Friday, 11 November 2016

கங்காருப் பாய்ச்சல்கள் (-18)

கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல் எறிதல்

(ஜூன் 2012 வல்லினம் சஞ்சிகையில் வந்தது. பொருத்தப்பாடு கருதி மீண்டும்)

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இம்முறை தனது 12வது எழுத்தாளர்விழாவை, மே மாதம் மெல்பேர்ணில் கொண்டாடியுள்ளது. இயந்திரமயமான வாழ்விலும் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் இவ்விழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மெல்பேணில் தமிழுக்காகப் பாடுபடும் எழுத்தாளர்கள் என்றவுடன் இருவரைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஒருவர் லெ.முருகபூபதி, இலங்கையில் சர்வதேச எழுத்தாளர்விழாவை முன்னின்று நடத்தியவர். அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர்விழாவின் மூலகர்த்தா. மற்றவர் இப்பொழுது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தலைவராக இருக்கும் சு.ஸ்ரீகந்தராசா. இவரும் ஈழம் தமிழ்ச்சங்கம், அவுஸ்திரேலியா தமிழ் அகதிகள் கழகம் போன்றவற்றில் தலைவராக இருந்தவர். ஆரம்பகாலம் முதல் தமிழ் எழுத்தாளர்விழாவுடன் தொடர்புடையவர். இவர்களுடன் கலைவளன் சிசு.நாகேந்திரன், மாத்தளை சோமு, கவிஞர் இளமுருகனார் பாரதி, ஓவியர் ஞானம், திருநந்தகுமார், திருமதி கனகமணி அம்பலவாணர், மதுபாஷினி (ஆழியாள்), அருண் விஜயராணி, சண்முகம் சபேசன், செந்தூரன், மு.நந்தகுமார், செல்வபாண்டியன், சட்டத்தரணி செ.ரவீந்திரன், எஸ்.கொர்னேலியஸ், என்.எஸ்.நடேசன், விமல் அரவிந்தன், 'வானொலி மாமா' நா.மகேசன், க.சிவசம்பு, மாலதி, கெளசல்யா, கிருஸ்ணமூர்த்தி எனப் பலர் இம்முறை கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

குறிஞ்சிப்பூ பூத்தது போல இம்முறை விழா இருந்தது. அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்களில் 70% இற்கும் மேலானவர்கள் சிட்னி, மெல்பேர்ணிலிருந்து கலந்து கொண்டார்கள். இவர்களில் நாட்டிற்கு வந்த சில புதியவர்களைத் தவிர, ஏனையோர் முன்பு நடந்த எழுத்தாளர்விழாக்களில் பங்குபற்றியதைக் கண்டிருக்கின்றேன். பின்னர் சில தனிப்பட்ட காரணங்களால் வருவதை நிறுத்தியிருந்த இவர்கள், தலைவர் மாறும்போது 'தீக்குளிக்கும்' தொண்டர்களாக இம்முறை வந்திருந்தார்கள். விழா நிகழ்ச்சிகள் பி.ப 2மணியிலிருந்து ஆரம்பித்து இரவு 10மணிவரை நடந்தன. 2001இலிருந்து நடைபெற்றுவரும் இந்நிகழ்வு, 2006ஆம் ஆண்டிலிருந்து பதிவு செய்யப்பட்ட அமைப்பான அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் (ATLAS) நடத்தப்படுகின்றது.

