Monday 9 February 2015

’வன்னி’ நாவல் - கதிர் பாலசுந்தரம்

யாரிடம் முறையிடுவேன் - அதிகாரம் 16 
பாயில் இரண்டு வரிசையாய்ப் பிள்ளைகள் அமர்ந்திருந்தனர்.
'இன்றைக்கு சுகந்தி வரவில்லையா?"
'இல்லை அன்ரி. ஓமந்தைக்குப் போட்டா. போர் முடிந்த வேளை அவவின் மாமா சரணாகதி அடைந்தவர். போராளி. களுத்துறைச் சிறையில் வைத்திருந்தவை. சிங்களக் கைதிகள் கலகம் செய்து தமிழ் கைதிகள் ஆறுபேரைக் கொன்று போட்டான்கள். அதில் அவவின் மாமா கணேசன் இறந்து போனார். செத்தவீடு கொண்டாடுகினம். அப்பா அம்மாவோடு போயிருக்கிறா." கோமதி.

இன்றைக்கு ராச நாச்சியார் குடும்ப கடைக் குட்டிகள்---முல்லை, பாவலன்---கதை."
மூத்த சகோதரங்கள் போல முல்லை, பாவலன் இருவரும் யாழ்ப்பாணக் கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கவில்லை. இயக்கத்துக்கு ஓடிவிடுவார்கள் என்ற பயத்தில் அப்பா அனுப்பவில்லை. ஆயிலடி அரசினர் பாடசாலையில்தான் படித்தார்கள்.
அவர்களும் மூத்த சகோதரங்கள் போல ஐந்தாம் வகுப்பு புலமைப் பரீட்சையில் சித்தி பெற்றவர்கள். முல்லை வடமாகாணத்திலேயே ஆகக் கூடிய புள்ளிகள் பெற்றவள். தாத்தா துரோணர் சேகரித்த நாவல்கள் எல்லாம் வாசித்தவள். இருவரும் என்னைப்போல நல்ல நிறம். நல்ல உயரம். அழகானவர்கள்.

விடுதலைப் போரில் போராடப் பெற்றாருக்கு மூச்சு விடாமல் இயக்கத்துக்குப் பறந்து சென்றவர்களை, பல பெற்றோர் பின்னர் பார்த்ததே இல்லை. சடலங்களைத் தான் பார்த்தார்கள். சிலர் சடலங்களையே பார்க்க வில்லை. போராடச் சென்ற எங்கள் நால்வருக்கும் நெருங்கிய உறவினர்கள் மறைந்த செய்திகள், திருமணச் செய்திகள் கிடைத்தன. நாங்களும் ஆயிலடிப் பக்கம்  அவர்களைப் பார்க்கச் செல்லவில்லை.
கடைக்குட்டிகள் முல்லை, பாவலன் இருவரும் அம்மா, அப்பாவோடு இருந்தமை அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. எமக்கும் மகிழ்ச்சி தந்தது.

மாதக் கடைசித் திங்கட்கிழைமை. பகல் ஒரு மணி. முல்லை, பாவலனுக்குப் பாடசாலை நேரம். சற்று முன்னர்தான் முல்லை வீட்டுக்கு ஓடி வந்தாள்.
முழங்காலை மூடிய வெள்ளை கவுன், வான் நீல ரை. நீண்ட இரட்பை; பின்னல். தூய வெள்ளை றிபன். பின்னல் துள்ளி விழுந்து கொண்டிருந்தது. அவசர அவசரமாக விசேடமாகச் சமைத்த பத்து சோத்துப் பார்சல்களை பாடசாலைக்கு எடுத்துக் கொண்டு பறந்து போனாள். பாடசாலை வந்திருக்கும் விடுதலைப் புலிகளுக்கு. தலைமை ஆசிரியர் செல்லத்துரை விண்ணப் பத்தில் செய்யப்பட்ட ஒழுங்கு. பாரம்பரியமாக எங்கள் ராச நாச்சியார் குடும்பம் பாடசாலைக்குச் செய்கிற சின்ன பங்களிப்புத்தான்.
ஆயிலடி அரசினர் பாடசாலை. இரண்டு நீளக் கட்டிடங்கள். வகுப்புகளைப் பிரிக்க திரை சுவர் எதுவும் இல்லை. நீளம் கூடிய கட்டிடத்தின் கிழக்கு அந்தத்தில் இரண்டரை அடி உயர மேடை. கலைநிகழ்ச்சிகள், கூட்டங்கள் நடாத்த.

