எனது குடும்ப வைத்தியர்
செல்வநாயகம் செல்வேந்திரா அவர்கள் – யூன் 2016 இலிருந்து - தனது தொழிலில்
ஓய்வு பெறுகின்றார். இவர் ஏறக்குறைய 56 வருடங்கள் வைத்தியராகப் பணிபுரிந்துள்ளார்.
இது எனது வயதைவிட சற்றே அதிகம்.
சிறுவயதில் ஒருமுறை நான் எனது அம்மாவுடன் அவரின்
கிளினிக் சென்றிருக்கின்றேன். அப்பொழுது எனக்குப் பத்து வயதிற்குள் இருக்கும்.
நான் நியூசிலாந்து சென்று, மீண்டும் அவுஸ்திரேலியா மெல்பேர்ணில்
அடியெடுத்து வைத்தபோது மீண்டும் அவர் எனது குடும்ப டாக்டர் ஆனார். கிட்டத்தட்ட 30
வருடங்கள் கழித்து மீண்டும் அவரைச் சந்தித்தேன். எங்கள் குடும்பத்தின் மூன்று
தலைமுறைகளுக்கு வைத்தியம் பார்த்திருக்கின்றார்.
அவர் அவுஸ்திரேலியாவிற்கு 1974ஆம் ஆண்டு அடியெடுத்து
வைத்தார்.
அயர்லாந்தில் கல்வி கற்று, 1960 ஆம் ஆண்டு
பட்டதாரியானார். அயர்லாந்து, இங்கிலாந்து வைத்தியசாலைகளில் பணிபுரிந்த இவர், சில
வருடங்கள் இலங்கையிலும் வேலை செய்துள்ளார்.
அறுவைச்சிகிச்சை நிபுணரான (surgeon) இவர், சண்சைன் என்னுமிடத்தில் பல தனியார் வைத்தியசாலைகளில்
அறுவைச்சிகிச்சை மேற்கொண்டுள்ளார். பின்னர் வயது முதிர்ச்சி காரணமாக, பொது
மருத்துவராக (General Practitioner) சண்சைனில் வேலை செய்து வருகின்றார்.



மருத்துவம் தவிர இவருக்கு சங்கீதம், ஓவியம் என்பவற்றில்
நாட்டம் உண்டு. இந்தியன் கிளாசிக்கல், பொப் மற்றும் மேலைத்தேய இசையிலும்
விருப்பமுடையவர். அத்துடன் பல வாத்தியக்கருவிகள் வாசிப்பதிலும் வல்லவர். அதிகமான
கச்சேரிகளில், யூதர்கள் பாவிக்கும் ஒருவகை வீணை (jew’s harp), மற்றும் கைகளினால்
தட்டும் இசைக்கருவிகளை (percussion instrument) வாசிப்பதைக்
காணலாம். போலாந்துப் பெண்மணி ஒருவரை ஆசிரியராகக் கொண்டு தனது ஓய்வு நேரங்களில்
ஓவியம் வரைந்து வர்ணம் தீட்டுகின்றார்.

பல சமூகப்பணிகளைச் செய்துவரும் இவர் பல கோயில்களின் தோற்றுவாய்களுக்கும்
காரணமாக உள்ளார். ஈழம் தமிழ்ச்சங்கத்தின் (ETA
- மெல்பேர்ண்), அன்றைய இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவரும் (1982, 1983)
ஸ்தாப உறுப்பினரும் ஆவார். இவர் தனது இளைப்பாறுதலின் பின்னர், ஓய்வுநேரத்தை பிரயாணங்களில்
செலவிட எண்ணியுள்ளார். இருப்பினும் தொடர்ந்தும் சமூகப்பணிகள் கலைத்துறைகளில் அவரை
நாம் சந்திக்கலாம்.
No comments:
Post a Comment