Friday, 15 July 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி நினைவுகள் பதிவுகள்

 

1. கருவோடு வந்த திருப்பணி


சாம்பலி லிருந்து எழுந்து வந்த
பீனிக்ஸ் பறவை யன்ன,
யூனியன் கலைமகள் எழுச்சி பேசும்
காவியம் கேட்டு மகிழ,
வருக! வருக! வருக வென்று
வாழ்த்தி வரவேற்கின்றேன்.   

      என் உதய காலக் கதை - அது சென்ற நூற்றாண்டின் முப்பதாம் ஆண்டுகளைத் தொட்டு நிற்கின்றது. மதவாச்சிச் சந்தியில் ஓர் ஆரம்ப பாடசாலை. இடைக்காடு திரு.எஸ்.கணபதிப்பிள்ளை ஆசிரியர் அவர்களே எனது முதல் ஆசான். பொது நிறம். உயர்ந்த கயிறு போன்ற உருவம். நிமிர்ந்த நடை. தினசரி மாலையில் அவர் எமது கடைக்குப் பக்கத்துக் கடையில் - திரு.சிதம்பரப்பிள்ளை அவர்கள் கடையில் - தரிசனம் கொடுப்பார். அவர் அங்கு வந்தால் பெட்டிப் பாம்பாகிவிடுவேன். புத்தகத்தை எடுத்துக் கொண்டு மாலுக்கு ஓடிச் செல்வேன். உரத்து வாசிப்பேன். பெரும்பாலும் அவிவேகபூரணகுருவின் கதையாகவே இருக்கும். அந்தத் தொடர் கதையிலே எனக்கு அப்படி ஒரு பிடிப்பு. வாசிப்புச் சத்தம் கேட்காவிட்டால் பக்கத்துக் கடையில் இருந்தபடி அதட்டல் கேட்கும். அவர்தான் அந்தப் பாடசாலையின் தலைமை ஆசிரியரும் உதவி ஆசிரியரும். மன்னார் செல்லும் சந்தியின் அருகே ஓர் அம்மன் கோவில். அம்மன் கோவில் வடக்கு வளவில்  பாடசாலை. நீண்ட ஒரு மண்டபம். மேலும் ஞாபகத்தில் நிலைத்து நிற்பவை நாலு மணிக்குப் பூக்கும் வண்ணப் பூஞ்செடிகள். கிழக்கே யாழ்-கொழும்பு வீதிக்கு அப்பால் முக்கிக் குரலெழுப்பிக் கொப்பிலிருந்து கொப்பிற்குத் தாவிப் பாயும் செங்குரங்குகள். இன்னும் எனது சிரேட்ட மாணவன் குமாரசாமி, இராசரத்தினம், சகமாணவர் செரிபு, பீபி, மகேஸ்வரி ஆகியோர் ஞாபகத்தில் வந்து போகிறார்கள். விசேடமாகச் சொல்வதானால் செரிபு கையில் மொத்த வெள்ளி உருண்டைக் காப்பு அணிந் திருப்பான். அந்த மதவாச்சிப் பாடசாலையிலிருந்து புறப்பட்ட நான் - ஆறு கடல் குளம் ஏரி மலை தாண்டி - யூனியன் கல்லூரியுள் நுழையும் போது நாடக ஆசிரியனாகவே நுழைந்தேன். அந்தளவுக்கு ஓர் இலக்கியப் பதிவு பெற்ற நாடக ஆசான் அல்லன். சில வானொலி நாடகங்கள், சில மேடை நாடகங்களை ஆக்கஞ் செய்திருந்தேன். நெறிப்படுத்தி யிருந்தேன். அவற்றுள் ‘விஞ்ஞானி என்ன கடவுளா?’ ‘சாம்பல் மேடு’ ‘விழிப்பு’ மூன்றும் எனது வித்தியாசமான சமூகப் பார்வையை - –நான் யார் என்பதை அடையாளங் காட்டியவை. 

