Wednesday 27 September 2017

பிறந்த நாள் எப்போது? - கதை


அவள் பெயர் லோறா. வியட்நாமியப்பெண். பல வருடங்களாக ரூபனுடன் வேலை செய்கின்றாள். ரூபனை தனது ஆத்ம நண்பன் என்று சொல்லிக் கொள்வாள். அடிக்கடி இலங்கைத் தமிழர்களைப் பற்றி விசாரித்து அறிந்து கொள்வாள். அங்கு வேலை செய்பவர்களில் அவளின் பிறந்த நாள் எப்போது என்பது எவருக்கும் தெரியாது.


“ஆத்ம நண்பனுக்கும் சொல்லப்படாதா?” ரூபன் கேட்பான்.


“அடுத்த வருடம் சொல்கின்றேன்” சிரித்து மழுப்புவாள்.


பிறந்தநாளைச் சொன்னால் தமது வயதை மட்டுக் கட்டிவிடுவார்கள் என அனேகம் பேர், அதுவும் பெண்கள் பயப்பிடுவதுண்டு.


எல்லாவிதமான கொண்டாட்டங்களிலும், அடுத்தவர்களது பிறந்தநாள் விழாக்களிலும் அவள் கலந்து கொள்கின்றாள். அதில் ஒன்றும் குறைவில்லை.


ரூபன் அந்த வேலையிடத்தை விட்டு விலகும் காலம் வந்தது. அன்றுமுதல் அவளிடம் உனது பிறந்தநாளைச் சொன்னால் ஒவ்வொரு வருடமும் வாழ்த்து அனுப்பி வைப்பேன் என்பான்.
அதற்கு அவள், “நாளைக்குச் சொல்கின்றேனே!” என்பாள். ஆனால் சொல்வதில்லை.


கடைசி நாள் – ரூபன் பிரியும்போது லோறாவைப் பார்த்தான்:

“எனக்கு ஏது பிறந்தநாள். நான் போரின் குழந்தை. நான் என் அப்பாவைக்கூட ஒருநாளும் பார்த்ததில்லை” சொல்லும்போது அவள் கண்கள் பனித்தன.

போர் யாரைத்தான் விட்டு வைத்தது? ரூபன் தனது மக்களை நினைத்துக் கொண்டான். அவனது கண்களிலும் அந்தக் கலக்கம்.



3 comments: