Wednesday, 20 April 2016

கங்காருப் பாய்ச்சல்கள் (11)

 நீராவிக் குளியல் சவுனா (sauna)

சுடுநீர்க்குளியல் / நீராவிக்குளியல் என்று சொல்கின்றார்களே அதை ஒரு தடவை பார்த்துவிடலாம் என்ற நோக்கில் இந்தவருடத் தொடக்கத்தில்  Peninsula Hot Springs இற்குச் சென்றோம். இது மெல்பேர்ணில் Mornington Peninsula வில் அமைந்துள்ளது. 90 நிமிடப் பிரயாணம். இங்கே Natural thermal mineral water ஐப் பாவிக்கின்றார்கள்.

சும்மா சொல்லக்கூடாது. நுழைவுக்கட்டணம் அதிகம் என்றாலும் பெறுமதி மிக்க இடம். சீனர்களும் வியட்நாமியர்களும்தான் அங்கே பெருமளவு நின்றிருந்தார்கள். மருந்துக்கும் நமது தோலில் இல்லை. எல்லாரும் குளியலில் மூழ்கி இருந்தார்கள். இளமையை மீண்டும் பெறவும் ஆறுதலடையவும் மனதை இதமாகவும் வைத்திருக்கின்றன இவை என்று சொல்கின்றார்கள். அங்கே சின்னதும் பெரியதுமாக ஏறத்தாள 30 குளியல் இடங்கள் இருப்பதாகச் சொன்னார்கள்.

நாங்கள் ஒவ்வொன்றாக விளையாடி நீராவிக்குளியல் இருந்த இடம் சென்றோம்.

ஒட்டக்கூத்தரின் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாளகள் என்பது போல, நீராவிக்குளியல் அறைக்கும் இரண்டு கதவுகள் இருந்தன.

உள்ளே நடுவில் இருந்த கல்லறையில் ஒருவர் மல்லாக்காக தவளை போல படுத்திருந்தார். ஐயய்யோ… செத்துப் போனவர் போல மனிதர் கிடந்ததால் ‘கல்லறை’ என்று சொல்லிவிட்டேன். சோனாப்பிரியர்கள் மன்னிக்க வேண்டுகின்றேன். அது ஒரு கல்லு மெத்தை. அந்த மெத்தையைச் சுற்றி வட்ட வடிவில் இருக்கைகள் இருந்தன. இரண்டு மூன்று இடங்களில் தண்ணீர்ப்பைப்புகளும் அதற்குக் கீழே பாத்திரங்களும் இருந்தன.

உள்ளே வந்ததும் மூச்சு முட்டிச் சாகப் பார்த்திட்டம். ஒரேயடியாக கை பிறசர் லோபிறசர் எல்லாம் தாக்கியது போல ஒரு உணர்வு. ஆளை ஆள் பார்த்துவிட்டுப் பாத்திரங்களில் நீர் நிரப்பிதலைக்கு வார்க்கத் தொடங்கினோம். நாங்கள் ஒரேயடியாக எல்லாரும் சோம் சோம் எண்டு தண்ணியை வார்த்தோமா, சத்தம் சந்தடி கேட்டு தவளை விழித்தெழுந்தது. எழும்ப முடியாமல் தத்தளித்து, முக்குழித்து மூச்சிரைத்துப் பார்த்தார். சூமோ தோற்று விடுவான்.
அவருக்கு நேர் எதிராக நான் இருந்தேன். நான் தலைக்கு நீரை வார்க்க வார்க்க அவரின் மூச்சு வேக வேகமாக வீசியது. அவரின் முகம் அஸ்ட கோணலாகியது.
நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சைகை செய்துவிட்டு மெதுவாக அந்த அறையை விட்டு வெளியேறினோம். நீராவிக்குளியல் அறைக்கு நேர் எதிராக மூன்று தண்ணீர்ப்பைப்புகள் தலைகீழாகத் தொங்கின. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வெப்பநிலை கொண்டதாக இருந்தன. அவற்றின்கீழ் சிறுவர்கள் தண்ணீர்விளையாட்டு விளையாடி நின்றார்கள். அப்பொழுதுதான் அந்த நீராவிக்குளியல் இருந்த அறைக்கு முன்பாக இருந்த அறிவிப்புப்பலகையைக் கண்டேன். அதில் நீராவிக்குளியலின் சரித்திரமும் எப்படி நீராவிக்குளியல் செய்யவேண்டும் என்ற செயன்முறயும் எழுதிக் கிடந்தன.

நீராவிக்குளியல் அறைக்குள் குறைந்தது 10- 15 நிமிடங்கள் இருந்ததன் பிற்பாடுதான் குளிர்நீரை உடலில் ஊற்ற வேண்டும். அந்த மனிதரின் நியாயமான கோபத்தை நான் புரிந்து கொண்டேன்.

’சவுனா’ (sauna) என்னும் வார்த்தை பின்லாந்துக்குச் சொந்தமானது. அது தொன்மையான நீராவிக்குளியலையும் அந்தக் குளியல் அறையையும் குறிக்கும் சொல். அங்கே குடிசைவீடு, மாடிவீடு, அடுக்குமாடிவீடு என்றில்லாமல் பாராளுமன்றம் போன்ற பொதுவிடங்களிலும் சவுனா உண்டு.

தொடக்ககாலத்தில் நிலத்திலே ஆழமான குழிகளை வெட்டி அதன் ஒருபகுதியில் கற்களைப் பரப்பி, அவற்றைச் சூடாக்கி அதன் மேல் நீரை விசிறி அதிலிருந்து வெளிக்கிழம்பும் நீராவியில் அமர்ந்திருந்தார்கள்.

சவுனாவின் வெப்பநிலை 70 – 80 செல்சியஸ் அளவில் இருக்கும். இது உண்மையில் மருத்துவ நோக்கத்துடன்தான் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையில் கன்னியா என்ற இடத்தில் உள்ள இயற்கை வெந்நீர் ஊற்றுக்கு 35 வருடங்களுக்கு முன்னர் போயிருக்கின்றேன். அங்கு அருகருகாகக் காணப்படும் 7 கிணறுகளின் வெப்பநிலைகளும் கிண்ற்றுக்குக் கிணறு வேறுபடும். அவற்றில் நான் குளித்திருக்கின்றேன். இராவணன் தனது தாயாருக்கு இறுதிக்கிரியைகள் செய்வதற்காக வாளால் ஏழு இடங்களைக் குற்றியதாகவும் வரலாறு உண்டு.


2 comments:

  1. அறியாத செய்தி . கங்காரு தேசம் போகும் போது ஒரு விசிட் அடிப்போம்.

    ReplyDelete