Monday, 8 February 2016

விரைவில் சந்திப்போம்

கங்காருப் பாய்ச்சல்கள் (9)

வைத்தியசாலைகளிலும், வாகனங்கள் திருத்தும் இடங்களிலும் ‘விரைவில் சந்திப்போம் – See you soon!) என்று கூறுபவர்களை நான் வெறுக்கின்றேன்.

நாம் எப்படித்தான் அவதானமாக இருந்தாலும் சிலவேளைகளில் வாகனவிபத்து நேர்ந்து விடுவதுண்டு. விபத்து வருவது நம் கையில் மாத்திரம் இல்லை.

கார்த்தரிப்பிடங்கள், ஷொப்பிங் சென்ரர்களில் நடக்கும் விளையாட்டுகளை நான் எத்தனையோ தடவைகள் பார்த்திருக்கின்றேன். காரை றிவேர்ஸ் செய்யும்போது அடுத்த காரை முட்டி மோதி, அப்போது. கேட்கும் சத்தத்தை அடையாளமாக வைத்துக் கொள்வார்கள். சத்தம் கேட்டவுடன் வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல வேகம் எடுத்துக் கார் பறந்துவிடும். அதே போல காரை நிறுத்தும் போது முன்னாலே உள்ள காரை முட்டி மோதிவிட்டால், காரைத் திரும்ப எடுத்து ஒன்றுமே நடவாதது போல வேறு ஒரு இடத்தில் நிறுத்திவிடுவார்கள்.

இப்படித்தான் ஏதாவது ஷொப்பிங் சென்ரரில் எனது காரும் அடிபட்டிருக்க வேண்டும்.
காரின் பின்புறம் சேதமடைந்திருந்தது. வேலையிடத்துக் காரான ’Corella’ வைத் திருத்துவதற்குக் கொடுத்தபோது அதைவிட விலைகூடிய ‘Hybrid Camry’ கார் courtesy காராக இரண்டு கிழமைகளுக்குக் கிடைத்தது.

எனது 15 வருட அவுஸ்திரேலியாக் கார் ஓட்டத்தில் இது முதல் அனுபவம்.

கார் திருத்தி முடிந்ததும் அதை மீள எடுக்கப் போனபோதுதான் எனக்கு அந்த விசித்திர சம்பவம் நிகழ்ந்தது. காரின் திறப்பை என் கைகளுக்குள் திணித்துவிட்டு,

“சீ யு சூன்” என்றான் அவன்.

நான் அவனை முறாய்த்துப் பார்த்தேன். அவன் கண்ணடித்தான்.

மீண்டும் சந்திப்போம் என்றுகூட அவன் சொல்லவில்லை, விரைவில் சந்திப்போம் என்கின்றான்.

அந்த வாய்க்கியத்தின் சூட்சுமத்தை, அன்று வேலை முடித்து வீடு திரும்பும்போது தெரிந்து கொண்டேன். தொழிற்சாலைத் தரிப்பிடத்தில் இருந்து காரை வெளியே எடுக்கும்போது, பின்னால் வந்த ஒருவன் எனது காரை ஒரு மொத்து மொத்தினான்.

அப்போது முஸ்லிம் மக்களின் நோன்புகாலம். நண்பர் வீடு போகும் அவசரத்தில் தவறு நேர்ந்துவிட்டதாக மன்னிப்புக் கோரினார். என்னளவில் அது ஒரு பிரளயம். மோதிய கலக்கலில் மண்டை குழம்பிப் போயிருந்தது. காரை இழுத்துச் செல்லும் நிறுவனத்திற்கும் மனைவிக்கும் ரெலிபோன் செய்துவிட்டு காரிற்குள் ஏறிக் கொண்டேன். பரஸ்பர உரையாடலின் பின்னர் இருவரும் லைஷென்ஸ் நம்பர், முகவரி, ரெலிபோன் நம்பர்களைப் பரிமாறிக் கொண்டோம்.

பட்டகாலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பதுமாப் போல் மீண்டும் அதே இடத்தில் அடி. காரின் பின்புறம் கழன்று தொங்கிக் கொண்டிருந்தது.

சிலமணி நேரங்களில் காரை வந்து ஏற்றிச் சென்றார்கள். மனைவி வரும் வரையும் நிற்பதாகச் சொன்ன அவனைப் போகுமாறு அனுப்பி வைத்தேன்.

மனைவி வந்து காரில் ஏறும்போது,

“அப்ப அடுத்த புதுக்கார் வரப்போகுது எண்டு சொல்லுங்கோ” என்றார்.


புதுசோ பழசோ இதுகளோடை மாரடிக்கேலாது என்பதை யார் அறிவார்?

No comments:

Post a Comment