அன்று பாடசாலை நேரம். வகுப்புகள் நடைபெற வில்லை. மேடையில் அவ்வேளை விடுதலைப் புலிகள் குழந்தை சண்முகலிங்கத்தின் பிரபலமானமண் சுமந்த மேனியர்நாடகத்தை நடித்துக் கொண்டிருந்தனர். மனித பயத்தைப் போக்கப் படைக்கப்பட்ட நாடகம். மாணவர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஆசிரியர்கள் சிலரும் பார்வையாளர் பகுதியில் மாணவர்களின் பின்னே நின்று இரசித்தனர். நெடுங்கேணி ஆசிரியர் சந்திரன் அங்கும் இங்கும் பார்த்துவிட்டு சைக்கிலில் தொற்றி வீட்டுக்குப் புறப்பட்டார். விடுதபை; புலிகள் நாடகம் முடித்துப் புறப்பட எப்படியும் நான்கு மணியாகும்.

கறுப்பு ஆடிக் கலவரத்தின் பின்னர் விடுதலை அமைப்புகள் பகிரங்கமாகச் செயற்பட்டன. பாடசாலைகளுக்குச் சென்று தமது கொள்கைகள் பரப்பின. கூட்டங்கள், நாடகங்கள் நடாத்தின. அந்த வகையில்அரங்கேறியதுதான் மண் சுமந்த மேனியர்.
நான்கு மணியாகப் போகிறது. சடகோபன் மாமாவின் மூத்தமகள் சுமங்கலி, ராச நாச்சியார் வளவு கேற்றை ஓவென்று திறந்துவிட்டு ஓடோடி வீட்டுக்குள் பாய்ந்து புகுந்து கத்தினாள். 'மாமா, முல்லை இயக்கத்துக்குப் போகப் போறாள். புலிகள் வாகனத்துள் ஏறிவிட்டாள்."
அப்பாவும் அம்மாவும் கேற்றடிக்கு ஓடிச் சென்றனர். புலிகளின் வாகனம் புறப்பட்டு விட்டது. அன்று மண் சுமந்த மேனியர் நாடகத்தைக் காட்டி பதினான்கு மாணவர்களைப் புலிகள் சாய்த்துக் கொண்டு போனார்கள். அப்படிக் கூறுவது அவ்வளவு பொருத்த மானது அல்ல. முற்றிப் பழுத்த கனி கணுக் கழன்று விழுவது போன்றதே அவர்கள் இயக்கத்தில் இணைந்த நிகழ்வு.

வீடு களேபரப்பட்டது.
அப்பாவுக்குத் தெரியும். புலிகள் கொண்டு போனால் போனதுதான். சைபீரிய வேங்கையை ஒத்தவர்கள். ஏனைய அமைப்புகளும் அப்படித்தான்.

இயக்கங்களை விமர்சித்து இரண்டு வார்த்தைகள் எவர் வாய்க்குள் இருந்து வெளியேறினாலும் அதுவே போதும் 'துரோகி" பட்டம் சுமத்தி மின்சாரக் கம்பத்தில் கட்டிச் சுட்டுக்கொல்ல. பயத்தில் எவரும் மூச்சு விடுவதில்லை. ஆயுத அமைப்புகளின் தோற்றத்துக்குப் பின்னர் வன்னி மண்ணில் அவர்கள் மூச்சே சட்டம். அவர்கள் போட்ட கோட்டை ஆனானப்பட்டவரும் தாண்டுவதில்லை. அக்கம் பக்கம் கேட்க மூச்சு விடுவதுமில்லை. பயம். குலைநடுங்கும் பயம். 'புலிகள் காற்றிலும் இருப்பார்கள்." மற்றவர் காதில் விழாமல்  பேசிக்கொள்வார்கள்.

முல்லை இயக்கத்துக்குப் போன அதிர்ச்சிச் செய்தி கேட்டு அம்மாவின் இதயம் ஓவென்று அழுது புலம்பியது. 'இராத்திரி சாப்பிட்ட வேளை, சோத்துக் கவளத்திலே அடித்துச் சத்தியம் செய்தவள் முல்லை. 'அம்மா நான் உங்களை விட்டுப் போர்க்களத்துக்கு ஓடமாட்டேன். கடைசிவரை உங்களோடு இருந்து உங்களைப் பார்ப்பேன்" என்று. என்டை ஐயோ! என்டை ஐயோ! அறுவான்கள்."
'உந்தச் சத்தம் கேட்டால் உன்னையும் சாய்த்துக்கொண்டு போய் சாத்துவான்கள். கொஞ்சம் அமைதியாய் இரெணை." அப்பா வீட்டு மண்டபத்துள் தலையைச் சொறிந்தபடி அங்கும் இங்கும் நடந்தபடி எச்சரித்தார்.
பிள்ளையைப் பறிகொடுத்துப் போட்டு அமைதியாக இருக்கலாமே, நீங்க போய் அந்தப் பொறுப்பாளனிடம் பேசுங்கோ. இப்பதானே மான் இறைச்சியோடை பத்துச் 'சோத்துப் பார்சல்" கொடுத்தனான். ஏன் நிற்கிறியள்? போய் அந்தச் செங்குட்டுவன், அவனட்டை பேசுங்கோ. உங்களுக்குத்தான் அவனை நல்லாய்த் தெரியுமெல்லே."
'நீ அழாமல் இரப்பா. நான் போய்ப் பார்த்துக் கொண்டுவாறன்."
பார்த்துக்கொண்டு வரவேண்டாம் என்டை குஞ்சைக் கூட்டிக் கொண்டு வாருங்கோ."