        கால்மிதித்த மறுதினம் ஒரு முறைப்பாடு

     யூனியன் கல்லூரிக்கு மாற்றலாகி வந்த மறுதினம் எனக்கு எதிராக ஒரு முறைப்பாட்டைச் சில ஆசிரியைகள் செய்தனர். அந்தப் பரிதாபக் கதை - முளைவிட்ட இடத்திலிருந்து வளர்கிறது. 
    
1972 இல் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அவ்வேளை மகாஜனக் கல்லூரி அல்லது யூனியன் கல்லூரி அல்லது நடேஸ்வராக் கல்லூரிக்கு மாற்றம் கேட்டு விண்ணப்பித்திருந்தேன். மிகவிரைவிலேயே மாற்றம் கிடைத்தது. நடேஸ்வராக் கல்லூரிக்கு மாற்றி யிருந்தார்கள். மாற்றம் தந்தியில் கல்லூரிக்குப் பறந்து வந்திருந்தது. தாமதியாமல் பஸ் வண்டியில் தொற்றி நடேஸ்வராக் கல்லூரிக்குச் சென்றேன். அதிபர் திரு.பொ.சேமசுந்தரம் அவர்கள் தனது அலுவலக விறாந்தையில் காட்சி தந்தார். முதல் முறை பார்க்கிறேன். சிறிது கருமையென்றாலும் சாந்தமான முகம். பெரிதாக உயரம் என்று சொல்ல முடியாது. மாற்றல் தந்தியைக் கொடுத்தேன். வெளியே வெயில் கொளுத்தியது. அதன் அடையாளம் எனது முகத்தில் வழிந்தது. உயர் வகுப்பில் புவியியல், ஐரோப்பிய வரலாறு படிப்பித்த எனது அனுபவத்தை அதிபருக்குக் கூறினேன். சொல்வதை உள்வாங்கிய அதிபர் முகத்தில் மெல்லிதான சஞ்சலம். அலுவலகத்துள் நுழைந்தவர் சிறிது தாமதித்து அமைதியாக வெளியே வந்தார். என்னை ஏறவிறங்கப் பார்த்தார். பிடிக்கவில்லை என்பதை முகத்தின் ரேகைகள் முணுமுணுத்தன. எனக்குத் தவிப்பு.

“க.பொ.த. உயர்தர புவியியல் பாடத்துக்கு ஒருவர் வசதிக்கட்டணத்தில் இருக்கிறார். அவரை நிறுத்த முடியாது. நீங்கள் போய்க் கல்விப் பணிப்பாளருக்குத் தெரிவியுங்கள்.”
“என்ன தெரிவிக்க?”
“இடம் இல்லை. வேறு பாடசாலைக்கு மாற்றும்படி.”
என்று கூறித் திருப்பி அனுப்பிவிட்டார்.

சற்றுத் தூரம் நடந்து சென்று விட்டேன்.
“எங்கே போகிறீர்கள்?” சற்று உரத்துக் கேட்டார்.
“வீட்டுக்கு, ஆவரங்காலுக்குச் செல்கிறேன்” என்று கூறிவிட்டு நடந்தேன்.
“இல்லை. இல்லை. கல்வித் திணைக்களம் செல்லுங்கள். நான் தொலைபேசியில் கதைக்கிறேன்”  

திருப்பித் துரத்திய அதிபர் திரு.பொ.சோமசுந்தரம் அவர்களை, நீண்ட காலத்துக்குப் பின்னர் எனது கோட்டைக்குள் பார்த்துத் தலையைச் சொறியப் போகிறேன் என்பது, எப்படி என் மூளைக்கு அப்பொழுது தட்டுப்பட்டிருக்க முடியும்? ஒருவேளை என் உள்ளார்ந்த தத்துவ விசாரணைக்கு அவர்தான் கிடைத்தாரோ?

அடுத்த தினம் காலை கல்வித்திணைக்களம் சென்றேன். கோரிய பாடசாலைக்கு மாற்றம் தரமுடியா விட்டால், என்னைத் திருப்பி நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கே அனுப்பும்படி கேட்டேன். அப்பொழுதுதான் புரிந்தது எனது இடத்துக்கு, ஒரு பெண் ஆசிரியையை மாற்றவே அவ்வளவுக்கு அவசரப்பட்டுத் தாமத மில்லாமல் அந்த அதிகாரி மாற்றத்தைத் தந்தியில் பறக்கவைத்தார் என்பது.

     ஒருவாறு என்னோடு பேரம்பேசி என்னைக் காங்கேசன்துறையில் உள்ள அமெரிக்கன் மிசன் பாடசாலைக்கு அனுப்பினார். அங்கு போனதும் எனது நண்பர் அப்பாத்துரையைக் கண்டேன். அவர் என்னுடன் புத்தூர் ஸ்ரீசோமஸ்கந்தக் கல்லூரியில் படித்தவர். எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. புவியியல் பாடத்துக்குக் க.பொ.த. சாதாரணதர வகுப்புகளுக்குப் போனேன். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரி மாணவர்களைப் போலவே, மிக அடக்கமான ஆசிரியர்களுக்கு மிக்க மரியாதை கொடுக்கும் மாணவர்கள். அதைவிட ஆசிரியர்கள் மிக இலகுவாக என்னைக் கவர்ந்து கொண்டார்கள். பாக்கு நீரிணையி லிருந்து தென்னங் கீற்றுக்களை அரவணைத்து வரும் குளுமையான காற்று வேறு. மதியம் ருசியான மீன்குழம்புக் கறியோடு வரும் சோற்றுப் ‘பார்சல்’. அவை உயர் வகுப்புக்கள் இல்லை என்ற குறையைப் போக்கியிருந்தன. ஆசிரியர் வாழ்க்கைக்கு ஏற்ற ஆனந்தமான சூழல். ஆனாலும் அங்கும் என்னால் இரு கிழமைகள்கூட நிலைக்க முடியவில்லை.

விதியைப் பற்றி எப்பொழுதும் எனக்கு ஊசலான கருத்துத்தான். ஒரு சம்பவம் அதனை ஊசலாடச் செய்யும். இன்னொன்று அது நிஜந்தான் என்று வாதாடும். நிரந்தரமாக வைத்திருக்க மறுக்கும் சம்பவங்களால் பேதலித்த மனம் அடித்துக் கூறியது: ‘பார்த்தியா விதியின் விளையாட்டை. ஊசலாடக்கூடாது.’

     எதுவும் எம் கையில் இல்லை என்ற தத்துவத்துக்கு நானே ஆதாரமோ? அல்லது ஆட்டுவிப்பது அர்த்தம் புரியாத வாழ்க்கைச் சரிதத்தின் மந்திரமோ? அதன் அந்தத்தைத் தேடி நேர் கோட்டில் நடந்து கொண்டிருக்கிறேன். புவி உருண்டை. ஆகவே புறப்பட்ட இடத்துக்கே வந்து சேரவேண்டும். இன்னும் அந்தத்தைத் தேடுகின்றேன். அதனையே யூனியன் கல்லூரி நினைவுகள் விசாரணை செய்கின்றன.

     ஒரு நாள் காங்கேசன்துறை அமெரிக்கன் மிசன் பாடசாலையிலிருந்து வீடு திரும்பியதும், எனக்கு ஒரு துடிப்பான செய்தி காத்திருந்தது. எனது பாரியார் ஒரு கடிதத்தை நீட்டி, “குஞ்சியப்பு தந்தவர்” என்று சொன்னார். குஞ்சியப்பு என்றது யூனியன் கல்லூரியில் ஆசிரியப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அமரராகிவிட்ட திரு. நா. இராமலிங்கம் அவர்களையே. அமெரிக்கன் மிசன் பாட சாலையில் கற்பித்த ஒரு தினம் “குஞ்சியப்பு” அவர்கள் வீடுவந்தார்.

“என்ன பாடசாலை பிடித்திருக்கிறதா?” என்று விசாரித்தார்;.

“பிடித்திருக்கிறது. ஆனால் இதுவரை காலமும் உயர் வகுப்பில் புவியியல், வரலாறு படிப்பித்துவிட்டு கீழ்வகுப்புகளில் படிப்பிப்பதுதான் மனதுக்குப் பாரமாகவிருக்கிறது” என்று கூறியிருந்தேன்.

