Saturday, 3 September 2016

பொற்காலம் - கதிர்.பாலசுந்தரம்

யூனியன் கல்லூரி 
நினைவுகள் பதிவுகள்

 5. ஆட்டுத் தீர்த்தமும் கிணற்று நீரும்


     பௌதிகச் சூழல் சம்பந்தமான மூன்றாவது பிரச்சினை நாலுகால் விலங்குகளின் பிரச்சினையாக இருந்தது. வளாகத்தின் வடபகுதி வேலியூடாக அயலட்டையில் உள்ள ஆடுகள் யாவும் இரவில் வந்துவிடும். ஒரு இருபத்தைந்து முப்பது பார்க்கலாம். அவை இரவில் உறங்குமிடம் விஞ்ஞான ஆய்வுகூட விறாந்தை, அதன் வடக்கே உள்ள உயர்தர வகுப்பு வகுப்பறைகள். அவை கொட்டிய கறுப்புப் பிளுக்கைகள் விறாந்தை நீளத்துக்கும் வகுப்பறைகளிலும் பரந்து காணப்படும். அந்தப் பக்கம் கால் வைத்தால் ஆட்டுத் தீர்த்த வாசனை ஆசிரியர்களையும் மாணவர்களையும் வரவேற்றது. சில குளப்படியான ஆடுகள் ஆசிரியர் மேசையிலேயே ஏறித் துயின்றது போதாதென்று, தீர்த்தம் தெளித்திருக்கும். மீன் கூடைக்காரிக்கு மீன்வாசம் என்ன தோசமா? அவர்களும் பழக்க தோசத்திற்கு ஆளாகியிந்தார்களோ? தோட்ட வேலைக்குப் பொறுப்பான திரு. கதிரனின் முதல் வேலை அவற்றைச் சுத்தம் செய்வதே. வகுப்புகளுக்கு மாணவர்கள் வரமுன்னர் செய்து முடிக்க வேண்டும். திரு. கதிரனைச் சிலவேளைகளில் காலையில் பாடசாலை அடைந்ததும் காண முடிவதில்லை. சற்று பிந்தி வந்ததை விசாரித்தால்,

          “ஐயா அந்தத் தென்னை வட்டைப் பாருங்கள். அதற்கு மேலே சூரியன் வருவதற்கு முன்பே வந்து விட்டேன்” என்பார். அந்தப் பதிலை அவர் அதிபர் திரு.ஐ.பி.துரைரத்தினம் அவர்கள் காலம் தொடக்கம் சொல்வதாகக் கேள்வி.    

          நீர் வழங்கல்                 
                       
     பௌதிக வளத்தைப் பொறுத்தவரை இன்னொரு அவசர குறைபாடும் இருந்தது. அது நீர்வழங்கல் பற்றியது. அப்பொழுது தந்தை செல்வா தொடக்க நிலைப்பள்ளிக்கும் நீர்விநியோகம் செய்ய வேண்டியிருந்தது. முதலாம் ஆண்டில் தொடக்கம் க.பொ.த. உயர்தர வகுப்புவரை சுமார் 1800 வரையான மாணவர்கள் இருந்தார்கள். இரண்டு சிறிய தண்ணீர்த் தொட்டிகள் இருந்தன. இரசாயனகூடத்துக்கு அண்மையில் இருந்த குட்டி நீர்த்தொட்டி செயல் இழந்திருந்தது. முகப்பில் இருந்தது சிறியது. பாதுகாப்புக் குறைவானது. அணில்கள் மிதந்ததும் உண்டு. ஓய்வு நேரத்தில் சகல மாணவர்களும் ‘பைப்பைத்’ திறந்தால் நீர் போதாமல் வந்துவிடும். மாணவர்கள் குறித்த ஓரிரு இடங்களிலேயே தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது. ஒரு பகுதியினர் கிணற்றில் நீர் அள்ளிக் குடிப்பார்கள். சிலசமயம் ‘பைப்பில்’ தண்ணீரே வராது. தொடர்ந்து சில நாட்களுக்கும் வராது. எல்லாவற்றிலும் கொடுமை என்ன வென்றால், தண்ணீர் இறைக்கும் பழைய இயந்திரம் அடிக்கடி பழுதாகியது. அதைத் திருத்துவதானால் கல்வித் திணைக்களத்தில் அனுமதி பெற வேண்டும். அதற்கு யாழ்ப்பாணம் சென்று அலைய வேண்டும். அனுமதி வந்தால் அதைத் திருத்துபவர் எந்திரத்தைக் கழற்றிக்கொண்டு போய்விடுவார். அலுவலக உத்தியோகத்தர் திரு.குணரத்தினம் அவரைத் தேடி அலைவார். தொடர்ந்து ஒரு மாதம் எப்போதும் அந்த ‘பம்’ வேலை செய்ததில்லை. அதனால் ஒரு பகுதி மாணவர்கள் பாடசாலைக்கு வெளியே சென்று நீர் அருந்திவிட்டு வருவார்கள். வயது வந்த பெண்பிள்ளைகள் கூடச் சில வேளைகளில் தாகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், எதிரே உள்ள தேநீர்க்கடையில் நீர் பருகுவதைப் பார்த்திருக்கிறேன். சுற்றி யுள்ள வீடுகளுக்கு நீர்பருகச் சென்றவர்களும் உண்டு.
ஆகவே கால்மணி நேரத்துள் 3000 மாணவர்கள் நீர் அருந்தக் கூடியதாக ஒரு தண்ணீர்த்தொட்டி கட்டவும், போதியளவு தண்ணீர் விநியோக மையங்கள் பரவலாக ஏற்படுத்தவும் திட்டம் போட்டேன். கல்வித் திணைக்களத்தில் பணம் பெற முடியாது.

