Sunday 6 July 2014

துப்பாக்கி - Flashbacks

பதின்மூன்று வயதுதான் இருக்கும். சிறீமாவோ பச்சைப்பாண் தந்து வயிற்றில் அடித்தது போக, பாடத்திட்டத்தை மாற்றி மூளையிலும் அடித்த காலம். எந்தப் பிள்ளையையும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது எழுப்பிக் கேட்டால் ‘அவுக்கண புத்தர் சிலையையும் ‘அனகாரிக தர்மபாலவையும் பற்றியே சொல்லியது.

இலங்கையை முன்னொருகாலத்தில் குறுநிலமன்னர்கள் ஆண்டார்கள். எனது இந்தக்காலத்திலும் வடக்குக் கிழக்கில் உள்ள ஒவ்வொரு கிராமத்தையும் ‘குப்பன்ஒருபக்கமும் ‘சுப்பன்ஒருபக்கமும் என்ற குறுநிலமன்னர்கள் ஆளத் தொடங்கியிருந்தார்கள்.
பாடசாலை விட்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது, ‘பின்னேரம் வாசிகசாலையில் கூட்டம் ஒன்று இருக்கு!என்று சொன்னார்கள். வாசிகசாலை – ஒரு சிறிய சீமெந்துக் கட்டடம். ஒரு அறையும் நீண்ட விறாந்தையும் கொண்டது. அறைக்குள் சில புத்தகங்கள், கொஞ்ச தளபாடங்கள். விறாந்தைக்குள் ஒரு நீண்ட மேசை, மேசையைச் சுற்றியோடும் இரண்டு நீண்ட வாங்குகள். வாசிகசாலைக்குப் பொறுப்பாக முரளி அண்ணா இருந்தார். அவ்வப்போது வாசிகசாலையைத் திறந்து தூசி தட்டி - பேப்பர், சில புத்தகங்களைப் (ஆனந்தவிகடன், குமுதம் போன்ற) போடுவது வழக்கம். சிலவேளைகளில் வாசிகசாலைக்குள் இருந்து ஒருவர் அங்கு வருபவர்களின் கையைப் பார்த்து பலன் சொல்லிக்கொண்டிருப்பார். அவரின் பெயரை மறந்தாலும் கை ரேகை சொல்லும் திறனை மறக்கவில்லை. “நீ நல்லாப் படிப்பாயடா!என்று என் கையைப் பார்த்துச் சொல்வார். அப்பொழுது நான் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். “உங்கடை கை, உங்களைப்பற்றி என்ன சொல்லுது? என்று நான் கேட்பேன். “பாதி வழியில் போய் விடுவேன்என்பார்.
வாசிகசாலைக்குப் பின்னால் ஒரு மைதானம். இடையே குறுகுறுத்துப் பாய்ந்தோடும் தண்டவாளம். தண்டவாளத்தில் அப்பொழுது புகையிரதம் ஓடியது.

மாலை வேளைகளில் மைதானத்திற்கு விளையாடச் செல்வோம். சீசனுக்குத் தக்கமாதிரி – கிரிக்கெட், காலபந்து.... அன்று மைதானம் வெறிசோடிக் கிடந்தது. மாலைக்கருக்கலில் குஞ்சுகுருமானகள் சகிதம் சனசமூகநிலையத்தில் கூட்டம் தொடங்கியது. முரளிதான் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார். நான்கு அன்னியமுகங்கள். தொண்டைத்தண்ணீர் வற்றக் கத்தினார்கள். தங்களுக்குள் ‘தோழரேஎன விழித்துக் கொண்டார்கள். லெனின், மாவோ சே துங், கோச்சிமன் என்ற பெயர்களைச் சொல்லும்போது நெகிழ்ந்து போனார்கள்.

தலைமை தாங்கியவன் தனது உரையை முடித்துக் கொண்டு – மந்திரவாதியைப் போல எங்கிருந்தோ ஒரு துப்பாக்கியை எடுத்து மேசைமீது வைத்து கூட்டத்தை நிறைவு செய்தான். முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டே “கேள்வி கேட்பவர்கள் இனிக் கேட்கலாம்என்றான். அன்றுதான் நான் முதன்முதலில் துப்பாக்கியை நேரில் பார்க்கின்றேன்.

