Tuesday 2 May 2017

உறைபனியில் மீன் பிடித்தல்

சமீபத்தில் எனக்கு இந்த உறைபனியில் மீன் பிடிக்கும் சந்தர்ப்பம் கனடாவில் கிடைத்தது. குளிர்ந்த காலங்களில் இங்கேயுள்ள நீர்நிலைகள், குளங்கள் உறைபனியில் மூடிவிடும். இந்த உறைபனியின் தடிப்பம் அல்லது பருமன் அதிகரிக்கும்போது அதன் உறுதியும் அதிகரிக்கும். உறுதி கூடி பனி இறுகிய பின்னர் அதன்மேல் துளையிட்டு தூண்டில் வீசி மீன் பிடிக்கின்றார்கள்.

என்னதான் சொன்னாலும் எனக்கென்னவோ இது ஒரு ஆபத்து நிறைந்த விளையாட்டாகவே தோன்றுகின்றது. விபத்துகள் ஏற்கனவே நடந்தும் இருக்கின்றன.

மார்கழி, தை, மாசி மாதங்கள் கனடாவில் குளிர் காலங்கள். எங்கும் பனித்தூவல்கள் போர்த்தியபடி இருந்தன. நாங்கள் காலை 8 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டோம். 2 மணி நேரப்பயணத்தின் பின்னர் ஒன்ராறியோவின் தென்பகுதியில் அமைந்திருக்கும் சிம்கோ வாவியைச் (Lake Simcoe) சென்றடைந்தோம். அந்த மாநிலத்தின் நான்காவது பெரிய வாவி இதுவாகும்.
வாவி இருந்ததற்கான எந்தவிதமான அடையாளங்களும் அற்று பனிக்கட்டி போர்த்திய நிலம் போல அது காட்சி தந்தது. வாகனத்தை வீதியில் நிறுத்துவதற்கு தோதாக இடம் அமையாததால் வாவியிம் மேல் நிறுத்த முடியுமா என நாங்கள் பதிவு செய்த Dave’s Fish huts rentals உரிமையாளரிடம் கேட்டோம். அவர் ’வாகனத்தை நிற்பாட்டுங்கள். ஆனால் திறப்பைத் தந்துவிட்டுப் போங்கள்’ என்றார்.

எத்தனையோ தொன் நிறைந்த வாகனத்தை வாவியின் மேல் நிற்பாட்டினோம். எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். அப்படி ஏதாவது நடந்தால் வாகனத்தை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்காகவே திறப்பைத் தந்துவிட்டுப் போகும்படி கேட்டிருந்தார்கள்.
வாகனம் ஒன்றுடன் இணைக்கப்பட்டிருந்த மரத்தாலான பெட்டி ஒன்றினுள், நாங்கள் கொண்டுவந்த பொருட்களுடன் ஏறினோம். வாவியின் மேலாக அடர்ந்த செறிந்த பனிக்கட்டியின் மேலாக பெட்டியை இழுத்துச் சென்றார் சாரதி. சடசடவென ஓசை எழுப்பியபடி விரைந்தது வாகனம்.

வெளியெ நின்று பார்க்கும்போது ஒன்றிரண்டு குடில்களே (huts) தெரிந்தன. உள்ளே போகப் போக ஒவ்வொன்றாகத் துலங்கி எண்ணுக்கணக்கில்லாத குடில்கள் இருப்பதைக் கண்டோம்.

எங்களுக்குரிய குடிலில் இறக்கிவிட்டார்கள். குடிலிற்குள் சிறையதொரு கனல் அடுப்பு மெதுவாக எரிந்து கொண்டிருந்தது. அதற்கான வாயுச்சிலிண்டர் குடிலிற்கு வெளியே இருந்தது. தூண்டிலில் இரையாக கொழுவுவதற்கான மீன்கள் ஒரு வாளிக்குள் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தன. உள்ளேயிருந்து மீன் பிடிப்பதற்கு ஏதுவாக மரப்பலகைகளிலான இருக்கைகள் அமைந்திருந்தன. உள்ளே செவ்வக விடிவிலான இரண்டு துளைகள் துளையிடப்பட்டிருந்தன. துளையினூடாக பளிங்கு போன்ற நீர் சலனமற்று இருந்தது.