     இப்படியான வேலைகளுக்குத் தருமவான்களிடம் சென்று பண உதவி பொருள் உதவி கேட்டுப் போகும் குணச்சித்திரம் என்னிடம் இல்லை. நான் பணவுதவி கேளாமலே நையாண்டிக்கு ஆளான ஒரு அனுபவம்:
       ஒரு தினம் தெல்லிப்பழையில் நண்பரான உதவி ஆசிரியர் ஒருவர் வீட்டில் கதைத்துக் கொண்டிருந்தேன். அவ்வேளை செல்வந்தரான நாலுபேரறிந்த, நாலுபேர் மதிக்கிற ஒருவர் தற்செயலாக அங்கு வந்தார். நண்பரின் நெருங்கிய உறவினர். அவருக்கு ஆசிரிய நண்பர் கூறினார்:
     “இவர் பாடசாலையை முன்னேற்ற நல்லாக உழைக்கிறார். தெரியுந்தானே. சிறு சிறு வேலைகளுக்குப் பண உதவி தேவைப்படுகிறது. ஏதாவது உதவி செய்யுங்கள்.”
     “ஓம் தாராளமாகச் செய்கிறேன்.”
     “எவ்வளவு?” நண்பர் கேட்டார்.
     “விடுதலை நாட்களில் வந்து தேக உதவி
       செய்கிறேன்.”

     அப்படியான அழுக்கு வார்த்தைகளைத் தாங்கிக் கொள்கிற பழக்கம் எனக்கு இல்லை. வேதனையை அடக்கியபடி தரையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த நக்கல் நீண்ட காலம் என்னை வருத்தியது.

அந்தப் பிரமுகர் சில வருடங்கள் கழித்து வளாக வீதியில் எனது அலுவலகத்தை நோக்கி நடந்து வருவதைக் கண்டேன். உடன் அலுவலகத்தை விட்டு வெளியேறி வணக்கம் கூறி, அலுவலகத்துள் அழைத்துச் சென்றேன். என் எதிரே கதிரையில் அமர்ந்ததும் கூறினார்,

“ஒரு உதவி தேவை.”
“சொல்லுங்கள். உங்களுக்கு இல்லாத உதவியா?”
“எனது மகனுக்கு அனுமதி வேண்டும்.”

நாலு பேர் மதிப்பவர். அவரது மகன் சகோதர கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். எதுவித தயக்கமும் இல்லாமல் அவர் கேட்ட வகுப்பிற்கு அனுமதி வழங்கினேன். அனுமதி பெறுவது கல்லில் நார் உரிப்பதற்கு ஒப்பானது என்பது அவருக்குத் தெரியும். சந்தேகத்தில் வந்த அவருக்கு ஒரே ஆச்சரியம்.