இதன் ஆரம்ப நிகழ்வான சிறுவர் அரங்கை, சிறுமி ஒருத்தி தலைமை வகித்து நடத்த, சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி சிறுவர்கள் அலசி ஆராய்ந்தார்கள். தொடர்ந்து 'கற்றதும் பெற்றதும்' என்ற மாணவர் அரங்கில், திருநந்தகுமார் தலைமையில் சிட்னி மெல்பேணைச் சேர்ந்த 13 மாணவர்கள் பங்கு கொண்டார்கள். அழகான உச்சரிப்பில் வேண்டிய இடங்களின் இனிமையாகப் பாடியும் அவர்கள் தமது அனுபவப்பகிர்வைச் செய்தார்கள். சிறுவர் அரங்கும் மாணவர் அரங்கும் இந்த எழுத்தாளர்விழாவுக்கு அவசியமா? அதற்குத்தானே தமிழ்ப்பாடசாலைகளும் ஈழம்தமிழ்ச்சங்கமும் இருக்கின்றதே என சிலர் முணுமுணுத்தது காதில் கேட்டது. 'அவர்கள்தானே வருங்காலப் படைப்பாளிகள். அவர்களின் திறமைகளை வெளிக்காட்ட வேறு இடமிருந்தாலும் இங்கேயும் நிகழ்ச்சிகளைப் படைப்பதால் அவர்களின் உற்சாகம் இன்னமும் கூடும்' என்றேன் நான். ஆரம்பகாலங்களில் சிறுவர் நிகழ்ச்சிகள் எழுத்தாளர்விழாவில் நடைபெறவில்லை. படிப்படியாக மாணவர் அரங்கும், சிறுவர் அரங்குமென்று வந்து இன்று பாதி நிகழ்ச்சி அவர்களுடையதுதான்.

அடுத்து சேமகரன் தலைமை வகிக்க 'புலம்பெயர்ந்ததால் தமிழர் தாம் நிலை உயர்ந்தோமா?' என்ற தலைப்பில் செளந்தரி கணேசன், கமலேஸ்வரன், நிர்மலன் சிவா, ஆனந்த் பாலசுப்பிரமணியம், வெள்ளையன் தங்கையன், கலாநிதி மணிவண்ணன், கலாநிதி பிரவீணன் என்று ஒரு பட்டாளமே பாடினார்கள். என்ன நடந்தது என்றே புரியவில்லை. அவரவர் விரும்பியதைப் பாடலாம் என்று சொல்லிவிட்டார்களோ? ஒருசிலர் ஆளை ஆள் தாக்குவதற்கு கவிதையைத் தூக்கிக் கொண்டார்கள். கவிதைகளில் சாராம்சமே இருக்கவில்லை. சும்மா எதுகை மோனையை அடுக்கிவிட்டிருந்தார்கள். உருப்படியான கவிதையை வாசித்தவர்கள் ஒருவரும் இல்லை எனலாம்.

அதன்பிறகுதான் பிரச்சினையே தெரிந்தது. நேரம் எங்கோ போய்விட்டது. நிகழ்வுகளை சீராகத் திட்டமிடாததால் கருத்தரங்கைச் சுருக்கவேண்டி வந்தது. உண்மையில் கருத்தரங்குதான் விழாவின் உயிர்நாடி என்பேன். மாத்தளை சோமு தலைமையில் 'புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் படைப்புகளும், ஊடகங்களும் தமிழுக்கு வளம் சேர்க்கின்றனவா?' என்ற தலைப்பில் திருமதி கோகிலா மகேந்திரன், கே.எஸ்.சுதாகர், நித்தி கனகரத்தினம், மு.சேமகரன், சண்முகம் சந்திரன், த.சசிதரன், இரத்தினம் கந்தசாமி, சந்திரசேகரன் ஜெயகுமாரன், திருமதி சாந்தினி புவனேந்திரராஜா, சிறிநந்தகுமார்,  யாழ் எஸ்.பாஸ்கர் என்பவர்கள் - சிறுகதை, நாவல், கவிதை, இதழ்கள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளங்கள், வலைப்பூக்கள் என்ற தலைப்பில் பேசினார்கள். கோகிலா மகேந்திரன், சசிதரன், ஜெயகுமாரன் போன்றவர்கள் கருத்தாழம் மிக்க தகவல்களைச் சொன்னபோதும் நேரம் காரணமாகச் சுருக்கிச் சொல்லவேண்டி ஏற்பட்டது. இந்தச்சந்தர்ப்பத்தில் எனக்கொன்று நினைவுக்கு வருகின்றது. கருணாநிதி எழுதியதாக ஞாபகம் - 'புரட்சிப்படம்' என்றொரு சிறுகதை வாசித்திருந்தேன். கதையில் ஒருவர் புரட்சிப்படம் ஒன்றை எடுப்பார். அதைத் திரையில் போடும்போது எழுத்தோட்டம் முடிந்தவுடன் 'நன்றி. வணக்கம்' என்று வரும். சென்ஷார் இடையில் உள்ள எல்லாவற்றையுமே வெட்டி விடுவார்கள். அதேபோலத்தான் இந்தக் கருத்தரங்கு. அதற்கு மாத்தளை சோமு தலைமை!

