Sunday, 4 May 2014

எங்கே போகிறோம்

அறிமுகம் -நூலகவியலாளர் என்.செல்வராஜாதெல்லிப்பழை வீமன் காமத்தைச் சேர்ந்த கே.எஸ்.சுதாகர் தனது ஆரம்பக் கல்வியை வீமன்காமம் ஆங்கில மகாவித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும் பெற்றுக்கொண்டவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல்பீடத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு 1987 முதல் காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் பொறியியலாளராகப் பணியாற்றியவர். 1990இல் அத்தொழிற்சாலை போர்ச்சூழல் காரணமாக மூடப்பட்டதன் பின்னர் 1990 முதல் 1993 வரையான காலத்தில் கொழும்பு துறைமுக அதிகார சபையில் பணியாற்றிய பின்னர் இவர் 1993 முதல் 1995 வரை வவுனியா பிரதேசத்தின் வீடமைப்புத் திட்டத் துறையில் பொறியியலாளராகவும்; பணியாற்றினார். 1995இல் நியுசிலாந்துக்குக் குடும்பத்தினருடன் புலம்பெயர்ந்து சென்று அங்கு ஆறு ஆண்டுகளைக் கழித்தபின்னர், மீண்டும் புலம்பெயர்ந்து 2000இல் அவுஸ்திரேலியாவில் குடியேறித் தற்போது மெல்பெர்ண் பிரதேசத்தில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகின்றார்.

நோர்வே தமிழ்ச்சங்க மலர், அவுஸ்திரேலியாவின் மெல்பெரண் ஈழம் தமிழ்ச் சங்கம், மரத்தடி இணையம், இலண்டன் பூபாள ராகங்கள், கொழும்பு ஞானம் சஞ்சிகைதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், ஆகியவற்றின் சிறுகதைப் போட்டிகளில் பரிசுகளைப் பெற்றுக் குவித்தவர். அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினரான கே.எஸ்.சுதாகர் இந்த அமைப்பின் நிதிச் செயலாளராகவும் பணியாற்றியவர். சுருதி என்ற புனைபெயரிலும் பல படைப்புகளை எழுதி வருபவர்.

கே.எஸ்.சுதாகர் எழுதிய சிறுகதைகள் சிலவற்றை கொழும்பு ஞானம் சஞ்சிகையில் வாசித்திருக்கின்றேன். அப்போது அவரை ஒரு ஈழத்துப் படைப்பாளியாகவே அவரது கதைகளின் வாயிலாக அடையாளம் கண்டிருந்தேன்.

யாழ். கொம்மந்தறை என்ற சிற்றூரில் அமைந்துள்ள கம்பர்மலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின்; பழைய மாணவர் சங்கம், லண்டனில் 2006ம் ஆண்டு உலகளாவிய ரீதியில் அமைந்த பூபாள ராகங்கள் சிறுகதைப் போட்டி ஒன்றினை கொழும்பு தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து 2006இல் ஒழுங்கு செய்திருந்தார்கள். அச்சிறுகதைப் போட்டியில் தேர்வுக்குள்ளான 13 சிறுகதைகளையும் என்னிடம் அனுப்பி அவற்றுக்கான எனது மதிப்பீட்டை அச்சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையாகக் கேட்டிருந்தார்கள். முதல் மூன்று பரிசுக்குரிய கதைகளையும் அவர்கள் ஏற்கெனவே தெரிவுசெய்திருந்தார்கள். இப்போட்டியின் ஆறுதல் பரிசுக் கதைகளாகப் பத்துக் கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. அந்த ஆறதல் பரிசுக்கதைகளில் சிலவற்றை வாசித்தபோது அவற்றில் சிலவற்றை முதல் மூன்று பரிசுக்குள் காணமுடியாமல் போன எக்கம் என்னுள் இடைக்கிடையே எழுந்தது. இதையும் அந்த முன்னுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

ஆறதல் பரிசுபெற்ற கதைகளுள் ஒன்று ஆங்கொரு பொந்திடை வைத்தே என்ற கதையாகும். ஈழத்தமிழரின் உள்ளகப் புலப்பெயர்வின் ஒரு யதார்த்தத்தை அக்கதை துல்லியமாகக் காட்டியிருந்தது. பாதுகாப்பிற்காகத் தாம் இடம்பெயர்ந்து வாழ்ந்த நிலையில் கைவிடப்பட்ட தனது வீட்டிலிருந்து பொருட்கள் சிலவற்றையாவது எடுத்து வந்துவிடவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அயலவர் கோபாலருடன் சைக்கிளில் சென்று அலங்கோலமாகக் கிடக்கும் தன் வீட்டிலிருந்து அவசர அவசரமாகப் பொறுக்கிய சில பொருட்களுடன் தனியனாக வீடுதிரும்பும் இளைஞனின் (கதைஞரின்) விறுவிறுப்பான கதை அது. இடப்பெயர்வின் துயர், இக்கதையில் வாசகரின் மனதைத் துயர் கௌவும் வலுவைப் பெற்றிருந்தது. கோபாலருக்கு என்ன நேர்ந்திருக்கும் என்ற ஊகத்தை வாசகரிடமே விட்டுவிடுகின்றார் கதாசிரியர். அதற்கானதொரு தடயத்தையும் இடையில் அவர் அந்தப் பாழடைந்த வீட்டில் எதேச்சையாகச் சந்திக்கும் துணைப்படை இளைஞர்களின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பற்றிய உரையாடல்களில் விட்டுச்செல்கிறார். 

இந்தக் கதை என்னுள் மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தது. 1987இன் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பின்போது எமது வாழ்விடங்களிலிருந்து துரத்தப்பட்ட அனுபவங்களையும், இருப்பிடத்தை மீளப்பார்வையிட வெள்ளைக் கொடிபிடித்தபடி வந்து எமது வாழிடச் சேகரிப்புகளுக்கு நேர்ந்த அழிவைக்கண்டு விம்மி வெடித்த அந்தத் துயரம் தோய்ந்த நினைவுகள் அலையாக வந்து நீறுபூத்த நெருப்பாகியிருந்த மனதை மீண்டும் கிளறிப் புண்ணாக்கிய கதை அது.
அந்தக் கதையின் படைப்பாளியான கே.எஸ்.சுதாகரை அவுஸ்திரேலியாவுக்கு கடந்த ஆண்டு விஜயம் செய்தபோது நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. அவரே என்னிடம் தான் எழுதிய ஆங்கொரு பொந்திடை வைத்தே என்ற கதைக்கு நான் எழுதியிருந்த முன்னுரை வரிகளை நினைவூட்டித் தனது அறிமுகத்தை நெருக்கமாக்கியிருந்தார். பின்னாளில் அவர் எழுதிய பல்வேறு கதைகளின் தொகுப்பான எங்கே போகிறோம் என்ற இந்த நூலையும் அனுப்பி அதற்கான திறனாய்வினையும் கோரியிருந்தார்.


கே.எஸ்.சுதாகரின் இந்நூலை அவுஸ்திரேலியா தமிழ் இலக்கியக் கலைச் சங்கம் விக்ரோரியா, பிரிஸ்ரன் நகரிலிருந்து வெளியிட்டிருக்கிறது. மார்கழி 2007இல் வெளிவந்த இச்சிறுகதைத் தொகுதியை சென்னையில் குமரன் பதிப்பகம் அச்சிட்டு வழங்கியிருக்கின்றது.

கே.எஸ்.சுதாகரின் 18 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தாயகத்தின் பகைப்புலத்திலும், பின்னர் புலம்பெயர்ந்த நியுசிலாந்தின் பின்னணியிலும், அவுஸ்திரேலியாவின் பின்புலத்திலுமாக இக்கதைகள் நகர்த்திச் செல்லப்பட்டிருந்தாலும் அனைத்துக் கதைகளிலும் தாயக மண்ணின் காட்சிப் படிமங்களும், ஈழத்தமிழரின் சமகால சமூக, பண்பாட்டு, வாழ்வியல் அம்சங்களுமே தூக்கலாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

எங்கே போகிறோம் என்ற இத்தொகுப்பிலுள்ள புலம்பெயர் வாழ்வியல் பற்றிய படிமங்களைத் தாங்கிய கதையாக புதிய வருகை என்ற கதையை நாம் இனம்காண முடிகின்றது. நியுசிலாந்தின் புகலிட வாழ்வின் பின்னணியில் தன் மனைவி சாந்தினியின் பிரசவமும் அதனூடாக வெளிப்படுத்தப்படும் ஆசிய குடியேற்றவாசிகள் தொடர்பான நியுசிலாந்து மக்களின் எதிர்ப்பியக்கமும் இக்கதையில் தொட்டுக்காட்டப்பட்டுள்ளன.

முற்றிலும் வேறுபட்ட மொழி மற்றும் கலாசாரத்தைச் சேர்ந்தவர்கள் அளவுக்குமீறி ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் போவதானது அந்த நாட்டில் பாரிய தாக்கங்களை எற்படுத்துகின்றது. இதனால் சமூக கலாசார ரீதிகளில் நியுசிலாந்தவர்கள் இன்று வந்தேறு குடிகளைக் கண்டு பயப்படுகின்றார்கள்என்று கூறும் பாராளுமன்ற எதிர்க் கட்சித் தலைவரின் வாதத்தின் பிரதிவாதமாக நியுசிலாந்தவர்களில் அதிக எண்ணிக்கையினரால் ஆசிய மக்களை சகிக்கமுடியவில்லை. இதற்கு எதிராக இனத்துவ இணக்கத்தைப் பரப்பும் செய்திகளை மனித உரிமைகள் ஆணையம் எடுத்து வருகின்றது. மேலும் வயோதிபர்களே அதிகம் வாழும் எமது நாட்டில் தொழில்செய்யக்கூடியவர்கள் தொகை குறைந்து வருகின்றது. நாட்டுக்குப் போதுமான வருமானம் வேண்டும். இங்கு வருவோரின் வாழ்வை வளமாக்குவதில் நாம் முன்நிற்கவேண்டும்என்கின்றனர் இனங்களுக்கிடையே சுமுகநிலை பற்றி ஆராய்ந்தவர்கள். இவ்விரு கருத்துக்களுடன் தனது கருத்தாக இங்கு குடியேறுபவர்கள் நியுசிலாந்தவரை புரிந்து அறிந்து நடக்க வேண்டும். அதே போல நியுசிலாந்தவரும் புதிதாக வருவோர் மீது நம்பிக்கை வைத்துச் செயற்படவேண்டும்என்று ஒரு கருத்தினைத் தன் பாத்திரப்படைப்பான மௌரி இன பூர்வகுடியைச் சேர்ந்த மனிதனின் மூலம் சொல்லிவைக்கிறார்.

விருந்து என்ற கதை அவுஸ்திரேலியாவில் சந்தித்துக்கொள்ளும் இருவேறு குடும்பங்கள் பற்றியது. இலங்கையில் வௌ;வேறு பொருளாதார நிலைகளில் அறிமுகமாகியிருந்த இரு வேறு குடும்பங்கள் விருந்து என்ற போர்வையில் மீண்டும் ஒருதடவை புகலிடத்தில் மாறுபட்ட பொருளாதாரச் சூழலில் சந்தித்துக் கொள்கின்றன. விருந்தாளியாகச் சென்றாலும் இயல்பாக அவர்களில் காலம்காலமாகப் பதியம் வைக்கப்பட்டிருக்கும் ஏற்றத்தாழ்வுகள், காழ்ப்புணர்வுகள் என்பன விருந்தினரிடையே மனம் திறந்த போக்கினை வெளிக்காட்ட முடியாத தடைக்கற்களாகின்றன. அவர்களின் உரையாடல்களில் இழையோடும் போலித்தனம் அங்கதச் சுவையுடன் கதையில் வெளிக்காட்டப்படுகின்றன. புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தின் மற்றுமொரு அவலட்சணமான பக்கத்தை நகைச்சுவையாகச் சொன்னாலும் அதனுள் பொதிந்திருக்கும் தமிழர் சமூகவியல் சார்ந்த உண்மை எம்மைச் சுடுகின்றன.