அதனை வைத்துக்கொண்டே திரு.இராமலிங்கம் அவர்கள், யூனியன் கல்லூரி ஆரம்ப பிரிவுத் தலைமை ஆசிரியர் திரு.கு.கதிரையாண்டி அவர்களுக்கு எனது உயர்வகுப்புக் கல்வி அனுபவத்தோடு, நாடக ஈடுபாட்டையும் சொல்லியுள்ளார். அக்காலத்தில் தான் எனது சில நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகின. சிறுகதைகள் சில ‘சிரித்திரன்’ சஞ்சிகையில் வெளிவந்தன. திரு.கதிரையாண்டி கலையீடுபாடுடைய பெருமகன். “எத்தனை மாணவர் களை மேடை ஏற்ற முடியுமோ அத்தனை பேரை மேடையேற்ற வேண்டும், அப்பொழுதுதான் பெற்றார் பாடசாலை வைபவங்களுக்கு அள்ளுப்பட்டு வருவார்கள்” என்று கூறுவார். அவர் யூனியன் கல்லூரி அதிபர் அவர்களது ஆசியுடன், நேரே கல்வித் திணைக்களம் சென்று, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி எனக்கு யூனியன் கல்லூரிக்கு மாற்றம் பெற்று, அம்மாறுதல் கடிதத்தை திரு. இராமலிங்கம் அவர்களிடம் கொடுத்திருந்தார்.

     இப்பொழுது அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன். நடேஸ்வராக் கல்லூரியிலேயே திரு.பொ.சோமசுந்தரம் அவர்கள் என்னை வைத்திருந்தால்? அல்லது அமெரிக்கன் மிசன் பாடசாலையிலேயே தங்கியிருந்தால்? யூனியன் கல்லூரி அதிபராகியிருக்க முடியுமா? தலையெழுத்து நடக்கிறதா அல்லது சம்பவங்கள் தலையில் எழுதுகின்றனவா? அல்லது நாமே நமது தலையில் எழுதுகிறோமா?

     யூனியன் கல்லூரிக்குச் சென்ற பொழுது, முன்னர் ஓரளவுக்குத் தெரிந்த ஆசிரியர் ஒருவர் மட்டுமே அங்கிருந்தார். அவர் மல்லாகம் திரு.இரங்கநாதன் சிவனேசன் அவர்கள். அப்பொழுது வட மாகாண அசிரியர் சங்கச் செயற்குழுவில் நாம் இருவரும் இருந்தோம். மற்றும்படி பெரிதாகச் சொல்ல எதுவும் இல்லை என்று சொல்ல முடியாது.

     யூனியன் வளாகம் நிறைந்த பச்சைப்பசேலென்ற வானளாவிய விருட்சங்கள். அவை செழுமை பொங்கி வழிய ஓங்கி வளர்ந்து பரந்து நின்றன. வான் பரப்பை நிறைக்கும் நான்கு மலைவேம்புகள். வசந்தத்தில் மரம் நிறைந்த மாவெள்ளைப் பூவாகக் காட்சி யளிக்கும் ஐரோப்பிய விருட்சங்கள் இரண்டு. நோய் தீர்க்கும் ஆறு நெடிதே வளர்ந்த வேம்புகள். குலைகுலையாகக் காய்க்கும் ஐந்து மாமரங்கள். பத்தோ பதினைந்து தென்னைகள். சவுக்க மரம் ஒன்று. குளிர்மை தரும் சிவலிங்க மரம் வேறு. பூத்து மணம் கமழும் அலரிகள். மூன்று கிணறுகள். வளாகத்துள் பெரிய உதைபந்தாட்ட மைதானம். கூடைப் பந்தாட்ட மைதானம் வேறு. வலைப் பந்தாட்ட மைதானம் வேறு. வளாகத்துக்கு வெளியே இன்னொரு விளையாட்டு மைதானம். வளாகத்தினுள்ளே தார்வீதி வேறு. அங்கு ஆனந்தமாக அன்னநடை பயிலும் ஆசிரியர்கள். அவர்களின் ஒய்யாரச் சிரி;பொலிகள். தீனி போடக் காத்திருக்கும் நிரை நிரையாக அடுக்கி வைத்துள்ள ஆயிரக்கணக்கான நூல்கள் நிறைந்த அற்புதமான நூல்நிலையம். அத்தனையும் மனதை வசீகரித்துக் கொண்டன. 
    
