைப் பாக்கியம் இல்லாத தம்பதியர்களில் ஆணை விடவும் பெண்ணுக்கே பழிச்சொல் இலகுவாகக் கிடைத்து விடுகின்றது. பெண்களே மங்களகரமான விடயங்களில் அதிகம் முன்னிலைப்படுத்தப்படுவதால் அப்படி இருக்கலாம்.

“குழந்தை ஒன்றும் தானாக வந்து குதித்துவிடாது. நாங்கள் தான் முயற்சி செய்ய வேண்டும்” என்று சியாமளா சொல்லும்போதெல்லாம், அசோகன் முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டு போய்விடுவான். அதற்குத் தானும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்பதால் சியாமளா தன்னையே நொந்து கொண்டாள்.

சியாமளா அந்த பேப்பர் துண்டைக் கசக்கி குப்பைத்தொட்டிக்குள் போட்டுவிட்டு, சற்று நேரம் இளைப்பாறவெனக் கட்டிலில் சரிந்தாள்.


அசோகனும் சியாமளாவும் எப்படிச் சந்தித்துக் கொண்டார்கள்? அது ஒரு சுவையான சம்பவம்.

அசோகன் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் என்ற இடத்திற்கு வந்தபோது அவனுக்கு முப்பத்தினான்கு வயதுகள்.

இலங்கையில் அவனது வாழ்க்கை நாடோடிகளைப் போன்றது. எங்கு எங்கெல்லாம் நில அளவை செய்யப்படவேண்டுமோ, அந்தந்த இடங்களுக்குப் போய் மூன்று நான்கு மாதங்கள் தங்கி இருக்க வேண்டும். நாடோடிகள் கூட்டத்திற்கு அவர்களுடன் இழுபட்டுச் செல்லும் ஒரு சமையல்காரனும் இருந்தான். பெண் வேலையாளர்கள் என்று அவர்கள் குழுவில் எவரும் ஒருபோதும் இருந்ததில்லை.

அப்படி அலைந்து திரிந்த காலங்களிலும் அவனுக்குத் திருமணப்பேச்சுகள் பல வந்து போயின. ஒன்றுமே சரிவரவில்லை. பரதேசியை எந்தப் பெண் தான் மணந்துகொள்ள விரும்புவாள். சரிவரவில்லை என்பதைக் காட்டிலும், அசோகனும் சிலவற்றைத் தட்டிக் கழித்தான் என்றும் சொல்லலாம். ஆரம்பத்தில் திருமணப் பேச்சுக்கால் வரும்போதெல்லாம் ஆர்வமாக இருந்தவன், பின்னர் சிறுத்தை போல சீறிச்சினந்து உறுமத் தொடங்கினான். திருமணம் பேசிக் களைத்துப் போன கைம்பெண்ணான அம்மா, சில காலம் ஒன்றுமே பேசாமல் இருந்தார்.

அசோகன் அவுஸ்திரேலியா வந்த பின்னர், “மகனே… காலத்தை வீணாக்காதே! உங்கு எங்காவது பாத்து, ஆரையாவது திருமணம் செய்து கொள்.” என்றார் அம்மா.

சாதி சமயம் சம்பிரதாயங்களில் மூழ்கிக் கிடக்கும் அம்மாவின் வார்த்தைகள் அவனுக்கு ஆச்சரியத்தைத் தந்தன.

“அம்மா… அது எல்லாம் எனக்குச் சரிப்பட்டு வராது. நீங்களே பாத்துப் பேசுங்கோ. ஆனா வைத்தியத்துறையிலை வேலை செய்யிற பெண்ணா இருந்தா கொஞ்சம் நல்லது…”

“சரி… வயது வட்டுக்கை போனாப்பிறகு, இப்பவாதல் தனக்கொரு துணை தேவை என்பதை உணர்ந்து கொண்டானே’ என அம்மா தேறுதல் கொண்டார்.

அம்மாவும் லேசுப்பட்டவர் அல்லர். நுணுக்கம் பார்ப்பவர். மணப்பெண்ணின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏதாவது தீராத நோய் இருந்ததா? மூதாதையர்களின் ஆயுள் கெட்டியானதா? சாதி, சமயம், கொழுத்த பணக்காரர்களா என்பதை விடுத்து விடுத்துப் பார்ப்பவர் அவர்.

இலங்கையில் இருந்து கொண்டு அவனுக்கொரு பெண் பார்க்க மிகவும் கஸ்டப்பட்டார் அம்மா. அதுவும் குறிப்பிட்ட ஒரு துறைக்குள் பெண் பார்ப்பது, மொட்டந்தலையில் மயிர் பிடுங்குவதற்கு ஒப்பானது எனத் தெரிந்து கொண்டார். வைத்தியர், தாதி என ஒருசில மணப்பெண்கள் வந்து போனார்கள்.

அசோகன் தோற்றத்தில் உயரமாக இருந்தபோதிலும், அவனது `வண்டி தொந்தியையும்’ உப்பிய கன்னங்களும் பெண்களைக் கவரும் என்று சொல்வதற்கில்லை. `கண்டதையும் திண்டவன் பண்டியன் ஆவான்.’ அல்லவா! தனிக்கட்டையாக இருந்து கொள்வதால் அவன் தன்னைக் கவனிப்பதில்லை. அழகுணர்ச்சி துப்பரவுக்குக் கிடையாது. நாகரீகமாகவும் உடை அணிந்து கொள்ளமாட்டான். `சூறாவளிக்குச் சுழன்றடிக்கும் புல்லுப்பற்றை’ போன்ற தலைமயிரும், காதுகளில் புவியீர்ப்புவிசைக்கு எதிராக குத்துண்டு நீண்டிருக்கும் மயிர்க்கற்றைகளும், மூக்குக்குள்ளிருந்து வெளிக்கிளம்பும் சண்டியர் மீசையும், பார்ப்பவர் மனங்களை அவருப்புக் கொள்ள வைக்கும். இலங்கையிலிருந்து வந்ததன் பின்னர், இத்தனை வருடங்களில் எந்தவொரு ஆடை அணிகலன்களையும் புதிதாக வாங்கியறியான். காசைச் செலவிடுவதில் தாராளமான கருமி அவன்.

இதனால், அவனை சில பெண்கள் வெறுத்தனர். கொஞ்சம் நாகரீகமான பெண்கள் சிலரை அசோகனும் தவிர்த்துக் கொண்டான்.