பின் வரிசையில் இருந்து கொண்டு முகத்தை மாத்திரம் உள் நுழைத்திருந்தேன். முள்வேலிக் கம்பிக்குள்ளால் தலையைநீட்டி அயல்வீட்டுக் காணிக்குள் புல்மேயும் ஆடு, அயலானைக் கண்டதும் தலையை இழுத்துக் கொள்வது போல முகத்தை மெதுவாகப் பின் இழுத்தேன். நல்லகாலம் முகத்துக்குப் பங்கமில்லை. வாசலை நோக்கினேன். அங்கே நான்கு குண்டர்கள் காட்சி தந்தார்கள். அவர்களைத் தள்ளி விழுத்திவிட்டு இருளிற்குள் ஓடத் தொடங்கினேன். ஓடிய ஓட்டத்தில் ‘சூச்சாவும்இருந்துவிட்டேன்.

அதன்பிறகு முரளிஅண்ணாவை எங்கு கண்டாலும் ‘தோழரேஎன்று கூப்பிடுவேன்.


இருபதுவருடங்கள் கழிந்த நிலையில் 1994 ஆம் ஆண்டு, நான் வவனியாவில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஸ்ரேசன் றோட்டில் முரளியைச் சந்தித்தேன். தான் கொழும்பில் ‘புளொட்டின் தலைமைப்பீடத்தில் இருப்பதாகவும், பணி நிமித்தம் வவனியா வந்து போவதாகவும் சொன்னார்.
ஊரைப்பற்றியும் பழைய நண்பர்களைப்பற்றியும் விசாரித்து அறிந்து கொண்டார்.

வவனியாவில் அன்றிருந்த நிலைமை மிகமோசமானது. உரலுக்கு ஒரு பக்கம் இடி. மத்தளத்திற்கு இரண்டுபக்கம். வவனியாவில் இருந்தவர்களுக்கு எல்லாப்பக்கமும் இடி. வாகனங்களை வாடகைக்குக் கொடுக்கும் நாம் சிலருக்கு இலவசமாகக் கொடுக்கவேண்டிய நிர்பந்தத்தில் இருந்தோம். எயர்fபோர்ஸ், புளொட்டிற்கு இலவசம். ஒருவர் வந்து போக, மற்றவர் வருவார். அதென்னவோ தெரியாது ஒருபோதும் சேர்ந்து வருவது கிடையாது. இதனிடையே கிளிநொச்சியிலிருந்து தங்களை வந்து சந்திக்கும்படி கடிதம் வரும்.

தவிர தொழிலாளர்களின் அட்டகாசம் வேறு  - டீசலைக் களவெடுப்பார்கள், பெற்றோல், கிறீஸ்கூட களவெடுத்து விற்பார்கள். இவர்களைவிட  அசகாயசூரன் ஒருவன் எங்களுடன் வேலை செய்தான். யாருடனாவது நின்று கதைத்துக் கொண்டிருக்கும்போதே, நமக்குப் பின்னாலே சுரங்கம் தோண்டி புதைத்து விடக்கூடியவன். தொழிலாளர்கள் எந்தவொரு சின்ன விஷயத்திற்குமே இயக்கதிற்குப் போய்விடுவார்கள். ஒரு மணித்தியால ‘ஓவர் டைம்குறைவாகப் போட்டுவிட்டாலோ, அல்லது ஒருவருக்கு ‘ஓவர் டைம்கூடக் குடுத்து மற்றவருக்குக் குறையக் குடுத்தாலோ அங்கு போய் விடுவார்கள். எப்ப போறன்கள்? சொல்லுறான்கள் வாறாங்கள் எண்டே தெரியாது. அந்தச்சந்தர்பத்தில் எல்லாம் ‘புளொட் ஒஃபிசில்இருந்து இரண்டுபேர் எங்களை விசாரிக்க வருவார்கள். சிரித்துக் கதைத்தே நோட்டம் விடுவார்கள். ஒவ்வொரு தடவையும் அவர்கள் வரும்போது,
“வேணுமெண்டா முரளிஅண்ணாவைக் கேட்டுப் பாருங்கோ. என்னைப்பற்றி அவருக்கு எல்லாம் தெரியும்என்று சொல்லி துருப்புச்சீட்டைத் தூக்கி எறிந்து தப்பித்துக் கொள்வேன்.

இந்தத் தில்லும்முல்லுகள் எல்லாம் ஆரம்பிக்கும்போதுதான் நான் புலம்பெயர்வதற்கு ஆயத்தமானேன். அந்த விடயம் எப்படியோ தொழிலாளர்களுக்குக் கசிந்துவிட்டது. மறைவு மறைவாக பூந்தோட்டப்பற்றைகளிலும் குருமன்காடு வெளிகளிலும் களவெடுத்துப் பழகியவர்கள், இப்போது கண்முன்னே அந்தத் தொழிலில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் முரளி அண்ணாவும் மன்னாருக்குப் போகும் வழியில் கண்ணிவெடித்தாக்குதலில் மாட்டுப்பட்டு இறந்து போனார்.




No comments:

Post a Comment