விலங்கு மனத்தால் என்ற கதை புலம்பெயர்ந்த வாழ்வின் கட்டற்ற சுதந்திர வாழ்வில் தன்னைத் தொலைத்துக்கொண்ட தன் கணவன் வேறு பெண்களுடனும்; தொடர்பு கொள்வதை அறிந்து, அவனைத் திருத்த அதிர்ச்சி வைத்தியம் வழங்கும் மனைவி தேவகி பற்றியது. கணவனின் நண்பன் பரணி அந்த அதிர்ச்சி வைத்தியத்தில் பலிக்கடாவாகின்றான். புகலிட மண்ணில் கதை நிகழ்வதாகக் காட்டப்பட்டிருப்பினும் கதையில் புகலிட இலக்கியத்துக்கான படிமங்கள் எதையும் காணமுடியவில்லை. கதையின் களம் பற்றிய ஆழுமை இக்கதைக்கு அவசியமாகப் படவில்லை என்று ஆசிரியர் நினைத்திருக்கக்கூடும் என்று கருதுகின்றேன்.

பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் என்ற கதை புலம்பெயர்ந்து வாழும் குடும்பங்களில் முதியோரைப் பாரமாகக் கருதும் இளையோர் பற்றிப் பேசுகின்றது. தன் மாமனும் மாமியும், அவர்களது மருமகளினால் அவமானப்படுத்தப்படுவதையும், மகனின் பாராமுகத்தையும் இக்கதை கூறினாலும், கருத்தை அழுத்திப் பதிய வைப்பதற்காகச் சம்பவக் கோர்வைகள் சற்று மிகைப்படுத்தப்பட்டுள்ளதாகப் படுகின்றன.
 
மேற்கண்ட கதைகளைத் தவிர்ந்த பெரும்பாலான கதைகள் தாயகத்தில் நிகழ்வதாகவே காட்டப்படுகின்றன. குறிப்பாக உள்ளகப் புலப்பெயர்வுகளின் பல்வேறு பரிமாணங்களையும் அக்கதைகள் அழுத்தமாகப் பதிவுசெய்கின்றன.

காணி நிலம் வேண்டும் என்ற கதை உள்ளகப் புலப்பெயர்வால் அல்லலுற்ற சில குடும்பங்களுக்குத் தன் கிராமத்தில் தன்வீட்டில் இருப்பிடம் அளித்து, அன்றாட சீவியத்துக்கும் வழி அமைத்துத்தரும் ஊர்ப்பெரியவர் சுந்தரலிங்கத்தின் இயல்பு வாழ்வு, அந்த வீட்டில் விழுந்து வெடித்துச் சிதறிய எறிகணைகளால் சின்னாபின்னமாக்கப்பட்டு இன்னுமொரு இடப்பெயர்வுக்குத் தயாராவதாகக் கதை முடிகின்றது. என்னைப் பொறுத்தவரையில் இதனை ஒரு சிறுகதையாகக் கொள்ள முடியவில்லை. ஒரு குறுநாவலுக்குரிய பாத்திர வார்ப்புகளும், பின்புலமும் கொண்டதாகவே காணப்படுகின்றது. கே.எஸ்.சுதாகர் இப்படைப்பினை விரிவாக்கி ஒரு வெற்றிகரமான நாவலாக்கும் முயற்சியில் நம்பிக்கையுடன் ஈடுபடலாம்.