அப்பொழுதுதான் சியாமளாவின் சாதகம் அவர்களின் கைக்கு வந்தது. அப்போது அவள் குவீன்ஸ்லாந்தில் உள்ள டவுன்ஸ்வில் நகரத்தில் தாதியர்களுக்கான முதுகலைப் பட்டப்படிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். அசோகனுக்கு அவளைப் புகைப்படத்தில் பார்த்ததும் பிடித்துக் கொண்டது. உடனே அவளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டுவிட்டு, அதற்கடுத்துவந்த சனிக்கிழமை டவுன்ஸ்வில் நகருக்குப் புறப்பட்டுப் போய்விட்டான். புறப்படும் போது முதன்முதலாக தன்னை அலங்கரித்துக் கொண்டான். பல வருடங்களாகக் கம்பளி நீக்கப்படாத அவுஸ்திரேலியச் செம்மறி ஆடொன்று, கம்பளி நீக்கப்பட்டபின் தன்னைப் பார்த்துப் புளகாங்கிதம் கொள்வது போல மகிழ்ச்சி கொண்டான்.

அலைகள் குதித்துக் கூத்தாடும் கடற்கரைப்பிரதேசமான டவுன்ஸ்வில் நகரின் `பப்’ ஒன்றில் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள்.

சியாமளா சுமாரான அழகி. காந்தக் கண்கள். கொஞ்சம் துடிப்பும் அடங்கியிருக்கும் குடும்பப் பாங்கான பெண். அசோகனுக்கு ஏற்ற உயரம். கவர்ச்சிகரமான ஆடைகள் எதையும் அவள் அணியாததால் கப்பென்று அசோகனுக்குப் பிடித்துக்கொண்டது. கற்பனையில் ஒரு ஆடையை அவளுக்கு அணிவித்துப் பார்த்தான். சிலுக்கு மாதிரி இருந்தது. சிரித்துக் கொண்டான்.

“பியர் ஏதாவது?” அசோகன் கேட்டபோது, “சீ!” என்று வெறுப்புடன் முகத்தைச் சுருக்கிக் கொண்டாள்.

“பப்பிலை நீங்கள் சந்திப்போமா எண்டு கேட்டபோதே யோசிச்சன்.”

பின்னர், சிற்றுண்டி அருந்தியவாறே இருவரும் உரையாடலைத் தொடங்கினார்கள்.

“நான் சிறீலங்காவில பத்து வருசங்கள் நில அளவையாளராக வேலை செய்திருக்கிறன். எனக்கு இப்ப முப்பத்தெட்டு வயசாகுது. நீங்கள்?”

“எனக்கு முப்பத்திநாலு தொடங்கியிருக்கு. நானும் ஜவ்னா ஹொஸ்பிட்டலிலை கொஞ்சக் காலம் வேலை செய்திருக்கிறன்.

நீங்க மெடிக்கல் றிலேட்டட்டாத்தான் ஒருத்தரை திருமணம் செய்யப்போவதாகக் கேள்விப்பட்டன். அது ஏன் மருத்துவம்? என்னை ஏன் உங்களுக்குப் பிடிச்சிருக்கு?”

சியாமளாவின் கேள்வி அசோகனைக் கொஞ்சம் திக்குமுக்காட வைத்தது.

“இதுக்கென்ன பதில் சொல்வது? ஏன் உங்களுக்கு என்னைப் பிடிக்கேல்லையோ?”

“அப்படியெண்டு இல்லை. உங்கட வயிறு ஏன் இவ்வளவு பெரிசா உப்பிப்போய் இருக்கு… பிள்ளைத்தாச்சி மாதிரி? நீங்கள் நல்லா றிங்ஸ் பாவிப்பியளா?”

“அப்படியெண்டு இல்லை. எப்போதாவது பார்ட்டிகளிலை குடிப்பன். அப்படிப் பார்த்தா நானும் உங்களைப் பற்றிக் கேட்கலாம் தானே! நீங்கள் ஏன் மெல்லீசா இருக்கிறியள்… புடலங்காய் மாதிரி? உங்கட வீட்டில சாப்பாட்டுக்குப் பஞ்சமோ?”

இருவரும் சிரித்தார்கள்.

சியாமளா ரிசூவினால் வாயை ஒற்றிக்கொண்டாள். காற்றுக்குக் கிழம்பிப் பறக்கும் ஆடையை வருடி அழுத்தியவாறே அசோகனைப் பார்த்தாள். அசோகன் தொடர்ந்தான்.

“அதுசரி சியாமா… நான் உங்களுடன் ஒரு விஷயத்தைப் பற்றித் தீவிரமாகக் கதைக்க வேண்டும்.”

“அதற்கு முன் நான் ஒன்று உங்களிடம் சொல்லட்டுமா? லேடீஸ் ஃபொஸ்ற்… யா!”

“நீங்கள் இங்கிலீசைத் தமிழிலை கதைக்கிறியள்…”

“என்ன சொல்கின்றீர்கள்? எனக்குப் புரியவில்லை.”

“சரி இருக்கட்டும். நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லுங்கள்.”

“எங்கட குடும்பத்தில மொத்தமாக ஐஞ்சு சகோதரர்கள். மூன்று அக்காமார்கள். ஒரு அண்ணா. இவையளில ஒரு அக்காவைத் தவிர மற்றவைக்குப் பிள்ளையள் இல்லை. அக்காவுக்கும் ஒரு பெண்தான். எங்கட பரம்பரையில ஆண்டவன் பிள்ளைச்செல்வத்தை கொஞ்சம் கம்மியாவே குடுத்திருக்கின்றான்.”

சியாமளா சொல்லிக் கொண்டிருக்கும் போது அசோகனின் முகம் அகல விரிந்தது. அது ஒரு மின்வெட்டாக மூளைக்குத் தாவ புன்னகை மலர்ந்தது. இருக்கையில் கொஞ்சம் நெளிந்து, கதிரையின் நுனிக்குத் தாவி, சியாமளாவின் அருகே நகர்ந்தான் அசோகன்.

“நான் சீரியஸ்சா சொல்லுறன். நீங்க சிரிக்கிறியள். ஏன் உங்களுக்குப் பிள்ளையள் எண்டாப் பிடிக்காதோ?”