ஆனாலும், யான் யூனியன் கல்லூரிக்கு வந்தமையால்,  வெருட்சியடைந்த ஆசிரியைகள் சிலர் அதிபரைச் சந்தித்தனர்.

     யூனியன் கல்லூரிக்கு மாற்றம் பெற்ற பொழுது திரு. க.கிருஷ்ணபிள்ளை அவர்கள் அதிபராக இருந்தார். கமுகு போல வளர்ந்த பொது நிறப் பெரியாருக்குக் கரிய ஓரளவு நெழிந்த தலை மயிர். முகத்தில் சிந்தனையின் தெளிவு. பார்வையில் ஒருவித சாந்தம். அவரைக் கடைசிவரை பயபக்தியாகவே பார்த்தேன். அவ்வளவுக்கு அவர்மீது எனக்கு மரியாதையுண்டு.

     அவர் எனது கல்வி அனுபவங்களைக் கேட்டறிந்தார். சில சந்தர்ப்பங்களில் மனிதன் தன்னைப்பற்றித் தானே சொல்ல வேண்டிய இடத்தில் கட்டாயம் சொல்ல வேண்டும். அதில் தப்பில்லை என்பதனை, சமஸ்கிருத பாடத்தின் பொழுது கோப்பாய் திரு. பஞ்சாட்சர சர்மா ஆசிரியர் அவர்களிடம் கற்றுக் கொண்டது. பின்னர் நல்லூரில் கைலாயபிள்ளையார் கோவிலடி திரு.சுப்பிரமணிய ஐயரிடம் இருக்கு வேதம் கற்ற போதுகூட அதே சுலோகத்தை எடுகோளாகக் காட்டியிருந்தார்.

“புவியியல் கற்பிப்பதில் என்னை எவரும் இலகுவில் மிஞ்சிவிடமுடியாது. அது எனது கொடை. எனது பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பு மாணவர்களே சாட்சி” என்ற கருத்துப்படக் கூறியிருந்தேன். அதனால் க.பொ.த. உயர்தர வகுப்பின் முதலாம் ஆண்டுப் புவியியல் பாடத்தை அடக்கிய நேரசூசி வழங்கும்படி, நேரசூசி தயாரிக்கும் திரு.இ.விசுவநாதன் அவர்களிடம் கூறியிருந்தார். எனக்கு அடுத்த நாள் காலையில் நேரசூசி தரப்பட்டது. அன்று பகல்  மதிய போசனத்துக்கு வீடு சென்று திரும்பி வந்து, பாடம் எடுக்க வகுப்பிற்குப் புறப்பட்டேன். அப்பொழுது அலுவலக உத்தியோகத்தர் திரு.செ.குணரத்தினம் வந்து “பிறின்சிபல் உங்களை வரட்டுக்குமாம்” என்று கூறிவிட்டுச் சென்றார். சுனாமி வந்துகொண்டிருக்கிறது என்ற அபாய அறிவிப்பு. அது எனது வெள்ளை மூளைக்குப் பிடிபடவில்லை.

     அதிபரின் அறை மூன்று கதவுக் கோழிக்கூடு மாதிரிச் சிறியதாக இருந்தது. அது தான் பத்தொன்பதாம் நூற்றாண்டுப் படைப்பு என்பதைப் பிரசாரித்தது. என் மனதில் ஒரு கேள்வி. இப்படியான புகழ்பூத்த பெரிய கல்லூரிக்கு, ஏன் இப்படி ஒரு கிளிக்கூடு? அந்தக் குருவிக் கூட்டுக்குள் சென்று திரு.க.கிருஷ்ணபிள்ளை அதிபர் அவர்களின் மேசையின் எதிரில் நின்றேன். அவர் தலையை நிமிர்த்தி என்னைப் பரிதாபமாகப் பார்த்தார். அவர் முகம் ஏதோ வேண்டாத வேப்பெண்ணெய்ச் செய்தியை வைத்திருப்பதாக மனம் சொன்னது.

