Friday 14 July 2017

மூப்பும் பிணியும் - கங்காருப் பாய்சல்கள் (23)

தொண்ணூறு வயதையும் தாண்டிய எழுத்தாளர் ஒருவர் எனக்கு நண்பராக இருந்தார். அவருக்கு காது கேட்பது கொஞ்சம் மந்தம். காது கேட்கும் கருவியொன்றை எப்போதும் மாட்டியிருப்பார். ஆனால் கண்பார்வை மிகவும் கூர்மையானவர்.

அடிக்கடி தொலைபேசியில் கதைப்பார். அவருடன் கதைக்கும்போது நாலு வீடுகள் கேட்கக் கத்திக் கதைப்பேன். இடைக்கிடை அவரைப் போய் பார்த்து வருவேன். 30 நிமிடங்கள் கார் ஓடும் தூரத்தில் இருந்தார்.

காலம் நகர்கின்றது.

அவர் முதுமை காரணமாக வைத்தியசாலையில் சிறிது காலம் தங்கியிருந்தார். பின்னர் வைத்தியசாலையில் புனர்வாழ்வுப்பகுதியில் நிரந்தரமாக இருந்துகொண்டார். ரொம்பவும் தூரமாகப் போய்விட்டார். இரண்டொரு தடவைகள் அவரைப் போய்ப் பார்த்து வந்தேன்.

அதன்பின்னர் என் கண்பார்வை சிறிது மங்கிவிட்டது. தூரங்களுக்குப் போவதைத் தவிர்த்து வந்தேன்.

ஆறுமாதங்கள் கழிந்திருக்கலாம்.

ஒருநாள் அவர் எனக்கு ரெலிபோன் செய்திருந்தார். நான் வீட்டில் இல்லாதபடியால் எனது ஆன்சர்போனில், என்னை நன்றாகவே திட்டிப் பதிவு செய்திருந்தார்.

“நான் இன்னமும் இறந்துபோய் விடவில்லை. என்னுடன் ரெலிபோனில் பேசவும். என்னை வந்து பார்க்கவும்.”

நான் அவருக்கு ரெலிபோன் செய்தேன். எடுக்கவில்லை. பலமுறை முயன்றும் அவர் ரெலிபோனைத் தூக்கவேயில்லை.
இப்படியே அவர் ரெலிபோன் செய்யும் வேளைகளில் நான் இல்லாமலும், நான் ரெலிபோன் செய்யும் வேளைகளில் அவர் எடுக்காமலுமாக ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு சில நாட்கள் நடந்தன.

பின்னர் ஒருநாள் அதிஸ்டவசமாக அவர் ரெலிபோன் செய்கையில் நான் எடுத்தேன். அவர் மறுபடியும் என்னைப் பேசிக் கொண்டே இருந்தார். நான் சொல்வதை அவர் கேட்பதாகவில்லை. மீண்டும் மீண்டும் எனக்குப் பேச்சு விழுந்ததேயொழிய, நான் சொல்கின்ற எதையும் கேட்பதாக அவர் இல்லை. ரெலிபோனைத் துண்டித்துவிட்டு, அவருடைய நண்பர் ஒருவரைத் தொடர்பு கொண்டேன்.

அவருக்கு இப்பொழுது முற்றுமுழுதாகக் காது கேட்காது என்று நண்பர் சொன்னார்.


No comments:

Post a Comment