“ஆருக்குத்தான் பிள்ளையளிலை ஆசையில்லாமல் இருக்கும். நீங்கள் ஒரு நேர்ஸா இருந்துகொண்டு இப்பிடிக் கதைக்கிறதுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு. உங்கட குடும்பத்தில பிள்ளைச்செல்வம் குறைவாக இருந்திட்டா, எங்களுக்கும் அப்படித்தான் இருக்கும் எண்டு எப்பிடிச் சொல்லலாம்?”

சில்லென்ற கடற்காற்றும் அசோகனின் வார்த்தைகளும் சியாமளாவைக் குளிர்வித்தன.

“அப்பாடி… நான் சொல்ல வந்ததைச் சொல்லிட்டன். எங்கே நீங்கள் என்னை இதாலை வெறுத்திடுவியளோ எனப் பயந்திட்டன். நீங்கள் ஏதோ சொல்ல வந்தியளே அதை இனிச் சொல்லுங்கோ!”

அசோகன் அந்தரப்பட்டான். கொஞ்சம் நிலை தடுமாறினான்.

“என்ன… நான் குடுத்த `சொக்’ இலை சொல்ல வந்ததை மறந்திட்டியளோ?”

“நீங்க சொன்னதோடை ஒப்பிடேக்கை பெரிசா ஒண்டுமில்லை… நீங்கள் படிப்பு முடிஞ்சாப் பிறகு, வேலை எண்டு சொல்லி அங்கை இஞ்சை அலையக்கூடாது. வேலை கிடைக்குதோ இல்லையோ, மெல்பேர்ண் வந்து என்னோடை இருக்க வேண்டும்.”

“அவ்வளவுதானே! நிட்சயமாக…”

அவர்கள் சந்திப்பின் பின்னர், அசோகன் தனது தாயாருடன் தொடர்பு கொண்டு, தனக்கு சியாமளாவைத் திருமணம் செய்வதில் பூரணசம்மதம் என்றும், திருமணப் பேச்சுகளைத் தொடங்குமாறும் சொன்னான்.

இரண்டு நாட்களில் தாயாரிடமிருந்து அவசர செய்தியொன்று வந்தது.

“சியாமளா குடும்பம் பற்றி எல்லாம் விசாரித்துவிட்டேன். சியாமளா எல்லா விதத்திலும் உனக்குப் பொருத்தமானவள்தான். ஆனா ஒண்டு… அவையளின்ரை குடும்பத்தில ஒருத்தருக்குமே பிள்ளையள் இல்லையாம். மலட்டுக் கூட்டமாம்.”

அசோகன் சியாமளாவுக்குச் சொன்னதையே அம்மாவுக்கும் சொன்னான். கடைசியாக, “அம்மா… அந்தப் பிள்ளையையும் ஆரோ ஒருத்தர் கலியாணம் செய்யத்தானே வேணும்.” என்றான்.

“அவளைச் செய்யிறதாலை உன்ரை பரம்பரை முடிஞ்சு போமடா…”

அவர்களின் உரையாடலின் நீட்சியில், அசோகன் சியாமளாவைத் திருமணம் செய்வதில் பிடிவாதமாக இருப்பதையும், இனியும் தாமதித்தால் அசோகன் திருமணம் செய்யாமலே போய்விடுவான் என்பதையும் உணர்ந்துகொண்ட தாயார் மெளனமானார்.

சில மாதங்களில் அவர்களின் திருமணம் நடந்தது. சியாமளாவின் படிப்பு முடிய, அவள் சொன்னமாதிரியே மெல்பேர்ண் வந்துவிட்டாள்.



இளைப்பாறவென கட்டிலில் சரிந்த சியாமளாவை உறக்கம் தாலாட்டத் தொடங்கியவேளை, அவளின் கைத்தொலைபேசி அடித்தது.

“ஹலோ… நான் லோறன்… மெல்பேர்ண் ஹொஸ்பிற்றலில் இருந்து கதைக்கின்றேன். அசோகனின் மனைவியுடன் கதைக்க முடியுமா?” மறுமுனையில் ஒரு பெண் குரல் ஒலித்தது.

“சொல்லுங்கள்… நான் அவரின் மனைவிதான்…”

“இன்று காலை அசோகன் ஒரு விபத்திற்குள்ளாகி இருக்கின்றார். உயிராபத்து ஒன்றும் இல்லை. ஆனா நிறையக் காயங்கள். முள்ளந்தண்டிலும் இடுப்பிலும் காலிலும் எலும்பு முறிவுகள் இருப்பதால் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவில் வைத்திருக்கின்றோம். உடனே வர முடியுமா?”

“நன்றி. நான் உடனே வருகின்றேன்.”

“வரும்போது அவரின் குடும்ப வைத்தியர் தொடர்பான விபரங்களையும் கொண்டு வாருங்கள்.”

சியாமளா அவசரமாகப் புறப்பட்டாள். வைத்தியசாலையில் அசோகனைப் பார்த்த மாத்திரத்தில் பயந்து போய்விட்டாள். உடம்பு முழுவதும் கட்டுகள் போடப்பட்ட நிலையில், ஆழ்மயக்க நிலையில் இருந்தான் அவன். ஒரு தாதியாக தன்னைத் திடப்படுத்திக் கொண்டாலும், மனதளவில் உடைந்து போனாள் சியாமளா. தன்னுடன் தொலைபேசியில் கதைத்த லோறன் என்ற பெண் மூலம், அசோகனுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளவிருக்கும் டாக்டர் சைமனுடன் தொடர்பு கொண்டாள்.

“டொக்ரர்… எப்ப இவரின்ரை மயக்கம் தெளியும்?”

“இப்போதுள்ள நிலையில் எதுவும் சொல்ல முடியாது. அசோகன் விபத்து நடந்தபோது காருடன் மலையிலிருந்து அதலபாதாளத்திற்குள் விழுந்திருக்கின்றார். அதிர்ச்சியில் அவரது மூளை செயலிழந்து போயிருக்கின்றது.

அசோகனுக்கு சத்திரசிகிச்சைகள் செய்வதற்காக, நீங்கள் இந்தப் படிவங்களில் கையொப்பமிட வேண்டும்.” சில படிவங்களை சியாமளாவிடம் நீட்டினார் சைமன்.

”டொக்ரர்… நான் இங்கே ஹொஸ்பிற்றலில் தங்கிக் கொள்ளலாமா?” படிவங்களில் கையொப்பம் இட்டவாறே கேட்டாள் சியாமளா.