     “பாலசுந்தரம். குறை நினையாதையும். உமக்குத் தந்த உயர் வகுப்புப் புவியியல் பாடத்தைத் திருப்பி எடுக்க வேண்டியுள்ளது.”
     “என்ன!”
     “மதிய போசன வேளை, உயர் தரத்தில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியை தலைமையில், பெண் ஆசிரியைகள் சிலர் முறைப்பாடு செய்துள்ளார்கள்.”
     “என்ன முறைப்பாடு?”
     “புதிதாக வந்தவருக்கு, பழைய ஆசிரியையின் புவியியல் பாடத்தைப் பறித்துக் கொடுப்பது நியாயமா என்று வாதாடுகிறார்கள்.”

     பதில் பேசவில்லை. அவரே தொடர்ந்து புதினம் சொன்னார்.

     “திருமதி நடனசபை ‘ரீச்சர்தான்’ உயர் வகுப்புகளில் புவியியல் பாடம் கற்பிக்கின்றார். அவரின் பாடத்தில் ஒன்றைத்தான் தந்தது. அவர்கள் அதனை எதிர்க்கிறார்கள்.”

     அவர்தான் கல்லூரியின் சித்திரபுத்திரனார். அவர் எழுதிய விதியை அவரே மாற்றும் போது, இந்த ஜன்மம் என்ன பண்ண முடியும்? என் கண்களில் காங்கேசன்துறை அமெரிக்கன் மிசன் பாடசாலையும,; நண்பன் அப்பாத்துரை ‘மாஸ்டருமே’ தெரிந்தனர். எனக்கு மாற்றம் கிடைத்ததை அறிந்ததும், நண்பன் அப்பாத்துரை ஆசிரியர் கூறிய சொற்கள் என் காதில் ரீங்காரம் செய்தன.

     “மச்சான் நீ ஒரு கடிதம் தா. நான் மாற்றத்தை ரத்தாக்கி வருகிறேன். எங்கள் பிள்ளைகள் உங்களை மிகவும் விரும்பு கிறார்கள்.”

     அந்த அருமையான பிள்ளைகளையும், அன்பான சூழலையும் விட்டு வந்ததே, உயர் வகுப்பில் கல்வி புகட்டவே. அப்பொழுது திரு.சி.எஸ்.கணபதிப்பிள்ளை ஆசிரியர் அவர்கள் உயர் வகுப்பில் மேற்கத்திய வரலாறு படிப்பித்துக் கொண்டிருந்தார். அவரிடம் ஒரு பாடத்தை எடுத்துத்தருவது பற்றிக்கூட ஆலோசிக்க வில்லை. 

     இச்சமயத்தில் பழைய ஓர் அனுபவத்தைச் சொல்ல விரும்புகிறேன். 1970 ஆம் ஆண்டில் அத்தியார் இந்துக் கல்லூரிக்கு மாற்றலாகிச் சென்ற சமயம், அதிபர் திரு.சிறீனிவாசன் அவர்கள் எனது படிப்பித்தல் அனுபவத்தை விசாரித்துவிட்டு, எதுவுமே கூறாமல் ஆசிரியர்களின் ஓய்வு அறைக்கே அனுப்பிவிட்டார். இரண்டாவது தினம் என்னை அலுவலகத்துக்கு அழைத்துக் கூறினார்:

     “க.பொ.த. உயர் வகுப்பு வரலாற்று ஆசிரியர் இன்று வரவில்லை. போய் அந்த வகுப்பை எடுங்கள்.”