அப்பாவுக்கு நடக்காத காரியம் என்பது வெளிச்சம். என்றாலும் பிள்ளைப் பாசம் விடவில்லை. துரும்பு போன்ற நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு புறப்பட்டார்.
வொக்ஸ்வாகனை எடுத்துக் கொண்டு புளியங்குளத்தில் உள்ள புலிகளின் அலுவலகத்துக்கு புறப்பட்டார். அப்பாவுக்கு அங்குள்ள சகலரையும் தெரியும். பல தடவைகள் அவர்களுக்கு 'சோத்துப் பார்சல்" அனுப்பியவர். தேவைக்கு எல்லாம் அவருடைய ட்ராக்டரை எடுத்துப் போறவர்கள். மேலும், ஒவ்வொரு அறுவடை முடிவிலும் பதினைந்து சதவீத விளைச்சல் கொடுப்பவர். அரைலொறி தேறும். எல்லோர் வீடுகளிலும் இரண்டு பவுண்தான் புலிகள் அறவிட்டவர்கள் அப்பா சந்தோசமாய்ப் பன்னிரண்டு பவுண் தங்கநகைகளை அள்ளி வழங்கினவர். இரு முறைகள் அவரிடம் கொழுத்த நாம்பன்கள் வாங்கிச் சென்றவர்கள்.

வன்னி மண்ணுக்காக உயிர்த் தியாகம் செய்யும் குடும்பத்திலிருந்து வந்தாலும், ஏலவே அப்பா நான்கு பிள்ளைகளைத் தியாகம் செய்துள்ளார். முல்லையையும் கொண்டு போவது எந்தத் தர்மத்தில் அடங்கும் என்று மனம் நொந்தார்.
அப்பாவின் வாகனம், அடர்ந்த என்றும் பச்சையான வனத்தை ஊடறுக்கும் புளியங்குள-நெடுங்கேணி வீதி வழியாக, படுவேகத்தில் சவாரித்து, புளியங்குள புலிகள் அலுவலகத்தின் ஒருமைல் தூரத்தில் நின்றது. பின்னர் பற்றைகள் மண்டிய ஒற்றை அடிப்பாதை வழியாக நடந்துஒருமணிநேரத்துள் போய்விட்டார்.

பற்றைகளும் மரங்களும் நிறைந்த பரந்த வனம். திக்குத்திக்காக சின்னச் சின்ன தென்னோலைக் கொட்டில்கள். ஆங்காங்கு சிலர் நடமாட்டம்.
பொறுப்பாளர் செங்குட்டுவன் 'ஐயா, வாருங்கள்" என்று மிக்க மரியாதையோடு அழைத்து ஒரு மரக்குத்தி ஆசனத்தைக் காட்டி 'அதில் இருங்கள் ஐயா" என்றான். அவனும் பாடசாலையில் நாடகம் நடக்கும் பொழுது அங்கு நின்றவன் தான்.
செங்குட்டுவன், என்னுடைய மகள் முல்லையை நீங்கள் கொண்டு வந்திருக்கிறீர்கள்."
'ஐயா, நான் அதற்குப் பொறுப்பில்லை. கிளிநொச்சிப் புலிகள்தான் பொறுப்பு. ஐயா, நான் ஒன்றும் பேசேலாது. மகள் விரும்பிச் சேருவதை நான் தடுத்ததென்று தலைவர் என்னைத் தண்டிப்பார். என்னுடைய பதவியைப் பறித்து பங்கருள் போட்டிடுவார். பிறகு தற்பொழுது இருக்கிற மட்டத்துக்கு வர பத்து வருடம்வரை எடுக்கும்."
எல்லாப் புலிகளும் போலவே பொறுப்பாளர் செங்குட்டுவனும் அடிக்கடி 'ஐயா" என்று விழித்தான்.
'என்னுடைய பிள்ளை எனக்கு வேண்டும். பிள்ளை இல்லாமல் நான் திரும்பமாட்டேன்."
'ஐயா, செஞ்சோற்றுக் கடன் என்பார்கள். நீங்கள் சாப்பாட்டுப்பார்சலபல தடவைகள் தந்துள்ளீர்கள். வருசம் வருசம் விளைச்சலில் பதினைந்து சதவீதம் தாறீர்கள். பவுண் அள்ளித் தந்தனீங்கள். நாங்கள் உங்களுக்குத் துரோகம் செய்வோமா? ஐயா, எல்லோருடைய கார்களையும் பறித்து விட்டோம். உங்களுடைய வாகனங்களில் நாங்கள் கைவைக்க வில்லை. ட்ராக்டரை எடுத்தாலும் திருப்பித் தருகிறோம். நாங்கள் வேறு எவரிடமும் எந்த வாகனங்களையும் விட்டு வைக்கவில்லை. உங்களுடைய வீடு இயக்கத் தேவைக்கு வசதியான அத்தோடு கேந்திர மையத்தில் அமைந்த வீடு. நாங்கள் எங்கள் தேவைக்கு என்று சொல்லிப் பறிக்கவில்லை."

செல்வந்தர்களைச் சூறையாடுகிற போக்கு எல்லா இயக்கங்களிலும் சர்வசாதாரணம். போராளிகள் பொதுவாக வறிய குடும்பங்களிலிருந்து வந்த வேலை கிட்டாதவர்கள். அப்பாவைப் பொறாமைக் கண்களால் பார்த்தனர். அவர் செல்வத்தை வழித்துத் துடைத்து எடுக்கத் துடித்தனர். புலிகள் இயக்கத்தில் நாம், பிள்ளைகள் இருவர் இருந்ததால் கொஞ்சம் கருணை காட்டினர். அல்லது முழுவதையும் எப்பவோ அபகரித்திருப்பர். வீட்டையும் பறித்துக் கொண்டு, எங்காவது சிறியவீட்டைக் காட்டியிருப்பர்.
செங்குட்டுவனின் பேச்சு மெல்லிதாக அப்பாவை எச்சரிப்பதாக இருந்தது. 'பிள்ளையைத் தா" என்று அடம் பிடித்தால் பிறகு கதை கந்தல்தான் என்பதைநினைவுபடுத்துவதாக இருந்தது.
என்னுடைய பிள்ளையைமீட்க வழி?"
'ஐயா, பிள்ளை விரும்பிப் போனால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது."
கிளிநொச்சிக்குப் போய்ப் பேசிப்பார்க்கலாமா?"
ஓம். அங்கும் என்னைப் போல ஒருவர்தான் பதில் சொல்வார். அவர் இயக்கத்துக்கு வலிய வந்த பிள்ளையை விடமாட்டார். அந்த அதிகாரம் ஒன்றும் அவருக்கு இல்லை."

அப்பா என்ன செய்வதென்று தெரியாத நிலையில் வீடு திரும்பினார். இன்னும் ஒரு பேரிடி வீட்டு வாசலில் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தது.
அப்பா கேற்வழியாக வளவுக்குள் வாகனத்iதுத் திருப்பும் பொழுது இதயம் படபடவென அடித்தது. அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
ஏதோ விபரீதமாக நடந்திருக்கிறது! அதுதான் ஏராளமான சனம் வீட்டில் குழுமியிருக்குதுகள். இயக்கத்துக்குப் போன பிள்ளைகளில் யாருக்காவது ஏதன் நடந்துதோ? அல்லது அம்மாதான் தலையில் பெற்றோல் ஊற்றி........ அவர் உள் மனம் பதைத்தது.
அப்பா வொக்ஸ்வாகனால் இறங்கி தரையில் கால் பதித்தார்.
'பாவலனையும் இயக்கத்துக்கு இழுத்துக்கொண்டு போட்டான்கள். அறுவான்கள். நாசமாய்ப் போவான்கள், பத்தி எரிவான்கள்" என்று ஊரதிரக் கத்தினார்.

அப்பா கைகள் இரண்டையும் தலையில் வைத்தபடி தரையில் குந்தினார்.

'ஆரட்டைப் போய் முறையிடுவேன்?
பெத்த வயிறு பத்தி எரிகிற
பூண்டோடு அழிந்து போன கதையை.
ஆரட்டைப் போய் முறையிடுவேன்.
என்டை ஐயோ! என்டை ஐயோ!"

அம்மா தலையில் அடித்து ஒப்பாரி வைத்தார்.

~~~ தொடரும்... ~~~

No comments:

Post a Comment