பகடை என்ற மற்றொரு கதையில் கணவனை இழந்து கைக்குழந்தையுடன் இராணுவம் ஆக்கிரமித்திருந்த மண்ணில் தனிமையில் வாழமுற்படும் ஒரு இளம் தமிழ்ப்பெண்ணின் அன்றாட அவலங்கள், அருகில் முகாமிட்டிருக்கும் இராணுவ மிலேச்சர்களின் காமக்கண் பார்வையிலிருந்து ஒவ்வொரு இரவும் தப்ப முற்படும் அந்த அபலையின் வாழ்விற்கான போராட்டங்கள் என்பன மிகவும் அழுத்தமாகப் பதிவாகியுள்ளது. இறுதியில் கைக்குழந்தையுடன் தன்னந் தனியனாக படகேறித் தமையனிடம் தஞ்சம் கோரிப் புலம்பெயர்ந்து போக முற்படுகையில் கடலேரியில் தன் அன்புக் குழந்தையையும் இழந்து, பயணத்தின் இறுதியில் போராளியாக மாறி விடுதலைப்பாதையில் பயணிக்கத் தன்னைத் தயார்படுத்துவதாகக் கதை முடிகின்றது.

பின்னையிட்ட தீ என்ற கதையும் புலப்பெயர்வு பற்றிப் பேசுகின்றது. முன்னகர்வினை மேற்கொள்ளும் சிங்கள இராணுவத்தின் எறிகணை வீச்சின் கொடூரத்திற்குள் ஊரை விட்டு ஓடும் ஒரு குடும்பத்தின் அவசரமும், அக்குடும்பத்தின் பாரமாகிவிட்ட ஊனமுற்ற ஒரு தந்தையின் உணர்வுப் போராட்டமும் மிகவும் நுணுக்கமாக இக்கதையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சிரமமானாலும், தந்தையையும் தம்முடன் கூட்டிச்செல்லும் ஆர்வமும், இயலாமையும், குடும்ப அங்கத்தவர்களிடம் மட்டுமன்றி கூடிச்செல்லும் மற்றவர்களிடமும் இருப்பதையும் மனிதநேயம் என்பது இத்தகைய உயிர் தப்பும் சூழலில் எவ்விதம் தன் இயலாமையைக் காட்டுகின்றது என்பதையும் வேதனையுடன் உணரவைக்கின்றது பின்னையிட்ட தீ.

ஈழத்தின் போர்க்கால வாழ்வினை கண்டும் கேட்டும் அனுபவித்தும் வந்த இந்த ஈழத்து இளம் கதாசிரியரின் ஆழமான உணர்வுகளை சில கதைகளில் தெளிவாகக் காணமுடிகின்றது. இருப்பும் இழப்பும் என்ற கதையில் வரும் இராமலிங்கத்தார், தன் சகோதரி மங்கையின் கணவன் இராணுவ அராஜகத்தில் இறந்திருக்கக்கூடும் என்ற தீர்மானத்துடன் தன் சகோதரிக்கும் அவளது மகள் மஞ்சுவுக்கும் பாதுகாவலனாகத் தன்னை வலிந்து வரித்துக்கொள்கின்றார். மங்கையோ தன் கணவன் காணாமல் போனாலும் எங்கோ உயிருடன் இருப்பதாக எண்ணிக்கொண்டு தன் வாழ்வை எதிர்பார்ப்புகளுடனும் நம்பிக்கையுடனும் கழிக்கின்றாள். ஆதரவாயிருந்த தமையன் இராமலிங்கத்தாரின் மரணம் அவளிடம் ஒரு வெறுமையைக் கொண்டுவருகின்றது. கணவனின் பிரிவையும் அன்றே அவளும் ஏற்றக்கொள்வதாக கதை முடிகின்றது. ஈழத்துத் தமிழ்க் கிராமத்துக் குடும்பமொன்றை இங்கு சுதாகர் கச்சிதமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இனப் பிரச்சினைக்கான கருவைக் கொண்டமைந்த கதைகளுள் ஒன்றாக முரண்பாடுகளின் அறுவடை அமைகின்றது. ஒதுக்குப் புறமான சிங்களக் கிராமமொன்றின் தொழிற்சாலையொன்றில் வேலை வாய்ப்புப்பெற்றுச் செல்லும் சிங்களம் தெரியாத தமிழ் இளைஞன் ஒருவனின் இரண்டும் கெட்டான் நிலை இக்கதையின் கருவாகின்றது. போன வேகத்தில் தாக்குப்பிடிக்க முடியாது ஊர்திரும்பும் சிவாவின் மனநிலையின் ஊடாக இனவாதம் பற்றிச் சொல்லப்படுகின்றது. தாடிக்காரச் சமையற்காரக்கிழவன் ஜெயசேகராவின் இனவாதமற்ற மனோபாவம் இக்கதையின் பிரதான கருவாகின்றது.