“இப்போதைக்குத் தேவையில்லை. நாங்கள் அடிக்கடி உங்களுடன் தொடர்பு கொண்டு நிலைமைகளைச் சொல்லுவோம். தேவை ஏற்பட்டால் உங்களை வரச் சொல்லுவோம்.”

எல்லாவற்றையும் முடித்துக்கொண்ட சியாமளா சிறிது நேரம் வைத்தியசாலையில் தங்கிக் கொண்டாள். அவளுக்கு என்ன செய்வதென்று உடனே தெரியவில்லை. வேலைக்கு மூன்றுநாட்கள் லீவு போட்டுக் கொண்டாள். அசோகன் வேலை செய்யும் இடத்திற்கும், தன்னுடையதும் அசோகனதும் நெருங்கிய நண்பர்கள் சிலருக்கும் தகவலைச் சொல்லிக் கொண்டாள்.

அசோகனின் மிக நெருங்கிய பள்ளி நண்பனான தினேஷ், சியாமளா வைத்தியசாலையில் நிற்கும்போதே வந்து அசோகனைப் பார்த்துச் சென்றான். அவனின் ஆறுதல் வார்த்தைகளும் உதவிகளும் சியாமளாவுக்குக் கொஞ்சம் ஆறுதலைத் தந்தன.

அன்று மாலை அசோகனுடன் வேலை செய்பவர்கள் வந்து பார்த்துவிட்டுச் சென்றார்கள். என்ன உதவி வேண்டுமென்றாலும் செய்வதற்காக அவர்கள் காத்திருந்தார்கள்.



அசோகன் இரண்டு நாட்களில் ஆழ்மயக்கத்திலிருந்து விடுபட்டுக் கொண்டான். அவனுக்கு சத்திர சிகிச்சைகள் ஒவ்வொன்றாக மேற்கொள்ளப்பட்டன.

அசோகன் வைத்தியசாலையில் இருந்த காலங்களில், தினேஷ் சியாமளாவுக்கு மிக்க உறுதுணையாக இருந்து கொண்டான். அவள் வேலைக்குப் போகும் தருணங்களில் எல்லாம், வைத்தியசாலைக்கு வந்து அசோகனுக்கு வேண்டிய உதவிகள் செய்தான்.

அசோகனால் தனித்து எதுவுமே செய்யமுடியாது. எழுந்து நடப்பதற்குக்கூட இன்னொருவரின் உதவி தேவைப்பட்டது. அவனால் சுயமாக நடந்து கொள்ள குறைந்தது ஆறு மாதங்களாவது தேவை என வைத்தியர் சைமன் சியாமளாவிடம் சொன்னார்.

அசோகனுக்கு விபத்து நடந்தபோது வயது ஐம்பதை நெருங்கிவிட்டது. விபத்தின் பிற்பாடு தான், தங்களுக்கும் பிள்ளைகள் என இருந்திருந்தால் ஒருவர் மாறி ஒருவர் என தன்னைப் பார்த்திருப்பார்கள் என்ற சிந்தனை அசோகனின் மனதில் தீவிரமாகியது. சியாமளாவால் தனித்து நின்று, `புத்தரக்கன்’ போன்ற தன்னைத் தூக்கிப் பறிக்க முடியாது என்பதையும் புரிந்து கொண்டான்.

பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும் கட்டத்தை இன்று தாங்கள் தாண்டிவிட்டோமோ என்று கூட சியாமளா சிலவேளைகளில் நினைத்துக் கொள்வாள். ஆரம்பத்திலேயே தன்னுடைய நிலை பற்றி சியாமளா சொல்லியிருந்தாலும், இருவருமே ஏன் ஒரு வைத்தியரைச் சந்தித்து அது பற்றிக் கலந்துரையாடி ஆலோசனை பெறவில்லை என எண்ணிக் கொள்வாள். ஒரு சில தடவைகள் வைத்தியரைப் போய்ப் பார்ப்போமா என்று அசோகனிடம் அவள் கேட்டிருக்கின்றாள் தான், என்றாலும் தீவிரமாக அல்ல. வேலையைத் தவிர எதையுமே சுயமாகச் செய்யும் பக்குவம் அசோகனிடம் இல்லாததும் அதுக்கொரு காரணமாக இருக்கலாம் என அவள் முடிவு செய்வாள்.



அசோகனுக்கு விபத்து நடந்துவிட்டதால், `வீதி புனரமைப்புத் திட்டம்’ ஒன்றும் தாமதமாகப் போகவில்லை. அவன் அந்தத் திட்டத்திற்கு ஏற்கனவே கையொப்பம் இட்டுவிட்டான். புனரமைப்புத் திட்ட வேலைகளும் ஆரம்பமாகிவிட்டன. சில வாரங்களாக `விலங்குகள் – பறவைகள்’ நலன் பேணும் அமைப்புகள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்தத் தடவை அவர்களின் பாச்சா பலிக்கவில்லை. பல அரச அமைப்புகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில், அவர்கள் பின் வாங்கிக் கொண்டார்கள்.

அசோகன் வேலையிலிருந்து எடுத்துக்கொண்ட விடுப்பு நீண்டுகொண்டே போனது.

வீதி புனரமைப்புத் திட்ட கட்டுமானத்திற்கு வழிகாட்டவும், தொழில்சார் அலோசனைகள் வழங்கவும் என அசோகனுக்குப் பதிலாக புதியவர் ஒருவரை வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் நியமித்துக் கொண்டார்கள்.

அசோகன் இனி வீட்டில் இருந்துகொண்டே சிகிச்சைகள் பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலை வந்தபோது, வைத்தியர் சைமன் அசோகனது எதிர்காலம் பற்றி அவர்களுடன் பேச விரும்பினார். மூன்றாம் உலக நாடுகளில் உள்ள வைத்தியர்கள் போலல்லாது, இங்கே வைத்தியர்கள் சம்பந்தப்பட்டவர்களை ஒன்றாகச் சேர்த்து வைத்து வெளிப்படையாகவே கதைப்பார்கள்.

“சியாமளா… அசோகன் இன்னும் மூன்று நான்கு மாதங்களில் சுயமாக நடக்கத் தொடங்கிவிடுவார். உங்களது முயற்சியும், அவரது தன்னம்பிக்கையும் குணப்படுத்துவதை விரைவுபடுத்தும்.

ஆனால் ஒன்று… முன்னயதைப் போல அவரால் இனி தாம்பத்திய உறவு கொள்ள முடியாது. உங்களுக்கு இப்ப பிள்ளையள் இல்லைத்தானே!”