     வகுப்பிற்குப் போய்ச் சிறிது நேரத்திலேயே, மாணவர்களின் பரிதாப நிலையை உணர்ந்து கொண்டேன். அவர்களால் பரீட்சையில் எதிர்பார்க்கக் கூடிய ஒரு கேள்வியைக் கூடச் சொல்ல முடியவில்லை. படித்த பாடப் பகுதிகள் கூடப் புரியாமல் மயங்கினார்கள். பாடத்திட்டத்தில் பெரும்பகுதி இன்னும் தொட்டுப் பார்க்கப்படவில்லை. பரீட்சைக்கு நீண்ட காலம் இல்லாதபடியால் ‘இத்தாலி ஐக்கியம்’ பற்றிப் படம் வரைந்து விளக்கிய பின்னர் ஒரு வினா விடை கொடுத்திருந்தேன். அது அந்த வருடத்தில் எதிர்பார்க்கக் கூடிய வினா என்பதையும் சொல்லிவைத்தேன். கையில் ஒரு குறிப்பும் இல்லாது, ஒரு நிமிடம்கூடக் கதிரையில் அமராமல், இரண்டு பாட நேரப் பணியை முடித்திருந்தேன். 

        அடுத்த நாள் காலையில் அதிபர் அவர்கள் என்னை அழைத்து, பரீட்சை தொடங்கும் வரை, ஓய்வான நேரம் முழுவதும் வரலாற்றுப் பாடத்தை நடாத்தும்படி கூறினார். 

“என்னை ஒரு முறை வகுப்பிற்கு அனுப்பிப் பாருங்கள்” என்று சொல்லி, அதிபர் அவர்கள் வகுப்பிற்கு அனுப்பியிருந்தாலும், அந்தத் தூது போன அம்மையார்கள் சும்மா இருந்திருப்பார்களா? நான் என்ன சொல்ல முடியும்? திரு.கிருஷ்ணபிள்ளை அவர்கள் என்னைக் கல்வித் திணைக்களத்துக்குத் திருப்பி அனுப்பாத சம்பவத்திற்கு நன்றி சொல்ல வேண்டுமா அல்லது ‘ஓ எல்லாம் தலை எழுத்துத்தான்’ என்று அமைதியாக வேண்டுமா? அல்லது தூது சென்ற அம்மணிகள் என் தலையில் எழுதுகின்றார்கள், அதனை மாற்ற முடியாது என்று மௌனமாக வேண்டுமா? எனக்கு ஏதும் புரியவில்லை.

     “கீழ் வகுப்புகளில் வேறு பாடங்கள்தான் தர வேண்டியுள்ளது.” அதிபர்.
      

     தந்த பாடத்தைப் ‘பறிப்பித்த’ சம்பவம் என்னை வருத்தவில்லை. எனக்குக் கற்பித்தல் உழைப்பும் அல்லப் பிழைப்பும் அல்ல. அது என் கருவோடு வந்த திருப்பணி. கற்பித்தற் தொழிலால் சோர்வடைபவன் நான் அல்ல. தெய்வீகத் தொண்டாகக் கருதி வகுப்பிற்குள் நுழைந்தவன் நான். உலக பந்த பாசங்கள எல்லாம் மறந்த நிலையில், வகுப்பில் நின்று திருப்பணி புரிந்தவன் நான். ஒவ்வொரு வகுப்பு முடிவிலும் சேவையில் நிறைவு கண்டு ஆனந்தித்தவன் நான். எனவேதான் உயர் வகுப்பில் கல்வி புகட்ட இடம் தரமறுத்த பொழுதும், சோர்வடைய வில்லை. ஆனால் அந்த முகத்திலடித்த நிகழ்வு யூனியன் கல்லூரியைப் பற்றி அக்குவேறு ஆணிவேறாகச் சிந்திக்கத் தூண்டியது. அந்தக் ‘குமுறல்’ எதிர் கால எனது அதிபர் பதவிக் காலத்தில் புத்துயிர்ப்புப் பெறத் தவறவில்லை. எனது முகாமைத்துவ-நிருவாகத்தில் மாணவர் நலன் கருதி, அவர்களை மையமாக வைத்துப் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளக் காரணமாகவிருந்தது - தந்த பாடத்தைத் திருப்பிப் பறிப்பித்த சம்பவமே. அவை பின்னர் முன் வைக்கப்படும். 

J
(நன்றி. வீடியோ - நோர்வே பழைய மாணவர் சங்கம்)

தொடர்ந்து வரும் ...

No comments:

Post a Comment