     அதுதான் எனது குணச்சித்திரம். என் குருதிக்கு அதன் கீழே இறங்கிவரத் தெரியாது. 
                                              
 நீர்த்தொட்டி கட்ட - நாலு தனவந்தரிடம் சென்று - தண்டல் செய்வது என் இயல்புக்கு மாறானது. எனக்கு எவராவது உதவி தேவைப்பட்டது. திரு.கு.க.செல்லத்துரை அவர்கள்தான் அந்தத் தண்டல் பணியை முன்னின்று செய்தார். அவர் மாவிட்டபுரம் அலுமினிய தொழிற்சாலை உரிமையாளர் திரு. திருஞானசம்பந்தர் அவர்களின் மகன் முருகவேள் அவர்களோடு ஏலவே கதைத்துவிட்டு என்னை அழைத்துச் சென்றார். -1980- அவர் பெரியமனத்தோடு எதுவித பிசகும் பண்ணமால் தேவையான இரும்புக்கம்பி தருவதாக வாக்குறுதி அளித்தார். எவ்வளவு தேவை என்பதை அளவு ரீதியாகக் குறித்துக் கொண்டார். அடுத்த தினமே ஒரு லொறியில் தேவையான கம்பி வந்து சேர்ந்தது. அன்றைய விலையில் ரூபா 6000.00 பெறுமதியான பொருள். ஏறக்குறைய ஒரு தண்டல் செய்தோம். தேவையான சல்லியைக் கட்டுவன் ‘கிறேசர்’ உரிமையாளர் இனாமாகத் தந்தார். பழைய மாணவர் ஒருவர் (பெயர் ஞாபகமில்லை) மணலைப் பறிப்பித்தார். சீமெந்து எப்படிக் கிடைத்தது என்பது ஞாபகமில்லை. கட்டடவேலையை அப்பொழுது பிரதான வீதி ஓரம் உள்ள மேல்மாடி கட்டிக் கொண்டிருந்த கரையூரைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் இனாமாக முடித்துத் தந்தார்.   

ஒரு சதமும் கையில் படாமல் தண்ணீர்த் தொட்டி (tank) கட்டி முடிந்ததும், முன்னைநாள் அதிபர் திரு. ஐ.பி.துரைரத்தினம் அவர்கள் வந்தார். நாங்கள் இருவரும் தொட்டி அமைத்த இடத்துக்குச் சென்றோம். திரு.துரைரத்தினம் அவர்கள் தொட்டியையும், கிணற்று நீரையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு,

     “கிணற்றில் உள்ள நீர் அரைத் தொட்டிக்கும் போதாது” என்றார்.
     “குண்டடிப்பிக்க இருக்கிறேன்.”
     “குண்டடித்தால் போதிய நீர் கிடைக்குமா?”
     “ஓம்.”
     “ஆழமாகக் குண்டடித்தால் உவர் நீர் வராதா?”
அவரது இறுதிக் கேள்வி என்னை ஆட்டியது.

     அலுவலக உத்தியோகத்தர் திரு.குணரத்தினம் அவர்களே குண்டடிப்பது பற்றிய உசாரை எனக்குத் தந்தவர். ஆவரங்காலில் தண்ணீர் நிலையம் பார்ப்பவர் ஒருவர் இருப்பதாகக்கூறி, அவரது திறமைகளை எனக்குச் சொல்லி ஆசை காட்டியிருந்தார். அவரை அழைத்து வரும்படி சொன்னேன். வந்தவரோடு கிணற்றடிக்குச் சென்றேன். படியில் நின்று நீரைப் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் ஒரு சிறு தட்டைக் கல்லைக் கிணற்றுக்குள் போட்டார். அது போய்த் தளத்தில் குந்தியது.

     “ஐயா அந்தக் கல்லிருக்கும் இடத்தில்
     குண்டடிப்பியுங்கள். 12 அடி ஆளத்தில்
தண்ணீர் சீறி வரும்.”

     எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

     “அதில் தண்ணீர் வராவிட்டால்?”
     “இல்லை ஐயா, வரும்.”
     “இல்லை. இன்னொரு நிலையம் பார்.”

     திரும்பவும் ஒரு சிறு கல்லைக் கிணற்றுள் போட்டார். அவர் போய்விட்டார். என் மனதில் சில கேள்விகள்.

“இப்பிரதேசம் சுண்ணக்கற்பாறைப் பிரதேசம்.  நீர்மட்டத்துக்குக் கீழே எங்கு குண்டடித்தாலும் தண்ணீர் சுரந்து மேலெழ வேண்டும். அதெப்படி குறித்த இடத்தில்தான் நீர் வரும்? சகல இடங்களிலும் தண்ணீர் கிடைக்க வேண்டுமே? 12 அடியில் தான் நீர்மட்டம் உள்ளது என்பது எப்படித் தெரியும்?” என்ற கேள்விகளுக்கு விடைதேடினேன்.