இருவரும் ஆம் என்று தலையாட்டினார்கள். சைமன் தொடர்ந்தார்.

“அசோகன் இதுவரைகாலமும் தனது மலட்டுத்தன்மையைப் போக்க எடுத்துக்கொண்ட சிகிச்சைகளை, மருந்துகளை இனி நிறுத்திக்கொள்ளலாம். அவற்றால் இனி எதுவித பிரயோசனமும் இருக்கப் போவதில்லை…”

சைமன் சொல்லிக்கொண்டு போகும்போது சியாமளாவின் முகம் வியர்த்து தலை சுற்றுவது போல் இருந்தது. தன் முன்னாலே யாரோ ஒருவர் இருந்து உளறுவது போலவும், பக்கத்திலே அசோகன் தலையைக் குனிந்தபடி இருப்பதும் மங்கலாகத் தெரிந்தன.

“டாக்டர்… நீங்கள் சொல்வது ஒன்றுமே புரியவில்லையே?” இருக்கையை இறுகப் பற்றியபடி சியாமளா கேட்டாள்.

“எப்படிச் சொல்வது? சிம்பிளா சொல்வதென்றால், இதுவரை காலமும் அசோகன் உங்களுடன் உறவு கொண்டிருந்தாலும் அவர் மூலம் உங்களுக்குப் பிள்ளைகள் கிடைத்திருக்காது. இனிமேல் அவரால் உங்களுடன் உறவு கொள்ளவே முடியாது. அவ்வளவும் தான்.”

சியாமளா கதிரையில் இருந்தபடியே மயக்கம் வந்து சரிந்தாள். இருபது வருட திருமண வாழ்க்கையின் பின்னர் கணவன் பற்றிய இரகசியமொன்று அம்பலமேறியதில் அவள் அதிர்ச்சி கொண்டிருந்தாள். தான் சொன்னதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சியாமளா மயங்கிவிட்டாள் என்று நினைத்த சைமன் அவளுக்கு வேண்டிய சிகிச்சைகளைச் செய்தார். ஆனால் அவள் அதிர்ச்சிக்குக் காரணம் அதுவல்ல என்பது யாருக்குப் புரியும்?



“நாங்கள் முதன் முதலா சந்திச்ச போது, ஏன் எனக்கு எல்லாத்தையும் மறைச்சியள்?” அசோகன் வைத்தியசாலையில் இருந்து வீட்டிற்கு வந்ததும் சியாமளா கொந்தளித்தாள். இத்தனை வருடங்களாக யாருக்கும் தெரியாத அந்த அந்தரங்கம் வெட்டவெளிச்சமாக்கப்பட்டதில் சியாமளா கொதித்துப் போனாள். கட்டுப்படுத்த முடியாதளவிற்கு கோபம் கொண்டிருந்தாள் அவள்.

“நான் எல்லாத்தையும் நேரடியாகச் சொல்லுறதுக்காகத்தான் டவுன்ஸ்வில் வந்தேன். நான் சொல்லவரேக்கை நீங்கள் உங்கட கதையைச் சொல்லிக் குழப்பிப்போட்டியள்…”

“குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கேக்கை கணவனிட்டை எதையும் மறைக்கக் கூடாது எண்டதில நான் எவ்வளவு கவனம் எடுத்தன்.

நான் என்ரை பக்க நியாயத்தைச் சொல்லேக்கை, நீங்கள் உங்கட பக்கத்தையும் சொல்லியிருக்க வேணும். ஆனா நீங்க தப்ப நினைச்சிட்டியள்… அதுக்குப்பிறகு பழியை என்ரை தலையிலை போட்டிட்டியள். அப்பிடித்தானே!”

“அப்பிடியில்லை சியாமா… நான் ஏன் ஒரு வைத்தியத்துறை சம்பந்தமான பெண்ணைக் கலியாணம் கட்ட வந்தனான் எண்டதை யோசிச்சுப் பாரும். அப்படிப்பட்ட பெண்ணுக்குத்தான் என்ரை நிலைமை சரியாப் புரியும்… சிலவேளையிலை அவளாலைதான் என்ரை நிலையைச் சரிப்பண்ணவும் முடியும். அப்பிடித்தான் நான் நினைச்சன்…”

“நினைச்சியள் சரி… ஆனா சொல்லேல்லையே! இத்தனை வருஷ வாழ்க்கையிலை அதைப்பற்றி பிறகு ஒருநாளும் வாயே திறக்கேல்லையே! ஒவ்வொருநாளும் மருந்து குடிக்கேக்கை அருகிலை உங்களுக்கு ஒரு துணை இருக்கெண்டதை மறந்து போனியளே!”

அசோகன் கல்லுளிமங்கன் போல ஒன்றுமே பேசாது மெளனமாக நின்றான்.

`மனச்சாட்சியுடன் மண்டியிடத் தெரியாதவர்களுடன் எப்படி வாழ்வது?’ வாழ்க்கையில் தான் பட்ட அவமானத்தை நினைத்து குமுறினாள் அவள். துடைக்கத் துடைக்க அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.

“சரி… இப்பவாவது உங்களைப்பற்றி இந்தச் சமூகத்துக்கு தெரியப்படுத்துவியளா?”

“ஏன் தெரியப்படுத்த வேணும்? இந்தச் சமூகம் எண்டது ஒரு சாக்கடை. அவையளுக்கு நாங்கள் ஒரு பொருட்டேயல்ல. அவையளுக்கு சொல்லுறதாலை என்ன வந்திடப் போகுது? அனுதாபத்தைத் தேடி அவையளிட்டை இதைப்பற்றிச் நாங்கள் சொல்லச்சொல்ல அவையள் அகங்காரம் கொண்டு இன்னும் இன்னும் எங்களைக் கேவலப்படுத்துவினம்.”

“அப்ப… அந்தச் சாக்கடைக்குள்ளை என்னை ஒரு புழுவா நெளியவிட்டுப் பாத்து ரசிக்கப்போறியள். அப்பிடித்தானே!”

முதன்முறையாக இருவரும் சூடாக வாக்குவாதப்பட்டார்கள்.

வீட்டின் பின்புறம் இருந்த மார்க்கிரட்டிற்கு, அந்த வீட்டில் புதுசாக ஒரு சத்தம் கிழம்பியது அதிசயமாக இருந்தது. சத்தம் கொஞ்சம் தணிந்த நிலையில், அசோகனையும் சியாமளாவையும் ஒரு தடவை பார்த்துப் போகலாம் என்று வந்தாள்.