இதில் சிறுவர் அரங்கு, மாணவர் அரங்கு, கவிதை அரங்கு, கருத்தரங்கு என்ற எந்த ஒரு நிகழ்வுமே கலந்துரையாடப்படவில்லை. இதனால் பங்குபற்றியவர்கள் பார்வையாளர்கற்கிடையே தொடர்பாடல் நடக்கவில்லை. கருத்துக்கள் அலசி ஆராயப்படவில்லை. இருபகுதியினருக்குமே ஏமாற்றம்தான்.

மாத்தளை சோமுவின் பேச்சு, மற்றும் ஒரு சிலரின் கவிதைகள் குறிப்பிட்ட ஒருவரைத் தாக்குவது போலிருந்தது. எத்தனையோ வருடங்களுக்கொருமுறை வரும் சூரியகிரகணத்தில், பாம்பு சூரியனைப் பிடித்து விழுங்குவதாக ஐதீகம் சொல்வார்கள். கணப்பொழுது சூரியன் மறையும் இந்நிகழ்வால் ஒருவருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. என்றாலும் சூரியனுக்கு ஒண்டென்றால் 'சந்திரன்' சும்மா பார்த்துக் கொண்டிருக்குமா என்ன? சீறிவிட்டது. நெருப்பில்லாமல் புகை வராது என்பார்கள். சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும்.

நூல் வெளியீட்டு அரங்கில் ஈழப்பெண் போராளிகளின் கவிதைத்தொகுப்பு 'பெயரிடப்படாத நட்சத்திரங்கள்', 'ஜீவநதி' அவுஸ்திரேலியா சிறப்பிதழ், 'திருக்குறளில் புதிய தரிசனங்கள் இரண்டு' என 3 நூல்கள் வெளியிடப்பட்டன. இலங்கையிலிருந்து வெளிவரும் 'ஜீவநதி' என்ற சஞ்சிகை இந்தவிழாவை முன்னிட்டு 'அவுஸ்திரேலிய சிறப்பிதழை' வெளியிட்டிருந்தது. இதற்கு முன்னர் ஞானம் சஞ்சிகை, 2004இல் நடந்த எழுத்தாளைவிழாவை முன்னிட்டு ஒரு சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருந்தது. மற்றும் பிரான்ஷிலிருந்து வெளிவரும் 'அம்மா', இலங்கையிலிருந்து வெளியாகும் 'மல்லிகை', தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் 'கணையாழி' என்பனவும் ஏற்கனவே 'அவுஸ்திரேலியா சிறப்பிதழ்களை' வெளியிட்டுள்ளன.

விழாவின் இறுதிப்பகுதியாகிய கலை அரங்கில் - நிருத்தா இந்தியன் நுண்கலைக்கல்லூரியின் நடனமும், சிட்னி சோலைக்குயில் அவைக்காற்று கலைக்கழகத்தின் 'பா' நாடகமும் நடந்தது. 'மகாகவி' உருத்திரமூர்த்தியின் பா நாடகம் 'மீண்டும் தொடங்கும் மிடுக்கு'. கோகிலா மகேந்திரனின் நெறியாழ்கையில் நடந்தது. காத்திருந்தது வீண் போகவில்லை. அருமையாகச் செய்திருந்தார்கள். மிகவும் சிரத்தை எடுத்து நடித்த இந்த அருமையான பா நாடகத்தைப் பார்ப்பதற்கு சொற்ப அளவிலேயே பார்வையாளர்கள் இருந்தார்கள்.

கொடி பிடிப்பவர்கள் எல்லாரையும் திருப்திப்படுத்தி விழாவையும் சிறப்பாக நடத்த வேண்டும் என்றால், நேரத்தை அதற்கேற்றவாறு திட்டமிடல் வேண்டும் என்பதை விழா உணர்த்தியது.


1 comment: