Wednesday, 7 June 2017

சுற்றுலா போய் வருகின்றோம் – சிறுகதை

ரவிராஜ் வீடு ஒன்றை வாங்கினான். மனைவி பவித்திராவிற்கு வீடு நன்றாகப் பிடித்துக் கொண்டது. வீட்டின் உரிமையாளர் வீட்டைச் சுற்றிக் காட்டினார். வீட்டைப் பற்றி விலாவாரியாகச் சொன்னார்.

அதன் பின்னர் தனது அயலவர்களைப் பற்றி பெருமையாகச் சொன்னார். வீட்டின் உரிமையாளருக்கு, எதிர்ப்புறமாக இருந்த வீட்டுக்காரர்களில் திருப்தி இருக்கவில்லை. அங்கே ஒரு பெண்ணும் அவளின் இரண்டு மகள்மாரும் குடி இருந்தார்கள். அவர்களைப் பற்றி மேலெழுந்தவாரியாக சில குறைபாடுகளைச் சொன்னார். அந்தப்பெண் விவாகரத்துப் பெற்றவள், குப்பைக்குடும்பம், கூத்துக்குடும்பம். இவை போதாதா அந்தக் குடும்பத்துடன் பழகுவதா இல்லையா என மூடிவு செய்ய? ரவிராஜ் குடும்பத்தினர் அவர்களுடன் பழகுவதில்லை என முடிவு செய்தனர்.

வீட்டிற்குப் போன முதல்நாள் மாலை நேரம் – அந்த வீட்டுப் பெண்பிள்ளைகளில் ஒருத்தி---ஏழோ எட்டோ படிக்கக்கூடும்--- தனது நண்பி ஒருத்தியுடன் வந்து இவர்களின் வீட்டின் கதவைத் தட்டினாள். அவள் தன் மார்புடன் இரண்டு பந்துகளை அணைத்திருந்தாள்.
ரவிராஜின் மகனை தங்களுடன் விளையாட அனுப்பும்படி கேட்டாள். மகன் படிக்கப் போய்விட்டதாக பொய் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தாள் பவித்திரா.

சில மாதங்களின் பின்னர் அவள் தன் இரண்டு பெண்பிள்ளைகளையும் படிப்பதற்காக எங்கோ அனுப்பி வைத்துவிட்டாள். அதன் பின்னர் அவளின் வீட்டில் இரவு முழுவதும் திருவிழா போல விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். எந்நேரமும் கார்கள்---கார் என்று சொல்லமுடியாது வாகனங்கள்---வருவதும் போவதுமாக நிறைந்திருக்கும். அதே போல எல்லாவிதமான மனிதர்களும் வந்து போவார்கள். அந்த வீட்டிற்கு புல்லு வெட்டுபவனின் கார் பெட்டியுடன் சிலவேளைகளில் இரவும் தரித்து நிற்கும். வந்து போகும் பெண்களில் அனேகமானவர்கள் இளமையாக இருக்கின்றார்கள். அவள் தன் வாழ்க்கையைக் கொண்டிழுப்பதற்காக ஏதோ பிஸ்னஸ் செய்கின்றாளா?

மர்மமான மனிதர்கள் வந்து போகின்றார்கள்.

திடீரென ஒருநாள் அங்கே ஒரு மனிதர் தென்பட்டார். பனியன், ஜீன்ஸ் அணிந்து தானே வீட்டின் எஜமான் என்பதுபோல நடமாடினார். கதிரை ஒன்றை வீட்டின் முகப்பில் போட்டு ‘தாதா’ போல காவல் இருந்தார்.

ஒருநாள் ரவிராஜ் குடும்பம், நெடும்தூரம் போய்விட்டு வீடுவர அதிகாலை மூன்று மணியாகிவிட்டது. காரை பின்னாலே கொண்டு சென்று திருப்பினார்கள். என்ன அதிசயம் – அந்த மனிதர் கடும் குளிரையும் பொருட்படுத்தாது கதிரைக்குள் விறைத்துப் போனவர்போல உறைந்து இருந்தார். இவர்களைக் கண்டதும் எழுந்து வீட்டிற்குள் போய் விட்டார்.

அவர் அந்த வீட்டுப் பெண்மணியின் முன்னைநாள் கணவராகவோ அல்லது காதலராகவோ இருக்க வேண்டும்.

ஜெயிலில் இருந்து வந்திருப்பதாக ஒரு கதை அடிபட்டது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர், அந்தப் பெண்மணிக்கு கோர்ட்டில் இருந்து வந்த கடிதமொன்று வீடுமாறி ரவிராஜின் வீட்டுத் தபால்பெட்டிக்குள் இருந்தது. அந்தக் கடிதத்தைக் கொடுக்க அவள் வீட்டிற்குச் சென்றான் ரவிராஜ். சிரித்தபடி அந்தப்பெண்மணி ரவிராஜை வரவேற்றார். சற்றே வாட்டசாட்டமாகவும் எல்லாரையும் கவர்ந்திழுக்கும் தோற்றம் கொண்டவராகவும் அந்தப்பெண்மணி இருந்தார்.