அவளை அசோகனும் சியாமளாவும் வரவேற்ற முறையில் இருந்து, அவர்களிடையே ஏதோ ஒன்று நடந்திருப்பதாக அறிந்தாள் மார்க்கிரட். இருப்பினும் மூவரும் தங்களுக்குள் ஒரு அஜஸ்மன்ற் செய்துகொண்டு சரளமாக உரையாடினார்கள்.

“மார்க்கிரட்… நீங்கள் இந்த வருடக் கடைசியுடன் வீட்டை விட்டுவிடுங்கள்.” மார்க்கிரட் போகும்போது, அவளுடன் கூடவே சென்று வழியனுப்பி வைத்த சியாமளா கேட்டுக் கொண்டாள்.



அதன் பிறகு சியாமளா அசோகனுடன் கதைப்பதை நிறுத்திக் கொண்டாள். ஆனால் அசோகனுக்குச் செய்யவேண்டிய பணிவிடைகள் எதிலும் அவள் குறை வைக்கவில்லை. வேலைக்குப் போகும்போது உணவையும் நீரையும் அவனுக்குப் பக்கத்தில் வைத்துவிட்டுச் செல்வாள். அசோகன் தனது ஊன்றுகோலை வைத்துக்கொண்டு நொண்டி நொண்டி தனது வேலைகளைச் செய்து கொள்வான்.

தினேஷ், தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி வந்து உதவிகள் செய்து வந்தான்.

இப்பொழுது பெரும்பாலும் அசோகனின் உருவம் அவன் அறையில் சாய்வுநாற்காலியில் முடங்கிக் கிடக்கின்றது. சியாமளா வேலை முடிந்து வந்ததும், தனது அன்றாட வேலைகளைச் செய்துவிட்டு தனது அறையில் தங்கிக் கொள்வாள். இருவரும் இப்பொழுது தனிமையை விரும்பிக் கொள்கின்றார்கள்.

அவர்கள் இருவருக்குமிடையே எக்கணத்திலும் வெடித்துவிடலாம் என்ற நிலையில் ஒரு மெளனப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது.



அசோகனிடம் கதை பேச்சை நிறுத்தி, படுக்கைக்களை இரண்டாக்கிக் கொண்ட பிற்பாடு, சியாமளா ஒரு வைத்தியரிடம் சென்று தன்னைப் பரிசோதித்துக் கொண்டாள். கருத்தரிப்பதற்காக உடலளவில் ஆரோக்கியமாக தான் இருப்பதை அறிந்துகொண்டபோது அவளின் கவலை மேலும் இரட்டிப்பாகியது. அசோகன் மீதான கோபம் பன்மடங்காகியது. கணவரின் விந்தணுக் குறைபாட்டால் கருத்தரிக்கும் பாக்கியம் கிடைக்காமல், ஏன் தனது வாழ்நாள் முழுவதையும் அவப்பெயருடனும் அவமானத்துடனும் கழிக்க வேண்டும் என தனக்குள்ளே கேட்டுக் கொண்டாள்.

இப்பொழுது கூட அசோகன் தன்னில் குறைபாடு இருப்பதை ஒத்துக் கொள்வதில்லை. மனம் திறந்து அதைப்பற்றி ஒருவரிடமும் பேசிக்கொள்வதுமில்லை.

`தன்னிலை பிழையை வைச்சுக்கொண்டு, நல்லவன் மாதிரி நடிச்சுக்கொண்டு திரியிற அசோகனை இந்தச் சமுதாயம் ஒருநாள் காறித்துப்பத்தான் போகின்றது’

ஆத்திர அவசரத்தில் அப்படி எண்ணிக் கொண்டாலும், இன்னொருவனைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் சியாமளாவுக்குத் துளிகூட வரவில்லை. ஏன் புதிதாக வருபவனுக்கும் தனக்கும்கூட பிள்ளைகள் பிறக்காவிட்டால்?

இந்தக் கொடுமை வாய்ந்த சமுதாயத்தின் வேட்டுக்கள் தன்மீதும் திரும்பிவிடும் என்பதை சியாமளா அறிவாள்.

இத்தனை வருடங்களில், அசோகன் அவளை என்றும் அடித்ததோ, சுடு சொற்களால் வசை பாடியதோ கிடையாது. ஆனால் அவன் ஒளித்து வைத்திருந்த அந்த பொல்லாத பொய்? ஒரு மிகப்பெரிய ரகசியமொன்றை அவளிடம் மறைத்து வைத்திருக்கின்றானே! ஆரம்பத்தில் இருந்தே தன்னை ஒரு உத்தமமானவன் போல் வைத்திருக்க நிறையவே நடித்திருக்கின்றான் அவன். அதிர்ந்து பேசாமல், அன்பால் ஆட்கொள்ளும் ஆணாதிக்கம் இது.

எல்லாவற்றையும் நினைத்து சியாமளாவின் மனம் அலைக்கழிந்தது.

`செயற்கை முறைக் கருக்கட்டல்’ பற்றி வைத்தியர் அவளுடன் உரையாடியபோது, சியாமளாவினால் அதை இலகுவாக உள்வாங்க முடிந்தது.

ஏறக்குறைய ஐந்து மாதங்கள் கழிந்த நிலையில், அசோகனால் ஊன்றுகோல்கள் இல்லாமல் சுயமாக நடக்கத் தொடங்கிய வேளையில், ஒருநாள், சியாமளா அவனைவிட்டு நீங்கியிருந்தாள். என்னைப்போலவே ஏன் அவரும் எனக்கு உண்மையாக நடந்து கொள்ளவில்லை. திருமண வாழ்வின் அபத்தங்கள், துரோகங்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டிருந்த அவள், அவனை விட்டு விடுதலையானாள்.

மார்க்கிரட் தங்கியிருந்த பின்புறம் சியாமளா இடம் மாறினாள்.

அசோகனும் சியாமளாவும் ஒருவரையொருவர் சந்திப்பதை பெரும்பாலும் தாங்களாகவே தவிர்த்து வந்தார்கள்.

அவர்கள் வீட்டிற்கு, நண்பர்கள் உறவினர்கள் விருந்தினர்கள் என்று எவரும் வருவதை அசோகன் இப்பொழுது விரும்புவதில்லை. தனக்கு இப்பொழுது உதவிகள் எதுவும் தேவையில்லை என தினேஷ் வந்துபோவதையும் நிறுத்திவிட்டான்.



இப்பொழுதெல்லாம் அசோகன் தனித்து கார் ஓடத் தொடங்கிவிட்டான். வீட்டிற்கு அண்மையாக, புதிய வேலை ஒன்றிலும் இணைந்து கொண்டான்.

ஒருநாள்… புனரமைப்புச் செய்யப்பட்ட வீதியைப் பார்க்க விரும்பி, தன்னுடன் தினேஷ் கூட இருந்தால் நன்றாக இருக்கும் என உணர்ந்த அசோகன், அவனை வரும்படி ரெலிபோன் செய்திருந்தான். தக்க சமயம் வாய்த்தால் தனக்கும் சியாமளாவுக்குமிடையேயான விரிசல் பற்றியும் அவனுடன் கதைக்க விரும்பினான்.

இருவரும் அந்த வீதியைப் பார்ப்பதற்குப் புறப்பட்டார்கள். வீதி புனரமைப்புச் செய்யப்பட்டதற்கும் இதுகாலவரைக்கும் எந்த விபத்தும் அங்கே நடக்கவில்லை. வீதி நேராக்கப்பட்டு அகலமாக கனகச்சிதமாக இருந்தபோதிலும், காட்டின் பெரும்பகுதி அழிக்கப்பட்டருந்தது கண்டு அசோகன் வருத்தமுற்றான்.

அந்தப் பாதையைக் கடந்து சில கிலோமீட்டர்கள் தூரம் போனதும், வாகன ஓட்டிகளுக்கான ஒரு இளைப்பாறும் பகுதி வந்தது. அங்கே காரை நிற்பாட்டி இளைப்பாறினார்கள். அந்த இளைப்பாறும் பகுதிக்கு பின்புறமாகவிருந்த காட்டுப்பகுதியில் வலசை வரும் பறவையினங்களின் குதூகலம் தெரிந்தது. பறவைகள் பிறந்த குஞ்சுகளுக்கு இரையூட்டுவதும், துள்ளித்திரிந்து பறப்பதுமான காட்சி விரிகின்றது.

“பறவைகளுக்குத்தான் எவ்வளவு சுதந்திரம். தங்கள் வாழ்விடத்தில் வாழமுடியாத சூழ்நிலை வரும்போது இங்கே வலசை வருகின்றன. இங்கே வாழமுடியாத காலம் வரும்போது தங்களின் தாய்நிலத்திற்குத் திரும்பவும் பறந்து போய்விடுகின்றன.” என்று தினேஷ் சொன்னபோது,

“இனத்தை விரித்தி செய்யமுடியாத பறவைகளையும் விலங்கினங்களையும், அவற்றைச் சார்ந்த உயிரினங்கள் ஒதுக்கி வைக்கின்றனவா என்ன?” என அசோகன் அந்தக் காட்டைப் பார்த்தவாறே தினேஷிடம் கேட்டான்.

“நீ என்னத்தைச் சொல்ல வருகின்றாய் என்று எனக்குப் புரிகின்றது. ஐந்தறிவுள்ள உயிரினங்களில் மனிதரைப் போன்ற பண்புகள் எல்லாம் கிடையாது.

அதுசரி… நீ ஏன் இப்போது இதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொள்கின்றாய்? உனக்குத்தான் இப்ப குழந்தை பிறக்கப் போகின்றதே!” அசோகனின் முதுகைத் தட்டிக் குதூகலித்தான் தினேஷ்.

அசோகனுக்கு தினேஷ் சொன்னது ஆச்சரியத்தைக் குடுத்தாலும் காட்டிக் கொள்ளவில்லை. அத்துடன் தினேஷுடன் எதைக் கதைக்க விரும்பி வந்தானோ அதையும் மறைத்துக் கொண்டான். அசோகனின் பண்பே அதுதானே!

“போன கிழமை சியாமளாவை ஷொப்பிங் சென்ரரிலை கண்டனான். இப்ப என்ன நாலைஞ்சு மாதம் இருக்குமோ?”

“இருக்கும்… இருக்கும்…” சுரத்தில்லாமல் சொன்னான் அசோகன்.

“என்ன ஐம்பது வயசுக்கும் மேலை குழந்தை பெற்றுக் கொள்கின்றோம் என்ற கவலையா? எல்லாத்தையும் விட்டுத் தள்ளு. உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் வாழ வேண்டும்.” அசோகனை உற்சாகப்படுத்தினான் தினேஷ்.



அடுத்தநாள், சியாமளாவை இன்று எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற நோக்கில் வேலைக்கு விடுப்பு எடுத்திருந்தான் அசோகன்.

வீட்டின் பின்புறம் போய் கதவைத் தட்டினான். சற்று நேரத்தில் கதைவைத் திறந்த சியாமளா, அசோகனைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள். நீண்ட நாட்களாய் சவரம் செய்யாமல் நீளமாய் வளர்ந்துவிட்ட தாடி, சிக்குப்பிடித்துப் போன தலை என அசோகன் முன்பு இருந்ததை விட படுகேவலமான கோலத்தில் நின்றிருந்தான். அவனைப் பார்க்க சகிக்காது தலையைக் குனிந்து கொண்டாள் சியாமளா.

அதுவே தருணம் என சியாமளாவை ஆராய்ந்தான் அசோகன். உடலில் மினுக்கமும் முகத்தில் பொலிவுமாக தோற்றம் கொண்டிருந்தாள் அவள். நீண்ட நாட்களின் பின்னர், அழகாக நவநாகரீகமான உடையில் சியாமளா ஜொலித்தாள்.

“எப்படி இருக்கிறீர்?”

“நான் நல்ல சுகமாக இருக்கிறன். நீங்கள்?”

“நானும் சுகம். சியாமா…. இது உங்களுக்கு எத்தினையாவது மாசம்?” சியாமளாவின் வாயைக் கிளறினான் அசோகன். அவள் அதற்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை.

“எங்கே உங்கள் புதிய கணவர்?”

“புதிய கணவரா? அப்பிடி ஒருவரும் இங்கு இல்லையே! நீங்கள் தான் என் கணவர்!”

“அப்படியென்றால் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தை? அந்தக் குழந்தையின் அப்பா யார்?”

”நான் இப்ப வேலைக்குப் போறன். உங்களோடை இப்ப கதைக்க நேரமில்லை. பின்னேரம் கதைப்பம்.”

சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு காரினில் ஏற ஆயத்தமானாள் சியாமளா. காரினுள் ஏறிய அவள் தன் இரு கால்களையும் மெதுவாக உள்ளிழுத்தபோது, உப்பிய அவளது வயிறு அசோகனுக்குத் துலாம்பரமாகத் தெரிந்தது. தினேஷ் சொன்ன செய்தியை மேலும் அது உறுதி செய்தது. கஸ்டப்பட்டு அவள் காருக்குள் ஏறுவதைப் பார்த்துக் கொண்டு நின்றான் அசோகன்.

அவள் இஞ்சினை ஸ்ராட் செய்வதற்கு முன்னர், ஓடிச் சென்ற அசோகன் அவளது கார்க் கண்ணாடியைத் தட்டி, திறக்கும்படி சைகை செய்தான். அவள் கார் ஜன்னலின் கண்ணாடியை பாதிவரை திறந்தாள்.

“நான் கேட்டதற்கு பதில் சொல்லிவிட்டுப் போ…”

“அது நீங்கள்தான்! குழந்தையின் சட்ட ரீதியான அப்பா நீங்கள் தான்… இந்த சமூகம் பற்றியும் சாக்கடை பற்றியும் ஒருநாள் லெக்சர் எடுத்தியளே? அதைத் திருப்பி உங்களுக்கே சொல்லிக் கொள்ளுங்கோ. உங்களால ஒரு குழந்தையைத் தர முடியாட்டா, குழந்தையே பெத்துக்கொள்ள முடியாது எண்டு அர்த்தமா? அதற்கு ஆயிரம் வழிகள் இருக்கு. எனக்கு வாயும் சுத்தம், மனசும் சுத்தம், உடலும் சுத்தம்.”

அசோகனைச் சீண்டிவிட்டு காரை ஸ்ராட் செய்தாள் சியாமளா. அவளின் வார்த்தைகளில் அதிர்ச்சியுற்று, கதைக்கும் திராணியற்று, அவள் போவதையே வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றான் அசோகன். அவன் மனம் உறுமிக் கொண்டிருக்க முகம் மிருகமாக மாறிக்கொண்டிருந்தது.

`பொம்மை மிருகங்களால எண்டைக்குமே உறுமத்தான் முடியும்’ என நினைத்த சியாமளா காரின் வேகத்தை அதிகரித்தாள்.



மதியத்திலிருந்து இடையிடையே பின்புறம் ஓடிச்சென்று சியாமளாவின் கார் வந்துவிட்டதா எனப் பார்த்து வந்தான் அசோகன். உடலும் மனமும் சோர்ந்துபோக, அறைக்குள் கதிரையைப் போட்டுவிட்டு ஜன்னல் கண்ணாடியூடாக அவள் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தான். அவள் வந்ததும், பந்தயக் குதிரை போல பின்னாலே பாய்ந்து போனான். சியாமளா அவனை வரவேற்று வீட்டிற்குள் கூட்டிச் சென்றாள். எல்லாமே பிரச்சினையாகப் போகின்றது எனப் புரிந்தவுடன் அவளின் கால்களில் வீழ்ந்துவிட்டான்.

“வா… வீட்டிற்கு வந்துவிடு. இனி நாங்கள் ஒண்டா இருப்போம்” கெஞ்சினான் அசோகன்.

“ஒண்டா இருக்கிறது இனிச் சரிவராது.” தீர்க்கமாகச் சொன்ன சியாமளா தனது வயிற்றைத் தொட்டுக் காட்டி, “எத்தனை வயல்களை மாத்தியும் விதைக்கிற விதைகள் எல்லாம் முளைக்காம போனால்? – அப்பவும் இந்தச் சமூகம் வயலைத் தானே குற்றம் சொல்லுது. விதைகளை ஒருநாளும் குற்றம் சொல்லுறதில்லையே! அப்படிப்பட்ட சமூகத்தில தானே நாங்க இப்பவும் வாழுறம்.”

வரும் காலத்தில், சியாமளா தனித்தே பிள்ளையுடன் வாழும்போது தனது இடம் என்னவாகப் போகின்றது என்ற பயம் அசோகனின் மனதில் பெருந்தீயாகியது.

“சரி சியாமா… நீ சொல்லுறதை நான் ஏற்றுக்கொள்ளுறன். ஆனா ஏதாவது முக்கியமான நிகழ்ச்சிகளுக்குப் போகேக்கையாதல் நாங்கள் ஒண்டாப் போய் வரலாம்தானே?”

“போய் வரலாம்தான்… ஆனா ஒரு நிபந்தனை. உங்களுக்கு ஏன் குழந்தை உண்டாக்கும் வலு இல்லை எண்டதை நான் ஒருக்காலும் உங்களிட்டைக் கேட்கமாட்டன். இவ்வளவு காலமும் ஒளிச்சு வைச்சதை அப்பிடியே பொத்தி வைச்சிருங்கோ. அதைப் போல எனக்கு எப்படிக் குழந்தை கிடைச்சது எண்டதையும் நீங்கள் கேட்கப்படாது”

அவளின் வார்த்தைகள் அசோகனின் காதிற்குள் ஊசியாகச் செருகிக் கொண்டிருந்தன. முதலில் உலைவாயை மூடிவிடவேண்டும் என்ற நினைப்பில் சியாமளா பிடிவாதமாக இருந்தாள்.

அசோகன் தீவிரமாக யோசித்தான். நெடுநேரமாக சியாமளாவைப் பார்த்தபடி இருந்தான். கடைசியில் உடன்பட்டான்.

சியாமளா தன் அடிவயிற்றைப் பார்த்தபடி இருந்தாள். அவள் மனதில் ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவே இல்லை. தனக்குள் உருவாகும் அந்த உயிரைத் தானம் செய்த `உயிரியல் தந்தையை’ மனதார வாழ்த்திக் கொண்டு கதவைச் சாத்தினாள் அவள்.

அசோகன் உணர்ச்சியற்ற ஜடமாக, வெந்துபோன மனதுடன் அங்கிருந்து வெளியேறி, ஒரு சுற்று நடை நடந்து வீட்டின் மறு கதவைத் திறந்தான். வீட்டைப் போலவே தமது வாழ்வும் இரண்டு வாசல்களைக் கொண்டிருப்பதற்காகத் தன்னையே நொந்து கொண்டான்.


No comments:

Post a Comment