தூண்டிலை வீசினோம். மீன்கள் சில வந்து முகர்ந்து பார்த்துவிட்டு விலகிப் போயின. ஒரு சில மீன்கள் தூண்டிலில் சிக்கிக் கொண்டன. அவற்றை எடுக்கும்போது தப்பி ஓடின. மீன்கள் சுவாசிப்பதற்காக அடிக்கடி துளைக்கு அண்மையில் வந்தபடி இருந்தன.

இடையில் றோன் (drone) ஒன்று பறந்து வந்து எல்லாக் குடில்களையும் படமெடுத்துச் சென்றது. வெளியில் இருக்கும் எல்லாக் குடில்களையும் ஒரே நேரத்தில் பார்வையிட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த றோனை அவர்கள் பாவிக்கின்றார்கள்.


அதன் சத்தம் கேட்டு எங்கள் குடிலிற்குள் ஒளித்திருந்த எலி ஒன்று ஒரு மூலையில் இருந்து மறு மூலைக்குத் தாவியது. இவ்வளவு நேரமும் எங்களுடன் ஐந்தாவது ஜீவன் ஒன்றும் இருந்திருக்கின்றார் என நாம் திகைத்துவிட்டோம். இருப்பினும், இறுதிவரை அவரால் எங்களுக்கோ, எங்களால் அவருக்கோ எந்தவித இடைஞ்சலும் இருக்கவில்லை. அவர் தன்பாட்டில் ஒரு ஓரத்தில் இருந்து மீன் பிடிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

மீன்கள் ஒன்றையும்பிடிக்க முடியாமல் இருந்ததால், Dave’s Fish huts rentals உரிமையாளருடன் தொடர்பு கொண்டு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்டோம். சற்று நேரத்தின் பின்னர் இருவர் தூண்டில் சகிதம் வந்தார்கள்.

“இதுவரை எத்தனை மீன்கள் பிடித்தீர்கள்?” என்று கேட்டார்.

“ஒரு எலி பிடித்தோம்” என்று மூலையில் பதுங்கியிருந்த எலியைக் காட்டினோம்.

வந்தவரில் ஒருவர் எங்களுக்கு மீன் பிடிக்கக் காட்டித் தந்தார். மீன்களைக் கவர்ந்து இழுப்பதற்காக தூண்டிலில் வர்ணஞாலம் காட்டும் மீன்போன்ற ஒன்றைத் தொங்கவிட்டு தண்ணீரினுள் இறக்கினார். அது நீரினுள் சென்றதும், தூண்டிலை என்னிடம் தந்து அதனை மேலும் கீழும் அசைத்துக் கொண்டிருக்கும்படி சொன்னார். வானவில் நிறத்தில் நீரிற்குள் அது அசைந்து மீன்களுக்கு காதல் சமிக்கையிட்டது. சற்று நேரத்தில் ஒரு பெரிய மீன் பிடிபட்டுக் கொண்டது. அதனை வெளியே பிடித்து இழுத்தார். இவ்வளவு நேரத்தின் பின்னர் எங்களுக்கொரு மீன் கிடைத்திருக்கின்றது என நினைப்பதற்கிடையில், பிடித்த மீனைக் கழற்றி சட்டெனத் தண்ணீரில் விட்டார். அது  தப்பித்தோம் பிழைத்தோம் எனப் பறந்தோடியது.

“இனிப் பிடியுங்கள்” சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.

உண்மையில் எங்களுக்கு இந்த மீன் பிடிக்கும் தொழில்நுட்பம் கைவரவில்லை. வீட்டிற்குப் புறப்படும்போது ஒரு மீனையும் நாங்கள்…





2 comments:

  1. அழகான விவரணை! வாவியின் உறைபனியின்மீது வண்டியை நிறுத்துதல் என்பது வியப்பாக உள்ளது. மீன்பிடிக்கும் நுட்பம் உங்களுக்குப் புலப்படாதது வருத்ததுமாக இருக்கிறது. பிடித்திருந்தால் அந்த மீனின் படத்தையும் நாங்கள் பார்த்திருக்கலாம்.

    -இராய செல்லப்பா (தற்போது) நியூஜெர்சி.

    http://chellappatamildiary.blogspot.com

    ReplyDelete
  2. அருமையான பகிர்வு. கண்ணுக்கு குளிர்ச்சியாய்...

    ReplyDelete