கே.எஸ்.சுதாகர் தனது கதைகள் சிலவற்றை ஆங்காங்கே அங்கதச் சுவைகொண்டனவாகவும் படைத்திருக்கிறார். விருந்து என்ற கதையும், விகுதி மாற்றம் என்ற கதையும் இத்தன்மையானதாகப் படுகின்றது. மேற்கத்தைய நாடுகளில் சாதாரணமாகவும், பல இடங்களில் சட்டபூர்வமாகவும் ஆகிவிட்ட ஆண்-பெண் பால்மாற்றம் பற்றி இக்கதை மேலோட்டமாகச் சித்திரிக்கின்றது. ரிப்ஸ் அல்லது மேல் வரும்படி என்ற அங்கதச் சுவை கொண்ட மற்றொரு கதை சாப்பாட்டுக்கடையில் ரிப்ஸ் கொடுத்து குறைந்த விலையில் கூடுதல் பயனை அடையும் வாடிக்கையாளர்களான நடேசன், அழகு ஆகியோரின் குறுக்கு வழிமுறை பற்றிப் பேசப்படுகின்றது. அவர்கள் தரும் மேல் வரும்படியால் உழைத்த பரிசாரகன் பின்னாளில் அதே கடையின் முதலாளியாக மாறி பாம்பின் கால் பாம்பறியும் என்பதற்கொப்ப, ரிப்ஸ் முறையை ஒழித்து அவர்களை நேர்வழியில் பிழைக்கும்படி ஏளனம் செய்கின்றான். இக்கதை 2004இல் ஞானம் சஞ்சிகையில் எழுதப்பட்டுள்ளது. பின்னாளில் தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படமொன்றில் நடிகர் விவேக் தொடர்பான நகைச்சுவைக்காட்சியொன்றிலும் இது இடம்பெற்ற ஞாபகத்தையும் எமக்கு மீட்டுத்தந்தது.

தற்போது இனவிடுதலைப் போராட்டம் பற்றிய பாத்திரப்படைப்பில்லாமல், வெறுமனே காதலை மட்டுமே பிரதான கருவாகக் கொண்டு ஈழத்தமிழர்களின் கதைகள் இருப்பது இன்றைய படைப்பிலக்கியங்களில் குறைவானதாகவே உள்ளது. ஒரு மாற்றத்திற்காக சுதாகரின் இமைப்பொழுதும் என் நெஞ்சில் என்ற கதையை நாம் வாசிக்கலாம். இளவயதுப் பள்ளிக்காதலை முற்றுமுழுதாகச் சித்திரிக்கும் இக்கதை பாலம் சஞ்சிகையில் மார்கழி 2003இல் வெளிவந்துள்ளது.

கே.எஸ்.சுதாகர் தன் கதைகளில் புகுத்தியிருக்கும் பாத்திரவார்ப்பு, ஆழமான கருத்துக்களை எளிமையாகச் சொல்லும் பாங்கு என்பன அவரை ஒரு அனுபவம் மிக்க படைப்பாளிகளின் வரிசையில் கொண்டு சேர்க்கின்றது. தனது சிறுகதைகளில் ஒரே நேரத்தில் பல விடயங்களைச் சொல்ல முனைகின்றார் என்ற குறைபாடும், சில கதைகளில் அளவுக்கதிகமான பாத்திரங்களை அநாவசியமாகப் புகுத்தி கதையைச் சற்றுச் சிக்கலாக்குகின்றார் என்ற குற்றச்சாட்டும் வாசகர்களால் முன்வைக்கப்படக்கூடும்.

இவற்றுக்கு அப்பால் ஒரு புலம்பெயர்ந்த படைப்பாளியின் தனித்துவமான பார்வைக் கோணத்தை, தான் புலம்பெயர்ந்து வாழும் மண்ணின் இயல்புகளை- அதில் உலாவும் தமிழ்ப் படைப்புலகத்திற்குப் புதினமான அந்நியப் பாத்திரங்களின் படிமங்களைத் தன் கதைகளில் புகுத்துவதில் அக்கறையில்லாதிருப்பதாகவே எனது பார்வையில் தோன்றுகின்றது.

சுதாகரின் கதைகளில் பலவற்றை வாசிக்கும் சாதாரண வாசகர்களுக்கு- ஒரு ஈழத்துப் படைப்பாளி, தாயகத்திலிருந்து இந்த படைப்பிலக்கியங்களைப் படைப்பதாகவே தோன்றும். சுதாகர் போன்ற படைப்பாற்றல் மிக்க, விரிவான சர்வதேச இலக்கியங்களின் வாசிப்பிற்கான வாய்ப்புக்கள் மிக்க இளம் புகலிடப் படைப்பாளிகள் தாம் சார்ந்த புகலிட மண்ணின் இயல்புகளைத் தூக்கலாகக் காட்டி அதனூடாக புகலிட இலக்கியம் படைக்கும் திறனை வளர்த்துக்கொண்டால்- அ.முத்துலிங்கம், பொ.கருணாகரமூர்த்தி போன்று எமக்கு மற்றுமொரு நல்ல புகலிடப் படைப்பாளி நிச்சயம் கிடைப்பார்.

கே.எஸ்.சுதாகர் வாழும் அவுஸ்திரேலிய மண்ணும், வாழ்ந்து வந்த நியுசிலாந்து மண்ணும் தன் பூர்வீக குடிமக்களைத் திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பின் மூலம் இழந்து வந்தேறு குடிகளால் இன்று ஆளப்படும் பூமி. போராடும் வலுவின்றி தம் தாய்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டிருக்கும் இந்நாட்டுப் பூர்வகுடிகளிடம் சொல்லப்படாத கதைகள் ஏராளம் உள்ளன. அவை சாதாரண தமிழ் வாசகர்களை இன்னும் சென்றடையவில்லை என்பது யதார்த்தமாயுள்ள இந்நிலையில் அந்த மண்ணில் வாழும் கே.எஸ்.சுதாகர் போன்றவர்கள் எதிர்காலத்தில் அந்த மண்ணின் இலக்கியங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வரவெண்டும்.

மலேசிய மண்ணில் விளைந்ததும் இந்திய தேசிய இராணுவத்தை மலாயா, பர்மாக் காடுகளில் வழிநடத்திச்சென்ற சுபாஷ் சந்திரபோஸின் இறுதிக்காலத்தை வரலாற்றப்பதிவாக்கிய இமயத் தியாகம் போல, ஜப்பானியரால் கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டு பர்மியக் காடுகளினூடாக ரயில் தண்டவாளம் போடுவதற்காக கொண்டு செல்லப்பட்டு வாழ்வைத் தொலைத்த மலாயாத் தமிழர்களின் சோக வரலாறுகூறும் சயாம் மரண ரயில் போல, தென்னிந்தியாவிலிருந்து கூலித்தொழிலாளர்களாக வந்த தமிழர்களைவிட கிராமங்களில் சுதந்திரமாகச் சிறு குழக்களாக வாழத்தலைப்பட்ட மற்றுமொரு தமிழ்ப் பூர்வகுடிகளின் வரலாறு கூறும் லங்காட் நதிக்கரை போன்ற பல வரலாற்றுப் படைப்புகளை புகலிடத்தின் மண்ணில் இவர்களும் வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் காலம் விரைவில் வரலாம். அவர்கள் அதை நிச்சயம் செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் இன்றைய உரையை நிறைவுசெய்துகொள்கின்றேன்.

வணக்கம்.

© N.Selvarajah. Prepared for  Kalai Kalasam,  IBC Tamil 08.09.2008No comments:

Post a comment