ஒருநாள் திடீரென்று பலத்த வாக்குவாதம் எழும் சத்தம் அந்த வீட்டில் கேட்டது. ஜன்னலிற்குள்ளால் பவித்திரா எட்டிப் பார்த்தாள். அயலவர் ஒருவர்---பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்---ஏணியுடன் அவர்கள் வீடு நோக்கி ஓடிக் கொண்டிருந்தார். அவர் நல்லவர் தீயவர் என்று எவரையும் விட்டு வைப்பதில்லை. எவருடனும் சகசமாகப் பழகுவார். அவர் போன சற்று நேரத்திலெல்லாம் ஒரு பொலிஸ் வாகனம் அந்திக்கருக்கலை வெளிச்சமாக்கிக் கொண்டு எதிர்ப்புற வீட்டை அடைந்தது. வாகனத்தை ஓட்டி வந்தவர் இருக்கையில் இருக்க, இன்னொரு பொலிஸ் இறங்கி அவர்கள் வீட்டிற்குச் சென்றான். சற்று நேரத்தில் ஆக்களை ஏற்றிச் செல்லும் இன்னொரு பொலிஸ்வாகனம் அங்கே வந்து நின்றது. அதே பெனியன் ஜீன்ஸ் சகிதம் இருந்த அந்த மனிதரை, கையில் விலங்கிட்டபடி பொலிஷார் அந்த வாகனத்தில் ஏற்றிச் சென்றார்கள்.

சமீப காலங்களாக சாமவேளைகளில் அவர்கள் வீட்டில் சண்டை சச்சரவுச் சத்தம் கேட்டதாக ரவிராஜின் மகன் சொன்னான். அவனின் படுக்கை அறை அவர்கள் வீட்டுப் பக்கம் இருந்ததால் அவன் இதனை அவதானித்திருந்தான்.

அந்த நிகழ்வு பற்றி ஒருவரையும் கேட்டு அறிவதில் ரவிராஜ் குடும்பத்தினருக்கு ஆர்வம் இருக்கவில்லை. எவரும் சந்திக்கும்போதுகூட அது பற்றிக் கதைக்கவில்லை. அத்தகைய மகத்தான மனிதர்கள் அவர்கள்.

கடந்த ஒரு வருடமாக அந்த பனியன், ஜீன்ஸ் மனிதரைக் காணக் கிடைக்கவில்லை. போனவாரம் மீண்டும் அவர் அந்த வீட்டில் தென்பட்டார்.

இன்று காலை காரைப் பின்புறம் இருந்து எடுக்கும்போது ‘ஹலோ’ என்றபடி ரவிராஜைத் துரத்தி வந்தார் அவர். தான் ‘சியாமா’வின் பாட்னர் என்றார். அப்போதுதான் அங்கிருக்கும் பெண்மணியின் பெயர் சியாமா என்பது ரவிராஜிற்குத் தெரிந்தது.

தான் ‘பிஜி’ நாட்டைச் சேர்ந்தவன் எனவும் கடந்த பதினொரு மாதங்களாக ‘வேர்ல்ட் ரூர்’ இல் இருந்ததாகவும், சுற்றுலாவில் சில நூறு ஆயிரங்கள் செலவு செய்ததாகவும் சொன்னார். இந்த வார இறுதியில் சியாமாவையும் கூட்டிக் கொண்டு மீண்டும் சுற்றுலா போகப் போவதாகவும் சொன்னார். இந்தத் தடவை இலங்கை இந்தியா பாகிஸ்தான் போன்ற இடங்களுக்கு செல்லவிருப்பதாகவும், அங்கு கஸ்டப்படும் ஏழை மக்களுக்கும் படிக்க வசதியற்று இருக்கும் மாணவர்களுக்கும் சில ஆயிரம் டொலர்கள் குடுக்கப் போவதாகவும் சொன்னார்.

உடுத்த ஆடையுடன், கையில் விலங்கிட்டு அவரைப் பொலிஷார் இழுத்துச் சென்ற காட்சி ரவிராஜின் கண் முன்னே விரிந்தது.

“வாழ்க்கையில் எதைச் சாதித்தோம் நண்பரே! இதையாவது செய்துவிட்டுப் போவம்” என்றார் அவர்.

”நல்லது சுற்றுலா போய் வாருங்கள் நண்பரே!” ரவிராஜ் சொல்லும்போதே விறுவிறு என்று வீட்டிற்குள் போய்விட்டார் அவர். ரவிராஜ் ஏதாவது கேள்விகள் கேட்கக்கூடும் என அவர் நினைத்திருக்கலாம்.

ரவிராஜ் வீட்டில் அவரைப் பற்றிச் சொன்னதும், அவர் மனநிலை பாதிக்கபட்ட மனிதராக இருக்க வேண்டும் என்றாள் பவித்திரா. சிறைச்சாலைக்குள் நாள் பூராவும் சுற்றுலா பற்றிய வீடியோக்களைக் காட்டியிருப்பார்களோ? என மகன் ஐயுற்றான்.

அன்றைய ஞாயிற்றுக்கிழமை இரவு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குப் போய் வந்து அசதி தீர நித்திரை கொண்டார்கள் ரவிராக் குடும்பத்தினர். அதிகாலை ரவிராஜ் வீட்டின் கதவை பாகிஸ்தான் மனிதர் தட்டினார். அவர் இப்படி வீடு வந்து கதவு தட்டுவது வெகு அபூர்வம்.

“நேற்று இரவு பக்கத்து வீட்டு தம்பதியினரிடையே பலத்த தகராறு. கணவன் கத்தி கொண்டு சியாமாவை வெட்டுவதற்காகத் துரத்தினான். எங்களால் அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. பொலிசை வரவழைத்தோம். பொலிஸ் வந்து இரண்டு பேரையும் கூட்டிக் கொண்டு போய்விட்டது. இப்ப இருவரும் ஜெயிலில் இருக்கின்றார்கள்” தகவல் தந்துவிட்டு சியாமாவின் வீடு நோக்கிப் போனார் அந்த பாகிஸ்தான் மனிதர்.


பிஜி நாட்டு மனிதர் சரியாகத்தான் சொல்லியிருக்கின்றார். சொன்னது போல, சியாமாவையும் கூட்டிக் கொண்டு வார இறுதியில் சுற்றுலா போய் விட்டார்.

No comments:

Post a Comment