      கிணற்றுள் குண்டு அடிக்கும் வேலை தொடங்கி யிருந்தது. இடைக்கிடை போய்ப்பார்த்தேன். தண்ணீர் வருமா என்பது மட்டுமல்ல உவர் நீராகிவிட்டால்?  இதயம் அடித்துக்கொண்டிருந்தது. கிணற்றுக் கட்டில் இருந்து கேட்டேன்.

     “எத்தனை அடி போய்விட்டது?”
     “பத்தடி.”
அசையாமல் இருந்தேன். பதினோராவது அடியில் திடீரென நீர் கிட்டத் தட்ட ஓரடி உயிரத்துக்குச் சீறிப்பாய்ந்தது.
     “நல்ல தண்ணி ஐயா”
கிணற்றுள் இருந்து வெளிவந்த ஓசை என் காதுகளில் தேன் மழை பொழிந்தது.

இன்னும் பிரச்சினை தீரவில்லை. கல்வித் திணைக்களக் கட்டடப் பகுதியிலிருந்து ஓர் அதிகாரி வந்து நீர்த்தொட்டியைப் பார்த்தார். என்னைப் பார்த்தார்.

     “;உவாட்டர் ராங்’ கட்ட அனுமதி பெற்றீர்களா?”

     இதுதான் அதிபர்களின் நிலை. பெயர் அளவுக்கு அதிபர்களே தவிர எந்த அதிகாரமும் அவர்கள் கையில் இல்லை. தங்களிடம் அதிகாரங்கள் இருப்பது போலப் பாசாங்குபண்ணி அவர்கள் முகாமைத்துவம் பார்க்க வேண்டியவர்களாக உள்ளார்கள். நாலு கதிரை வாங்குகிற அதிகாரம்கூட அவர்களுக்கு இல்லை.
     “இல்லை.”
     “தற்செயலாக இடிந்து விழுந்து மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டால்?”
     “நீங்கள் சொல்வது புரிகிறது” என்று கூறிவிட்டு அவருக்குக் கம்பிகளின் மொத்தம், பரம்பல் இடைவெளிகள்  எத்தனை அந்தர் என்பன பற்றிய விபரங்களைச் சொன்னேன். பின்னர் வினா எழுப்பவில்லை.

அவரோடு தையிட்டி திரு.கந்தவனம் அவர்களும் வந்திருந்தார். அவரும் கட்டடப் பகுதி உத்தியோகத்தரே. அவரது மகளும், சில உறவுப் பிள்ளைகளும் என்னிடம் வீட்டில் ஆங்கிலம் கற்றவர்கள். அதனால் ஏற்பட்ட நட்பு. அவரிடம் விசாரித்தேன்.
“பம், பைப், முதலியவை இல்லை. அதற்கு ஏதாவது கல்வித்திணைக்கள கட்டடப் பகுதியினூடாக உதவுவார்களா?”
     “நிச்சமாகச் சொல்ல முடியாது. முயற்சிக்கிறேன். நாளைக்குக் கந்தோருக்கு வாருங்கள்”

     அடுத்த நாள் கல்வித்திணைக்களம் சென்றேன். பிரச்சினை இருக்கவில்லை. அவரது உதவியால் 2 இஞ்சிப் பம்மும், மற்றும் உபகரணங்களும் வாங்க முடிந்தது. ஒரே நேரத்தில் மாணவர்கள் பதினெட்டு இடங்களில் நீர் அருந்த வசதி செய்யப்பட்டது. அந்தக் கிணற்று நீரைப் பற்றிச் சொல்ல வேண்டும். மாணவர் நீரை ஓடவிட்டபடியிருக்க திரு. கதிரன் பகல் முழுக்க பூஞ்செடிகளுக்கு நீர்பாய்ச்சிக்கொண்டு இருப்பார். கிணறு என்றுமே வற்றியது கிடையாது.

     யுத்த கால அனர்த்தங்களால் நீர்த்தொட்டி சேதம் அடையிவில்லை என்று கேள்வி. அச்செய்தி மனதுக்கு மகிழ்ச்சி தருகின்றது. ‘தல யாத்திரை சென்று தீர்த்மாடுவதிலும் தாகசாந்திக்கு நீர்வார்த்தல் கோடி புண்ணியம் கொண்டுவரும்.’ அந்தப் புண்ணியம் நீர்த்தொட்டியைக் கட்ட உதவிய திரு.முருகவேள் அவர்களுக்கும், ‘பம்’ வாங்க உதவிய திரு.கந்தவனம் அவர்களுக்கும், மற்றும் பொருள் உதவியவர்களுக்கும் சேர்வதாக.           

இன்னும் வரும்...

1 comment:

  1. அருமையான பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete